
காஞ்சிபுரத்துக்கு ஈடான காசர்கோடு புடவைகள்! காசர்கோட்டின் மறைக்கப்பட்ட வரலாறு!
கேரளாவின் வடக்கு முனையில் அமைந்துள்ள காசர்கோடு மாவட்டம், தனது இயற்கை எழில், வளமான வரலாறு, தனித்துவமான கலாச்சாரம் மற்றும் சுவையான உணவு வகைகளுடன் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கும் ஓர் அற்புதமான தலமாகும். "கடவுளின் தேசம்" என்று அழைக்கப்படும் கேரளாவின் கிரீடத்தில் பதிக்கப்பட்ட ஒரு ரத்தினமாகத் திகழும் இப்பகுதி, பழைமையும் நவீனத்துவமும் கைகோர்த்துச் செல்லும் ஓர் அற்புத பூமியாகும். இத்தொகுப்பில் காசர்கோடு பகுதியின் அழகு, செழுமை, சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் குறித்த விரிவான விவரங்களை காணலாம்.
இயற்கையின் வரம்
காசர்கோடு, கேரள மாநிலத்தின் வட கோடியில் அமைந்துள்ள ஓர் இயற்கை எழில் கொஞ்சும் நகரம். இதன் மேற்கே ஆர்ப்பரிக்கும் அரபிக்கடலும், கிழக்கே கம்பீரமான மேற்குத் தொடர்ச்சி மலைகளும் அமைந்து, கண்ணுக்கினிய நிலப்பரப்பை உருவாக்குகின்றன. இங்குள்ள அழகிய கடற்கரைகள், பசுமையான தென்னை மரச் சோலைகள், பச்சைப் பசேலென்ற நெல் வயல்கள் மற்றும் அமைதியான உப்பங்கழிகள் ஆகியவை மனதிற்கு புத்துணர்ச்சி அளித்து, ஏராளமான சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கின்றன. சந்திரகிரி ஆறு, பேக்கல் ஆறு போன்ற இங்கு பாயும் ஆறுகள், இந்தப் பகுதியின் நீர்வளத்தை செழுமைப்படுத்துவதோடு, மனதுக்கு மகிழ்வூட்டும் பொழுதுபோக்கு இடங்களாகவும் திகழ்கின்றன. காசர்கோட்டில் பேசப்படும் துளு, மலையாளம், கன்னடம், கொங்கணி உள்ளிட்ட ஏழு மொழிகள், பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு வம்சங்கள் மற்றும் வெளிநாட்டினரின் ஆளுமைக்கு உட்பட்டதன் விளைவாக ஏற்பட்ட வளமான கலாச்சார பரிமாற்றத்தை எடுத்துக்காட்டுவதோடு, காசர்கோட்டின் அழகிய நாகரிகத்தையும் உலகிற்கு பறைசாற்றுகின்றன.
பேக்கல் ஆறு மற்றும் காசர்கோடு புடவை
சங்க காலம் தொட்டே ஒரு முக்கிய வர்த்தக மையமாகச் செயல்பட்டுள்ள காசர்கோடு, விஜயநகரப் பேரரசு, மைசூர் சுல்தான்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் எனப் பல பேரரசுகளின் ஆளுமையின் கீழ் இருந்துள்ளது. இதன் காரணமாகவே இங்கு பல்வேறு சமயங்களை சேர்ந்த மக்கள் நல்லிணக்கத்துடன் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். காசர்கோட்டின் தனித்துவமான கலாச்சார அடையாளங்களாக தெய்யம் எனப்படும் சடங்கு நடனமும், யக்ஷகானம் எனப்படும் பாரம்பரிய கலை வடிவமும் போற்றப்படுகின்றன. குறிப்பாக, தெய்யம் ஆட்டத்தின் தாயகமாகக் கருதப்படும் காசர்கோட்டில், அதன் தொன்மையான தெய்யம் நடனங்களை கண்டுகளிக்கும் வாய்ப்பு, கலாச்சார ஆர்வலர்களுக்கு ஒரு அற்புதமான தருணம் என்றே சொல்லலாம். இந்த நடனங்கள் புராணக் கதைகளையும், தொன்மங்களையும் தத்ரூபமாக காட்சிப்படுத்துகின்றன. மேலும், கும்பளா புடவை மற்றும் காசர்கோடு புடவை போன்ற பாரம்பரிய கைவினைப் பொருட்கள் இங்கு சிறப்பு வாய்ந்தவை என்பதோடு, இதற்கென்று தனி வர்த்தகமும் உலகளவில் உள்ளது. அதேபோல் இங்குள்ள அடர்ந்த காடுகள், சில அரிய உள்ளூர் தாவர இனங்களின் பாதுகாப்பகமாக திகழ்ந்து, காடுகளின் பன்முகத்தன்மையையும், அழகையும் அனுபவிக்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பையும் நமக்கு வழங்குகின்றன.
