இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அறிவுபூர்வமான விளையாட்டுகளில் செஸ் விளையாட்டும் ஒன்று. மன்னரை சுற்றி வட்டம் கட்டப்பட்டு ஒரு பக்கம் எதிரணியின் மந்திரி. மறுபக்கம் பாயும் குதிரை. பின்னே மதம் கொண்ட யானை. முன்னே, தாக்கத் தயாராக சிப்பாய்கள். இந்த வட்டத்திலிருந்து தப்பித்து ராஜா உயிர் பிழைப்பாரா என்று செஸ் விளையாட்டின் அமைப்பே சுவாரஸ்யமாக இருக்கும். ஆரம்பத்தில் மன்னர்கள் போர்களத்தில் தனது வியூகத்தை தீட்டுவதற்காக இந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்தார்கள். மன்னர் காலம் முதல் தற்போது வரை செஸ் விளையாட்டிற்கென்று தனி பிரியர்கள் இருக்கிறார்கள். இந்த கட்டுரையில் செஸ் விளையாட்டு குறித்த முழு தகவல்களையும் பார்ப்போம்.


குப்தர் ஆட்சி காலத்தில் உருவான செஸ் விளையாட்டு

செஸ் விளையாட்டின் வரலாறு

குப்தர்கள் ஆட்சி காலமான ஆறாம் நூற்றாண்டில்தான் இந்தியாவில் முதன் முதலில் செஸ் தோன்றியதற்கான ஆதாரங்கள் உள்ளன. ‘அஷ்டபாதா' எனவும் ‘சதுரங்கா' எனவும் இது அழைக்கப்பட்டது. அஷ்டபாதா என்ற வார்த்தைக்கு ‘எட்டுக்கு எட்டு கட்டங்களைக் கொண்ட சதுரப் பலகை' என அர்த்தம். சத்ரங் என்ற பெயரில் தோன்றிய இந்த விளையாட்டு மெதுவாக 9ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் நுழைந்தது. அதன்பிறகு 15ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் காலூன்றியது. அங்கு பல்வேறு மாறுதல்களுக்கு பிறகு, செஸ் உலகமெங்கும் பரவியது. செஸ் சீனாவில் தோன்றியது என ஒரு தரப்பினர் சொன்னாலும், அது இந்தியாவில்தான் தோன்றியது என்பதற்கு சரித்திர ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. 15ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த விளையாட்டில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. முதன் முதலில் செஸ் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கான புத்தகம் எழுதிய பெருமை லூயிஸ் ராமிரேஸ் என்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவரையே சேரும். அவருடைய "ரெபெட்டிஷன் ஆஃப் லவ் அண்ட் தி ஆர்ட் ஆஃப் பிளேயிங் செஸ்" என்ற புத்தகம் இன்றளவிலும் போற்றப்படுகிறது.

தமிழர்களின் 2600 ஆண்டுகால பழமையான விளையாட்டு

சதுரங்க விளையாட்டில் உள்ளது போலவே யானைப்படை குதிரைப்படை என ஏராளமான படைகளை வைத்திருந்தவர்கள் தமிழர்கள். போர் வியூகங்களால் எல்லைப்பரப்பை விரிவு செய்தவர்கள் தமிழர்கள். போர் வியூகங்களை வகுக்கவும் அரசியல் நகர்வுகளை வகுக்கவும் இந்த சதுரங்கம் தமிழருக்கு உதவியிருக்கும். கீழடியில் பெரியவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் விளையாடும் சதுரங்க விளையாட்டில் பயன்படும் பல்வேறு அளவிலான தந்தத்தாலான சதுரங்க காய்கள் கிடைத்துள்ளன. போர் என்றால் அதற்கு வீரமும் வியூகமும் தேவை. போர் மரபிற்கும் தமிழருக்கும் தொடர்பிருப்பதை போல வியூகம் வகுத்து போர் புரியும் சதுரங்கமும் தமிழருடையது.


தமிழர்கள் பயன்படுத்திய செஸ் ஆட்டக்காய்கள்

செஸ் விளையாட பயன்படும் காய்கள்

கருப்புக் கட்டங்கள் 32, வெள்ளைக் கட்டங்கள் 32 என்று மொத்தம் 64 கட்டங்கள் இருந்தாலும், ஆடப் பயன்படுகின்ற காய்களாக கருப்பில் 16ம் வெள்ளையில் 16ம்தான் உண்டு. அந்தப் பதினாறு காய்களும் ஒன்றுபோல் ஒரே அமைப்பு உடையவை அல்ல. பல்வேறு அமைப்பில், பல்வேறு வடிவில், பல்வேறு சக்தி கொண்ட காய்களாகத்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒரு ராஜா, ஒரு ராணி, 2 ரதம்(மந்திரி), 2 யானை, 2 குதிரை, 8 சிப்பாய்கள் என்று மொத்தம் 16 காய்கள் உண்டு.

