இந்து மதத்தில், பாம்புகள் (நாகங்கள்) தெய்வங்களாக வணங்கப்படுகின்றன. புராணங்களின்படி, பாம்புகள், படைப்பு, அழிவு, அண்ட சமநிலை மற்றும் கருவுறுதலின் சக்திவாய்ந்த சின்னங்களாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில் நாகங்களை வணங்குவதற்கென்றே உள்ள சிறப்பான தினம்தான், நாக பஞ்சமி அல்லது நாக சதுர்த்தி என்று கொண்டாடப்படுகிறது. நாகங்களையும் இயற்கையின் சமநிலையுடனான அவற்றின் தொடர்பையும் கௌரவிக்கும் நாளாக இது விளங்குகிறது. இந்த நாளில் நாகங்களை வழிபடுவது நாக தெய்வங்களின் பாதுகாப்பை உறுதி செய்து ஆசீர்வாதத்தை தரும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நாக பஞ்சமி எப்போது? நாக பஞ்சமியன்று வழிபாடு நடத்துவது எப்படி? போன்ற தகவல்களை இந்த பதிவில் காண்போம். மேலும் நாக பஞ்சமி குறித்து ராணி ஆன்லைன் நேயர்களுக்கு, ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த் அளித்துள்ள நேர்காணலின் தகவல்களையும் பார்ப்போம்.
குழந்தை பேறு தடை, புத்திர தோஷம் உள்ளிட்டவற்றை நாக பஞ்சமி வழிபாடு நீக்கும்
நாக பஞ்சமி 2025
இந்த ஆண்டு நாக பஞ்சமி, ஜூலை 29, செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. பஞ்சமி திதி, ஜூலை 28 மாலை 7:54 மணிக்கு தொடங்கி, ஜூலை 29 இரவு 9:16 மணிவரை உள்ளது. ஜூலை 29 காலை 05:41 முதல் 08:23 வரை, 2 மணி நேரம் 43 நிமிடங்கள் பூஜைக்கு உகந்த நேரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்பேற்பட்ட தோஷமும் விலகும்!
நாக பஞ்சமியன்று நாகங்களை வழிபடுவதால் எப்பேற்பட்ட நாக தோஷமும் விலகிவிடுமாம். நாமோ, நம்முடைய முன்னோர்களோ, இப்பிறவியிலோ அல்லது முந்தைய பிறவிகளிலோ நாக இனத்தை சேர்ந்தவர்களுக்கு ஏதாவது தீங்கு விளைவித்து இருந்தால், அதனால் ஏற்பட்ட சாபங்கள், தோஷங்கள் என அனைத்தும் நீங்கிவிடுமாம். திருமண தடை, குழந்தை பேறு தடை, புத்திர தோஷம், ராகு-கேது தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்குமாம்.
நாக தோஷம் இருப்பதை எப்படி அறிவது?
நாக தோஷம், ஒருவரின் வாழ்க்கையில் நிதி, ஆரோக்கியம் மற்றும் மனநிலை ரீதியாக பல்வேறு பாதக தாக்கங்களை ஏற்படுத்தும். இரவில் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுவது மற்றும் தூக்கத்தின் நடுவில் பயந்து எழுவது, இறந்தவர்கள் அடிக்கடி கனவில் தோன்றி பிரச்சனைகள் ஏற்பட்டாலோ, தூக்கத்தில் யாரோ கழுத்தை நெரிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டாலோ, அடிக்கடி பாம்பு கடிப்பது போன்ற கனவு வந்தாலோ, நாக தோஷம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், பிறப்பு ஜாதகத்திலேயே சிலருக்கு நாக தோஷம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், எப்படிப்பட்ட தோஷமும் நாக பஞ்சமி வழிபாட்டால் விலகும் என்று ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியை காண்போம்.
அடிக்கடி பாம்பு கடிப்பது போன்ற கனவு வந்தால் நாக தோஷம் இருக்கலாம்!
பாம்பை பிடித்து பலன் சொல் என்கிறார்களே? அப்படி என்றால் என்ன?
