இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா நன்றாக விளையாடினாலும், அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருந்ததே அணியின் தோல்விக்கு காரணம் என பலரும் கூறிவருகின்றனர். ஆனால் மறுபக்கம் ஜடேஜா எவ்வளவுதான் தனது உழைப்பை போட்டாலும், எப்போதும் குறைத்தே மதிப்பிடப்படுகிறார் என ஒரு வாதம் எழுந்துள்ளது. திடீரென ஜடேஜா குறித்து இந்த விவாதம் எழ காரணம் என்ன? அதற்கு ஜடேஜாவின் ரசிகர்கள் கொடுக்கும் பதிலடி என்ன என்பது குறித்து பார்ப்போம்.


இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வினோ மன்கட் சாதனையை சமன் செய்த ஜடேஜா

போர்வீரர் ரவீந்திர ஜடேஜா...

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெண்டுல்கர் - ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ளன. முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட், மான்செஸ்டரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்தியா வென்றாக வேண்டும் என்ற கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் என்னதான் டெஸ்டில் இந்தியா வென்றாலும், ஜடேஜாவின் பங்களிப்பை பற்றி யாரும் பேசப்போவதில்லை. அவர் பெயர் என்றும் தலைப்பு செய்தியாக மாறப்போவதுமில்லை என ரசிகர்கள் பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். காரணம், கடைசியாக நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆன நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 62.1 ஓவர்களில் 192 ரன்னில் ஆல் அவுட்டானது. 193 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தனி ஆளாக நின்று போராடிய ஜடேஜா 61 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்தப் போட்டியின் மூலம் ஜடேஜா ஒரு சாதனையும் படைத்தார். அதாவது இரண்டு இன்னிங்சிலும் 50+ ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதற்கு முன் கடந்த 1952ஆம் ஆண்டு, இந்திய வீரர் வினோ மன்கட், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் 50+ ரன்களை அடித்திருப்பார். கிட்டத்தட்ட 73 ஆண்டுகளுக்கு பின் அந்த சாதனையை சமன் செய்தார் ஜடேஜா. இருப்பினும் மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாததால் இந்தியா தோல்வியை தழுவியது. இந்தப் போட்டி மட்டுமின்றி இந்த தொடர் முழுவதுமே ஜடேஜா தனது சிறந்த பங்களிப்பை அணிக்கு வழங்கி வருகிறார். ஆல்ரவுண்டரான ஜடேஜா, இந்த முறை பந்துவீச்சாளராக அவ்வளவாக சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், பேட்டராக தனது சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தினார். இந்த போட்டி மட்டுமல்ல இதுபோல பல போட்டிகளில் ஜடேஜா தனித்து நின்று தனது திறமையை வெளிப்படுத்துவார். இதனால் ரசிகர்கள் பலரும் ரவீந்திர ஜடேஜாவை போர்வீரர் எனவும் குறிப்பிடுவர். ஆனால் ஜடேஜா போராடி ஸ்கோரை உயர்த்தும் பல போட்டிகளில் பெரும்பாலானவற்றில் இந்தியா தோல்வியையே தழுவும். இந்தியாவின் தோல்வியால் ஜடேஜா கொண்டாடப்பட மறக்கப்படுகிறாரா? அல்லது இயல்பாகவே கண்டுக்கொள்ளப்படாத அண்டர் ரேட்டட் விளையாட்டு வீரராக ரவீந்திர ஜடேஜா உள்ளாரா என பல கேள்விகள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.


அனுபவங்கள் இருக்கும்போதிலும் ஜடேஜா மற்றும் பும்ராவிற்கு மறுக்கப்படும் கேப்டன் பதவி

மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நம்பர் ஒன் ஆல்ரவுண்டர்...

