
சிறிய மாநிலம்தான்.. ஆனால் உலகையே திரும்பி பார்க்கவைக்கும் ஆச்சர்யம்!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்து, நாட்டின் சிறிய மாநிலங்களிலும் ஒன்று. இதன் தலைநகரான கோஹிமா, மலைகளின் அழகையும், பழங்குடியினரின் பாரம்பரியத்தையும் ஒருங்கே கொண்ட ஒரு அற்புத நகரம். "மலைகளின் ராணி" என்று அழைக்கப்படும் இந்த நகரம், வரலாற்றுச் சிறப்புகளையும், தனித்துவமான கலாச்சாரத்தையும் தன்னகத்தே கொண்டது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த நகரின் சிறப்பு மற்றும் தனித்துவமான அம்சங்கள், தொன்மை வாய்ந்த வரலாறு, கண்கவர் சுற்றுலா இடங்கள், அத்துடன் பயணிகளுக்குக் கிடைக்கும் வசதிகள் மற்றும் பாரம்பரிய உணவுகள் குறித்த விரிவான தொகுப்பை இங்கே காணலாம்.
வரலாற்றுப் பின்னணி
கோஹிமாவின் உண்மையான பெயர், அங்குள்ள உள்ளூர் அங்கமி மொழியில் 'கெஹிரா' என்பதாகும். இது அங்கமி மக்கள் வசிக்கும் இப்பகுதியின் பாரம்பரியப் பெயராகும்.1878 ஆம் ஆண்டில் இந்தப் பகுதிக்கு வந்த ஆங்கிலேயர்களுக்கு, 'கெஹிரா' என்ற பெயரை உச்சரிப்பது கடினமாக இருந்தது. எனவே, அவர்கள் உச்சரிப்பதற்கு எளிதாக இருக்கும் வகையில் இப்பகுதியைக் கோஹிமா என்று பெயர் மாற்றம் செய்தனர். இந்த நகரத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், இது ஒரு காலத்தில் ஆசியாவின் இரண்டாவது பெரிய கிராமமாக விளங்கியதுதான். கோஹிமாவில் ஆண்டு முழுவதும் பொதுவாக இதமான காலநிலை நிலவுகிறது, இது இங்கு வாழ்வதற்கு ஒரு இனிமையான சூழலை வழங்குகிறது. இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலும் அங்கமி மக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் நாகாலாந்தின் 17 பழங்குடியினரில் மிகவும் முக்கியமானவர்களாகவும், பெரிய குழுக்களில் ஒன்றாகவும் திகழ்கின்றனர்.
கோஹிமாவின் முக்கியப் பழங்குடியினரான அங்கமி மக்கள்
கோஹிமாவின் முக்கியப் பழங்குடியினரில் அங்கமி மக்கள் மட்டுமின்றி, ஆவோ மற்றும் லோதா இனத்தவரும் அடங்குவர். இங்குள்ள மக்கள் பொதுவாக நேர்மையானவர்கள், உதவி மனப்பான்மை கொண்டவர்கள் மற்றும் மிகவும் நட்பானவர்கள் என்ற நற்பெயரைக் கொண்டுள்ளனர். ஆங்கிலம், நாகாலாந்து மக்களின் முக்கிய மற்றும் அதிகாரப்பூர்வ மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற முக்கிய மொழிகளாக நாகமீஸ் மற்றும் சாக்கோ சாங் ஆகியவை உள்ளன. மேலும், கோஹிமாவில் வசிப்பவர்களில் சுமார் 80% பேர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள். கோஹிமாவின் மிக முக்கியமான கலாச்சார அடையாளம், உலகப் புகழ்பெற்ற ஹார்ன்பில் திருவிழா ஆகும். இந்தத் திருவிழா ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1 முதல் 10 வரை, கோஹிமாவில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள நாகா பாரம்பரிய கிராமத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பத்து நாள் கொண்டாட்டம், நாகாலாந்தின் வளமான பாரம்பரியத்தையும், பல்வேறு பழங்குடியினரின் ஒற்றுமையையும் உலகிற்கு எடுத்துரைக்கும் வண்ணம் கலை, உணவு, இசை மற்றும் நடனம் ஆகியவற்றின் கண்கவர் கண்காட்சியாக அமைகிறது.
