இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஆடி மாதத்தில் வரும் மிக முக்கிய விரத நாட்களில் ஒன்று வரலட்சுமி விரதம். வீட்டில் மங்களம் பெருக வேண்டி பெண்களால் விமரிசையாக கொண்டாடப்படும் விழாவாக இது உள்ளது. குறிப்பாக, திருமணமான பெண்கள், தங்கள் கணவரின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணம் ஆகாத பெண்கள், நல்ல கணவர் அமைய வேண்டியும் நோன்புக் கயிறு கட்டிக்கொண்டு வரலட்சுமி விரதம் மேற்கொள்கின்றனர். அந்தவகையில் இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் எந்த நாளில் வருகிறது? எப்படி வழிபட வேண்டும்? எந்த முறையில் வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் போன்ற பல தகவல்களை இந்த பதிவில் காணலாம். மேலும், வரலட்சுமி விரதம் குறித்து ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த், ராணி ஆன்லைன் நேயர்களுக்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலையும் பார்ப்போம்.

ஏன் வரலட்சுமி என்று பெயர்?

பக்தர்கள் வேண்டும் வரங்களை அருளும் லட்சுமி என்பதால் அவளுக்கு வரலட்சுமி என்று பெயர். பொதுவாக, வரலட்சுமி நோன்பு, மாங்கல்ய நோன்பு, சுமங்கலி நோன்பு, சுமங்கலி விரதம் என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த விரதத்தை மேற்கொண்டால் வாழ்வில் மங்களங்கள் நிறையும் என்பது நம்பிக்கை. வரலட்சுமி விரதம் இருந்து வழிபட்டால் அஷ்ட லட்சுமிகளின் அருளும் கிடைப்பதுடன், அஸ்வமேத யாகம் நடத்தியதற்கு இணையான பலன் கிடைக்குமாம்.


வரலட்சுமி விரத கலச வழிபாடு

வரலட்சுமி விரதம் எப்போது?

ஆடி மாதம் வளர்பிறையில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வரலட்சுமி விரதம், வரும் ஆகஸ்டு 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. காலை, பிற்பகல், இரவு, நள்ளிரவு என நான்கு காலங்களில் பூஜை மேற்கொள்ளவும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்டு 8-ம் தேதி காலை 07:01 முதல் 09:11 வரையும், பிற்பகல் 1:34 முதல் 3:50 வரையும், இரவு 7:43 முதல் 9:17 வரையும், ஆகஸ்டு 8-ம் தேதி முடிந்து ஆகஸ்டு 9-ம் தேதி விடியலான 12:30 முதல் 2:29 மணி வரையும் பூஜைக்கு உகந்த நேரமாக கூறப்பட்டுள்ளது.

வரலட்சுமி விரத நடைமுறைகள்

வரலட்சுமி விரதத்தை பெண்கள், ஆண்கள் என இருபாலரும் மேற்கொள்ளலாம் என்றாலும், பொதுவாக பெண்கள்தான் முக்கியமாக விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். இந்த நாளில், பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்து பூஜைகளை தொடங்கிவிடுவார்கள். சிலர் அன்றைய தினம் முழுவதும் உணவருந்தாமலும், சிலர் சில வகை உணவுகளை மட்டும் தவிர்த்தும் விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். மேலும், ஒரு கலசம் அல்லது சிறிய பித்தளைப் பானைக்கு (தேவியைக் குறிக்கும் வகையில்) சேலையை கட்டி அலங்கரித்து, மஞ்சள் குங்குமம் வைத்து, அதில் பச்சை அரிசி அல்லது தண்ணீர், நாணயங்கள், ஐந்து வகையான இலைகள் மற்றும் வெற்றிலை பாக்குகளால் நிரப்பி, இறுதியாக, சில மா இலைகளை கலசத்தின் வாயில் வைத்து, மஞ்சள் தடவிய தேங்காயை கொண்டு கலசத்தின் வாயை மூடி, நடுவீட்டில் வைத்து வழிபடுவார்கள். அத்துடன் லட்சுமி தேவிக்கு பிரசாதங்களை படைத்து ஆரத்தி எடுப்பார்கள். மறுநாள், கலச நீரை வீடு முழுவதும் தெளித்து, அதில் போட்ட அரிசியை வைத்து உணவு சமைப்பார்கள். இதுவே வழக்கமாக வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் முறை. இந்நிலையில், வரலட்சுமி விரதத்திற்கு ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த் சொல்லியுள்ள எளிய வழிபாட்டு முறைகளை பார்ப்போம்.

