இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஏமனில் ஒரு கிராமத்தில் பிறந்த நுஜூத் அலி என்ற சிறுமி, தனக்கு நடைபெற்ற கட்டாய திருமணத்தை எதிர்த்து, தனி ஆளாக நீதிமன்றம் சென்று போராடி விவாகரத்து பெற்று உலகையே திரும்பி பார்க்க வைத்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 10. போராடி விவாகரத்து பெற்ற நுஜூத் அலி, தனது வாழ்க்கை போராட்டத்தை புத்தமாக எழுதி, "I Am Nujood, Age 10 and Divorced" என்ற பெயரில் வெளியிட்டார். இச்சம்பவம் நடைபெற்ற ஆண்டு 2008 ஏப்ரல். சம்பவம் நடந்து முழுதாக 17 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அரபு நாடுகளில், பெண் குழந்தைகளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்கும் நிகழ்வு என்பது, இன்றும் சர்வ சாதாரணம் என்று கூறப்படும் நிலையில், 17 ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு சிறுமி, இவ்வளவு திடமாக போராடி வெற்றி பெற்றிருக்கிறார். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை தனி ஆளாக எதிர்த்துநின்ற ஒரு சிறுமிக்கு இருந்த தைரியம், தெளிவு, மனோதிடம் போன்றவை ரிதன்யா போன்ற படித்த பெண்களுக்கு ஏன் வருவதில்லை?


தைரியம், தெளிவு, மனோதிடம் நிறைந்த நுஜூத் அலி

நுஜூத் அலிக்கு 9 வயதில் நடைபெற்ற திருமணம்...

ஏமனில் பழங்குடி பாரம்பரியத்தில் பிறந்தவர்தான் நுஜூத் அலி. அவரது தந்தைக்கு 2 மனைவிகள். அவர்கள் மூலம் அந்த வீட்டில் 16 குழந்தைகள் இருந்துள்ளனர். இவ்வளவு குழந்தைகளையும் பராமரிக்க பொருளாதாரம் பற்றாத நிலையில், நுஜூத் அலிக்கு திருமணம் செய்துவைக்க அவரது தந்தை முடிவு செய்துள்ளார். ஒரு நாள் மாலை நுஜூத் அலியை அழைத்த தந்தை, உனக்கு ஒரு நல்ல செய்தியை சொல்கிறேன், உனக்கு திருமணம் செய்து வைக்க உள்ளேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட, 9 வயதே ஆன நுஜூத் அதிர்ச்சி அடைந்துள்ளாள். என்ன செய்வதென்று அவர் யோசிப்பதற்குள், திருமணம் நடந்து முடிந்துள்ளது. இஸ்லாமிய முறைப்படி மகர் கொடுத்து, அதாவது பெண்ணை திருமணம் செய்துகொள்ள, மணமகன் வீட்டிலிருந்து 31 ஓராயிரம் பணம் கொடுத்து நுஜூத்தை திருமணம் செய்து சென்றுள்ளனர். நடைபெற்றதோ குழந்தை திருமணம், கட்டாயத் திருமணம்... ஆனால் பணத்தை வாங்கிக்கொண்ட நுஜூத்தின் தந்தைக்கு மிக்க மகிழ்ச்சி.

நுஜூத்துக்கு 9 வயது! மாப்பிள்ளைக்கு 30 வயது!

