இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. போட்டியில் வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் நூறு சதவீதம் இருந்தபோதும், அந்த வாய்ப்பை தவறவிட்டு இந்தியா தோல்வியுற்றது. தொடக்கமே ஏமாற்றம் அளித்ததால் ரசிகர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் தோல்விக்கு காரணம் கேப்டன் சுப்மன் கில் என பலரும் விமர்சிக்க தொடங்கினர். இதனையடுத்து வெற்றிப் பெற்றால் பயிற்சியாளரை கூறுவதும், தோல்வி அடைந்தால் கேப்டனை விமர்சிப்பதும் வாடிக்கையாகி வருவதாக ரசிகர்கள் பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.


கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் - இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்

டெண்டுல்கர் - ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்...

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெண்டுல்கர் - ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லி மைதானத்தில் நடந்து முடிந்தது. முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களும், இங்கிலாந்து அணி 465 ரன்களும் சேர்த்தன. ஆறு ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் கேஎல் ராகுல் அபாரமாக விளையாடி 137 ரன்கள் குவித்தார். ராகுலை தொடர்ந்து விளையாடிய ரிஷப், 118 ரன்கள் அடித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் அவ்வளவாக ரன்கள் குவிக்காத நிலையில், 364 ரன்களில் இந்திய அணி சுருண்டது. இதன்மூலம் இந்தியா மொத்தம் 370 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து 371 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 21 ரன்களுடன் களத்தில் இறங்கியது.

இங்கிலாந்தின் தொடக்க வீரர்களான கிராவ்லே 65 ரன்களும், பென் டக்கட் 149 ரன்களும் குவித்தனர். அடுத்த வந்த ஜோரூட் நிதானமாக விளையாடி இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார். 82 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 21 ரன்களிலிருந்து இங்கிலாந்து 187 ரன்கள் அடிக்கும்வரை இந்தியா ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை. பின்னர் இந்தியா விக்கெட்டை வீழ்த்தினாலும், இது இங்கிலாந்துக்கு ஒரு பிரஷராக தெரியவில்லை. இந்திய அணியின் பந்துவீச்சும், பீல்டிங் சரியாக இல்லாததே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பும்ராவை தவிர இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும் சரியாக செயல்படவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் இந்த தோல்விக்கு கேப்டன் சுப்மன் கில்தான் காரணம் என பலரும் விமர்சிக்க தொடங்கினர்.


ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா - கேப்டன் சுப்மன் கில்

இந்தியாவின் தோல்விக்கு கேப்டன் சுப்மன் கில்தான் காரணமா?

ரோகித் சர்மாவின் திடீர் ஓய்வு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய அணிக்கு ஒரு கேப்டனையும் தேட வைத்தது. ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வை அறிவித்தார். அப்போது சுப்மன் கில்தான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளிவந்த நிலையில், ரசிகர்கள் உட்பட கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் இதில் உடன்பாடு இல்லை. காரணம் ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா போன்ற அனுபவமிக்க வீரர்கள் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் எனக் கூறினர். இதற்கு ஜடேஜாவும் விருப்பம் தெரிவித்திருப்பார். அஸ்வின் ரவிச்சந்திரன் உடனான நேர்காணலில் பேசிய ஜடேஜா, “நிச்சயமாக எனக்கும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. பல கேப்டன்கள் தலைமையில் நான் விளையாடியுள்ளேன். நான் விளையாடிய கேப்டன்களின் ஒவ்வொருவரின் மனநிலை குறித்தும் எனக்கு நன்றாகத் தெரியும். வீரர்களுக்கு என்ன தேவை என்பதும் எனக்கு புரியும்.” என தெரிவித்திருந்தார். இருப்பினும் சுப்மன் கில்தான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பும்ரா, ஜடேஜா போன்ற அனுபவமிக்க வீரர்கள் இருந்தபோதிலும் குறைந்த அனுபவம் கொண்ட சுப்மன் கில் கேப்டனாக்கப்பட்டார். அவரை முதலில் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக்கிவிட்டு, போதிய அனுபவம் பெற்ற பிறகு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்தனர். இதனால் ஒருதரப்பினர், தோல்விக்கு காரணம் சுப்மன் கில் என கூறிவருகின்றனர்.


இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் - இந்தியாவுக்கு எதிராக வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி

கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றதிலிருந்து...