ஐயா, கலசம் வைத்து வழிபட முடியாதவர்கள் என்ன செய்யலாம்?

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில், ஆண் பெண் என அனைவருமே வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. அப்படி இருக்கையில் காலையிலேயே பெண்களும் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே அவர்களாலும் பெரிய அளவில் பூஜைகள் செய்ய முடியாது. எனினும் வரலட்சுமி விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று மனதில் தோன்றும். அப்படிப்பட்ட மகளிர், நான் சொல்லும் எளிய வழிபாட்டு முறைகளை மேற்கொண்டாலே பெரும் பயன் கிட்டும். இது எனக்கு என் குருநாதர் சொல்லிய கருத்துக்கள். நானாக எதுவும் சொல்லவில்லை.


நாம் வேண்டுவதைவிட அதிகமாக தரக்கூடியவள் மகாலட்சுமி...

வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கும், இங்குள்ள வேலைக்கு போகும் பெண்களுக்கும் கும்பத்தை வைத்து அரிசியை பரப்பி மேலே தேங்காயை வைத்து அம்மன் திருவுருவை வைத்து வழிபடக்கூடிய சூழல் அமைவது கிடையாது. சிலரது வீட்டில் தனி பூஜை அறை இருக்காது. அவர்களால் கலசத்தை வைத்து வழிபட முடியாது. அவர்கள் எல்லோருமே முதலில் உணர வேண்டியது... தண்ணீர் என்பதே செல்வம்தான். எந்த வீட்டில் நீரை சேமிக்கிறார்களோ, சிக்கனமாக செலவு செய்கிறார்களோ அங்கே செல்வம் சேரும் என்பது விதி. மிகப் பெரிய கோடீஸ்வரர்களை எல்லாம் பார்த்தீர்கள் என்றால், குடிப்பதற்கு தனக்குத் தேவையான தண்ணீரை தண்ணீர் பாட்டிலில் எப்போதுமே தன்னுடன் எடுத்துச் செல்வார்கள். பெரும்பாலான பிரபலங்கள் தங்கள் கைகளில் சிறியதோ, பெரியதோ என ஏதோ ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்திருப்பார்கள். ஏனென்றால், அவர்களுக்கு அவர்கள் ஜோதிடர்கள் சொல்லியிருப்பார்கள் அல்லது அவர்களே அறிந்திருப்பார்கள். எங்கெல்லாம் நீர் இருக்கின்றதோ, அங்கே செழுமை இருந்துகொண்டேதான் இருக்கும். அதனால் பெரிய பங்களாக்களில் எல்லாம் நீரூற்று போல அலங்கார ஊற்றுகள் வைத்திருப்பார்கள்.

எனவே வரலட்சுமி விரத தினம் மட்டும் அல்லாமல், எல்லா தினத்திலும், தண்ணீர் பாட்டிலில் முழுவதும் தண்ணீர் நிரப்பி, நடுவீட்டில் வைத்து, அம்மா.. நான் தெரிந்தோ தெரியாமலோ சுற்றுச்சூழல் மாசுபடும் அளவுக்கு ஏதேனும் குற்றம் செய்திருந்தால், தண்ணீரை அசுத்தம் செய்திருந்தால் என்னை மன்னித்துவிடு. இனி அந்த தவறு நடைபெறாமல் இருக்க முயற்சிக்கிறேன். நீரின் இன்றியமையா தேவையை நன்கு உணர்கிறேன். எனக்கு செல்வம் பெருக வேண்டும். என் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அமைதியும் நிலவ வேண்டும் என்று மனதார லட்சுமி தேவியை வேண்டிவிடுங்கள். குறிப்பாக வரலட்சுமி விரதத்தன்று இவ்வாறு நிச்சயம் வழிபட வேண்டும். கலசம் வைத்து வழிபட முடியாதவர்களால் கூட, இந்த வழிபாட்டை எளிய முறையில் மேற்கொள்ள முடியும் என்பதால், இதனை மறவாமல் செய்துவிடுங்கள். லட்சுமி தேவியின் அருள் முழுவதும் கிடைத்துவிடும்.

