
சோகத்தை தாங்கி நிற்கும் பஹல்காம் - அழியாத அழகும் மக்களின் அன்பும்!
"வந்தவர்கள் ஒருபோதும் மறக்க முடியாத அனுபவங்களை பெறும் பூமி" என்று வர்ணிக்கப்படும் பஹல்காம், இயற்கை அன்னையின் மிகச் சிறந்த படைப்பாக விளங்குகிறது. நீல நிறத்தில் நெளிந்தோடும் லிடர் நதி, கம்பீரமான மலைகள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகள் என மனதை கொள்ளை கொள்ளும் அழகிய காட்சிகளுடன் அமைதியான சூழலைக் கொண்ட இந்த இடம், தற்போது சில விரும்பத்தகாத சம்பவங்களால் நாடு முழுவதும் கவனத்தை பெற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பஹல்காமின் உண்மையான சிறப்பு அதன் இயற்கை எழிலும், அங்குள்ள மக்களின் அன்பும்தான். இவை காலத்தால் அழியாத பொக்கிஷங்கள். இந்த அழகிய இடத்தைப் பற்றி சில முக்கியமான தகவல்களை பார்ப்போம்.
வரலாற்றுப் பக்கங்களில் ‘பஹல்காம்’

அமர்நாத் யாத்திரைக்கான முக்கிய நுழைவாயிலாக விளங்கும் பஹல்காம் மற்றும் சிவபெருமானின் பனிலிங்கம்
பஹல்காம், காஷ்மீர் பள்ளத்தாக்கின் இதயமாகக் கருதப்படும் ஒரு மயக்கும் மலைவாசஸ்தலம். பழங்காலத்திலிருந்தே இந்த இடம் தனது ஒப்பற்ற இயற்கை அழகால் அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது. "பஹல்" என்றால் "புதியது" என்றும், "காம்" என்றால் "கிராமம்" என்றும் பொருள்படும் பாரசீக சொற்களிலிருந்து இந்த பெயர் உருவானது. ஆகையால், "பஹல்காம்" என்றால் "புதிய கிராமம்" என்று பொருள். இந்த நிலம் ஒரு காலத்தில் பரந்த மேய்ச்சல் நிலமாகத் திகழ்ந்தது. பின்னர், வேட்டையாடுபவர்கள் மற்றும் வனங்களில் வசித்த நாடோடிகளின் முக்கிய வாழ்விடமாக மாறியது. காலங்கள் செல்லச்செல்ல, பஹல்காமின் அமைதியான சூழலும், இயற்கை வளமும் ஆன்மீகத் தேடல் கொண்டவர்களை ஈர்த்தது. இதன் விளைவாக, இது சந்நியாசிகள் மற்றும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த யாத்ரீகர்களின் முக்கியமான புனிதத் தலமாக பரிணமித்தது. குறிப்பாக, ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரைக்கான முக்கிய நுழைவாயிலாக பஹல்காம் விளங்குகிறது. சிவபெருமானின் பனிலிங்கத்தை தரிசிக்கச் செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்குவந்து தங்கி, தங்களது புனிதப் பயணத்தைத் தொடங்குகின்றனர். இந்த யாத்திரையின்போது, பஹல்காமின் ஆன்மிக அதிர்வலைகளையும், இயற்கை அழகையும் பக்தர்கள் உணர்கின்றனர்.
இயற்கையோடு இயைந்த வாழ்க்கை

