இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நெல்லையில் சா'தீ'யால் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் கடந்த வாரம் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் இப்படி ஆணவக்கொலைகள் அரங்கேறுவது ஒன்றும் புதிதல்ல. பல அரங்கேறும். அவற்றில் கவின் போன்ற படித்த பட்டதாரிகள் சிலர் வெளியே தெரிவார்கள். மற்றவர்கள் கதை வெளியே வராமல் புதைக்கப்படும். இது தொடர்கதையே... இந்நிலையில் யார் இந்த ஐடி ஊழியர் கவின்? இந்த இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட காரணம் என்ன? இந்த வழக்கில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்த முழு தகவலை இங்கு காண்போம்.


கவினுடன் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஐ தம்பதியின் மகள்...

நல்லா படிச்சா போதும்...

பொதுவாக திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் எனக் கூறுவார்கள். பலர் இருமனங்கள்தான் திருமணத்தை தீர்மானிக்க வேண்டும் என்பார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் சாதிய கட்டமைப்புகள்தான் திருமணத்தை தீர்மானிக்கும். பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து பேசினால், இப்போதெல்லாம் பலரும் ஒரு பொதுக்கருத்தை முன்வைத்து விடுகிறார்கள். நல்லா படி, படிச்சி வேலைக்கு போ, வேலைக்கு போய் கைநிறைய சம்பளம் வாங்குனா போதும். யாரும் சாதி பார்க்கமாட்டார்கள். யாரை ஏமாற்ற இந்த கூற்று. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயியான இவருக்கு இரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் கவின் செல்வகணேஷ் (26) சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். மாதம் ஒரு லட்சம் சம்பளம். சிறுவயதிலிருந்தே நன்கு படிப்பவர். கல்லூரியில் கோல்ட் மெடலிஸ்ட். தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். குடி, புகை என எந்த கெட்டப்பழக்கமும் இல்லை. யாரிடமும் வம்பு, தகராறு என எதுவும் இல்லை. கவினின் அம்மா ஒரு ஆசிரியர். எந்த கஷ்டமும் இல்லாத ஒரு செட்டில் ஆன குடும்பம்.

இந்நிலையில் இளைஞர் கவின் பள்ளிப்பருவத்தில் இருந்தே, பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த எஸ்.ஐ தம்பதியின் மகளை காதலித்து வந்துள்ளார். பள்ளிக்காலத்தில் இருந்தே கவினும், அந்த பெண்ணும் நட்பாக பழகி வந்த நிலையில், நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இது இருகுடும்பத்தினருக்கும் தெரியவர, கவினையும், அந்த பெண்ணையும் கண்டித்துள்ளனர். இருப்பினும் இருவரது காதலும் தொடர்ந்து வந்துள்ளது. சென்னையில் பணிபுரியும் கவின், பாளையங்கோட்டையில் சித்த மருத்துவராக பணிபுரியும் அப்பெண்ணை அடிக்கடி சென்று பார்த்து வந்துள்ளார். இதனை அறிந்த பெண்ணின் தம்பியான சுர்ஜித்(24) தன் அக்காவிடம் பேசக்கூடாது என கவினிடம் கூறிவந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு சென்ற கவின்குமார், அவரது தாத்தாவுக்கு வைத்தியம் பார்ப்பதற்காக, அவரை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். கூடவே கவினின் தாயும் சென்றதாக கூறப்படுகிறது. தாத்தாவை சிகிச்சைக்காக உள்ளே விட்டுவிட்டு, அந்த தெருவில் நின்று கொண்டிருந்துள்ளார் கவின். அப்போது அங்கு வந்த இளைஞர் சுர்ஜித், திருமணம் தொடர்பாக பேச வேண்டும் எனக்கூறி, கவினை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். தனியாக அழைத்துச் சென்ற சுர்ஜித், தன் அக்காவிடம் பேசக்கூடாது எனக் கவினிடம் கூறியுள்ளார். அதற்கு கவின் மறுப்பு தெரவித்ததாக தெரிகிறது. இதனால் கையில் இருந்த மிளகாய்ப் பொடியை கவினின் கண்ணில் தூவி, அவரை சம்பவ இடத்திலேயே வெட்டிக் கொன்றுள்ளார் சுர்ஜித்.


