இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இன்றைய வாழ்க்கைச் சூழலில் மக்களிடையே உணவு, பழக்கவழக்கங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதிலும் அன்றாடம் நாம் சமைக்கும் உணவு மற்றும் அவற்றிற்காக பயன்படுத்தும் காய்கறிகள் ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல தோன்றும். காரணம் இன்று நாம் சமைக்கும் காய்கறிகள் தொடங்கி அரிசி, பருப்பு என அத்தனை பொருட்களிலும் கெமிக்கல் கலந்துதான் வருகிறது. இவற்றை தடுக்க என்னதான் வழி? அதுதான் இயற்கை விவசாயம். மாடி தோட்டம் ஆரம்பித்து, குறுகிய இடத்தில் குறைந்த செலவில் ஆரோக்கியமான காய்கறி பயிர்களை விளைவித்து சந்தைப்படுத்துதல் நிகழ்வு என்பது தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இன்றைக்கு படித்த இளைஞர்கள் பலரும் தங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலையை பார்க்காமல், இயற்கை விவசாயத்தை நோக்கி வருகிறார்கள் என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் நம்மாழ்வாரின் முப்பதாண்டு கால பயணம். அவரின் அந்த பயணத்தை பின்பற்றித்தான் இயற்கை விவசாயத்தில் பல புதுமைகளை நிகழ்த்தி பலருக்கும் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறார் பசுமைப் பெண் அர்ச்சனா ஸ்டாலின். இயற்கை விவசாயம், அது ஏற்படுத்தும் நன்மைகள், அதில் கிடைக்கும் வருவாய் போன்ற பல விஷயங்கள் குறித்து நம்மிடையே பகிர்ந்துகொண்டார். அதுகுறித்த தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

இயற்கை விவசாயத்தில் சாதித்து நிற்கும் அர்ச்சனா ஸ்டாலின் பற்றி ஒரு சிறு அறிமுகம்? துறை மாறி பயணிக்க தூண்டியது எது?

தேனி பக்கத்தில் உள்ள சில்லமரத்துப்பட்டி என்கிற கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். எங்களுடைய எதிர்காலத்திற்காக அப்பா, அம்மா இருவரும் கிராமத்தில் இருந்தவற்றை விற்றுவிட்டு சென்னையில் வந்து குடியேறி விட்டார்கள். அதனால் வளர்ந்தது படித்தது எல்லாமே இங்குதான். பள்ளிப்படிப்பை முடித்த எனக்கு எல்லோரையும் போன்று ஒரு மருத்துவராகவோ, ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவோ வர வேண்டும் என்பதுதான் கனவாகவும், ஆசையாகவும் இருந்தது. ஆனால் சம்மந்தமே இல்லாத, நான் விருப்பப்படாத இன்ஜினியரிங் துறையைத்தான் தேர்ந்தெடுத்தேன். சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் படித்தபோது என்னுடன் படித்தவர்தான் எனது கணவர் ஸ்டாலினும். இருவரும் படிப்பை முடித்துவிட்டு வழக்கம்போல் ஐ.டி துறையில் பணிக்கு சேர்ந்தோம்.


இயற்கை விவசாய பணியில் பசுமைப் பெண் அர்ச்சனாவின் கணவர் ஸ்டாலின்

ஆனால் சிறிது நாட்களுக்குப் பிறகு எங்களுக்கு அந்த வேலையில் பெரிதாக நாட்டம் இல்லை. என் கணவர் நாம் ஏன் இயற்கை விவசாயம் செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பினார். படித்துக்கொண்டிருந்த காலங்களிலேயே இயற்கை விவசாயம் தொடர்பாக நம்மாழ்வார் ஐயாவின் வீடியோவை நிறைய பார்த்து வளர்ந்திருந்ததால், எனக்கும் இயற்கை மீதும், இயற்கை விவசாயத்தின் மீதும் ஆர்வம் வந்தது. அதனால் அவர் கேட்டவுடன் நாமும் ஏன் அதை செய்து பார்க்கக்கூடாது என்று தோன்றியது. அதற்கு முதல் படியாக வேலைக்கு சென்று கொண்டிருந்த சமயத்திலேயே இருவரும் சேர்ந்து மாடித்தோட்டம் அமைத்து, வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டோம். அந்த காய்களின் டேஸ்ட் உண்மையிலேயே அவ்வளவு சுவையாக இருந்தது. எங்களது தேவைக்கு போக மீதமானவற்றை அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தோம். அவர்களும் சமைத்து சாப்பிட்டுவிட்டு நன்றாக இருக்கிறது, விலைக்கு தருகிறீர்களா என்று கேட்டார்கள். அதன் பிறகுதான் இதனை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்று தோன்றி அப்படி ஆரம்பித்ததுதான் இயற்கை விவசாய பண்ணை.