சுற்றுலா தலங்கள்
காசர்கோட்டின் வளமான வரலாறு, கம்பீரமான பேக்கல் கோட்டையின் பிரம்மாண்டமான மதில்களில் எதிரொலிக்கிறது. அரபிக் கடலின் ஓரத்தில் அமைந்துள்ள இந்தக் கோட்டை, 300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. பல வம்சங்களின் ஆதிக்கம் மற்றும் ஆங்கிலேயரின் படையெடுப்புகள் பற்றிய கதைகளை சொல்லும் இந்தக் கோட்டை, ஏழு மொழிகளின் சங்கமமாக இன்றும் விளங்குகிறது. இதன் தனித்துவமான கட்டிடக்கலை, அழகிய சுற்றுப்புறம் மற்றும் சூரிய அஸ்தமனக் காட்சிகள் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குகின்றது. குறிப்பாக, மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ திரைப்படத்தின் "உயிரே உயிரே" பாடல் இங்கு படமாக்கப்பட்டதால், பேக்கல் கோட்டையின் புகழ் உலகெங்கும் பரவியது. இங்கிருக்கும் சுரங்கங்கள், கண்காணிப்புக் கோபுரங்கள், மற்றும் கடல் நீரை உள்ளிழுக்கும் குளங்கள் இதன் தனித்துவமான சிறப்பம்சங்கள் ஆகும்.
கம்பீரமான பேக்கல் கோட்டை
காசர்கோடு, பேக்கல் கோட்டை மட்டுமல்லாமல், ஆன்மிகம் மற்றும் இயற்கையின் அழகையும் அள்ளி கொடுக்கும் இடமாகவும் திகழ்கிறது. இங்குள்ள அனந்தபுரா ஏரி கோவில், கேரளாவில் உள்ள ஒரே ஏரிக் கோவிலாகும். ஏரியின் நடுவே அமைந்துள்ள குடில், விஷ்ணு பகவானுக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் தனித்துவமான அமைப்பால் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் ஈர்க்கிறது. குறிப்பாக இக்கோயிலின் குளத்தில் வாழ்ந்த பாபியா என்ற முதலை, கோயில் தெய்வத்தின் காவலனாக கருதப்பட்டது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த இந்த முதலை, சைவ உணவை மட்டுமே உண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த அரிய நிகழ்வு, இக்கோயிலின் ஆன்மிகப் பெருமையை மேலும் எடுத்துக்காட்டுகிறது. இது போலவே சந்திரகிரி கோட்டை, விஜயநகரப் பேரரசின் வரலாற்று அடையாளமாக சந்திரகிரி ஆற்றின் கரையில் கம்பீரமாக நிற்கிறது. வரலாற்றின் தடயங்களை அறிய விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த இடமாகும்.
பாபியா என்ற முதலை மற்றும் காசர்கோடு தாழங்கரையில் உள்ள மாலிக் தினார் மசூதி
மேலும், தலங்கரா மாலிக் தினார் ஜும்மா மசூதி, இந்தியாவின் தொன்மையான மசூதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மாலிக் தினார் என்பவரால் கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்த மசூதி, அதன் கட்டிடக்கலை மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்காக புகழ்பெற்றது. இப்படி ஆன்மீகம் தவிர இயற்கை ஆர்வலர்களுக்கும், காசர்கோடு பலவிதமான அனுபவங்களை வழங்குகிறது. அதில் பரப்பா வனவிலங்கு சரணாலயம் மற்றும் மலோம் வனவிலங்கு சரணாலயம் ஆகியவை அரிய வகை விலங்குகள் மற்றும் தாவரங்களின் தாயகமாக அமைந்துள்ளன. இதுபோலவே இராணிபுரம் மலை, "காசர்கோட்டின் ஊட்டி" என்று அழைக்கப்படும் அளவுக்கு அடர்ந்த காடுகளும், பசுமையான புல்வெளிகளும், குளிர்ந்த காலநிலையையும் கொண்டுள்ளன. இது மலையேற்றம் மற்றும் இயற்கை நடை பயணத்திற்கு ஏற்ற ஒரு இடமாகவும் அமைந்து பலரையும் ஈர்த்து வருகிறது. இங்குள்ள தைக்கடப்புரம் கடற்கரை அமைதியான மற்றும் அழகிய கடற்கரையாக மட்டும் அல்லாமல், இது கடல் ஆமைகளின் இனப்பெருக்க பகுதியாகவும் விளங்குகிறது. இவை தவிர, பேலா தேவாலயம், காஞ்சங்காடு கோட்டை, மல்லிகார்ஜுனா கோவில், கொண்டஞ்சேரி மலைகள், நெல்லிகுன்னு மசூதி, மஞ்சேஸ்வரம் மற்றும் நீலேஸ்வரம் போன்ற இடங்கள் காசர்கோட்டின் கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுவதோடு, இந்த இடங்கள் இன்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் பகுதிகளாக திகழ்கின்றன.