இந்தியாவில் 1929ல் குழந்தை திருமண தடை சட்டம் இயற்றப்பட்டது. இந்தியாவில் சட்டம் கொண்டுவரப்பட்டு 100 ஆண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், உலகின் பல இடங்களில், குறிப்பாக அரபு நாடுகளில் இது சாதாரணமாக நடக்கும் விஷயமாகவே இன்றும் இருக்கிறதாம். அதனால்தான், இன்றும் அரபிப் பெண் எழுத்தாளர்களின் கதைகளில் தவறாது இடம்பெறும் அம்சமாக, சிறுமிகளை பெற்றோர் திருமணத்திற்கு வற்புறுத்தினார்கள் என்று இருக்கும். இந்த சூழலில் 2008ல், நுஜூத்துக்கு திருமணம் நடைபெற்றபோது அவருக்கு 9 வயது, மாப்பிள்ளைக்கோ 30 வயது. நுஜூத் அலியை திருமணம் செய்து சென்ற குடும்பத்தினர், அவளை சிறுமியாக கருதாமல், இரக்கமின்றி நடத்தியுள்ளனர். நுஜூத்தின் மாமியார், அவளிடம் அனைத்து வீட்டு வேலைகளையும் வாங்கியுள்ளார். காய்கறி நறுக்குவது, வீட்டை தூய்மை செய்வது, கழிவறையை சுத்தம் செய்வது, துணி துவைப்பது என காலையில் எழுந்து.. இரவு படுக்கைக்கு செல்லும் முன்வரை, வீட்டின் அனைத்து பணிகளையும் நுஜூத் செய்துள்ளாள்.

இது அனைத்திற்கும் உச்சகட்டமா, இரவில் அந்த 9 வயது சிறுமியை, 30 வயதான மாப்பிள்ளை பாலியல் வன்புணர்வு செய்கிறான். திருமணம் ஆன முதல் நாள் முதலே இந்த கொடுமைகளை அனுபவித்த நுஜூத், தன் தந்தையிடம் சென்று அழுதுள்ளார். அதற்கு அவர், இனி நீ இங்கெல்லாம் வரக்கூடாது. மாப்பிள்ளையோடுதான் இருக்க வேண்டும் என்று அனுப்பிவிடுகிறார். இதனை தாங்கிக்கொள்ள முடியாத நுஜூத், தன் தந்தையின் இரண்டாவது மனைவியிடம், தனது நிலை குறித்து அழுது மன்றாடுகிறார். எனக்கு, மற்ற சிறுமிகளோடு சேர்ந்து விளையாட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது, பள்ளிக்கு சென்று தொடர்ந்து படிக்க வேண்டும்போல இருக்கிறது என்றெல்லாம் அழுது கொண்டே கூறியுள்ளார். இதனை கேட்ட அவர், நீ இங்கிருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும். இதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், நகரத்துக்கு சென்று நீதிமன்றத்தில் முறையிடு என்று அறிவுரைக்கூறி அனுப்பியுள்ளார்.



ரிதன்யாவின் திருமண புகைப்படம்

நகரத்துக்கு தனி ஆளாக சென்று நீதிமன்றப் படியேறி விவாகரத்து பெற்ற நுஜூத்

தெரிந்தவர்களிடம் கெஞ்சி கூத்தாடி சிறிது பணம் பெற்ற நுஜூத், நகரத்திற்கு வந்து நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டாள். நுஜூத் பார்த்த ஏமன் மனித உரிமை வழக்கறிஞர் ஷாதா நாசர் என்பவர், அவளுக்கு உதவியுள்ளார். நீதிபதியிடம் அழைத்துசென்று முறையிட வைத்துள்ளார். நீதிபதியிடம் பேசிய சிறுமி நுஜூத், தன் மனதில் இருந்த அனைத்தையும் கொட்டியிருக்கிறார். மேலும், தனக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ள மாப்பிள்ளை தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொள்வதை ஏன் என்று புரியாத நிலையில், இரவில் அந்த ஆண் தன்னிடம் மிகவும் மோசமாக நடந்துகொள்வதாகவும், தனக்கு பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் வருவதாகவும், வேதனையாக இருப்பதாகவும் நீதிபதியிடம் சிறுமி நுஜூத், அழுதுகொண்டே சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் கேட்ட நீதிபதி, தற்போது நீ மிகவும் சிறியவள், ஆனால் வளர்ந்து ஒரு 14, 15 வயது ஆகும்போது, உனக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ள ஆணுடன் வாழ தோன்றினால், அப்போது வாழ்வாயா என்று கேட்டுள்ளார். ஏனென்றால் ஏமனின் அந்த பகுதிகளில் எல்லாம், 14, 15 வயதில் திருமணம் என்பது சர்வ சாதாரணமாம். ஆனால் நுஜூத்தோ, அந்த ஆணுடன் தன்னால் வாழவே முடியாது என்று திட்டவட்டமாக சொல்லி விவாகரத்து கேட்டாளாம். நீதிபதியும் அவளுக்கு விவாகரத்து வழங்கினார். இதனால், விவாகரத்து பெற்ற குழந்தை மணமகள் ஆனாள் நுஜூத்!

