இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலத்தை 2019-ல் விண்ணில் செலுத்தியது. 2019 செப்டம்பரில் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது சந்திரயான்-2. ஆயினும், தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் கலன் தரையிறங்காமல், நிலவில் மோதி செயலிழந்தது. விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்-3) ராக்கெட் மூலம் 2023, ஜூலை 14-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் -3 திட்டத்தின் வெற்றிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் பலரின் பங்களிப்பு காரணமாக இருந்தாலும்கூட, இத்திட்டத்தின் தலைமை இயக்குநரான ரீது கரிதாலின் திட்டமிட்ட உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் பிரதானமாகப் பேசப்பட்டது.


ரீது கரிதால்
ரீது கரிதாலின் இந்த சாதனைக்குக் காரணம் என்ன?

சிறு வயது முதலே விண்வெளி மீது அவர் கொண்டிருந்த தீராத காதலே அவரை வெற்றிச் சிகரத்தில் ஏற்றி வைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.


உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த ரீது, அங்குள்ள செயின்ட் நவயுக் கன்யா வித்யாலயாவில் படித்தார். பள்ளி மாணவியாக இருந்தபோதே ரீதுவுக்கு விண்வெளி மீது தீராத ஆர்வம் இருந்தது. பத்திரிகைகளில் விண்வெளி குறித்த செய்திகள் வந்தால், உடனடியாக ஆர்வத்துடன் படித்து, கத்தரித்து, தன்னுடைய ஃபைலில் பத்திரப்படுத்துவார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் லக்னோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இயற்பியல் பட்டப் படிப்பு முடித்த ரீது, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்பையும் தொடர்ந்தார். திடீர் திருப்பமாக பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் எம்.டெக். படிக்க வாய்ப்புக் கிடைத்தது. படிப்பா? ஆராய்ச்சியா? என்ற குழப்பத்துடன் தன் இயற்பியல் பேராசிரியர் மோனிஷாவைச் சந்தித்து ஆலோசனை கேட்டார் ரீது. எம்.டெக். படிப்பில் சேருமாறு அவர் ஆலோசனை கூறவே, பெங்களூர் சென்று அந்தப் படிப்பில் சேர்ந்தார்.

எம்.டெக் முடித்தவுடன் இஸ்ரோவில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற லட்சியம் ரீதுவின் உள்ளத்தில் நெருப்பாய்க் கனன்று கொண்டிருந்தது. `நீ எதுவாக ஆக வேண்டும் என்று விரும்புகிறாயோ அதுவாகவே ஆவாய்’ என்பதற்கேற்ப, படிப்பை முடித்தவுடன், இஸ்ரோவின் யூ.ஆர்.ராவ் செயற்கைகோள் மையத்தில் பணியாற்றும் வாய்ப்பும் அவரைத் தேடி வந்தது.


இஸ்ரோவில் பணியின்போது

பிடித்த வேலையை ஆர்வத்துடன் செய்ய ஆரம்பித்தார் ரீது. வேலையில் சேர்ந்த உடனேயே பலவிதமான சவாலான பணிகளிலும் அவர் பணியாற்ற வேண்டி வந்தது. குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அவரிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளையெல்லாம் கொஞ்சமும் சளைக்காமல் நேரம் தவறாமல் முடித்துக் கொடுப்பாராம் ரீது. அதனால் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பையும் பெற்றார். சர்வதேச அளவில் தன் துறை சார்ந்த 20 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சமர்ப்பித்திருக்கிறார் ரீது.

2007-ல் ரீது கரிதாலுக்கு இஸ்ரோ இளம் விஞ்ஞானி என்ற விருதினை வழங்கி கௌரவப்படுத்தினார் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம். ரீதுவின் சாதனைகளைப் பாராட்டி அவர் படித்த லக்னோ பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

ரீதுவின் திறமைகளை நன்கு புரிந்துகொண்ட இஸ்ரோ, செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பும் மங்கள்யான் – 1 திட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பை அவருக்கு வழங்கியது. நேரம் காலம் பார்க்காமல் கடும் உழைப்பைச் செலுத்த வேண்டிய திட்டம் அது. தன் முழு ஈடுபாட்டையும் செலுத்தி அர்ப்பணிப்பு உணர்வுடன் அத்திட்டத்தின் வெற்றிக்காக உழைத்தார். அலுவலகம் முடிந்து வீட்டிற்குச் சென்றாலும் புதிய திட்டத்துக்கான பணிகளில் முனைப்புடன் செயல்பட்டார். சில நேரங்களில் விடியற்காலை நான்கு மணி வரை பணியாற்றிவிட்டு உறங்கச் செல்வாராம்.


விண்கலம் ஏவியபோது

மங்கள்யான் – 1 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அடுத்து சந்திரயான் -2 திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார். அதிலும் தனது உழைப்பை தாராளமாகக் கொட்டினார் ரீது. அந்தத் திட்டத்தின் வெற்றி ரீதுவுக்கு பெரும் புகழை சம்பாதித்துக் கொடுத்தது.

அதையடுத்து சந்திரயான் – 3 திட்டத்தின் தலைமை இயக்குநர் பொறுப்பும் அவரைத் தேடி வந்தது. சவால்கள் என்றால் ரீதுவுக்கு அல்வா சாப்பிடுவதுபோல. சந்திரயான் -3 திட்டத்திலும் ஏகப்பட்ட சவால்களைச் சந்தித்தார் அவர். எல்லாவற்றையும் தன் நுண்ணறிவால் தவிடுபொடியாக்கி, திட்டத்தின் வெற்றிக்காக இரவு பகல் பாராது கடுமையாக உழைத்தார். தன் குழுவினரையும் ஊக்குவித்தார். அவரது தலைமையின் கீழ் இஸ்ரோ விஞ்ஞானிகள் தமது முழு திறமையையும் வெளிப்படுத்தி சந்திரயான் – 3 திட்டத்தை வெற்றியடையச் செய்தனர்.

உலகம் முழுவதும் ரீதுவை `ராக்கெட் ராணி’ என அழைத்து பெருமைப்படுத்தியது. இஸ்ரோவின் வருங்காலத் திட்டங்களிலும் ரீதுவின் பங்கு கணிசமான அளவுக்கு இருக்கும் என்று நம்பலாம்.

Updated On 8 Aug 2023 4:37 AM GMT
ராணி

ராணி

Next Story