2025-ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி முழு சந்திர கிரகணம் (இரத்த நிலவு), செப்டம்பர் 7-8ம் தேதி நள்ளிரவு நடைபெற்றது. உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த முழு சந்திர கிரகணத்தை மக்கள் கண்டு ரசித்தனர். இந்த நிலையில், வரும் 21-ம் தேதி இந்த ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் நிகழப்போகிறது. ஒரே மாதத்தில் சந்திர கிரகணமும், சூரிய கிரகணமும் நிகழ்வதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். முழு சந்திர கிரகணம் 1 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த நிலையில், வரப்போகும் சூரிய கிரகணமும் சக்திவாய்ந்த கிரகணமாக இருக்கும் என்றுக் கூறப்படுகிறது. காரணம்... சில கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறும் காலத்தில் சூரிய கிரகணம் நிகழ்வதாக ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த் தெரிவித்துள்ளார். எனவே, நடைபெற்று முடிந்த சந்திர கிரகணமும், வரப்போகும் சூரிய கிரகணமும், உலகில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், உலகளவில் பல பாதிப்புகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

சந்திர கிரகணத்தின்போது இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலா
சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலா!
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று இரவில் தோன்றிய சந்திர கிரகணம், கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. முழுமையான கிரகணம் 82 நிமிடங்களுக்கு நீடித்தது. இந்தியாவைப் பொறுத்தவரை, செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 9.57 மணியளவில் பூமியின் நிழல் சந்திரனின் மீது விழ ஆரம்பித்தது. 11.01 மணியளவில் பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக மறைத்தது. இந்தத் தருணத்தில்தான் நிலவு, ரத்தத்தில் தோய்த்து எடுத்த பந்தைப் போல சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. இந்த நிலை 12.23 வரை நீடித்தது. அதாவது 82 நிமிடங்கள் பூமியின் நிழலால் சந்திரன் முழுமையாக மறைக்கப்பட்டது. அதிகாலை 1.26 மணியளவில் கிரகணம் முழுமையாக முடிவுக்கு வந்தது.
இந்த சந்திர கிரகணத்தின்போது பூமியால் நிலவு முழுமையாக மறைக்கப்பட்டாலும், நிலவு சிவப்பு நிறத்தில் தெரிந்ததற்கு காரணம், பூமியை கடந்து செல்லும்போது சூரிய ஒளி சிதறுவதே. உலகின் பல நாடுகளிலும் கோடிக்கணக்கான மக்கள் இந்த முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்களாலும் தொலைநோக்கிகள் மூலமும் கண்டு ரசித்தனர். 2022ஆம் ஆண்டிற்குப் பிறகு, இவ்வளவு நீண்ட சந்திர கிரகணம் இந்தியாவில் தெரிந்தது இம்முறைதான். இதற்கடுத்த முழுமையான சந்திர கிரகணம் 2028ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி இந்தியாவில் தெரியும்.
செப்டம்பர் 21 சூரிய கிரகணம்!
இந்த ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் வரும் செப்டம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். இது ஒரு பகுதிநேர சூரிய கிரகணமாக இருக்கும். அதாவது சந்திரன் சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே மறைக்க முடியும். இந்த கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை என்றாலும், அதன் சில மறைமுக விளைவுகளை காணலாம். பஞ்சாங்கத்தின்படி, செப்டம்பர் 21 என்பது அஷ்ட மாத கிருஷ்ண பக்ஷத்தின் அமாவாசை திதி. இது சர்வ பித்ரு அமாவாசை அல்லது மகாளய அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தின்படி, சர்வ பித்ரு அமாவாசை நாளில் சூரிய கிரகணம் மிகவும் அரிதானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் ஜபம், தவம் மற்றும் தானம் செய்வது முன்னோர்களின் ஆசிகளைத் தருவதோடு, ஜாதகத்தின் தோஷங்களையும் நீக்குகிறது. மேலும் இந்த கிரகணம் புதனின் ராசியான கன்னி மற்றும் உத்தர பால்குனி நட்சத்திரத்தில் நிகழ உள்ளது.