உலகமே தூக்கிவைத்து கொண்டாடியது!

விவாகரத்து பெற்றபோது நுஜூத்துக்கு 10 வயது. 2008ல் நடைபெற்ற இச்சம்பவம் உலகம் முழுவதும் பேசப்பட்டது. நுஜூத் அலியின் வாழ்க்கை 16 மொழிகளில் புத்தகமாக வெளியானது. அமெரிக்காவில், அந்த ஆண்டின் சிறந்த பெண்மணி விருது நுஜூத் அலிக்கு வழங்கப்பட்டது. பெண் சமூகத்திற்கு நுஜூத் அலி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று உலக பெண் தலைவர்கள் பாராட்டினார்கள். கட்டாயத் திருமணம் மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக ஏமனில் செயல்படும் இயக்கங்களில் முக்கிய நபராக மாறினார் நுஜூத் அலி. 10 வயதில், பழங்குடி பாரம்பரியத்தை மீறி விவாகரத்து பெற்றவர் என்றும், உலகில் மிகச்சிறிய வயதில் மணமுறிவு பெற்ற பெண் என்றும், தைரியமான பெண் என்றும் அடையாளப்படுத்தப்பட்டார் நுஜூத் அலி.

இப்போது திருப்பூர் ரிதன்யா சம்பவம்...

"born with a silver spoon" என்று சொல்வார்கள் அல்லவா? அப்படி செல்வ செழிப்பான, பாரம்பரியமான, எதற்குமே குறைவில்லாத குடும்பத்தில் பிறந்தவர்தான் ரிதன்யா. பாசமான பெற்றோர், சகோதரர், நல்ல படிப்பு என அழகான வாழ்க்கை. இந்த நிலையில்தான் 27 வயதில் ஊர் அறிய பிரம்மாண்டமாக ரிதன்யாவுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டது. திருமணம் செய்துவைக்கப்பட்ட இடமும் பாரம்பரியமான, வசதியான குடும்பம் என்று, அவர்களே சொல்கிறார்கள். சுமார் இரண்டரை கோடி ரூபாய் திருமண செலவு மட்டுமே செய்துள்ள ரிதன்யாவின் பெற்றோர், ரிதன்யாவுக்கு 300 சவரன் நகையை போட்டதுடன், 70 லட்சம் ரூபாயில் காரும் வாங்கித்தந்திருக்கிறார்கள். இவ்வளவு இருந்தும் திருமணமான 78 நாட்களில் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளார் ரிதன்யா.


ரிதன்யா - மணமகன் கவின்குமார் குடும்பம்

வசதி இருந்தால் திருமண வாழ்க்கை நன்றாக இருந்துவிடுமா?