முதலில் வெள்ளை காய்களை நகர்த்துவது ஏன்?

அக்காலத்தில் செஸ் விளையாட்டில் முதலில் யார் காய்களை நகர்த்த வேண்டும் என்று டாஸ் போட்டோ அல்லது விளையாடும் இருவர்களுக்கு இடையேயும் பேசி முடிவு செய்து வந்தனர். இப்படிப்பட்ட சூழலில் 18-ஆம் நூற்றாண்டில் செஸ் விளையாட்டு மேலும் பிரபலமாகி கொண்டிருந்த நேரம், அதை அடிப்படையாக வைத்து பலரும் புத்தகங்களை எழுதினர். அச்சமயம் செக்கர்ஸ் என்ற விளையாட்டை பற்றிய புத்தகங்களும் வெளியாக தொடங்கின. (அந்த விளையாட்டும் செஸ் விளையாட்டை போலவே கருப்பு, வெள்ளை காய்களை பயன்படுத்தி விளையாடுவதுதான்). செக்கர்ஸ் விளையாட்டு, முதலில், வெள்ளை பக்கத்தில் இருந்துதான் தொடங்கும். எனவே அச்சமயம் செஸ் குறித்து புத்தகம் எழுதியவர்கள், செஸ் விளையாட்டும் வெள்ளை பக்கத்தில் துவங்க வேண்டும் என்று எழுதி வைத்தனர்.

அதன் பிறகு செஸ் விளையாட்டை பற்றி வெளியான புத்தகங்களில் படங்களும், குறிப்புகளும் முதலில் வெள்ளை நிற காயை நகர்த்துவது போலவே அமைந்திருந்தன. அந்த புத்தகத்தை பார்த்து படித்து அதன்படி விளையாட கற்று கொண்டவர்களும் முதலில் வெள்ளை நிற காயை நகர்த்தியே விளையாட பழகினர். அதன்பின்னர் 1850ஆம் ஆண்டில் நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்ட செஸ் தொடரில் முதலில் வெள்ளை நிற காயைதான் நகர்த்த வேண்டும் என்று புதிய விதியை கொண்டுவந்தனர். மேலும், 1859-ல் அப்போதைய உலக செஸ் சாம்பியனான வில்லியம் ஸ்டெய்நீட்ஸ், தான் எழுதிய புத்தக்கத்தில், வெள்ளை நிற காயைதான் முதலில் நகர்த்தி விளையாட வேண்டும் என்று எழுதினார். அதன் பின் 19-ஆம் நூற்றாண்டில் உலக சதுரங்க சங்கம் உருவானபோது அதனையே புதிய விதியாக கொண்டுவந்தனர். அது தற்போது வரையில் விதியாக கடைபிடிக்கப்பட்டு விளையாடப்பட்டு வருகிறது.


18ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட ஆட்டக்காய்கள்

காய்களை நகர்த்தும் முறை

சிப்பாய் : முதலில் வெள்ளை சிப்பாய் காய், கருப்புக் காய்கள் இருக்கும் திசையை நோக்கி முன்னேறும். அதாவது நேராக இருக்கும் எதிர் கட்டத்திற்குதான் சிப்பாயை நகர்த்த வேண்டும்.

யானை : யானை, தான் இருக்கும் இடத்திலிருந்து, முன்னோக்கி அல்லது பின்னோக்கி, இடப்புறமாக அல்லது வலப்புறமாக, சமய சந்தர்ப்பத்திற்கேற்றவாறு ஒரு கட்டமாகவோ அல்லது பல கட்டங்களையோ, நேராக கடந்து சென்று விரும்பிய கட்டத்தில் அமரலாம். எத்தனைக் கட்டங்களாக இருந்தாலும் கடந்து போகலாம் என்றாலும், அதிலும் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது, தன் இனக் காய்கள் ஏதாவது ஒன்று, கடந்து போகும் வழியில் இருந்தால், அது அதனைத் தாண்டிக் கடந்து போக முடியாது. வழி இருந்தால் மட்டுமே போக முடியும்.

