இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர், நீண்ட நாட்களுக்கு அணியின் பக்கபலமாக இருப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஷாக் மேல் ஷாக் கொடுத்துவருகிறார். சமீபத்தில்தான் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து கடந்த ஒரு மாதகாலமாக பிசிசிஐயிடம் இவர் பேச்சுவார்த்தை நடத்திவந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவித்திருந்த நிலையில் அவரைத் தொடர்ந்து கோலியும் அதே முடிவை எடுத்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல்லை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளை நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, இங்கிலாந்திற்கு சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடவிருக்கிறது. இந்த தொடருக்கான அணி குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சமீபகாலமாக விராட் கோலி விளையாட்டில் நாட்டமின்றி இருப்பதாகவும், ரன்களை எடுக்க தடுமாறி வருவதாகவும் விமர்சிக்கப்பட்டு வந்தார். குறிப்பாக, நியூசிலாந்துடனான போட்டியில் டெஸ்ட் தொடரை இழந்ததற்கு கோலியின் மோசமான பேட்டிங்கே முக்கிய காரணம் என்று கருதப்பட்டது. இதனிடையே பல போட்டிகளில் தொடர்ந்து சொதப்பிவந்த ரோஹித் சர்மா வருகிற டெஸ்ட் போட்டியில் கேப்டனாக நீடிக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்ட நிலையில், அவர் தனது விருப்ப ஓய்வை அறிவித்தார். இதனால் இந்த முறை டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டனாக விராட் கோலி செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 36 வயதான கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளது, அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.


பிசிசிஐயுடன் ஏற்பட்ட மோதலே விராட் கோலியின் ஓய்வு முடிவுக்கு காரணம்?

கோலியின் பெஸ்ட் ஷாட்ஸ்!

இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் கோலி மொத்தம் 9230 ரன்கள் அடித்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை டெண்டுல்கர், டிராவிட் மற்றும் கவாஸ்கரைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை தக்கவைத்திருக்கிறார் கோலி. 30 சதம் மற்றும் 3 அரைசதங்களை அடித்திருக்கிறார். அதில் குறிப்பாக, 7 இரட்டை சதங்களை அடித்து எந்தவொரு இந்திய கிரிக்கெட் வீரரும் நிகழ்த்தாத சாதனையை படைத்திருக்கிறார். அதேபோல் ஒரு இன்னிங்க்ஸில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த பெருமைக்கும் சொந்தக்காரர் இவர். ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் அடித்துள்ளார் கோலி. ஒரு தொடரில் அதிக சதங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் இவர், 2016 -17ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டித் தொடரில் 4 சதங்கள் அடித்திருக்கிறார். சச்சின் மற்றும் சேவாக்கைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 700 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமல்லாமல் இந்திய அணியின் கேப்டனாக தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார் விராட் கோலி. அதேபோல் இந்திய கேப்டனாக அதிக போட்டிகளை சந்தித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். 68 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு கோலி முதலிடத்தையும், 60 போட்டிகளில் அணியை வழிநடத்தி கோலி இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கின்றனர். கோலி வழிநடத்திய போட்டிகளில் 48 முறை இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட்டில் சதங்கள் மற்றும் அரை சதங்கள் விளாசிய வீரர்களின் பட்டியலை எடுத்தால் அதில் கோலியின் பெயர் கட்டாயம் இடம்பெறும். இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டபோது மட்டுமே 20 முறை சதங்கள் மற்றும் 18 முறை அரைசதங்கள் அடித்திருக்கிறார் கோலி. 71 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் வைத்தே அந்த அணிக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் வெற்றிகண்ட ஒரே கேப்டன் என்ற பெயரை பெற்றிருக்கிறார் கோலி. இந்த தொடரானது 2018-19ஆம் ஆண்டு நடைபெற்றது. சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியை முதலிடத்திற்கு முன்னேற்றியிருக்கிறார் இவர்.


இந்திய அணிக்காக விளையாடிய விராட் கோலியின் சாதனைகள்

ஒருமாதமாக கோலியுடன் பேச்சுவார்த்தை?

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகண்ட கேப்டன் என்பதாலேயே கோலியை தவறவிட தயங்கியது பிசிசிஐ. அதனாலேயே ஒருமாத காலமாக தொடர்ந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்திவந்தது. ஏனென்றால் அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர். இதனைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பிஷயன்ஷிப் தொடர்கள் 2 ஆண்டுகள்வரை நீடிக்கலாம். இதுபோன்று நடக்கும் தொடர்கள் இளம்வீரர்கள் தங்களது திறமையை வெளிக்காட்ட சிறந்த தளமாக அமையும் என்பதாலேயே மூத்த வீரர்கள் பொதுவாக இதுபோன்ற சமயங்களில் தங்களது ஓய்வை அறிவிப்பதுண்டு. அதனால்கூட ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்திருக்கலாம் என்று சொல்லப்படும் நிலையில், விராட் கோலியும் அதே காரணத்தை வைத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டிலும் ரோஹித் மற்றும் கோலி இருவருமே ஒரே நேரத்தில் தங்களது ஒய்வை அறிவித்தனர். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இருவரும் அதே பாணியை பின்பற்றுவது அவர்களுடைய ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்திருக்கிறது.


கோலியின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர் நவ்ரோஜ் சித்துவின் கூற்று

கோலியை வற்புறுத்திய முன்னாள் வீரர்கள்

கோலியின் இந்த முடிவு குறித்து இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து கூறுகையில், கோலியின் இந்த முடிவு கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும், அவர் ஓய்வு பெறும் நோக்கம் சரியானது மற்றும் உன்னதமானதாக இருந்தாலும் நேரம் சரியற்றதாக இருப்பதாகவும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். சுப்பிரமணியம் பத்ரிநாத்தும் இதே கருத்தை பதிவு செய்துள்ளார். "தற்போதைய சூழலில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி தேவை. அவரை சுற்றி இளம் அணியை உருவாக்க அவர் உதவ வேண்டும்." என்று பத்ரிநாத் கூறியிருந்தார். ஆனால் முன்னாள் வீரர்களின் முயற்சியும் வீணாகியுள்ளது.

கோலியின் முடிவுக்கு யார் காரணம்?

ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் இல்லை என்பதை அறிந்த கோலி, புதிய கேப்டன் தேர்வு செய்யப்படும்வரை, தான் தற்காலிகமாக இந்திய அணியின் கேப்டனாக இருக்க தயாராக இருப்பதாக பிசிசிஐ நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் கோலியின் கோரிக்கையை நிராகரித்து, இந்திய அணிக்கு இளம் கேப்டனை நியமிக்க, அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும், பிசிசிஐ நிர்வாகமும் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து டெஸ்ட் போட்டிகளிலிருந்து, தான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் கோலி. விராட் கோலி இன்னும் 2 ஆண்டுகள்வரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என பிசிசிஐ நினைத்திருந்த நிலையில், கோலியின் இந்த திடீர் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On 13 May 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story