ஊர் விஷயம் என்று வந்துவிட்டால் பயங்கரமாக கருத்து சொல்லும் பெரும்பாலனவர்கள், தங்கள் வீட்டில் திருமணம் என்று வந்தால், ஜாதி, வசதி என்று அனைத்தையும் கண்டிப்பாக பார்ப்பார்கள். பொண்ணு வசதியான இடமா? பையன் வீட்ல வசதியா? என்று முதலாவது முக்கிய கேள்வியா கேட்பாங்க. அப்படி இருக்கையில், திருப்பூர், கோவை போன்ற இடங்களில் திருமணத்திற்கு 100, 200, 300, 400 சவரன் நகையெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்று சொல்கின்றனர். அப்படித்தான் ரிதன்யாவுக்கும் திருமணத்திற்கு நகை போடப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 500 சவரன் நகை போடுவதாக சொல்லிவிட்டு 300 சவரன் போட்டுவிட்டு, மீதியை பிறகு போடுவதாக ரிதன்யா வீட்டில் சொல்லியதில்தான், முதலில் பிரச்சனை ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. இன்றைய தங்கம் விலைக்கு 300 சவரன் என்பது சாதாரண விஷயமே அல்ல. ஆனால் மீதி 200 சவரனை கேட்ட மணமகன் வீட்டாரின் மனநிலையை என்ன சொல்வது? இது அனைத்தையும் கடந்து பார்த்தோமானால், மணமகள்-மணமகன் என இருவீட்டிலும் வசதிக்கு குறைவில்லை. மணமகன் பக்கத்தில் சுமார் 4 கோடி ரூபாயில் புதிதாக வீடு கட்டி குடியேறியுள்ளனர். அந்த வீட்டிற்குதான் ரிதன்யா, திருமணம் ஆகி வாழ சென்றுள்ளார். ஆனால் வாழ முடியவில்லை.

ரிதன்யா அனுபவித்த டார்ச்சர்கள்

புதிதாக திருமணம் முடிந்து செல்லும் பெண்ணுக்கு, அவளது கணவர்தான் முதலில் தைரியம் சொல்ல வேண்டும். ஆனால் ரிதன்யா விவகாரத்தில், அந்த கணவரே மிருகத்தனமான பிரச்சனையாக இருந்துள்ளார். மாதம், வாடகை மட்டுமே 20 லட்சம் ரூபாய் வருவதால், வேலைக்கு வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லாமல் வீட்டிலேயே இருந்த ரிதன்யாவின் கணவர் கவின்குமார், பல்வேறு செக்ஸ் வீடியோக்களை பார்த்துவிட்டு, அதில் வருவதுபோன்றே ரிதன்யாவிடம் முயற்சித்துள்ளார். இதில் துளியும் விருப்பமில்லாமல் இருந்த ரிதன்யா உடல் ரீதியாக வேதனையை அனுபவித்த நிலையில், ஒருகட்டத்தில் தன்னால் தாங்கிக்கொள்ள முடியாமல் தனது மாமியாரிடம் சொல்லியுள்ளார். அவர், அதற்கு சமாதானம் கூற, இதனை அறிந்த மாமனாரோ, தன் மகன் கவின்குமார், வித்தியாசமாக எதிர்பார்க்கிறான் என்று ரிதன்யாவிடம் மணிக்கணிக்கில் அறிவுரை கூறியதாகக் கூறப்படுகிறது. ஒருபக்கம் மீதி நகை குறித்த கேள்விகளால் தொலைத்தெடுக்கப்பட்டு டார்ச்சர், மறுபுறம் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு உடல் ரீதியாக டார்ச்சர் என்ற நிலையில், சாப்பாட்டு விஷயத்திலும் தனது மகளுக்கு பிரச்சனை இருந்ததாக ரிதன்யாவின் தாய் தெரிவித்துள்ளார். வீட்டில் சமைத்துள்ளதை சாப்பிட சென்றால், மாமியார் பின்னாலேயே சென்று, எவ்வளவு சாப்பிடுகிறாள் என்று பார்த்து, அதுக்குள்ள இவ்வளவு காலி ஆயிடுச்சா என்றெல்லாம் கேட்டதால், தன் மகள் சாப்பிடக் கூட உரிமையில்லாமல் அந்த வீட்டில் வாழ்ந்ததாக தாய் கூறியுள்ளார். மேலும், தன்னுடைய பேச்சையும், தனது மனைவி மற்றும் மகன் பேச்சையும் அப்படியே கேட்டு நடக்க வேண்டும் என்று மாமனார் மிரட்டியதாகவும் ரிதன்யா தன்னிடம் மன வருத்தத்துடன் தெரிவித்ததாக அவரின் தாய் கூறியுள்ளார். திருமணத்திற்கு பின் தன்னுடைய வாழ்க்கையே போய்விட்டதாகவும், சந்தோஷமே போய்விட்டதாகவும், ரிதன்யா தன்னிடம் தெரிவித்ததாக, அவரின் தம்பி கூறியுள்ளார். இவ்வாறு மாமியார் வீட்டில் தான் அனுபவித்த துன்பங்களை ரிதன்யா, தன் வீட்டில், ஏதோ ஒரு வகையில், பட்டும்படாமல் தெரிவித்துள்ளார். ஆனால் ரிதன்யா வீட்டினரோ, திருமணத்திற்குபின் அனைவரின் வீட்டிலும் வருவது போன்ற பிரச்சனைகள்தான் இவையெல்லாம் என்று நினைத்து ரிதன்யாவை சமாதானம் செய்துள்ளனர். ஆனால் பிரச்சனையின் தீவிரம், அந்த வீட்டில் வாழ்ந்த ரிதன்யாவை, ஒருவித பயமான மனநிலைக்கு தள்ளி தற்கொலை முடிவை எடுக்க வைத்துள்ளது.