ஒரு தரப்பினர் சுப்மன் கில்லின் அனுபவத்தை பற்றிப் பேசினாலும், பலரும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரையே விமர்சனம் செய்து வருகின்றனர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவி ஏற்றதிலிருந்து, வரையறுக்கப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டிகளை தவிர டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாக இல்லை என்றே கூறலாம். வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் பெற்ற வெற்றியைத் தவிர, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், தற்போது இங்கிலாந்துக்கு எதிராகவும் இந்தியா தோல்வியையே சந்தித்துள்ளது. மேலும் இந்திய அணியில் நிகழ்ந்த அனுபவ வீரர்களின் ஓய்வுகளுக்கும் கம்பீர்தான் காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பாதியிலேயே அஸ்வின் ஓய்வை அறிவித்தார். அதனைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன் ரோகித் சர்மா, விராட் கோலி ஓய்வை அறிவித்தனர். இவர்கள் ஓய்வு அறிவிப்பில் கம்பீருக்கும் பங்கு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் கம்பீரின் பயிற்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.


இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது...

கம்பீர் பயிற்சியின் கீழ் இந்தியாவின் டெஸ்ட் சாதனை...

கம்பீரின் பயிற்சியின் கீழ், இந்தியா இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த காலகட்டத்தில், 3 போட்டிகளில் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்தது. வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகளில் வென்றது. அதனைத்தொடர்ந்து சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றிலும் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியாவில் நடந்த 5 டெஸ்ட் போட்டிகளில் 3ல் இந்தியா தோல்வியை சந்தித்தது. ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்தது.

36 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி...

சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றிலும் இந்தியா தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணியிடம் சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது.

19 ஆண்டுகளுக்கு பின் சின்னசாமி மைதானத்தில் தோல்வி...

மேலும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் 19 ஆண்டுகளுக்கு பின்னர் டெஸ்ட் போட்டியில் சின்னசாமி மைதானத்தில் தோல்வியை தழுவியது இந்தியா. கடைசியாக 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் சின்னசாமி மைதானத்தில் தோல்வியை தழுவியது.

சொந்த மண்ணில் 50 ரன்களுக்கு குறைவாக ஆல் அவுட்...

அதுபோல பெங்களூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்ஸில், 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சொந்த மண்ணில் 50 ரன்களுக்கு குறைவாக இந்தியா ஆல் அவுட் ஆனது இதுவே முதல் முறை. இந்த டெஸ்ட் தொடரின் தோல்வியின் மூலம் 12 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தது.

தொடர்ச்சியாக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி...

12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. கடைசியாக இது 2012 இல் நடந்தது. 2012ம் ஆண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியிருந்தது. இதன்மூலம் மும்பையில் தோற்காமல் இருந்த இந்திய அணியின் சாதனை 12 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடிக்கப்பட்டது.

சொந்த மண்ணில் ஒயிட்வாஷ்...

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், சொந்த மண்ணில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திப்பது இதுவே முதல் முறை.


டெண்டுல்கர் - ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள்

13 ஆண்டுகளுக்குப் பிறகு மெல்போர்னில் தோல்வி..

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது.

10 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவிடம் தொடர் இழப்பு...

சிட்னியில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, இந்தியா தொடரை இழந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது. கடைசியாக 2014-15ல் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியை தழுவியது.

முதல் முறையாக WTC இறுதிப் போட்டியில் இல்லை...

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிட்னியில் நடந்த டெஸ்டில் தோல்வியடைந்த பிறகு, இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 தொடரில் இருந்து வெளியேறியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC) இறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடாமல் இருப்பது இதுவே முதல் முறை.

5 சதங்கள் அடித்த போதிலும் முதல் முறையாக இந்தியா தோல்வி...

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 5 சதங்கள் அடித்திருந்தும் தோல்வியடைந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இவ்வளவு சதங்கள் அடித்திருந்தும் ஒரு அணி போட்டியில் தோல்வியடைந்தது இதுவே முதல் முறை. இந்தியாவுக்காக ரிஷப் பந்த் இரண்டு சதங்கள் அடித்தார். அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒரு சதம் அடித்தார். அவரைத் தவிர, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரும் சதம் அடித்தனர். இவ்வாறு பல மோசமான சாதனைகளை இந்தியா, கம்பீரின் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழ்த்தியுள்ளது. ஆனால், இந்திய கிரிக்கெட் அணி ஜெயித்தால், பயிற்சியாளர் கம்பீர் காரணம் என்றும், தோற்றால், கேப்டன் கில் காரணம் என்றும், இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விமர்சிப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆதங்கம் தெரிவித்துள்ள கிரிக்கெட் ரசிகர்கள், கம்பீரை எதிர்வரும் சில டெஸ்ட் போட்டிகளில் பெஞ்சிலேயே அமர வைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Updated On 1 July 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story