இயற்கையின் சொர்க்கம்
கோஹிமாவில் இருக்கும் குறிப்பிடத்தக்க இயற்கை எழில் நிறைந்த சுற்றுலாத்தலங்களில் முதன்மையானது, ஜூகோ பள்ளத்தாக்கு. இது நாகாலாந்துக்கும் மணிப்பூருக்கும் இடையில் சுமார் 2,438 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மேகங்களால் சூழப்பட்ட மலைத்தொடர்களையும், எண்ணற்ற வண்ணமயமான காட்டு மலர்களையும் கொண்ட இப்பகுதி ஒரு இயற்கைச் சொர்க்கம் என்றே சொல்லலாம். குறிப்பாக, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் இங்கு பூக்கும் ஜூகோ மலர்கள் இந்த பள்ளத்தாக்கை 'கிழக்கின் மலர்ப் பள்ளத்தாக்கு' என்று அழைக்கச் செய்கிறது. இந்த இடம் மலையேற்றம் மற்றும் இயற்கையைக் காதலிக்க ஏற்றது. இங்கு மலையேற்றம் செல்பவர்களுக்கு விஸ்வேமா அல்லது ஜகாமா கிராமங்கள் வழியாக இரண்டு வழிகள் உள்ளன. அதேபோல் இப்பகுதியில் உள்ள ஷில்லோய் ஏரி, மனிதனின் கால் தடம் போன்று தோற்றமளிக்கும் ஒரு அழகான இயற்கை ஏரி ஆகும். இது கோஹிமாவிலிருந்து சிறிது தொலைவில் பெக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அடர்ந்த பைன் காடுகளால் சூழப்பட்ட இந்த ஏரி, ஒரு அற்புதமான பிக்னிக் மற்றும் ஓய்வெடுக்க ஏற்ற இடமாகும்.
இதுதவிர, கோஹிமா போரின் வரலாற்றுத் தடயங்களைச் சுமந்தபடி, கோஹிமா போர் கல்லறை இந்நகரில் தான் அமைந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியப் படையின் இந்தியப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க போர்க்களமாக இது விளங்குகிறது. இந்தப் போரில் உயிர் தியாகம் செய்த ஏறத்தாழ 1,420 வீரர்களின் நினைவிடமும், இந்து மற்றும் சீக்கிய வீரர்களின் அஸ்தி தகன நினைவிடமும் இங்கு உள்ளது. மேலும், இந்த நகரத்திற்கு அருகிலுள்ள கிராமங்களான துவோஃபேமா கிராமம் மற்றும் கோஹிமா கிராமம் ஆகியவை, நாகா மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறை, அவர்களின் பழக்கவழக்கங்கள், அங்கமி பழங்குடி மக்களின் தனித்துவமான நாகா வீடுகளின் கட்டட கலையைப் பற்றி அறிந்து கொள்ள சிறந்த இடங்களாகும்.
மேரி ஹெல்ப் ஆஃப் கிறிஸ்டியன்ஸ் கதீட்ரல் தேவாலயம்
தனித்துவமான அடையாளங்கள்
கோஹிமா நகரில் பல முக்கியமான தேவாலயங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது, மேரி ஹெல்ப் ஆஃப் கிறிஸ்டியன்ஸ் கதீட்ரல் ஆகும். இது கோஹிமா கதீட்ரல் தேவாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் இறந்த ஜப்பானிய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஜப்பானியர்களின் நிதியுதவியுடன் இது கட்டப்பட்டது. நாகா-கோதிக் பாணியில் வடிவமைக்கப்பட்ட இதன் முகப்பு, பாரம்பரிய நாகா வீட்டை ஒத்திருப்பது தனிச் சிறப்பாகும். இங்குள்ள 16 அடி உயரம் கொண்ட மரச் சிலுவை, ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலுவைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இவை தவிர நாகாலாந்து மாநில அருங்காட்சியகம் நாகாலாந்து மக்களின் வரலாறு, கலாச்சாரம், கலை மற்றும் அவர்களின் பாரம்பரிய ஆயுதங்களைப் பற்றி விரிவாகக் காட்சிப்படுத்துகிறது. குறிப்பாக இந்த அருங்காட்சியகம் பல்வேறு நாகா பழங்குடியினரின் தனித்துவமான வாழ்க்கை முறைகள் மற்றும் அவர்களின் தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்தப்படும் கலைப்பொருட்களின் அரிய தொகுப்பைப் பாதுகாத்து வருகிறது.
இதேபோல், கோஹிமா நகரத்தின் அன்றாட வாழ்க்கையின் துடிப்பையும், நாகா மக்களின் கைவினைப் பொருட்களின் நேர்த்தியையும், உள்ளூர் தயாரிப்புகளின் தனித்துவத்தையும் கண்டறிய விரும்பினால், நகரத்தின் மையத்தில் உள்ள திபெத்திய சந்தை ஒரு மிகச் சிறந்த இடமாகும். இந்தச் சந்தை, அழகான சால்வைகள், கம்பளங்கள், கையால் நெய்யப்பட்ட ஆடைகள், பாரம்பரிய ஆபரணங்கள் மற்றும் நாகாலாந்துக்குரிய உணவுப் பொருட்கள் போன்றவற்றை வாங்கவும், உள்ளூர் மக்களின் வர்த்தகத்தைப் புரிந்து கொள்ளவும் ஒரு சிறந்த இடமாக திகழ்கிறது.