கவினை கொலை செய்த சுர்ஜித்...

தகவல் அறிந்து பாளையங்கோட்டை போலீசார் உயிரிழந்து கிடந்த கவினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சுர்ஜித்தை கைது செய்தனர். விசாரணையில் இது ஆணவக்கொலை என தெரியவந்தது. இதையடுத்து சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர்களான சப் - இன்ஸ்பெக்டர்கள் சரவணன், மற்றும் கிருஷ்ணகுமாரி மீது காவல்துறையினர் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரியை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல்படை டிஐஜி விஜயலட்சுமி உத்தரவிட்டார்.

ஆனால் இருவரையும் கைது செய்தால்தான் கவினின் உடலை வாங்குவோம் என அவரது பெற்றோரும், உறவினர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே அரசு தரப்பில் தரப்பட்ட நிவாரணத் தொகையையும் வாங்க மறுத்த கவின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதையடுத்து ஜூலை 30ஆம் தேதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் மற்றும் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் நெல்லை சரக டிஐஜி சந்தோஷ் ஆகியோர் கவினின் பெற்றோரை சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்வதுடன், அவர்களை பணி நீக்கம் செய்தால்தான் கவினின் உடலை வாங்குவோம் என்று திட்டவட்டமாக கவின் குடும்பத்தினர் தெரிவித்துவிட்டனர். மேலும் அரசின் நிவாரண நிதியையும் புறக்கணித்தனர். இதனையடுத்து ஏற்கனவே கைது செய்யப்பட்ட சுர்ஜித் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது. இதனிடையே சுர்ஜித் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. மேலும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார்.


கொலைக்கும் தனது பெற்றோருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கவினின் காதலி வீடியோ...

என் அப்பா, அம்மாவை விட்டுவிடுங்கள்...

இந்நிலையில் தனது அப்பா, அம்மாவிற்கும் கவின் கொலை விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என, கவின் காதலித்ததாக கூறப்படும் பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், "எனக்கும், கவினுக்கும் இடையே என்ன உறவு இருந்தது என்று யாருக்கும் தெரியாது. யாரும் இனிமேல் இதைப்பற்றி பேச வேண்டாம். கவினும், நானும் உண்மையாக காதலித்தோம். காதலை வீட்டில் சொல்வதற்கு அவகாசம் தேவைப்பட்டது. கடந்த மே 30ஆம் தேதியன்று கவினும், தம்பி சுர்ஜித்தும் பேசிக்கொண்டனர். அச்சமயம், எப்போது வந்து திருமணம் குறித்து வீட்டில் பேசுவீர்கள் என கவினிடம் சுர்ஜித் கேட்டது எனக்கு தெரியும். கவின் அவகாசம் கேட்டதால்தான் என் காதலை அப்பாவிடம் மறைத்துவிட்டேன். தம்பிக்கு மட்டும் தெரியும். எனது காதலை வீட்டில் வெளிப்படையாக சொல்வதற்குள் இப்படி நடந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தப் பெண்ணிடம் போலீசார் தனியாக நடத்திய விசாரணையில், தான் கவினை காதலிக்கவில்லை எனக் கூறியதாக தகவல் வெளியானது. ஆனால் போலீசார் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்த சூழலில்தான் தானும், கவினும் காதலித்ததாக வீடியோ வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் தொடரும் சாதிய வன்கொடுமைகள்...

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு பத்துக்கும் மேற்பட்ட ஆணவக்கொலைகள் அரங்கேறிதான் வருகின்றன. குறிப்பாக தென் மாவட்டங்களில். இதற்கு முக்கிய காரணம் மதவாதம் மற்றும் சாதியை அடிப்படையாக கொண்ட அமைப்புகளும், கட்சிகளும்தான். பள்ளி மாணவர்களிடையே இருக்கும் சாதிய பாகுபாடுகளை கலைய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு பரிந்துரைத்த அறிவுரைகள் அனைத்தையும் எதிர்த்தது தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தேசிய கட்சி ஒன்று.