என்ன மந்திரங்கள் சொல்லி லட்சுமியை வழிபடலாம்?

கலசத்தில் தேவி அமர்ந்துள்ளதைபோல மனதில் நினைத்து, ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ என்றும் திருமகளே போற்றி என்றும், எந்நெந்த லட்சுமி மந்திரங்கள் நமக்கு தெரியுமோ அதனை சொல்லலாம். சொல்ல முடியாதவர்கள் யூடியூப், ஃபோன் உள்ளிட்டவற்றில் லட்சுமி தேவியின் மந்திரங்களை ஆடியோ வீடியோ வடிவில் ஒலிக்கவிட்டு கேட்கவும் பார்க்கவும் செய்யலாம். ஆனால் எந்த ஒரு விழா என்றாலும், அது சொல்லவரும் கருத்தை உணர்ந்துக்கொள்ள வேண்டும்.


நடுவீட்டில் வைத்து பூஜை செய்யும் தண்ணீரை குடித்துவிடுங்கள் - பவானி ஆனந்த்

சுமங்கலிகளுக்கு புடவை ஜாக்கெட் போன்றவற்றை வாங்கிக்கொடுக்க முடியாத பெண்கள் என்ன செய்யலாம்?

சிறிய மஞ்சள் குங்குமம் பாக்கெட்டை வாங்கி அருகில் உள்ள அம்மன் ஆலயத்திற்கு சென்று கொடுத்துவிட்டு வரலாம். நாம் வேண்டுவதைவிட அதிகமாக தரக்கூடியவள் மகாலட்சுமி. அவள் நம்மிடம் இருந்து கேட்பது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நாம் நல்லவற்றை பேச வேண்டும். நல்லவற்றை கேட்க வேண்டும். நல்லவற்றை பார்க்க வேண்டும் என்பதுதான். இதை நாம் கடைபிடித்தால் நமக்கு அனைத்து நன்மைகளும் சேரும். வாழ்க்கையிலே மட்டற்ற மகிழ்ச்சியும், பெரும் பொருள் வளமும் தானாகவே வந்து கிட்டிடும்.

நாள் முழுவதும் உணவருந்தாமல் விரதம் இருக்க முடியாதவர்களுக்கு வேறு எளிய வழி என்ன?

இந்த விரத முறைகள் எல்லாம் பல காலங்களுக்கு முன்னரே, நமது வசதிக்கேற்ப உருவாக்கப்பட்டவை. அப்போது வாழ்ந்த மனிதர்கள் எல்லாம் நம்மைவிட ஆரோக்கியமானவர்கள். காரணம், அப்போது இருந்தது இயற்கையோடு இணைந்த வாழ்வு. நாம் இப்போது இருப்பது இயந்திரத்தனமான வாழ்வு. ஏதோ ஒன்றிற்காக ஓடிக்கொண்டே இருக்கிறோம். நாம் சாப்பிடக்கூடிய உணவும் அவ்வளவு ஆரோக்கியமானது கிடையாது. முப்பது வயதானாலே எல்லா உடல் பிரச்சனைகளும் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்துவிடுகின்றன. இதுபோன்ற சூழலிலே இந்த காலத்திற்கு எது சாத்தியமோ, அதைத்தான் நாம் கடைபிடிக்க வேண்டும். நான் ஏற்கனவே சொன்னதைப் போல, வரலட்சுமி விரதம் சொல்ல வரும் கருத்தை உள்வாங்கிக்கொள்ளுங்கள். உணவுகளில் உங்கள் மருத்துவர் ஆலோசனையை கடைபிடியுங்கள். தவறே கிடையாது. விரதம் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. நம் உடம்பை வருத்திக்கொண்டு எந்த ஒரு விரதமும் கடைபிடிக்க தேவையில்லை. இறுதியாக, நடுவீட்டில் வைத்து பூஜை செய்யும் தண்ணீர் பாட்டிலில் உள்ள தண்ணீரை வீட்டில் உள்ள அனைவரும் அருந்திவிடுங்கள்.

Updated On 5 Aug 2025 12:30 PM IST
ராணி

ராணி

Next Story