
தொடர் தோல்விக்கு பிறகும் "தோனி" மீதான அன்பு யாருக்கும் குறையவில்லை ! ஏன்?
ஐபிஎல் 18-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மிக மோசமாக விளையாடி வருகிறது. இந்த தொடரில் சிஎஸ்கே இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 9 போட்டிகளில் தோல்வியடைந்து, வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் சென்னை அணி 10-வது இடத்தில் இருக்கிறது. மேலும் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்த முதல் அணி என்ற அவப்பெயரையும் சிஎஸ்கே பெற்றுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது முதல் மேட்ச்சில் வெற்றிபெற்ற சென்னை அணி, அதன்பின் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. இந்தசூழலில், காயம் அடைந்த கேப்டன் ருதுராஜ்ஜுக்கு பதிலாக மீண்டும் கேப்டனாக களமிறங்கினார் தல தோனி. தோனியின் வருகைக்கு பிறகு சென்னை அணி எப்படியும் எழுச்சி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. தோனி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகும் சென்னை பெரிதாக சோபிக்கவில்லை. அவரது தலைமையில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி கிட்டியது. மற்ற ஆட்டங்களில் எல்லாம் தோல்வியை மட்டுமே கண்டது சிஎஸ்கே. இதனால் தோனி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அவருக்கு வயதாகிவிட்டது. எதற்கு இவரெல்லாம் இன்னும் கேப்டனாக இருக்கிறார்? ஏன் இன்னும் ஐபிஎல்லில் விளையாடுகிறார்? என்றெல்லாம் கடும் வசை சொற்கள் வீசப்பட்டன. இப்படியெல்லாம் விமர்சனங்களை சிலர் வீசினாலும், பலர் தோனிக்கு ஆதரவாகவே பேசி வருவது ஆச்சர்யத்தை அளிக்கிறது. அவர் மீது விமர்சனங்கள் இருந்தாலும், அதையும் கடந்து ஆத்மார்த்தமான அன்பு பெரும்பாலானோருக்கு தோனி மீது அழுத்தமாக உள்ளது. இதற்கு என்ன காரணம்? அப்படி என்ன செய்துவிட்டார் தோனி?
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் - 2015 உலகக்கோப்பை அரை இறுதியில்
"மிஸ்டர் கூல்"
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்கள் என்று எடுத்துக்கொண்டால் நிச்சயம் தோனிக்கு முக்கிய இடம் உண்டு. அதற்கு காரணம், வெற்றியையும், தோல்வியையும் ஒன்றாக எடுத்துக்கொள்ளும் உயர்ந்த குணம். மிக பின் தங்கிய மாநிலத்தில் இருந்து, சுமாரான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்தான் தோனி. ஆனால் கடின உழைப்பால் பிரம்மாண்ட வெற்றியையும் உயரத்தையும் எட்டியவர்.
தோனி தலைமையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 28 ஆண்டுகளுக்கு பின்னர் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா பெற்ற மகத்தான வெற்றி அது. இந்த வெற்றியை இந்திய அணிக்கு பெற்றுத்தந்தவர் தோனி. மாற்றம் ஒன்றே மாறாதது! அதன்படி, இங்கிலாந்து டெஸ்டுக்குபின் தொடர் தோல்விகளை சந்தித்தது இந்தியா. அப்போது தோனிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இத்தனைக்கும் இந்திய அணி சார்பில் அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற கேப்டன், தோனிதான். மேலும் 60 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் தாக்குப்பிடித்த 6 கேப்டன்களில் தோனியும் ஒருவர். இந்த நிலையில் தனது ஒரே செயலால் விமர்சகர்களின் வாயை அடைத்தார் தோனி. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில்...
அதேபோன்று 2015-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் அரை இறுதியில் இந்தியா தோல்வியை தழுவி வெளியேறியது. ஆனால் அந்த நேரத்திலும் சத்தமில்லாமல் ஒரு சாதனையை தோனி அப்போது செய்திருந்தார். காலிறுதி போட்டியில் பங்களாதேஷை வென்றதன் மூலம் அவரது தலைமையில் 100-வது ஒருநாள் போட்டியை இந்தியா வென்றிருந்தது. அந்த சூழலில் தோனி அதை கொண்டாடவில்லை. உலக அளவில் 100 ஒருநாள் போட்டிகளை வெல்வது என்பது ஒரு கேப்டனாக சாதாரண விஷயம் இல்லை. அவ்வாறு 100 ஒரு நாள் போட்டிகளை வெல்லும் அளவுக்கு தாக்குப்பிடித்த கேப்டன்கள் மூன்றே 3 பேர்தான். அப்போதும் தோனி அதனை தலையில் வைத்துக் கொண்டாடவில்லை. அதேநேரம் உலகக்கோப்பை அரையிறுதி தோல்வியால் துவண்டுவிடவும் இல்லை. அதனால்தான் அவர் கூல் கேப்டன்.