நுஜூத் - ரிதன்யா

இந்த இடத்தில்தான், நாம், 10 வயது சிறுமி நுஜூத்தையும் ரிதன்யாவையும் நினைக்க வேண்டியுள்ளது. இருவருமே உடல் ரீதியாகவும் சரி, மன ரீதியாகவும் சரி கடுமையாக பாதிக்கப்பட்டவர்களே. ஆனால் ரிதன்யா விஷயத்தில், அவருக்கு பொருளாதார ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை, செல்வசெழிப்பான குடும்ப பின்னணி மற்றும் சமூகத்தில் நல்ல அந்தஸ்தான குடும்பம். அத்துடன் தன் குறைகளை சொல்வதை கேட்பதற்கும் ரிதன்யாவிற்கு ஆட்கள் இருந்திருக்கின்றனர். படிப்பும் இருந்திருக்கிறது. இந்தப்பக்கம் பார்த்தோமானால், சிறுமி நுஜூத், மிக மிக ஏழ்மை நிலையில் இருந்துள்ளார். அத்துடன் அவர் சொல்வதை கேட்டு அவருக்கு ஆறுதல் சொல்லக்கூட ஒருவரும் இல்லை. இருந்தபோதும், தனி ஆளாக போராடி, தன் பிரச்சனைக்கானா தீர்வை கண்டுள்ளார்.


கூண்டை உடைத்து வெளியேறிய நுஜூத் - கூண்டிலிருந்து வெளியேற முடியாமல் உயிரை மாய்த்துக்கொண்ட ரிதன்யா

ரிதன்யாவால் ஏன் முடியவில்லை?

ரிதன்யா நினைத்திருந்தால் தனக்கு பிடிக்காத திருமண உறவில் இருந்து நிச்சயம் வெளிவந்திருக்க முடியும். ஆனால் அவரால் அவ்வாறு செயல்பட முடியவில்லை. இதற்கு காரணம் ரிதன்யா மட்டுமில்லை. ஏனென்றால், இன்று அவர் உயிரிழந்த பின், அவருக்கு ஆதரவாக பேசும் ஒட்டுமொத்த சமூகம், அவர் உயிருடன் இருந்திருந்து, கணவனை பிரிந்து வந்திருந்தால், என்ன வேண்டுமானாலும் பேசியிருக்கும்.

ரிதன்யாவின் ஆடியோவை பெரும்பாலானோர் கேட்டிருப்போம். அதில் அவர், தனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டிருப்பார். நான் பொய் பேசவில்லை என்று கூறியிருப்பார். ஒருவனுக்கு ஒருத்தி என்றுதான் என்னால் வாழ முடியும், இந்த திருமணத்தில் இருந்து வெளியேறி இன்னொரு திருமணம் எல்லாம் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஒருவேளை என்னைப்பற்றி தவறாக பேச்சுவந்தால், இந்த ஆடியோவை போட்டுக்காட்டுங்கள்... இவ்வாறெல்லாம் ரிதன்யா பேசியிருப்பார். இதிலிருந்தே தெளிவாக தெரிகிறது, சமூகம் என்ற ஊராரின் பேச்சுக்காக ரிதன்யா எவ்வளவு பயந்துள்ளார் என்று. பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், திருமணம் ஆனால்.. அனைத்தையும் சகித்துக்கொள்ள வேண்டும், ஒருவனுக்கு ஒருத்தி என்றுதான் வாழ வேண்டும்... போன்ற கருத்துகளால் ரிதன்யாவின் அறிவு சலவை செய்யப்படிருக்கிறது.

