இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நாம் என்னதான் பெண் சுதந்திரம், பெண்கல்வி, பெண் வேலைவாய்ப்பு எனப் பேசினாலும், இதைத்தான் செய்ய வேண்டும், இதை செய்யக்கூடாது என குடும்பத்தினரே பெண்களுக்கு தடைவிதிக்கும் காலக்கட்டத்தில்தான் இன்னமும் வாழ்ந்து வருகின்றோம். வேலை, விளையாட்டு, படிப்பு என எது எடுத்தாலும் இது பெண்ணிற்கு எதற்கு என்ற கேள்விதான் முதலில் முன்வைக்கப்படும். ஆனால் பெண்களாலும் அனைத்து துறைகளிலும் பிரகாசிக்க முடியும் என்பதை பல பெண்களும் அவ்வப்போது நிரூபித்துதான் வருகிறார்கள். அந்த வகையில், இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து, ஆண்களுக்கு நிகராக பாடி பில்டிங்கில் கலக்கி வரும் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ஷெனாஸ் ரஹ்மான் குறித்துதான் இந்த வாரம் விளையாட்டு பகுதியில் பார்க்க இருக்கிறோம். மேலும் ராணி ஆன்லைனுக்கு அவர் அளித்துள்ள சிறப்பு நேர்காணலையும் காண்போம்.


ஜிம்மில் சேர்ந்த புதிதில் ஷெனாஸ் ரஹ்மான் மற்றும் தற்போதைய புகைப்படம்

சிறுவயதிலிருந்தே போலீஸாக வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த ஷெனாஸ் ரஹ்மானுக்கு 12-ம் வகுப்பு படிக்கும்போதே திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. பின்னர் கல்லூரி முதலாம் ஆண்டில் ஒரு பெண்குழந்தை பிறக்கிறது. இரண்டாம் ஆண்டின் பாதியிலேயே கல்லூரி படிப்பை கைவிடுகிறார். தொடர்ந்து இரண்டாவது குழந்தை பிறக்க, மனக்கசப்பால் கணவரையும் பிரிகிறார். இதனையடுத்து அவரது தந்தை கல்லூரி படிப்பைத் தொடர சொல்ல, கல்லூரி சென்று பட்டப்படிப்பையும் முடிக்கிறார். இதனிடையே குழந்தை பிறந்ததால் வந்த உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்கிறார் ஷெனாஸ் ரஹ்மான். நாளடைவில் உடற்பயிற்சியின் மீது ஆர்வம் அதிகரிக்க தான் ஒரு பாடி பில்டர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். பலரும் ஒரு பெண் பாடி பில்டர் ஆவது கடினம் எனக்கூற, தந்தை மட்டும் ஊக்கமளித்து ஷெனாஸுக்கு ஆதரவாக இருக்கிறார். ஷெனாஸின் தந்தையும் சிறுவயதில் பாடி பில்டராக இருந்துள்ளார். அதன்பின் பாடி பில்டிங்கில் கவனம் செலுத்த தொடங்கிய ஷெனாஸ் ரஹ்மான், தற்போது மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார். மேலும் சிங்கிள் பேரண்டாக தனது இரண்டு பிள்ளைகளையும் கவனித்து வருகிறார். இவரின் இந்த பாடி பில்டங் பயணம் தொடங்கியது எப்படி? இவர் பங்கு பெற்ற போட்டிகள் என்னென்ன? என்பது குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதோ...


போலீஸ் ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது - ஷெனாஸ் ரஹ்மான்

உடற்பயிற்சி துறைக்கு வந்தது எப்படி?

பாடி பில்டிங் செய்ய வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் கிடையாது. இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ஜிம்மில் சேர்ந்தேன். அதில் சேர்ந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் அதிகரித்தது. எதிர்பாராத விதமாகத்தான் பாடி பில்டிங் செய்தேன். இன்று அதுவே எனது அடையாளமாக மாறிவிட்டது.

பாடி பில்டிங்கில் ஈடுபட உற்சாகம் அளித்தது யார்?

எப்போதும் நமக்கு ஒரு சுய உந்துதல், ஆர்வம் இருக்க வேண்டும். ஆனால் ஃபிட்னஸில் எனக்கு ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னுடைய முதல் கோச் சதீஷ்குமார். அவரின் உணவுமுறைகள், உடற்பயிற்சிகள் பார்த்துதான் எனக்கு ஆர்வம் அதிகமானது. அதேநேரம் குடும்பம், பசங்களை பார்த்துக் கொள்வது ஒரு சவாலான விஷயமாக இருந்தது. அவர்களுக்கு தனி சாப்பாடு, எனக்கு தனி சாப்பாடு, அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். நான் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். டைம் மேனேஜ்மெண்ட் என்பது கொஞ்சம் கடினமானது. ஆனால் அதற்கேற்றவாறு அனைத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.