இயற்கை விவசாயத்தில் நீங்கள் இறங்க முடிவு செய்த போது கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு எப்படி இருந்தது?

கணவருக்குத்தான் முதலில் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது. அதன்பிறகுதான் இருவரும் சேர்ந்து பேசி குடும்பத்தினரிடம் கூறினோம். வழக்கம் போல் எல்லா பெற்றோர்களையும் போல் உங்களுக்கு இந்த தொழில் ஒத்து வருமா? ஏசியில் இருந்து வேலை பார்த்து பழகியவர்கள் எனும்போது வெயிலில் நின்று, மண்ணில் இறங்கி உங்களால் வேலை செய்வது எவ்வளவு கடினம்? நன்றாக யோசித்துதான் இந்த முடிவை எடுத்தீர்களா என்று கேட்டார்கள். நாங்கள் இந்த முடிவில் தீர்க்கமாக இருப்பதை பார்த்து எதையோ செய்யுங்கள் என்பதைப்போல் விட்டு விட்டார்கள்.

இதற்கு பிறகு குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு, திருவள்ளூர் மாவட்டம், செம்பட்டில் 2 ஏக்கர் நிலப்பரப்பிலான இடத்தினை குத்தகைக்கு எடுத்து அங்கு இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றவற்றை மேற்கொள்ள ஆரம்பித்தோம். விவசாயம் குறித்து நிறைய தெரிந்துகொள்ள என்னதான் யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள், புத்தகங்கள் நமக்கு பெரிதும் உதவினாலும், விவசாயத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள் நம்முடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விவசாயிகளை தேடிச்சென்று அவர்களிடம் இயற்கை உரங்கள் பற்றியும், அதை வைத்து எப்படி பயிர்களை இயற்கையாக வளர்ப்பது என்பது பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டோம். இப்போது இந்த துறையில் நாங்கள் சாதித்திருப்பதை பார்த்து எங்கள் குடும்பத்தினரே பிள்ளைகள் சரியான பாதையைத்தான் தேர்ந்தெடுத்து உள்ளனர் என்று மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

நீங்கள் இந்த துறைக்குள் வரும்போது ஒரு பெண்ணாக என்ன மாதிரியான சவால்களை சந்தித்தீர்கள்?

கிராமப்புறங்களில் தற்போது விவசாயம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது. அங்கு பிறந்து வளர்ந்த 40 வயதிற்கும் மேலே உள்ளவர்களுக்கு இப்போது விவசாயம் பற்றி தெரிவதில்லை. காரணம் எல்லோரும் நல்லா படிச்சிட்டு ஊரைவிட்டு வெளியே வந்துவிடுகிறார்கள். விவசாயத்தில் நல்ல வருமானம் வந்தால் நாங்கள் ஏன் வெளியே வேலைக்கு போக போகிறோம் என்கிற கேள்விதான் அங்கு பிறந்து வளர்ந்த நிறைய பேரிடம் இருக்கு. ஆனா அவங்க எல்லார்கிட்டயும் இதுதான் நம்முடைய எதிர்காலம். இதை இப்போ கைவிட்டுவிட்டோம் என்றால் அடுத்த 20, 30 வருஷத்துக்கு நல்ல சோறே கிடைக்காது என்பதை பேசி புரிய வைப்பதை விட, செய்து காட்டினால் மீண்டும் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. அந்த நம்பிக்கையை வீணாக்காமல் நாங்கள் சாதித்து காட்டியுள்ளோம்.


நெற்கதிர்கள் அறுவடை செய்யும் காட்சி மற்றும் வயலில் விளைந்துள்ள சோளக் கதிர்

எங்களின் அந்த சாதனையை பார்த்த நிறைய இளைஞர்கள் இன்று எங்களோடு இருக்கிறார்கள். அவர்களும் எங்களோடு இணைந்து விவசாயம் செய்து வருகிறார்கள். இதுதான் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இப்படியான ஒரு சூழ்நிலையை உருவாக்கி காட்டுவதுதான் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதேமாதிரி காய்கறிகளை சந்தைப்படுத்தும்போது இது இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகள்தான் என்பதை மக்களிடம் புரிய வைக்க 4 அல்லது 5 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. அதுமட்டுமல்லாமல் எங்களை பார்த்த எல்லோருமே இவங்க நிறைய காசு வச்சிருக்காங்க போல, இல்ல வேற வேலை கிடைக்காமல்தான் இந்த வேலையை பார்த்துட்டு இருக்காங்க என்று சொல்லியிருக்காங்க. ஆனால் இன்றைக்கு எங்களோட இந்த வளர்ச்சியை பார்த்து அவங்களே எங்களுக்கு நிறைய சப்போர்ட் பண்றது சந்தோஷமா இருக்கு.

நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தும்போது என்ன மாதிரியான பிரச்சினைகளை சந்திக்கிறீர்கள்?

இன்றைக்கு சந்தைப்படுத்துதல் என்பது மிகவும் சிரமமான ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. இதனாலேயே விவசாயத்தை விட்டுவிட்டு செல்பவர்களும் இருக்கிறார்கள். ஏனென்றால் ஒரு பொருளை விளைவிக்கும் விவசாயியால் அவரது பொருளை அவரே நேரடியாக கொண்டு சென்று மார்க்கெட்டில் விற்பனை செய்ய முடியாததுதான். இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் இருந்து பொருளை பெற்று சந்தைக்கு வரும்போது அதிகமான விலைக்கு விற்கின்றனர். அங்கேயே நம்பகத்தன்மை என்பது போய்விடுகிறது. இதே நிலை ஆரம்பத்தில் எங்களுக்கும் இருந்தது. இருவரும் வேலையை விட்டுவிட்டு இதுதான் நமது எதிர்காலம் என்று வந்த பிறகு மாதம் 10 ஆயிரம் ரூபாய் இதில் சம்பாதிப்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது.

ஆனால் இந்த பிரச்சினைகளை எல்லாம் தவிர்க்க ஒவ்வொரு பகுதிகளாகச் சென்று இயற்கை விவசாயம் செய்யக்கூடிய 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை சந்தித்து பேசினோம். அப்போதுதான் சீசனுக்கு தகுந்த மாதிரியான காய்கறிகளை தேவையான அளவில் விளைவித்து உங்களுக்கு எவ்வளவு செலவு ஆகி இருக்கிறதோ அதை பொறுத்து விலையை நிர்ணயம் செய்து விற்பனை செய்யுங்கள் என்ற அறிவுரை எங்களுக்கு கிடைத்தது. அதை பின்பற்றியே இப்போது எங்களது பொருட்களை சந்தைப்படுத்தி வருகிறோம். அதன் அடிப்படையில், எங்கள் மீது ஒரு நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறோம்.

விவசாயத்தில் கெமிக்கல் இல்லாத, இயற்கை உரங்களை எப்படி பயன்படுத்துகிறீர்கள்?

ஆர்கானிக் பார்மிங் என்பது இப்போது ஒரு கெட்ட வார்த்தை போன்று ஆகிவிட்டது. ஒரு பொருளை நிலத்தில் பயிரிடுவதற்கு முன்பாக அதற்கென்று பாரம்பரிய முறைகள் நிறைய உள்ளன. முதலில் நிலத்தை உழுவது, அதன் பின்பு ஆட்டு புழுக்கை, மாட்டு சாணம் போன்ற இயற்கை உரங்களை தெளிப்பது என நமது முன்னோர்கள் என்ன பாரம்பரிய முறைகளை பின்பற்றினார்களோ அதைத்தான் நாங்களும் பின்பற்றி வருகிறோம். அதேபோன்று முடிந்த வரை பாரம்பரிய விதைகளைத்தான் பயிரிடுகிறோம். நிறைய வகை அரிசிகள் அழிந்துவிட்டன. அவற்றையெல்லாம் மீட்டு பாரம்பரிய அரிசி வகைகளை பயிரிட்டு வருகிறோம்.


சுரைக்காய் மற்றும் பயிரப்படும் முறைகள் குறித்த புகைப்படம்

இன்னும் சொல்லப்போனால் நம்மாழ்வார் சொன்ன பஞ்சகாவியம், ஜீவாமிர்தம் ஆகிய வழிமுறைகளை பின்பற்றி உரங்கள் தயார் செய்வது, பழத் தோல்களை சேகரிப்பது, தேவையில்லை என்று வெட்டி வீசப்படும் மீன் தலைகளை கூடை கூடையாக வாங்கி வந்து உரம் தயாரிப்பது என்று காய்களுக்கு தகுந்த உரங்களை நாங்களே தயார் செய்து பயன்படுத்தி வருகிறோம். அதேமாதிரி பூச்சிகளை விரட்டுவதற்கு வேப்பெண்ணெய் மற்றும் இலையில் மருந்து தயார் செய்வது, நம்மாழ்வார் சொன்ன பத்து இலை கஷாயம் செய்து தெளிப்பது போன்றவற்றை செய்து வருகிறோம். இயற்கை விவசாயம் செய்வது கடினமான ஒன்றுதான். ஆனால், அது சக்ஸஸ் ஆக்கிவிட்டால் இயற்கை விவசாயம் எல்லாருக்கும் ஏற்ற ஒன்றுதான்.

