இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மாதந்தோறும் பெளர்ணமி வந்தாலும், சித்திரை மாதம் வரும் சித்ரா பௌர்ணமி மிக மிக சிறப்பு வாய்ந்தது. 2025-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மே 12 (சித்திரை 29) அன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டிற்கு பிறகுவரும் முதல் பௌர்ணமியான இது, முக்கிய நாளாகக் கருதப்படுகிறது, பங்குனி மாத பௌர்ணமியில் மகாலட்சுமி, வள்ளி, சாஸ்தா போன்ற தெய்வங்கள் அவதரித்ததுடன், தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், சித்திரை மாத பௌர்ணமி அன்று சித்திர குப்தரின் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட நாளில் வீட்டிலேயே சக்திவாய்ந்த வழிபாடு செய்வது எப்படி? சித்திர குப்தரை நினைத்து வழிபடுவது எப்படி? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு எளிமையாக புரியும் வகையில் பதிலளிக்கிறார் ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த்.


சித்ரா பெளர்ணமியன்று புத்த பூர்ணிமா கொண்டாடும் பெளத்தர்கள்

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி வந்தாலும் சித்திரை மாதம் வரும் பெளர்ணமிக்கு ஏன் இவ்வளவு சிறப்பு?

சூரியன் என்று சொல்பவர் சிவபெருமானை குறிக்கக்கூடியவர். அவர் நமக்கு தாயாக தந்தையாக அருளக்கூடியவர். அதுபோல் சந்திரன் என்று சொன்னாலே நம் மனதின் காரகத்துவம். தாய்மையின் காரகத்துவம். தாய் பராசக்தியாக விளங்கக்கூடியவர். அந்த சூரியனும் சந்திரனும் நமக்கு இன்னருளை தரும்போது அந்த பெளர்ணமி நன்னாளிலே ஒளி எங்கும் பரவிக்கிடக்கிறது. வாழ்க்கையில் எத்தனையே இருள் சூழ்ந்துள்ள நேரத்தில், அந்த இருள் என்பது அருளாக மாற வேண்டுமானால் எல்லோரும் கூட்டுப்பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த சித்திரை பெளர்ணமி நாளில் தாயாகிய பராசக்தியையும், தந்தையாகிய சிவபெருமானையும் தியானிக்கும் பொழுது நம் உடல் நலனும், வாழ்க்கை நலனும் மேம்பட்டுவிடும்.

சித்திரை பெளர்ணமிக்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு. உலகம் முழுவதும் உள்ள பெளத்தர்கள் அன்றைய தினம் வைசாக் என்ற பெயரில் புத்த பூர்ணிமா கொண்டாடுவார்கள். நாம் விசாகா என்ற பெயரில் முருகனை சொல்வோம். அந்த விசாக நட்சத்திரத்திலே புத்தர் அவதரித்தார். புத்தர் ஞானமடைந்தார். புத்தர் ஜோதியில் ஐக்கியமானார். அப்படிப்பட்ட நாளில் தியானம் செய்யும்போதும், தவம் செய்யும்போதும், தர்மம் செய்யும்போதும் அதனுடைய பலன் பல மடங்காக மாறிவிடும்.


சித்ரா பெளர்ணமி நாளில் புத்தர் அவதரித்தார் - சித்திர குப்தரின் அவதாரமும் நிகழ்ந்தது

அப்படி என்றால் சித்ரா பெளர்ணமி, பெளத்தர்களால்தான் அதிகம் கொண்டாடப்படுகிறதா?

இந்த நாளில் புத்தர் அவதரித்தது போன்று சித்திர குப்தரின் அவதாரமும் உண்டு. சித்திர குப்தர் என்ற வார்த்தையை பிரித்தால், சித்திரம் மற்றும் குப்தம் என்று வரும். சித்திரம் என்றால் ஓவியம் என்று பொருள், குப்தம் என்றால் ரகசியம் என்று பொருள். அன்னை பராசக்தியானவள் ஒரு ஓவியத்தை வரைந்தாள். அந்த ஓவியத்திற்கு உயிர் தந்தாள். அந்த உயிர் பெற்ற ஓவியமானது, எமதர்ம மகாராஜாவிடம் மனிதனின் கணக்குகளை சொல்லிவிடுகிறது. நாம் எவ்வளவு நன்மை செய்தோம், தீமை செய்தோம் என்பதை கூறுகிறது. அதற்கு ஏற்ற வகையிலே நமக்கு அடுத்த பிறப்பு அமையும்.

மனிதனுடைய பாவ புண்ணிய கணக்குகளை சித்திர குப்தர் பார்த்து விடுவாரா?

ஆம். ஆனால் அந்த சித்திர குப்தர் வெளியே இல்லை. நமக்குள்ளேயேதான் இருக்கிறார். நம் எல்லா செயல்களையும் பதிவு செய்துகொண்டே வருகிறார். அப்படி செய்யும்போது நம் கணக்கில் சேர்ந்துள்ள பாவங்களை திருத்திக்கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பை இறைவன் வழங்கும் நாள்தான் சித்ரா பெளர்ணமி. எனவே அந்த நாளை நாம் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இனிமேல் நல்லதை மட்டுமே செய்ய முயற்சி செய்வேன். நிறைய மரம் நடுவேன். முதியோர்களுக்கு உதவுவேன். என்னால் முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்வேன் போன்ற உறுதிபாடுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் எடுத்துக்கொள்ளும் உறுதிபாடுகளை நிறைவேற்ற சித்திர குப்தர் உதவுவாராம்.