உடற்பயிற்சியின் போது ஷெனாஸ் ரஹ்மான்...

நேர பராமரிப்பு எப்படி செய்கிறீர்கள்?

இருப்பதிலேயே சவாலான விஷயம் என்றால் டைம் மேனேஜ்மெண்ட்தான். பிள்ளைகள் குழந்தையாக இருக்கும்போது, அவர்கள் வளர்ந்துவிட்டால், அவர்கள் வேலையை அவர்களே பார்த்துக்கொள்வார்கள், நமக்கு எந்த வேலையும் இருக்காது என்றுதான் நாம் நினைப்போம். ஆனால் அவர்கள் வளர்ந்த பிறகுதான் எனக்கு நிறைய வேலைகளும், கடமைகளும் இருப்பது தெரிந்தது. என்னை பார்க்கும் எல்லோரும், நீங்கள் வீட்டு வேலை செய்வீர்களா? என கேட்பார்கள். என் வீட்டில் எல்லா வேலைகளும் நான்தான் செய்வேன். முதலில் பாடி பில்டிங் ஃபேஷனாக இருந்தது. இப்போது அதுதான் எனது வேலையாக உள்ளது. அத்துடன், வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளையும் நானே செய்வேன்.

2019-ல் இருந்து மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டுள்ளேன். இந்தாண்டு சேலத்தில் தென்னிந்திய அளவிலான போட்டி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு மகளிர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றேன். கடந்த ஜூன் மாதம் புனேவில் ஆசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளுக்கு தேர்வு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு இரண்டிலும் தேர்வாகியுள்ளேன். இப்போது என்னுடைய கனவு உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வது. அடுத்த மாதம் தாய்லாந்தில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. அதற்குத்தான் இப்போது என்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். நவம்பரிலும் உலக அளவிலான போட்டி நடைபெறும். அதிலும் கலந்துகொண்டு வெற்றிப் பெற வேண்டும். ஏனெனில் நம் ஊர்களில் பெண்களால் பாடி பில்டிங் செய்ய முடியுமா? பாடி பில்டிங் செய்கிறார்களா? எனக் கேட்கின்றனர். பெண்களிலும் பாடி பில்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் குறைவாக இருக்கிறார்கள். அவர்களை இந்த துறைக்கு கொண்டுவர வேண்டும். பாடி பில்டிங் என்பது ஆண்கள் சம்பந்தப்பட்ட போட்டி மட்டும் கிடையாது. இந்தத் துறையில் பெண்களும் நிறைய பேர் சாதிக்கலாம். பெண்களாலும் இதுபோன்று பாடி பில்டிங்கை பராமரிக்க முடியும்.

உங்களைப்போல வரவிரும்பும் பெண்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

ஜிம்மிற்கு வருபவர்களின் நினைப்பே, எனக்கு தொப்பை மட்டும் குறையணும். கால், கை மட்டும் குறைய வேண்டும். மூன்று மாதத்தில் குறைக்க முடியுமா? எனக் கேட்பார்கள். ஃபிட்னஸ் என வரும்போது மூன்று மாதம், ஆறு மாதம் என நீங்களே ஒரு குறிப்பிட்ட காலத்தை முடிவு செய்து கொள்ளாமல், அதை ஒரு லைஃப் ஸ்டைலாக எடுத்துக் கொண்டு போகலாமே. வாரத்தின் ஏழு நாட்களும் பெண்களால் உடற்பயிற்சி எடுத்துக்கொள்ள முடியாது. ஏதேனும் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமாவது எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது மருத்துவர்களும் அதைத்தான் கூறுகின்றனர். பெண்கள் எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும். நாமும் ஜிம்மிற்கு போய் பளு தூக்கினால் ஆண்கள்போல மஸுல்ஸ் வந்துவிடுமா? பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்போமா என நினைப்பார்கள். ஆனால் அப்படி கிடையாது. ஜிம்மிற்கு போய் எடை தூக்குவதால் நமது உடல் உடனே மாறாது. நான் பாடி பில்டிங் செய்கிறேன் என்றால், அதற்கேற்ப எனக்கு தனிபயிற்சிகள் உள்ளன. டயட் தனியாக இருக்கிறது. நாம் அதற்காகத்தான் பயிற்சி செய்கிறோம். அதன்மூலம் இதுபோல மஸுல்ஸை கொண்டு வருகிறோம். எல்லா மருத்துவர்களும் சொல்வது உடற்பயிற்சி செய்யுங்கள் என்றுதான்.