2025 ஐபிஎல் சீசன் தோல்விகள்!
இந்த சீசனில் சென்னை அணி பல தோல்விகளை சந்தித்திருந்தாலும், கடந்த 3-ஆம் தேதி பெங்களூருவில் ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கே அடைந்த தோல்வி, தோனி ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது. 214 ரன்கள் என்று ஆர்சிபி வைத்த இலக்கை சிஎஸ்கே துரத்திய விதம், எப்படியும் சென்னை ஜெயித்துவிடும் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு அளித்தது. அதற்கேற்ப 200 ரன்களை அசால்டாக கடந்த சென்னை அணி, இறுதி நேர களத்தில் தோனி இருந்தும், 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்து 2 ரன்களில் தோல்வி அடைந்தது. இதனால் ரசிகர்கள் மனம் உடைந்தனர்.
ஆர்சிபி-யிடம் தோற்ற பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்
இந்த தோல்வி தோனியை பாதித்திருக்குமா?
நிச்சயம் பாதித்திருக்கும். ஆனால் வெற்றி தோல்வி என இரண்டையும் ஒன்றாக பாவித்துக்கொள்வதில் வல்லவரான தல தோனி, இந்த தோல்வியையும், அதனால் வந்த விமர்சனங்களையும் தலைக்கு ஏற்றி கொண்டிருக்கமாட்டார் என்பதில் மாற்று கருத்து இருக்காது. இந்த சீசன் இல்லை என்றால் அடுத்த சீசன்... ஆனால் பதிலடி பலமாக கொடுக்க வேண்டும் என்று நிச்சயம் நினைத்திருப்பார்.
தோல்விக்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் தோனி கூறிய வார்த்தைகள்!
"தோல்விக்கு நானே பொறுப்பு" என்றார் தோனி. அதுவரை அவரை விமர்சித்தவர்கள் கூட தோனியின் வாயிலிருந்து வந்த இந்த வார்த்தைகளை கேட்டபிறகு கண்டிப்பாக அடடே என்று மனதில் நினைத்திருப்பார்கள். தோல்விக்கு எவன் ஒருவன் மனப்பூர்வமாக பொறுப்பேற்கிறானோ அவனே உன்னத தலைவன். மற்ற வீரர்களின் விளையாட்டுகளை பற்றியெல்லாம் பேசாத தோனி, "நான் களத்தில் இருந்தபோது, 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஷாட்களை பெரிய ஷாட்களாக மாற்றியிருந்தால் அழுத்தத்தைக் குறைத்திருக்கலாம் என நினைக்கிறேன். எனவே, தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்" என்றார். இதுதான் பல்வேறு தோல்விகளுக்கு பிறகும், தோனி மீதான ரசிகனின் காதலை சற்றும் குறையவிடாமல் பார்த்துக்கொள்கிறது.
சிஎஸ்கே ரசிகர்கள் - மனைவி சாக்ஷியுடன் தல தோனி
தோனியை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது?
மேலே கூறிய காரணங்களையும் தாண்டி, தோனியை எல்லோருக்கும் பிடிக்க இன்னும்கூட பல விஷயங்கள் இருக்கின்றன. கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல், ஒரு மனிதராகவும் தோனி பலரின் மனதில் இடம் பிடித்துள்ளார். எளிமையான இயல்பு, அணுகுமுறை, தலைமை பண்பு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக திடமான மனநிலை ஆகியவை தோனி மீது பலருக்கும் தனித்துவமான ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.
என்ன சொல்கிறார் தோனியின் மனைவி சாக்ஷி?
தோனி விளையாடும் அத்தனை போட்டிகளையும் பார்த்து விமர்சனம் தரும் அவரது மனைவி சாக்ஷி, சிஎஸ்கே.வின் இத்தனை தோல்விகளுக்கு பின்னரும் நம்பிக்கை வார்த்தைகளை பேசியுள்ளார். "சிஎஸ்கே என்பது வெறும் கிரிக்கெட் அணி அல்ல. அது ஒரு குடும்பம். சிஎஸ்கே என்பது ஒரு சாம்ராஜ்யம். வெற்றி, தோல்வி என எது வந்தாலும், மஞ்சள் படைக்கு கம்பீரமாக தோள் நிற்போம். தொடர்ந்து கர்ஜித்துக்கொண்டே இருங்கள்" என்று கூறியிருக்கிறார் மிஸ்டர் கூலின் மனைவி மிஸஸ் கூல்.