ஜாதகத்தில் ராகு, கேது கிரகங்களோ அல்லது அஸ்வினி, மகம், மூலம், ஸ்வாதி, சதயம், திருவாதிரை ஆகிய ராகு, கேது நட்சத்திரங்களோ நல்ல நிலையில் இருந்துவிட்டால், எந்த பிரச்சனையும் இல்லை. வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும். ஏனென்றால் ராகுவெல்லாம் கொடுக்க ஆரம்பித்துவிட்டால் நன்றாக கொடுப்பார். ஆனால் இந்த கிரகங்களின் சூழல் பாதகமாக அமைந்துவிட்டால், அது தடுமாற்றத்தை தந்துவிடும். உதாரணத்திற்கு, ராமர் ஜாதகத்தை எடுத்தோமானால் ஆறாம் இடத்தில் ராகு இருப்பார். 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் ராகு இருந்தால் நல்லது என்பார்கள். ஆனால் ராமர் பட்டபாடு என்ன என்பது நமக்கு தெரியும். ஏனென்றால் ராகு, சில கிரகங்களுடன் சேர்ந்துவிட்டால் கஷ்டம்தான்.
உடலை எடுத்துக்கொண்டால், ஒரு பாம்பை போல சுவாசம் சென்றுவந்து கொண்டிருக்கிறது. டிஎன்ஏ, பாம்பு தோற்றத்தில் உள்ளது. குடலும்கூட பாம்பு போலத்தான் வளைந்து காணப்படுகிறது. உடலில் கழிவுகள் வெளியேற்றப்படும் உறுப்புகளில் பிரச்சனை இருக்கிறது என்றால், ஜாதகத்தில் கேதுவைதான் சொல்வார்கள். மேலும், திருமண உறவில் சிக்கல், வாஸ்து தோஷம் போன்றவற்றுக்கு ராகு, கேதுவே காரணமாக இருப்பார்கள். கண்ணுக்கு கண்ணாடி போடுவதுகூட ராகுவின் தன்மைதான். இவ்வாறு வாழ்க்கையில் சாதக பாதகங்கள் அனைத்தும், பாம்பு கிரகங்களான ராகு, கேதுவை சார்ந்தே இருப்பதால், பாம்பை பிடித்து பலன் சொல் என்கிறார்கள்.
ராமர் ஜாதகத்தில் 6ம் இடத்தில் ராகு - ராகு, கேதுவை பொறுத்தே வாழ்க்கையின் சாதக, பாதகங்கள்!
நாக பஞ்சமி வழிபாடு பற்றி சொல்லுங்கள்...
ஏதாவது விநாயகர் கோயில் சென்றால் அங்கு விநாயகருக்கு இருபக்கமும், நாக சிலைகள் இருக்கும். விநாயகரை வணங்கி, இருபுறமும் உள்ள நாக சிலைகளுக்கு, தலா ஒரு சிறிய கப் பால் மற்றும் தலா இரண்டு வாழைப்பழங்களை வைத்து வழிபடலாம். முதலில், விநாயகா, நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடு என்று கூறி தோப்புக்கரணம் போட்டுவிடுங்கள். பின்னர் நாக சிலைகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, நாக தோஷத்தை மன்னித்துவிடு, வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிடு என்று மனதார வேண்டிடுங்கள். மேலும் அம்மன் சாமியை மனதில் நினைத்து வழிபடுங்கள்.
ஒருவேளை ஆலயத்திற்கு செல்ல முடியாதவர்கள் என்ன செய்யலாம்?
ஓம் நாகேஸ்வரி தாயே போற்றி, ஓம் நன்மைகள் நல்குவாய் போற்றி, ஓம் சக்தி பராசக்தியே போற்றி... என்று இரண்டு மூன்று முறை சொல்லி, நாகத்தை மனதார நினைத்து, அம்மா நாகேஸ்வரி, நாக சக்தியாகவும், நாக காளியாகவும், நாக லட்சுமியாகவும், நாக சரஸ்வதியாகவும் விளங்கக்கூடிய என் அன்னையே... ஏதாவது நாகத்திற்கு அறிந்தோ அறியாமலோ, இப்பிறப்பிலோ, முற்பிறப்பிலோ தவறு இழைத்து இருந்தால் எங்களை மன்னித்துவிடுங்கள். எங்கள் குடும்பத்தையும் மன்னித்துவிடுங்கள். இனி தீங்கு செய்யாமல் இருக்க முயற்சி செய்கிறோம். வாழ்க்கையில் அனைத்து வளத்தையும், நலத்தையும் தாருங்கள் என்று வேண்டிக்கொள்ளுங்கள். நாகங்கள் அருள் இருந்தால், வாழ்க்கையில் மிகப்பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிடும்.
நாக பஞ்சமி வழிபாட்டு முறை
நாக பஞ்சமி தினத்தில் பெரும்பாலானவர்கள், தங்கள் வீட்டிலுள்ள நாக உருவுக்கு பூஜைகள் செய்வார்கள். ஒருவேளை நாக உரு இல்லையென்றால்...?