இயற்கை சரணாலயங்கள்
ஃபக்கிம் சரணாலயம்
ஃபக்கிம் சரணாலயம் மற்றும் இண்டாங்கி தேசிய பூங்கா ஆகியவை கோஹிமா பகுதியைச் சுற்றியுள்ள வனவிலங்கு மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் முக்கியமான இடங்களாகும். இதில் குறிப்பாக மியான்மர் எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ள ஃபக்கிம் சரணாலயம், பல்வேறு அரிய விலங்குகளின் தாயகமாக உள்ளது. இங்கு புலிகள், ஸ்லெண்டர் லோரிஸ் என சொல்லக்கூடிய தேவாங்குகள், இமயமலைக் கரடிகள் மற்றும் ஹூலாக் கிப்பன் போன்ற உயிரினங்களைக் காணலாம். அதேபோல் நாகாலாந்தின் முதன்மை தேசியப் பூங்காவான இண்டாங்கி தேசியப் பூங்காவிலும் ஹூலாக் கிப்பன், பொன்னிற லங்கூர், கருப்பு நாரை உள்ளிட்ட பல அரிய விலங்குகள் மற்றும் பறவைகளை கண்டு ரசிக்கலாம்.
இந்த இரண்டு முக்கிய சரணாலயங்களை தவிர, கோஹிமாவில் இயற்கை மற்றும் வனவிலங்கு அனுபவத்தை வழங்கக்கூடிய மேலும் சில இடங்களும் உள்ளன. அவற்றில் கோஹிமா மிருகக்காட்சி சாலை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விலங்குகளைப் பார்வையிட ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. மேலும், சாகசத்தையும் இயற்கைக் காட்சிகளையும் விரும்பும் பயணிகளுக்கு ஜாஃபூ மலை ஒரு சிறந்த தேர்வாகும். இந்த ஜாஃபூ மலை நாகாலாந்தின் இரண்டாவது மிக உயரமான சிகரமாகும். இந்த மலைப்பகுதி மலையேற்றம் செய்பவர்களுக்கு சவாலான மற்றும் அற்புதமான அனுபவத்தைத் தரும். இதன் உச்சியில் இருந்து கோஹிமா மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் பனோரமிக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.
உணவு மற்றும் பிற வசதிகள்
பன்றி இறைச்சி உணவு
நாகாலாந்தின் உணவு வகைகள் அவற்றின் தனித்துவத்திற்காக அறியப்படுகின்றன. இந்த உணவுகள் பெரும்பாலும் வேக வைக்கப்பட்ட மூங்கில், புளித்த சோயாபீன்ஸ் மற்றும் பலவகையான மூலிகைகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக இங்கு பன்றி இறைச்சி, மூங்கில் தண்டுகள் மற்றும் அரிசி மாவு உணவுகள் ஆகியவை மிகவும் பிரபலமானவை. பாரம்பரிய சமையலை பொறுத்தவரை, வேக வைத்த அரிசி, ஆட்டிறைச்சி, மீன், கோழிக்கறி ஆகியவை அதிகளவில் இங்கு பயன்படுத்தப்படுகின்றன. தலைநகரான கோஹிமாவில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பலவிதமான உணவகங்கள் இருந்தாலும், அவற்றில் ‘மூங்கில் கொத்துக்கறி‘, பச்சை மூங்கிலை பயன்படுத்தி செய்யப்படும் ‘சுட்ட கறி’ ஆகியவை மிகவும் பிரபலமான உணவுகளாகும். இப்படிப்பட்ட தனித்துவமான கோஹிமாவிற்கு நாம் செல்ல விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக பல வழிகள் உள்ளன. அதில் அருகிலுள்ள விமான நிலையம் என்றால், திமாபூர் விமான நிலையம் ஆகும். அங்கிருந்து கோஹிமாவுக்கு கார் அல்லது பேருந்து மூலம் எளிதில் செல்லலாம். இந்த நகரத்தின் தட்பவெப்பநிலை ஆண்டு முழுவதும் இனிமையாக இருப்பதால், இது பயணிகளுக்கு மிகவும் உகந்த இடமாக அமைகிறது. மொத்தத்தில் நாகாலாந்து என்பது சிறிய மாநிலம்தான் என்றாலும், உலகளவில் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து ஆச்சர்யத்திற்குள்ளாக்குகிறது. இத்தகைய அழகிய பகுதிக்குச் செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், நீங்களும் ஒருமுறை சென்று வந்து மகிழுங்கள்.
கோஹிமா கூகுள் மேப்