ரதம் : ரதக் காயை 'மந்திரி' என்றும் சொல்வதுண்டு. யானை 2 இருப்பது போல ரதக்காயும் ஆட்டத்தில் 2 உண்டு. அதில் ஒன்று ராணிக்குப் பக்கத்திலும், மற்றொன்று ராஜாவுக்குப் பக்கத்திலும் வைக்கப்பட்டிருக்கும். யானை தனக்கு நேராக உள்ள கட்டத்தில் நேராகப் போவது போல, ரதக்காய் குறுக்குக் கட்டம் வழியாகத்தான் போகும். அதாவது வெள்ளைக் கட்டத்தில் இருக்கும் ரதக்காயானது, குறுக்காக உள்ள வெள்ளைக் கட்டத்தின் வழியாகவும், கருப்புக் கட்டத்தில் இருக்கும் ரதக்காய், குறுக்காக உள்ள கருப்புக் கட்டத்திலும் நகர முடியும்.

குதிரை : சதுரங்க ஆட்டத்தில் குதிரையை நகர்த்தி ஆடுவது சற்று சிக்கலானதுதான். தெளிவாக நகர்த்தப் பழகிக் கொண்டால், ஆடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். அவசரப்பட்டால், குதிரை சங்கடத்திலும் ஆழ்த்திவிடும். குதிரை நகரும் முறை சற்று வேடிக்கையானது. குதிரை தாண்டி தாண்டி ஒடுவது போல, குதிரைக் காயும் மற்றக் காய்கள் போல நகராமல் பல கட்டங்கள் தாண்டிதான் கடக்கும். ராஜா காய்க்கும், ராணி காய்க்கும் கூட இல்லாத தனிச் சிறப்பும் தனியான வாய்ப்பும், குதிரை காய்க்கு மட்டுமே உண்டு. எல்லாக் காய்களும் தான் நகரும்போது எதிரே தன் இனக்காய்கள் இருந்தால், நகர்வதைத் தொடர முடியாமல், அங்கேயே நின்றுவிடும். ஆனால், எதிரே காய்கள் இருந்தாலும் தாண்டிச் சென்று, தான் விரும்புகிற இடம் போய் தங்குகின்ற அனுமதி குதிரை காய்க்கு மட்டுமே உண்டு. குதிரைக் காயானது, தான் இருக்கும் இடத்திலிருந்து ஒரு கட்டம் வலப்புறமோ அல்லது இடப்புறமோ நகர்ந்து, மேல் நோக்கியோ அல்லது கீழ்ப்புறமோ இரண்டு கட்டம் சென்று அக்கட்டத்தில் அமரலாம்.

ராணி : அரசரிடம் அதிக உரிமையுள்ளவள் ராணி என்பதால், அரசரை விட அதிக சக்தியுள்ளதாக ராணிக்காய் அமைக்கப்பட்டிருக்கிறது. யானைக்காய் போல முன்னும் பின்னும் பக்கவாட்டின் இருமருங்கிலும் நேராகவோ, ஒரு கட்டமோ அல்லது பல கட்டங்களோ போகலாம். அதேபோல், மந்திரி போல குறுக்குக் கட்டம் வழியாகவும் செல்லலாம். விரும்பினால் ஒரு கட்டம் கடக்கலாம். இல்லையேல் பல கட்டங்களும் கடந்து போகலாம்.

ராஜா : ஆட்டத்தின் தலைமைக்காய் இதுதான். இதனை சுற்றிச் சுற்றித்தான் ஆட்டத்தின் அத்தனைக் காய்களின் இயக்கமும் இருக்கும். ராஜா தன் விருப்பப்படி முன் கட்டத்திற்கோ, பின் கட்டத்திற்கோ, இடப்புறம் அல்லது வலப்புறம், அல்லது குறுக்கு கட்டத்தின் முன்னோ பின்னோ, அல்லது இடப்புறமோ வலப்புறமோ, எட்டு திசைப் பக்கத்திலும் ஒரு கட்டம் மட்டுமே நகரலாம்.


உலகளவில் பிரபலமடைந்த செஸ் விளையாட்டு

செஸ் விளையாட்டின் முக்கியத்துவம்

சதுரங்கம் என்பது அறிவுசார்ந்த மற்றும் நம் மூளையின் செயல் திறன்களை மேம்படுத்த உதவும் ஒரு அற்புதமான விளையாட்டாகும். மேலும் மக்கள் மத்தியில் சகிப்புத்தன்மை, மரியாதை மற்றும் நேர்மையை ஊக்குவிக்கவும் இது உதவுகிறது. ஐநாவின் வளர்ச்சி இலக்குகள் மற்றும் வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சியில் இந்த கேம் ஒரு முக்கிய பங்கைக் வகிக்கிறது எனவும் ஐநா இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Updated On 2 Dec 2024 12:47 PM GMT
ராணி

ராணி

Next Story