மற்றவர்கள் என்னை பார்க்கும் விதத்தை எப்போதும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்வேன் - ஷெனாஸ்

மற்றவர்கள் உங்களை வித்தியாசமாக பார்ப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

அதுபோல நிறைய அனுபவங்கள் உள்ளன. இன்னும் சொல்லப்போனால் தினந்தோறும் அதுபோல நடக்கும். ஆனால் அதை எப்போதும் ஒரு நெகட்டிவாக நான் எடுத்துக்கொள்ளவே மாட்டேன். இன்னும் சொல்லப்போனால், அவர்கள் அப்படி கேட்கும்போது நான் சந்தோஷப்படுவேன். பாசிட்டிவாகத்தான் எடுத்துக்கொள்வேன். போட்டிகளின் சமயத்தில் தீவிரமாக டயட் இருக்கும்போது கொழுப்பு எல்லாம் இல்லாமல், இயல்பாகவே எனது முகம், கை எல்லாம் மாறுபடும். சாதாரண நாட்களில் இயல்பாக டயட் இருக்கும்போது அப்போது முகம் வேறுபடும். நம் ஊரில் பெண்கள் பலரும் என்ன நினைப்பார்கள் என்றால், புடவை கட்டிக்கொள்ள வேண்டும், உடல் மென்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். பெண்களை மஸுல்ஸோடு பார்க்க விரும்பமாட்டார்கள். நான் பைக்ல போகும்போது நிறையபேர், நீங்க பொண்ணா? பையனா? என சந்தேகமாகவே கேட்பார்கள். உங்களுக்கு எப்படி தசைகள் இப்படி இருக்கு? என கேட்பார்கள். அதை எப்போதும் நான் நெகட்டிவாக எடுத்துக்கொள்ள மாட்டேன். பாசிட்டிவாகத்தான் எடுத்துக் கொள்வேன்.

எத்தனை பேருக்கு நீங்கள் பயிற்சி கொடுக்கிறீர்கள்?

நான் பாடி பில்டிங்கிற்கு இதுவரை யாரையும் ட்ரெயின் பண்ணியது கிடையாது. ஃபிட்னஸிற்காக பல பெண்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறேன். குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் நான் பயிற்சி கொடுக்கிறேன். எனக்கும் பாடி பில்டிங்கிற்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எதிர்காலத்தில் வந்தார்கள் என்றால், கண்டிப்பாக என்னால் முடிந்த அளவிற்கு நான் உதவி செய்வேன். அவர்களையும் என்னைப்போல் பாடி பில்டிங் தடகள வீராங்கனை ஆக்குவேன்.


பாடி பில்டிங்கிற்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது - ஷெனாஸ்

பாடி பில்டராக மாதவிடாய் பிரச்சனைகளை எப்படி கையாளுகிறீர்கள்?

ஒரு மேடையில் ஒரு பெண் பாடி பில்டராக என்னை காட்ட வேண்டுமென்றால், அதுக்கு நிறைய உழைக்க வேண்டும். என்னுடைய பயிற்சி மாறும். போட்டிகளின்போது டயட் முறைகள் மாறுபடும். காய்கறி உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இப்போது இருக்கும் பெண்களுக்கு நிறைய பிரச்சனைகள் உள்ளன. பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பெலாம், இந்த தைராய்டு, பிசிஓடி, மாதவிடாய் பிரச்சனைகள் குறைவாக இருந்தன. இப்போது பத்தில் 5 பேருக்கு இந்த பிரச்சனைகள் உள்ளன. பெண்களைவிட, சிறுமிகளுக்கு இந்த பிரச்சனைகள் அதிகம் இருக்கின்றன. 15, 16 வயதுதான் இருக்கும், ஆனால் பார்ப்பதற்கு 25 வயது பெண்கள்போல இருப்பார்கள். அவர்களின் உணவு பழக்கவழக்கங்கள் எல்லாம் வேறுபடுகின்றன. வெளிஉணவுகளை குறைத்துவிட்டு, வீட்டில் சாப்பிட வேண்டும். சிலர் எடையை குறைக்கிறோம் எனக் கூறிக்கொண்டு சாப்பிடாமலேயே இருப்பர். சாப்பிடாமல் இருப்பதால் எடை குறையாது. அதற்கு பதில் உடல்நல பிரச்சனைகள்தான் வரும். அதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வீட்டு உணவுகளை உட்கொண்டு, உயற்பயிற்சி மேற்கொண்டாலே இதுபோன்ற நோய்களை தடுக்கலாம்.

Updated On 5 Aug 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story