இயற்கை விவசாயத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ள நம்மாழ்வார் பற்றி ஒருசில வார்த்தைகள்.

2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் நம்மாழ்வார் அய்யா மறைந்தார். அந்த நேரம்தான் நாங்கள் இயற்கை விவசாயத்தில் ஆரம்ப நிலையில் இருந்தோம். அதனால் அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு எங்களுக்கு அமைய வில்லை. இருந்தும் அவர் கூடவே இருந்த பழ நெடுமாறன், வெற்றிமாறன் போன்றவர்கள் மூலமாக இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டு வருகிறோம். அவர் இயற்கை விவசாயம் தொடர்பாக நிறைய தகவல்களை டாக்குமென்டரி செய்துவிட்டு சென்றுள்ளார். இன்றைக்கு அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும் வீடியோக்கள் மூலமாக இன்னும் நமக்கு நிறைய கற்றுக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அது ரொம்ப பெரிய விஷயம்.

இயற்கை விவசாயத்தில் உங்களுக்கு வழிகாட்டி யார்?

எங்களுக்கு இவங்கதான் வழிகாட்டி என்றெல்லாம் யாரும் இல்லை. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு இருப்பதுபோல இயற்கை விவசாயத்திலும் ஒவ்வொரு பயிருக்கு ஏற்ற மாதிரி அதாவது நெல்லுக்கு எப்படி நெல் ஜெயராமன் இருக்கிறாரோ அதே மாதிரி கரும்பு மற்றும் மற்ற பயிர்களுக்கென்று ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொருவர் இருக்கின்றனர். நாங்கள் எல்லோரையும் மாறி மாறி ஒரு இன்ஸ்பிரேஷனா பார்த்துக்குறோம். ஒருவரை மட்டுமே பின்பற்றி போறது எனக்கு செட் ஆகாது.


பாகற்காய் மற்றும் வாழை தோட்டம்

மண்ணுக்கேத்த பயிரை எப்படி கண்டறிந்து பயிரிடுவது?

சீசனை புரிந்துக்கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி பயிரிடலாம். ஒரு மண்ணுல ஒரு பொருளை போட்டு ஒருமுறை நல்லா வந்துட்டா எல்லோரும் அதையேதான் பின்பற்றி செயல்படுறாங்க. ஆனா அப்படி பண்ணக் கூடாது. நம்ம மண்ணுல கடந்த 10 வருடமா என்ன விளைஞ்சிருக்கு, எது போட்டா நல்லா வரும் என்பதை தெரிந்துகொண்டு விவசாயம் பண்ணனும். அதை யாருமே இன்றைக்கு செய்வதில்லை. திருவள்ளூரில் இப்போது நாங்கள் விவசாயம் செய்யக்கூடிய இடத்தில் நாட்டு காய்கறிகள் நல்லா வரும். முக்கியமா அதைத்தான் அந்த மண்ணுல நாங்க விளைவிப்போம். அதே மாதிரிதான் ஒவ்வொரு இடத்துக்கும் ஒன்னு இருக்கும். அதை தெரிஞ்சுக்கிட்டு செய்தோம் என்றால் வெற்றி பெற்றுவிடலாம்.

பாரம்பரிய விதைகளை சேகரிக்கும் முயற்சி ஏதும் செய்கிறீர்களா?

நாங்கள் தக்காளி போன்ற பாரம்பரியமிக்க நாட்டு காய்களின் விதைகளை சேகரித்து வருகிறோம். அதற்கு உறுதுணையாக இருப்பது எனது கணவரின் அண்ணன்தான். அவருக்கு விதைகள் சேகரிப்பில் மிகப்பெரிய ஆர்வம் இருக்கு. எங்களோட ஒரு ஏக்கர் நிலத்தில் கூட வித்தியாசமான விதைகளை பயிரிட்டு அதன் மூலமும் விதைகள் சேகரிக்கும் பணிகளை செய்து வருகிறோம். நண்பர்களும் எங்களது இந்த பங்களிப்பில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். எல்லோரும் குழுவா இணைந்துதான் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம்.

இன்னும் இதுபோன்ற பல கேள்விகளுக்கு ‘பசுமைப் பெண்’ அர்ச்சனா ஸ்டாலின் பகிர்ந்துகொண்ட பல சுவாரஸ்யமான தகவல்களை அடுத்த பதிவில் காணலாம்.

Updated On 4 March 2024 6:23 PM GMT
ராணி

ராணி

Next Story