பட்டியலினத்தை சேர்ந்த ஒருவன் நன்றாக கபடி விளையாடினால், பள்ளியில் தங்களைவிட நன்றாக படித்தால், புல்லட் பைக் ஓட்டினால், காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டால், ஒரு பெண்ணை உண்மையாக காதலித்தால் என எது செய்தாலும் கொடூரமாக வெட்டப்படுகிறான் அல்லது கொலை செய்யப்படுகிறான். என்னதான் செய்ய வேண்டும்? அதைத்தான் சொல்லிவிட்டால் அவர்கள் அதை செய்யாமல் இருந்துகொள்வார்கள் என்றால், தாங்கள் சொல்வதை தவிர எதுவும் செய்யக்கூடாது எனக் கூறுகிறது மேலாதிக்க சாதிகள். எப்போதுதான் இதற்கு தீர்வு கிடைக்கும்?


நெல்லையில் சாதிய கொலைகளே நடப்பதில்லை - அப்பாவு

நெல்லையில் ஆணவக்கொலைகளே இல்லை...

கவினின் இந்த ஆணவக்கொலை சம்பவம் அரங்கேறியது நெல்லை மாவட்டத்தில். இதுபோல பல கொலைகள் திருநெல்வேலியில் அரங்கேறிதான் வருகிறது. ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டு சாதி ரீதியான படுகொலைகள் ஏதும் நடைபெறவில்லை என அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தார். அதுபோல தமிழ்நாட்டில் சாதிய கொலைகளே நடைபெறுவதில்லை. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் சாதிய கொலைகளே நடைபெறவில்லை என அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.


மாரி செல்வராஜின் பதிவு - கவினின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன்

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கண்டனம்...

கவின் கொல்லப்பட்டதற்கு பிரபலங்கள் பலரும் கண்டனக் குரல் எழுப்பினர். கமல்ஹாசன், இயக்குநர் மாரி செல்வராஜ், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் கண்டன பதிவுகளை வெளியிட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், ''தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் ஆதிக்க சாதி கொலைகள், சாதி வெறி தாக்குதல்கள் தொடர்ந்து நிகழ்வது வேதனையளிக்கிறது. கெளரவம் என்ற பெயரில் நடக்கும் கொலைகளை தடுப்பதற்கான சட்டத்தை இந்திய சட்ட ஆணையம் வடிவமைத்து பல ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதுபோன்ற கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும்'' என வலியுறுத்தினார். காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கல்வி, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணி மாநிலமாக விளங்கும் தமிழகத்தில் தலித் மக்கள் மீது தொடரும் ஆணவப்படுகொலைகள் பெரும் தலைகுனிவை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். இத்தகைய வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கவினின் தாய் கதறல்...

ஒருவழியாக பல்வேறு தரப்பினரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு கவின் உடலை கடந்த ஒன்றாம் தேதி பெற்றுக்கொண்ட அவரது குடும்பத்தினர், இறுதி மரியாதை செலுத்தி அடக்கம் செய்தனர். அப்போது தனது மகன் கவினின் உடலைப் பார்த்து கதறிய அவரது தாயார், "உனக்கு காதலிக்க வேறு பெண்ணே கிடைக்கவில்லையா? அவள் ஒரு ஃப்ராடு... அவள் பச்சை துரோகி... அவளை காதலித்து ஏமாந்துவிட்டாயே... அம்மாவை அனாதையாக்கிவிட்டாயே" என்று கதறி அழுதார். அதிகாரம் இருக்கிறது என்ற திமிரில் ஆடிவிட்டவர்களை, தன் வயிற்றெரிச்சல் சும்மா விடாது என்றும் கவினின் தாய் கண்ணீர் மல்க கூறினார். அந்த தாயின் வார்த்தைகள் வலியின் உச்சக்கட்டம்.

Updated On 5 Aug 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story