உணவும் தொழிலும்
காசர்கோட்டின் உணவு கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகளின் நறுமணத்தையும், கர்நாடகத்தின் துளுநாடு சமையல் பாணியின் தனித்துவமான சுவையையும் தன்னகத்தே கொண்டது . இங்குள்ள உணவுப் பழக்கம், கடல் சார்ந்த உணவுகளுக்கு பெயர் போனது. குறிப்பாக, நெய்மீன் வறுவல், சங்கரா மீன் வறுவல், சுவையான இறால் வறுவல் ஆகியவை இங்கு மிகவும் பிரபலமானவை. இவை தவிர, பலவிதமான கறிகள், பொரித்த மீன் வகைகள் எனப் பல்வேறு கடல் உணவுகள் இங்கு கிடைக்கும். இவைகள் தவிர, கேரளாவின் பாரம்பரிய காலை உணவு பொருட்களும் காசர்கோட்டில் மிகவும் பிரபலம். புட்டு, கடலைக்கறி, பஞ்சு போன்ற அப்பம், மென்மையான இடியாப்பம், மொறுமொறுப்பான தோசை மற்றும் மிருதுவான இட்லி போன்ற உணவுகள் இங்குள்ள மக்களின் அன்றாட உணவில் முக்கிய இடம் பெறுகின்றன. இந்த உணவுகள், காரசாரமான சட்னிகள் மற்றும் கறிகளுடன் பரிமாறப்பட்டு, சுவை விரும்பிகளுக்கு விருந்தாக படைக்கப்படுகின்றன. இனிப்பு வகைகளைப் பொறுத்தவரை, காசர்கோட்டில் பலாப்பழம் மற்றும் வாழைப்பழத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் பலகாரங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. பலாப்பழ பாயாசம், பலாப்பழ அப்பம், வாழைப்பழம் சிப்ஸ் போன்ற இனிப்புகள் இங்குள்ள மக்களின் சமையல் கலையின் அடையாளங்கள்.
கேரளாவின் சிறப்பு வாய்ந்த மீன் வறுவல் மற்றும் படகு வீடு
காசர்கோட்டின் பொருளாதாரத்தை பொறுத்தவரை அது பல்வேறு துறைகளை சார்ந்துள்ளது. ஒரு காலத்தில், பீடி உற்பத்தி மையங்கள் இப்பகுதியின் முக்கிய தொழிலாக இருந்தன. காலப்போக்கில் இந்தத் தொழில் நலிவடைந்தாலும், அதன் தடயங்கள் இன்னும் காணப்படுகின்றன. வாலிபரம்பா போன்ற கடலோரப் பகுதிகளில் மீன்பிடித் தொழில் முதன்மை வாழ்வாதாரமாக உள்ளது. இங்கு, பாரம்பரிய மீன்பிடி நுட்பங்களைப் பயன்படுத்தும் மீனவர்களின் வாழ்க்கை முறையை நேரடியாக கண்டுகளிக்கலாம். இது தவிர, காசர்கோட்டின் ஏரிகளில் மட்டி சேகரிப்பு என்பதும் ஒரு முக்கியமான வாழ்வாதாரமாக இன்றும் உள்ளது. இது தவிர விவசாயம் இங்கு மற்றொரு முக்கிய தொழிலாகும். கோடைக்காலத்திலும் வற்றாத குகை கிணறுகள் இப்பகுதியின் நீர்ப்பாசன ஆதாரமாகத் திகழ்கின்றன. இந்த குகை கிணறுகள், காசர்கோட்டின் பண்டைய பொறியியல் அறிவுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இது, வறண்ட காலத்திலும் விவசாய நிலங்களுக்கு நீர் கிடைக்க வழிவகுக்கிறது. இப்படி அமைதியான கடற்கரைகள், பசுமையான மலைகள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், மற்றும் வளமான கலாச்சார அனுபவங்கள் எனப் பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ள காசர்கோடுக்கு, வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை சென்று வாருங்கள், அது நிச்சயமாக ஒரு மறக்க முடியாத அனுபவத்தை உங்களுக்கு வழங்கும்.
காசர்கோடு கூகுள் வரைபடம்




 
  			 
  			