இன்னும் சில தினங்களில் சூரிய கிரகணமும் வரவுள்ளதால் உலக அளவில் தாக்கம் இருக்கும் - பவானி ஆனந்த்
இந்நிலையில் ஒரே மாதத்தில் (செப்டம்பரில்) நடைபெறும் இந்த 2 கிரகணங்கள் குறித்தும், அதன் தாக்கங்கள் குறித்தும் ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த் என்ன சொல்லியுள்ளார் என்று பார்க்கலாம்.
ஐயா, செப்டம்பர் 21-ம் தேதி வரப்போகும் சூரிய கிரகணம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது?
ஏற்கனவே சில கிரகணங்கள் இந்த ஆண்டில் நிகழ்ந்துவிட்டன. அப்படியிருக்கையில் வரப்போகும் சூரிய கிரகணம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், சூரியனும் கேதுவும் தங்களது சொந்த வீட்டில் இருக்கையில், கேதுவை சூரியன் க்ராஸ் செய்கிறார். இந்த நிகழ்வுக்குப்பிறகுதான் செப்டம்பர் 21-ல் சூரிய கிரகணம் நடைபெறுகிறது. எனவேதான் இந்த சூரிய கிரகணம் மிக மிக வலிமையானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த கிரகணம் உலகம் முழுவதிலும் சில இடங்களில் தெரியாமல் கூட இருக்கலாம்... ஆனால் கிரகணத்தின் தாக்கம் உலகம் முழுவதும் இருக்கும்.
ஒரே மாதத்தில் நிகழும் இந்த இரண்டு கிரகணங்களினால் என்ன விதமான தாக்கங்கள் ஏற்படும்?
சூரியன் என்பது ஆத்மாவை குறிக்கக்கூடியது. உயிர்தன்மையைக் குறிக்கக் கூடியது மற்றும் வேலைவாய்ப்புகளை குறிக்கக்கூடியது. சந்திரன் என்பது மனதை குறிக்கக்கூடியது. தண்ணீர் மற்றும் பணத்தை ஓரளவு குறிக்கும். எனவே சந்திரன் மற்றும் சூரிய கிரகணங்களுக்கு பிறகு வரும் காலகட்டங்களில் குடும்பம் என்ற அமைப்பு சிதைந்துபோகும். இந்தியாவை பொறுத்தவரை குடும்ப அமைப்புதான் அனைத்திற்கும் அடித்தளம். ஆனால் அதுவே ஆட்டம் காணப்போகிறது.
சூரியனும் கேதுவும் இணைந்து பிரியும் இக்காலத்தில் நடைபெறும் இந்த 2 கிரகணங்களால், அடுத்த ஏழெட்டு ஆண்டுகள் அதன் தாக்கம் நிச்சயம் இருக்கும். குறிப்பாக இந்தியாவில் குடும்பம், கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றில், வரக்கூடிய அடுத்த தலைமுறைக்கு முற்றிலும் நம்பிக்கையற்று போகும் சூழல் ஏற்படலாம். எதற்கு நமக்கு திருமணம் என்ற அமைப்புத் தேவை? எதற்கு நாம் ஒரு கட்டுக்குள் வாழ வேண்டும் போன்ற எண்ணங்கள் அழுத்தமாக உண்டாகலாம். இதன்விளைவாக குழந்தை பிறப்பு சதவீதம் முற்றிலும் குறைந்துவிடலாம். இளம் தலைமுறையினர் இடையே பிரச்சனைக்குரிய சிந்தனை மாற்றங்கள் ஏற்படும். அத்துடன் பெரும் விபத்துகள், பொருளாதார சரிவு, வேலையிழப்புகள் போன்றவை உலக அளவில் ஏற்பட்டு மனித குலத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும்.

கிரகண தாக்கங்களில் இருந்து விடுபட பைரவரை சரணாகதி அடைந்துவிட வேண்டும் - பவானி ஆனந்த்
இந்த தாக்கங்கள் குறைய என்ன செய்ய வேண்டும்?
இறை வழிபாடுதான் ஒரே தீர்வு. பைரவரை சரணாகதி அடைய வேண்டும். அதிலும் சொர்ண ஆகர்ஷண பைரவரை தீவிரமாக வழிபட வேண்டும். பைரவரின் 64 வடிவங்களில் ஆகர்ஷண பைரவரும் ஒன்று. அவரின் சிறப்பு என்னவென்றால், அவரின் காலடியில் நாய்க்குட்டிகள் இருக்கும். கையில் தங்கத்திலான சூலத்தை ஏந்தி இருப்பார். உடல் எங்கும் தங்கத்தில் ஆன ஆபரணங்களை அணிந்திருப்பார். இவர் சூரியனின் தன்மையைக் கொண்டவர். ஆபரணம், செல்வம் மற்றும் பொருள் சேர்க்கையை ஈர்த்து அருள் பாலிப்பவர். பொருளாதார சிக்கல்களைத் தீர்த்து, நிதி வளத்தை அதிகரிக்க அருள்புரிவார்.
ஒவ்வொரு பைரவரும் ஒரு கிரகத்தின் தன்மையை குறிப்பர். உன்மத்த பைரவர் என்பவர் வாராஹி அன்னையின் கணவர். இவருக்கு புதனின் தன்மை இருக்கும். அசிதாங்க பைரவர் என்று ஒரு வடிவம் உண்டு. இவர் குருவின் தன்மை கொண்டவர். அனைத்து பைரவர்களுக்கும் தலைமையாக இருப்பவர் சொர்ண ஆகர்ஷண பைரவர். எனவே சொர்ண ஆகர்ஷண பைரவரை சரணடைந்துவிடுங்கள். மேலும் இந்தியாவுக்கு தற்போது செவ்வாய் திசை நடப்பதால், பைரவரை நாம் கண்கண்ட தெய்வமாக வணங்க வேண்டும். "ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ" என்ற மந்திரத்தை முடிந்தவரை தினமும் உச்சரிக்கலாம். அத்துடன் அருட்பெருஞ்ஜோதி மந்திரத்தை குறைந்தது 9 முறை சொல்லி வழிபடலாம். பைரவர் வழிபாடு, துர்கை வழிபாடு, ஈசன் வழிபாடு ஆகியவை மக்களை இன்னல்களில் இருந்து காப்பாற்றும்.