இதுபோன்ற பிரச்சனைகளுக்கு என்னதான் தீர்வு?

திருமணம், உறவு என்றெல்லாம் வரும்போது பெண் மட்டுமல்ல, ஆணும் விட்டுக்கொடுத்து, பொறுமையுடன் வாழ்வதே சிறந்த வாழ்க்கை. எடுத்ததெற்கெல்லாம் விவாகரத்து, பிரிவு என்பது சரியல்ல. அதேநேரம், எது நடந்தாலும் சகித்துக்கொண்டு வாழ வேண்டும் என்ற அவசியம் இருபாலருக்குமே இல்லை. அதுவும் குறிப்பாக பெண்களை வளர்க்கும் பெற்றோர், அவர்களை கிளி மாதிரி பொத்திபொத்தி வளர்த்தேன் என்று கண்ணீர் விடாமல், கூண்டில் சிக்கிக்கொள்ளாமல் சுதந்திரமாக பறந்துவாழ சொல்லிக்கொடுக்க வேண்டும். திருமணத்துடன் தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று எண்ணாமல், எது என்றாலும் பார்த்துக்கொள்ளலாம் தைரியமாக இரு என்று நம்பிக்கை அளிக்க வேண்டும். குடும்ப மானமே உன்னிடம்தான் இருக்கிறது என்று சொல்லி கோழை ஆக்கிவிடக்கூடாது. பிரச்சனை என்று பெண் சொல்லும்போது, கொஞ்சம் பொறுத்துபோ சாமி என்று சொல்லும் பெற்றோர், அதேநேரம், அவள் கூறும் பிரச்சனைகளை ஆராய்ந்து, அதிலிருந்து அவளை வெளிக்கொண்டுவர துணிந்து செயல்பட வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக, அடுத்தவர்கள் என்ன சொல்லிவிடுவார்களோ என்று பெண்கள் அச்சப்படக் கூடாது. நமக்கு நாம்தான் நீதிபதி. தவறான இடம் என்று தெரிந்துவிட்டால், அங்கிருந்து வெளியேற யாருமே ஆதரவுக்கு இல்லை என்றாலும், சிறுமி நுஜூத்தை போல துணிந்துவிடுங்கள். பெண்கள் சிலர் படிக்கவே இல்லை என்றாலும், தெளிவான சிந்தனை கொண்டிருப்பர். ஆனால் படித்தும், பகுத்தறிந்து பார்க்காமல் இருந்தால், அது இன்றைய பெண்களின் தவறே. வசதியான குடும்பமே ஆனாலும், நமக்கு பிடித்த ஏதோ ஒரு வேலையை பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டும். அது வேலைக்கு சென்றுதான் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டிலிருந்தும் நமக்கு பிடித்ததை செய்யலாம். அதேபோல், வேலைக்கு செல்வது என்பது பொருளாதாரத்தை மட்டும் உயர்த்துவதற்கு அல்ல. நம்பிக்கையை வளர்ப்பதற்கும்தான். வசதியான வீடே ஆனாலும், எது ஒன்றிக்கும் ஒருவரை சார்ந்து இருக்காமல், சொந்த உழைப்பில் பணம் சம்பாதித்து செலவு செய்யும் பெண்களாக இருந்தால், தெளிவு, தன்னம்பிக்கை, தைரியம் என அனைத்தும் கிடைக்கும்.

Updated On 8 July 2025 11:03 AM IST
ராணி

ராணி

Next Story