நாக உரு நம் வீட்டில் இருந்தால், அதற்கு, வெறும் தண்ணீரோ, மஞ்சள் கலந்த நீரோ, பாலோ, தேனோ விட்டு அபிஷேகம் செய்து, மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்யலாம். ஓம் நாகராஜாய நமஹ.. ஓம் நாகேஸ்வரியே நமஹ... என்று சொல்லி வழிபடலாம். அல்லது, ஓம் ஹ்ரீம் நாகராஜாய நமஹ என்றும் சொல்லலாம்.
நாக உரு இல்லையென்றால், சிறிது அரிசி மாவில் வெல்லம் கலந்து கோயிலிலோ அல்லது வேறு எங்கேனும் எறும்புகளுக்கு உணவளிக்கலாம். அவ்வாறு செய்யும்போது ஓம் நாகராஜாய நமஹ என்று வேண்டிக்கொள்ளுங்கள். அப்படி செய்வதன்மூலம், பித்ரு தோஷம் நீங்குவதுடன், புத்திர பாக்கியம் கிட்டும்.
நாக பஞ்சமி விரதம் இருப்பது எப்படி?
விரதம் என்பதெல்லாம் நவீன காலத்தில் சிரமம். ஏனென்றால் பலர் வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். பலர் வேலை வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்தால், அன்றைய தினம், காய்கறி, பழம் உள்ளிட்ட சைவ உணவுகளை உட்கொள்ளுங்கள். கிழங்கு உணவுகளை தவிர்த்துவிடுங்கள். பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகளை தவிர்க்க வேண்டும் என்று ஏன் சொல்கிறோம் என்றால்..., மக்களாகிய நாம் எல்லோருமே, ஏதோ ஒருவகையில் பூமியை தவறாக பயன்படுத்துகிறோம். நமக்கு எத்தனையோ நல்லவற்றை பூமி தருகிறது. பூமி என்பது நம் தாயை போன்றவள். ஆனால், நாம் அதற்கு என்ன செய்கின்றோம்? அதனை முடிந்த அளவுக்கு மாசுபடுத்தி வைத்திருக்கிறோம். எனவே அந்த நாளிலாவது நம் தவறுகளை திருத்திக்கொள்வோம்.
நாக பஞ்சமியன்று உணவில் கிழங்கு வகைகளை தவிர்க்கலாம் - நீர்நிலைகளில் தேனை 2 சொட்டு விடலாம்!
மண்ணில் 2 சொட்டு பால் விட்டாலே போதுமா...?
நாக பஞ்சமியின் முக்கியமான அம்சம் என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் மதிக்க வேண்டும். மண்ணில் உள்ள மண்புழுக்கூட பாம்பு மாதிரிதான். அது இல்லையென்றால் மனிதர்கள் இருக்க முடியாது. விவசாயம் செய்ய முடியாது. எனவே நம் பூமித்தாயை வேண்டி வணங்கி, ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ... ஓம் ஸ்ரீ மாத்ரேய் நமஹ... ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ... ஓம் ஸ்ரீ அன்னபூர்ணாயை நமஹ என்று சொல்லி மண்ணில் 2 சொட்டு பாலை விட்டு, அம்மா நீ எனக்கு ஜனனத்தை தந்திருக்கிறாய், இந்த உலகத்தில் வாழக்கூடிய வாய்ப்பை தந்திருக்கிறாய், எத்தனையே வசதி வாய்ப்புகளை தந்திருக்கிறாய், வண்டி வாகனங்களை தந்திருக்கிறாய். அப்படி நாங்கள் சாலையில் வண்டி வாகனங்களில் செல்லும்போது, அறிந்தோ அறியாமலோ வாயில்லா ஜீவன்களுக்கு தீங்கிழைத்திருப்போம். அதேபோல் நீ கொடுத்த இயற்கை வளங்களை ஏதோ ஒரு வகையில் தவறாக பயன்படுத்தியிருப்போம். எங்களை மன்னித்துவிடு தாயே. இதுபோன்ற தவறுகளை இனி செய்யாமல் இருக்க முயற்சி செய்கிறோம் என்று சொல்லி, அந்த பூமித்தாயை வணங்கலாம். அதேபோல், ஏதேனும் நீர் நிலையில், 2 சொட்டு தேனை விட்டு வழிபடலாம். தேனை விட்டுவிட்டு, அம்மா... நீர், நிலம் உள்ளிட்ட நீ தந்த இயற்கையை நாங்கள் அழித்திருந்தால், எங்களை மன்னித்துவிடு என்று வேண்டிக்கொள்ளுங்கள். இதுவே போதும், நாக வழிபாட்டுக்கு சமமான பலனை தந்துவிடும்.
