இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கொடைக்கானல் தெற்கில் மறைக்கப்பட்ட பொக்கிஷங்களில் ஒன்று. கிரானைட் பாறைகள், ஏரிகள், காடுகள் நிறைந்த பள்ளத்தாக்குகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்த இந்த இடத்தில் சுற்றி பார்ப்பதற்க்கு பல இடங்கள் உள்ளன. இந்த இடம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளதால் அதிகமாக இயற்கை விரும்பிகள் இங்கு அடிக்கடி வருகை தருகிறார்கள். மேலும் இந்நகரத்தை "மலைகளின் இளவரசி" என்றும் அழைக்கிறார்கள். கொடைக்கானல் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பட்ஜெட்டில் பயணம் செய்ய விரும்பினால், கொடைக்கானல் சரியான இடமாக இருக்கும். அத்துடன் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ள கொடைக்கானலைச் சுற்றி, ரப்பர் மற்றும் குண்டர் பள்ளத்தாக்குகள் அமைந்துள்ளன. எனவே கொடைக்கானலுக்கு சிறந்த பயணத்தைத் திட்டமிடவும், சுற்றி பார்க்க வேண்டிய சிறந்த இடங்களை பற்றியும் இந்த கட்டுரையில் காணலாம் .

பியர் ஷோலா நீர்வீழ்ச்சி :

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களில் பியர் ஷோலா நீர்வீழ்ச்சியும் ஒன்று. மழைக்காலத்தில் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டினாலும், ஆண்டு முழுவதும் இயற்கையால் சூழப்பட்ட அமைதியான சூழ்நிலையை இப்பகுதியில் அனுபவிக்க முடியும். இயற்கையை நேசிப்பவர்கள் மற்றும் நகர வாழ்க்கையிலிருந்து தப்பிக்க விரும்புபவர்களுக்கு, கொடைக்கானலில் உள்ள பியர் சோலா நீர்வீழ்ச்சியை விட சிறந்த இடம் எதுவுமில்லை. இது கொடைக்கானல் ஏரியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.


பிரபலமான பியர் ஷோலா நீர்வீழ்ச்சி மற்றும் கொடைக்கானல் ஏரி

கொடைக்கானல் ஏரி :

கொடைக்கானல் நகரில் இதுதான் மிகப்பெரிய ஏரியாக இருக்கின்றது. சரியாக பார்த்தால் 24 ஹெக்டரில் இந்த ஏரி அமைந்துள்ளது. படகில்தான் ஏரியை சுற்றி பார்க்க முடியும். ஆகையால் சுற்றுலா பயணிகள் இந்த இடத்தை அதிகம் விரும்புவார்கள். பிரிட்டிஷ் அரசு ஊழியராக இருந்த வேரா லெவிங் என்பவரால் ஆக்கப்பூர்வமாக கட்டப்பட்ட கொடை ஏரி ஒரு செயற்கை ஏரியாகும். இந்த நட்சத்திர வடிவ ஏரி, பசுமையான பழனி மலைத்தொடருக்கு இடையே அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் ஷிகாரா சவாரிகளிலும் செல்லலாம். எனவே கொடைக்கானலில் நாம் பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று.

குக்கல் குகைகள் :

குக்கல் குகைகளுக்கு இரண்டு வழிகளில் செல்லலாம். ஆனால் தற்பொழுது கோதை பழனி பாதையில் மட்டும்தான் காவல்துறையினர் அனுமதிக்கின்றனர். குக்கல் குகைகள் அழகானவை மற்றும் பொதுவாக மலையேற்றத்திற்கான தொடக்க புள்ளியாக கருதப்படுகின்றன. ஒரு காலத்தில் பழங்குடியினர் வாழ்ந்த இந்த குகைகள் நம்பமுடியாத வரலாற்று மதிப்பைக் கொண்டுள்ளன. இன்று இது ஒரு தொல்பொருள் தலமாக உள்ளது. எனவே வரலாற்று ஆர்வலர்கள், கொடைக்கானலில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக குக்கல் குகைகள் உள்ளன.


அழகிய குக்கல் குகைகள் மற்றும் எலி-வால் நீர்வீழ்ச்சிகள் என அழைக்கப்படுகிற தலையார் நீர்வீழ்ச்சி

தலையார் நீர்வீழ்ச்சி :

தலையார் நீர்வீழ்ச்சி, எலி-வால் நீர்வீழ்ச்சிகள் என்று பிரபலமாக அறியப்படுகின்றன. இந்தியாவில் எப்போதும் கண்டு அனுபவிக்கக்கூடிய மிக அழகான நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. மேலும் இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றும்கூட. இந்த நீர்வீழ்ச்சிகள் 900 அடிக்கு மேல் உயரம் கொண்டவை. அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட இந்த இடத்திற்குச் செல்வது அற்புதமான அனுபவத்தை தரும். இந்த நீர்வீழ்ச்சிகளின் அசாதாரணமான இயற்கை அழகு சுற்றுலாப் பயணிகளுக்கு அருமையான இடமாக இருக்கிறது.

கோக்கர்ஸ் வாக் :

கொடைக்கானல் செல்பவர்கள், தங்கள் காலை நேரத்தை கோக்கர்ஸ் வாக் பகுதியிலிருந்து தொடங்கலாம். இந்த 1 கிமீ நீளமான செயற்கை நடைப்பயிற்சி பிளாசா, காலை நடைப்பயணத்தின்போது அழகான காட்சிகளைக் கொண்டுள்ளது. அமைதியான சுற்றுலாத்தலத்தின் அழகை நாம் கண்டு ரசிக்கும்பொழுது மேகங்களின் மீது நடப்பது போன்ற உணர்வை பெற முடியும். மேலும் சைக்கிள்களை வாடகைக்கு எடுத்து மிக குறைந்த செலவில் இந்த அழகான பிளாசாவை சுற்றிப்பார்க்கலாம்.