இந்த சித்ரா பெளர்ணமி வரக்கூடிய நாள் விசாக நட்சத்திரம். அது முருகனுடைய நட்சத்திரம். விசாகம் என்ற வார்த்தையில் சாகம் என்றால் பல்வேறு பிரிவுகள் என்று அர்த்தம். வி+சாகம் என்பது, அதுபோன்ற பிரிவுகள் இல்லை என்பதை குறிக்கிறது. ஒன்றே ஒன்றில் கவனம் செலுத்துவது என்று பொருள். அதன்படி விசாக நட்சத்திரத்தன்று ஒரு உறுதியினை எடுத்துக்கொண்டால், சொல் செயல் எல்லாம் ஒன்றிணைந்து அது வெற்றியை தரும்.


முருகனின் விசாக நட்சத்திரத்தில் வரும் சித்ரா பெளர்ணமியன்று அன்னதானம் உள்ளிட்ட நல்ல செயல்களை செய்வது நலம்பயக்கும்

இந்த ஆண்டு சித்ரா பெளர்ணமி அதீத சிறப்பு வாய்ந்தது என்று சொல்லப்படுவதற்கு காரணம் என்ன?

ராகு என்பவர் சித்ரா பெளர்ணமி வரும்பொழுது கும்பத்திலே இருப்பார். கேது என்பவர் சிம்மத்திலே உள்ளே நுழைவார். இதற்கு இடையிலே அனைத்து கிரகங்களும் அடைபட்டுக்கிடக்கும். இதற்கு பெயர் காலசர்ப்பம் என்று சொல்வார்கள். பாம்புகளுக்கு இடையிலே அனைத்து கிரகங்களும் அடைபட்டு இருக்கக்கூடிய ஒரு சூழல். அப்பொழுது சந்திரன் மட்டும் வெளியே, விசாக நட்சத்திரத்தில் நிற்கும். இது வரும் ஜூன் மாதத்தில் இருந்து உலக அளவில் பல்வேறு தீய தாக்கங்களை ஏற்படுத்தும். எனவே இப்போதில் இருந்தே, தீய தாக்கத்தை குறைக்க, நாக தேவதைகளின் உபாசனைகளை தொடங்கிவிட வேண்டும்.

"ஓம் நாகராஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாயா தீமஹி தன்னோ வாசுகிப் பிரஜோதயாத்" என்ற மந்திரத்தை தினமும் 3 முறை சொல்லலாம். சித்ரா பெளர்ணமி முதல் இந்த மந்திரத்தை சொல்ல துவங்கலாம். மேலும் ஆரோகணம் அவரோகணம் பாடல் வரிகளையும் சித்ரா பெளர்ணமி முதல் கேட்க தொடங்கினால் நன்மை அளிக்கும். அதேபோன்று ஓம் சித்ராயை நமஹ! ஓம் ஹீரிம் நமஹ! என்று சித்ரா பெளர்ணமியன்று 16 முறை சொல்வது மிகச் சிறப்பு. அன்றுமுதல் இந்த மந்திரத்தை தினமும் கூட சொல்லலாம். இவ்வாறு செய்துவந்தால் தோஷங்களில் இருந்து விடுபடலாம். மேலும் ஒரு இலை எடுத்து, அதில் கொஞ்சம் அரிசி மாவுடன் வெல்லம் கலந்து எறும்புக்கு உணவளிப்பதும் ஆகச்சிறப்பு.

அன்றைய தினம் புத்த பூர்ணிமா என்பதால், மிக எளிய மந்திரம் ஒன்றையும் சொல்லித்தருகிறேன். சாது! சாது! சாது! இந்த மந்திரத்தை அன்றைய தினத்தில் முடிந்த அளவுக்கு சொல்லி வந்தால், வீட்டில் எப்பேற்பட்ட தோஷம் இருந்தாலும் விலகிவிடும். மகிழ்ச்சி பெருகிவிடும்.


சித்ரா பெளர்ணமி நாளில் நாக தேவதைகளை வணங்கி எறும்புகளுக்கு உணவு வைக்கலாம்

வீட்டிலேயே சித்திரா பெளர்ணமி வழிபாடு எப்படி நடத்துவது?

சித்திரா பெளர்ணமி சித்தர்களுக்கு மிக மிக உகந்த நாள். இப்போது சொல்லக்கூடிய சிவ மந்திரம், "ஓம் சிங் ரங் அங் சிங் சர்வ சித்தர்களே போற்றி! ஓம் சிங் ரங் அங் சிங் சர்வ சித்தர்களே போற்றி!" என்பதை சில நிமிடங்கள் சொல்லி விளக்கு ஏற்றி வைக்கலாம். நமச்சிவாய மந்திரத்தையும் உச்சரித்துக்கொண்டே இருக்கலாம். முக்கியமாக சித்திரா பெளர்ணமி முதல் தியானம் செய்ய தொடங்கிவிடுங்கள். சித்தர்களின் அருள் உங்கள் தியானத்தில் பெரும் வெற்றியை தந்துவிடும். மிகவும் சிரமப்பட்டு தியானம் செய்ய வேண்டாம். ஒரு 15 நிமிடம், கண்ணை மூடிக்கொண்டு மனதில் வரும் எண்ணங்களை ஓடவிடுங்கள். 10 நாட்கள் இதேபோன்று செய்துவந்தால், மனது வெறுமை நிலைக்கு வந்துவிடும். அந்த வெறுமை நிலைதான் உன்னதமான நிலை. அந்த நிலையை தரும் நன்னாளாக சித்திரா பெளர்ணமி அமையும்.

Updated On 6 May 2025 5:59 PM IST
ராணி

ராணி

Next Story