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் சிறந்து விளங்கும் பஹல்காம் மக்கள்
பஹல்காம் ஒரு சிறிய நகரம் என்றாலும், அதன் நாகரிகம் தனித்துவமான அம்சங்களைக் கொண்டது. காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த ஊரில், மக்கள் தங்களின் தொன்மையான கலாச்சாரத்தையும், தனித்துவமான வாழ்க்கை முறையையும் மிகுந்த கவனத்துடன் பாதுகாத்து வருகின்றனர். பஹல்காமின் பொருளாதாரத்தில் கால்நடை வளர்ப்பு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்குள்ள மக்கள் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்கின்றனர். விவசாயமும் இங்குள்ள மக்களின் முக்கியமான தொழிலாக விளங்குகிறது. நெல், சோளம் மற்றும் பல்வேறு வகையான காய்கறிகள் இப்பகுதியில் பயிரிடப்படுகின்றன. மேலும், காஷ்மீரின் தனித்துவமான ஆடைகள், உலகப் புகழ்பெற்ற கம்பளிகள் மற்றும் அழகிய கைவினைப் பொருட்கள் ஆகியவை பஹல்காமில் உற்பத்தி செய்யப்பட்டு உலகெங்கும் வணிகம் செய்யப்படுகின்றன. உணவை பொறுத்தவரை காஷ்மீரின் பாரம்பரிய உணவு முறையான வாச்வான், பஹல்காமிலும் மிகவும் பிரபலமானது. பலவிதமான அசைவ உணவுகளை உள்ளடக்கிய இந்த உணவு முறை, தனித்துவமான மசாலாப் பொருட்கள் மற்றும் சமையல் முறைகளால் சிறந்து விளங்குகிறது. இது தவிர, காஷ்மீருக்குரிய பல்வேறு சைவ உணவுகளும் பஹல்காமில் பரிமாறப்படுகின்றன. பொதுவாகவே பஹல்காமில் காஷ்மீரி மொழி முக்கிய மொழியாகப் பேசப்பட்டாலும், இந்தி, உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளும் பரவலாகப் புழக்கத்தில் உள்ளன. வெளியூர்களில் இருந்து வருபவர்களுடனும், சுற்றுலாப் பயணிகளுடனும் தொடர்புகொள்வதற்கு இந்த மொழிகள் அவர்களுக்கு உதவுகின்றன.
இயற்கையின் பொக்கிஷம் ‘பஹல்காம்’
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், அமைதியான பள்ளத்தாக்குகளுக்கும், பசுமையான புல்வெளிகளுக்கும் பெயர் பெற்ற பஹல்காம், இயற்கை அன்னையின் பேரழகை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு அற்புத பகுதி. நீல நிறத்தில் ஆர்ப்பரித்து செல்லும் லிடர் நதி, பஹல்காமின் உயிர்நாடியாக விளங்குகிறது. இந்த நதிக்கரையில் அமைதியாக அமர்ந்து, இயற்கையின் எழில்மிகு காட்சிகளை ரசிப்பது மனதிற்கு சாந்தத்தையும், அமைதியையும் அளிக்கிறது. பஹல்காமிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரு பள்ளத்தாக்கு, பனி மூடிய கம்பீரமான மலைகளால் சூழப்பட்டு, ஒரு அமைதியான சூழ்நிலையை வழங்குகிறது. இங்கு தங்குவது, பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, இயற்கையோடு ஒன்றிணைந்த ஒரு புதுவிதமான அனுபவத்தை அளிக்கும். மேலும், 1983-ல் வெளியான ‘பீடாப்’ திரைப்படம் மூலம் உலகப் புகழ்பெற்ற பீடாப் பள்ளத்தாக்கு, அடர்ந்த பசுமையான புல்வெளிகள், கண்களைக் கவரும் பனிச்சரிவுகள் மற்றும் ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சிகளுடன் இயற்கை அழகின் உச்சமாக விளங்குகிறது. பொதுவாகவே பஹல்காம் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருப்பதால், 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கமலேஷ்வர் கோவில் (சிவன் கோவில்) இங்கு அமைந்துள்ளது. இது இப்பகுதியின் ஆன்மிக அடையாளமாகத் திகழ்கிறது. மேலும், புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள், பஹல்காமை ஒரு முக்கியமான தங்குமிடமாக கருதுகின்றனர். இங்கிருந்துதான் சந்தன்வாடி வழியாக புனித குகையை நோக்கி அவர்கள் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.

அழகு, ஆன்மிகம் நிறைந்த பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலால் சோகத்தில் இருக்கும் மக்கள்
அழகு, ஆன்மிகம் என அனைத்து ரசனைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள பஹல்காம், மலையேற்றத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது. ஏனெனில் இப்பகுதியைச் சுற்றி பல அழகான மற்றும் சவாலான டிரக்கிங் பாதைகள் உள்ளன. அதேபோல் லிடர் நதியில் மீன் பிடிப்பதும் இங்கு ஒரு இனிமையான பொழுதுபோக்காக விளங்குகிறது. மேலும், இப்பகுதியின் மலைப்பாதைகளில் குதிரையில் பயணிப்பது ஒரு தனித்துவமான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது. குறிப்பாக அரு பள்ளத்தாக்கு போன்ற அமைதியான இடங்களில் கூடாரம் அமைத்து தங்குவது, இயற்கையின் மடியில் ஒரு புதிய உலகத்தை உணர வைக்கும் தருணம் என்றே சொல்லலாம். இப்படிப்பட்ட பஹல்காமிற்கு நாம் செல்ல உகந்த காலம் என்றால் அது மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை எனலாம். இந்த சமயத்தில் இயற்கை அழகு முழுமையாக வெளிப்படும் பசுமையான புல்வெளிகளும், விதவிதமான மலர்களின் நறுமணமும் நம் மனதை கொள்ளை கொள்ளும். அதேபோல் குளிர்காலத்தில் பனிப்போர்வையால் மூடப்பட்டிருக்கும் பஹல்காம், பனி விளையாட்டுகளை விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த இடமாக திகழ்கிறது.
மீண்டும் அமைதிப் பூங்காவாக மலரும்!
இப்படி இயற்கையின் மடியில் அமைந்த பஹல்காம், அதன் அழகு, ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் கலந்து ஒரு சிறப்பான அனுபவத்தை பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது. இருப்பினும் அண்மையில் ஏற்பட்ட சில பாதுகாப்பு சிக்கல்கள் இப்பகுதியின் அமைதிக்கும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் சவாலாக அமைந்தாலும், பஹல்காமின் உள்ளார்ந்த வலிமையும், இங்கு வாழும் மக்களின் ஒற்றுமையும் மீண்டும் அமைதியான ஒரு சூழலை உருவாக்கும் என்று நம்புவோம். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன், பஹல்காம் மீண்டும் தனது பழைய அழகையும் முக்கியத்துவத்தையும் பெற்று அமைதிப் பூங்காவாக மலரும் என்று எதிர்பார்க்கலாம்.
பஹல்காம் கூகுள் வரைபடம்