செயற்கை நடைப்பயிற்சி பிளாசாவான கோக்கர்ஸ் வாக் மற்றும் குணா குகை பாதை

டெவில்ஸ் கிச்சன் (குணா குகை) :

குணா குகை பற்றி பெரிய அறிமுகம் ஏதும் தேவையில்லை. மலையேற்றம் செய்ய விரும்புபவர்களுக்கும், சாகச பிரியர்களுக்கும் குணா குகை ஏற்ற இடம். டெவில்ஸ் கிச்சன் என்றும் அழைக்கப்படும் குணா குகை, குறிப்பிட்ட தூண் பாறைகளுக்கு அருகில் காணப்படும் குகைகளின் குழுவாகும். குணா என்ற தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற பிறகு இந்தக் குகைகள் பிரபலமடைந்தன. அப்போதிருந்து, இது கொடைக்கானலில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது. பயணத்தில் ஒரு சாகசத்தை செய்ய விரும்பினால், இந்த குகைகளை தவறாமல் பார்வையிடலாம்.

தூண் பாறைகள் :

ஊரை சுற்றிப் பார்ப்பதில் ஆர்வமும், சாகசப் பயணம் செய்வதில் ஆசையும் கொண்டவர்களுக்கு ஏற்ற இடம் தூண் பாறைகள். கொடைக்கானலில் சிறந்த சீனரி காட்சியைப் பெற தூண் பாறைகளுக்குச் செல்லலாம். அழகான தோட்டத்தில் நம் சோர்வான கால்களுக்கு ஓய்வளித்து, நமக்கு முன்னால் உள்ள மூன்று பெரிய பாறைகளின் அற்புதமான காட்சியை அனுபவிக்கலாம்.


அழகிய மலர்களைக் கொண்ட பிரையண்ட் பூங்கா மற்றும் தூண் பாறைகள்

பிரையண்ட் பூங்கா :

கொடைக்கானலில் மதியம் அல்லது மாலை நேரத்தில் செல்வதற்கு ஏற்ற இடம்தான் பிரையண்ட் பூங்கா. இந்த தாவரவியல் பூங்கா நூற்றுக்கணக்கான அழகான தாவரங்கள் மற்றும் மலர்களைக் கொண்டுள்ளது. இங்கு பல்வேறு ராஃப்டுகள் மற்றும் பல்வேறு வகையான கலப்பின பூக்களை காண முடியும். இந்த பூங்காவை பார்வையிட சிறந்த காலமாக கோடைக்காலம் உள்ளது. மே மாதத்தில், பூங்காவில் ஒரு பெரிய தோட்டக்கலை கண்காட்சி நடைபெறும்.

பூம்பாறை :

பயணத்தை இன்னும் ஒரு படி மேலே கொண்டுசென்று கொடைக்கானலில் உள்ள ஒரு அற்புதமான இடத்தைப் பார்க்க விரும்பினால், பூம்பாறைக்கு தவறாமல் செல்லலாம். இந்த சிறிய கிராமம் பூண்டு உற்பத்திக்காக அறியப்படுகிறது. ஆனால் இது மிகவும் அழகான மற்றும் நேர்த்தியான இயற்கை அழகைக் கொண்டுள்ளது. அழகான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மலைகளுக்கு நடுவே படிக்கட்டுகளுடன் கூடிய இந்த கிராமத்தில் வசிப்பது ஒரு அருமையான அனுபவம். இந்த இடம் நன்கு அறியப்படாததால், மக்கள் கூட்டம் அதிகம் இல்லாமல் அமைதியாக இந்த இடத்தை சுற்றிப்பார்த்து அனுபவிக்க முடியும்.


பூண்டு உற்பத்திக்கு பெயர்போன பூம்பாறை கிராமம், சில்வர் கேஸ்கேட் நீர்வீழ்ச்சி மற்றும் பெருமாள் சிகரம்

சில்வர் கேஸ்கேட் நீர்வீழ்ச்சி :

கொடைக்கானலில் உள்ள மிக அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றை பார்க்க விரும்பினால், வெள்ளி அருவிக்கு செல்ல வேண்டும். 180 அடி உயரமான பாறையில் இருந்து நீர்வீழ்ச்சி விழுவதால் அதில் கொட்டும் நீர் உண்மையில் வெள்ளி நிறத்தில் தெரியும். இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் தூய படிக நீர், சுற்றுலாப்பயணிகளை மிகவும் ஈர்க்கும். கொடைக்கானலின் உண்மையான அழகை அனுபவிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது.

பெருமாள் சிகரம் ;

கொடைக்கானலில் உள்ள மிக உயரமான சிகரமான பெருமாள் சிகரம், மலையேற்றத்திற்கு ஏற்ற இடம். கொடைக்கானலில் இருந்து சுமார் 18 கிமீ தொலைவில் உள்ள இந்த சிகரம், மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் நீலகிரி மலைகளின் அற்புத காட்சியை காட்டும். இந்த சிகரம் 2,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் இங்கு மலையேற்றம் மேற்கொள்வது, கொடைக்கானல் பயணத்தின் சிறந்த சாகசங்களில் ஒன்றாக இருக்கும். மலையேற்ற ஆர்வலர்களுக்கு இது மிகவும் சிறந்த இடமாக இருக்கும்.

Updated On 25 March 2024 6:25 PM GMT
ராணி

ராணி

Next Story