இந்தியாவின் சிறந்த ஆல் - ரவுண்டர்களில் ஒருவர் ரவீந்திர ஜடேஜா. ஜடேஜா கடந்த 2017ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ஒரு வாரம் மட்டும்தான் ஐசிசியின் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். அதன்பின் 2022ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி மீண்டும் உலகின் நம்பர் 1 டெஸ்ட் ஆல்ரவுண்டர் ஆனார். அப்போது முதல் இப்போது வரை கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் இடத்தில் நீடித்து வருகிறார். இருப்பினும் பல இடங்களில் ஜடேஜா முன்னிறுத்தப்படுவதில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தங்களது ஓய்வை அறிவித்தனர். அப்போது இந்தியாவின் கேப்டன் யார் என்ற பெரும் கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது. பலரும் அனுபவமிக்க விளையாட்டு வீரர்களான பும்ரா, ஜடேஜாவை கேப்டனாக்கலாம் என கூறிவந்தனர். ஜடேஜாவும் அஸ்வின் ரவிச்சந்திரன் உடனான நேர்காணலில், டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் ஆகவேண்டும் என்ற விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனாலும் இளம் வீரர் சுப்மன் கில் கேப்டனாக்கப்பட்டார். சுப்மன் கில்லைவிட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா அனுபவமிக்க வீரர் என்றபோதும் ஜடேஜாவுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இந்திய கிரிக்கெட் அணியை வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு சென்றதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் கேப்டன் கபில்தேவிற்கு பிறகு, இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டராக இருந்து வருகிறார் ஜடேஜா. சொல்லப்போனால், கபிலைவிட ஸ்கோர்களில் சிறந்தவராகவே ஜடேஜா உள்ளார். இருப்பினும் கபில்தேவிற்கு கிடைத்த புகழும், பாராட்டும் ஜடேஜாவுக்கு கிடைப்பதில்லை. மேலும் கேப்டன் போன்ற பதவிகளுக்கு முன்னுரிமையும் அளிக்கப்படுவதில்லை. இதற்கு பலரும் ஜடேஜாவின் பாதிக்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் இந்திய மண்ணில் எடுக்கப்பட்டவை எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் மோசமான விக்கெட் சராசரியை ஜடேஜா கொண்டிருக்கவில்லை. மேலும் ஜடேஜாவைவிட அதிக விக்கெட்டுகள் எடுத்த ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் பேட்டிங்கில் ஜடேஜாவைவிட சிறந்து விளங்கவில்லை. ஜடேஜா திறமை இங்கு குறைத்து மதிப்பிடப்பட்டிருந்தாலும், இந்திய கிரிக்கெட் சகாப்தத்தின் முக்கிய ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ஜடேஜா என்பதில் ஆச்சரியமில்லை.


2023 ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற்ற போது ஜடேஜாவை தூக்கிக் கொண்டாடிய தோனி

ஜடேஜாவின் முக்கிய பங்கு... விருதுகள்...

2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் ஜடேஜா. அப்போட்டியின்போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதற்காக ப்ளேயர் ஆஃப் டோர்னமெண்ட் விருதையும் பெற்றார். 2013-ல் ஒரு நாள் கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் என ஐசிசியால் அறிவிக்கப்பட்டார். தற்போது உலகின் நம்பர் 1 ஆல்ரவுண்டர் என்ற தரவரிசை பட்டியலில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறார். 2008-ம் ஆண்டு ராஜஸ்தான் அணி ஐபிஎல் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றியவர். அதுபோல 2023-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தவர். இதுபோல பல்வேறு போட்டிகளின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் ரவீந்திர ஜடேஜா. மேலும் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். பல போட்டிகளில் ஜடேஜா ஆட்ட நாயகன் விருதுகளை பெற்றுள்ளார். 2008-09 ஆம் ஆண்டில் ரஞ்சி டிராஃபியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக மாதவ்ராவ் சிந்தியா விருதைப் பெற்றார். அத்துடன் இந்திய விளையாட்டுத் துறையின் உயரிய விருதான அர்ஜூனா விருதையும் ஜடேஜா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On 22 July 2025 12:04 AM IST
ராணி

ராணி

Next Story