இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஹரியானா மாநிலம் குருகிராமில், தேசிய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பட்டப்பகலில், தனது தந்தையாலேயே சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த ராதிகா யாதவின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மனைவியின் பிறந்தநாள் அன்று, 25 வயதேயான தனது சொந்த மகளையே தந்தை கொலை செய்ய காரணம் என்ன? அதுவும் விளையாட்டுத்துறையில் பிரபலமாகி, நன்கு பெயர் எடுத்திருந்த பெண்ணை ஏன் படுகொலை செய்தார்? வழக்கின் பிண்ணனி என்ன? என்பது குறித்து இங்கு காண்போம்.

தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற ராதிகா யாதவ்

யார் இந்த ராதிகா யாதவ்?

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சுசாந்த் லோக் பேஸ் -2 பகுதியில் வசித்து வந்தவர் ராதிகா யாதவ். இவர் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஆவார். ஹரியானா மாநில டென்னிஸ் அணியில் விளையாடியுள்ள ராதிகா, தேசிய அளவில் பல போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார். 25 வயதேயான இளம்பெண் ராதிகா யாதவ் தனது டென்னிஸ் சாதனைகளுக்காக ஓரளவு அறியப்பட்டவர். ஒரு போட்டியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடுவதை நிறுத்திவிட்டு, தனது நீண்ட நாள் கனவான குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு டென்னிஸ் அகாடமியைத் சமீபத்தில் தொடங்கியுள்ளார்.

5 ரவுண்டு... 3 குண்டுகள்... - பறிபோன உயிர்!

ஹரியானா மாநில அணியில் பங்கேற்று, பல போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ள ராதிகா யாதவ் தனது அடுத்தகட்ட கனவான டென்னிஸ் அகாடமியை தொடங்க முடிவு செய்து, அதற்கான எல்லா பணிகளையும் நிறைவு செய்து அண்மையில் திறப்பு விழாவையும் வெற்றிகரகமாக நடத்தியுள்ளார். இதற்கிடையே ஆரம்பத்திலிருந்தே ராதிகா யாதவின் முடிவிற்கு அவரது தந்தையான தீபக் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். தந்தையின் எதிர்ப்பையும் மீறித்தான் ராதிகா டென்னிஸ் அகாடமியை நடத்த முடிவு செய்தார். இந்த நிலையில்தான் டென்னிஸ் அகாடமியை நடத்துவது தொடர்பான தகராறில் குருகிராமில் உள்ள அவரது வீட்டில் ராதிகா அவரது தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்டார். ராதிகாவின் தந்தையான தீபக் யாதவ், தன்னிடம் இருந்த உரிமம் பெற்ற ரிவால்வரைப் பயன்படுத்தி 5 ரவுண்டுகள் சுட்டதாகவும், இதில் மூன்று குண்டுகள் பட்டு ராதிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

மகள் சம்பாத்யத்தில் வாழ்கிறான் என மக்கள் பேசியதால் கொலை செய்ததாக தீபக் யாதவ் தகவல்

தந்தை தீபக் யாதவ் கைது

தீபக் யாதவ் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் குருகிராமில் உள்ள சுசாந்த் லோக் பேஸ் -2 பகுதியில் உள்ள வீட்டின் முதல் மாடியில் வசித்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவருக்கு ஒரு சகோதரரும் உண்டு. தரை தளத்தில் வசிக்கும் அவரது சகோதரரான குல்தீப், ரியல் எஸ்டேட் முகவராக உள்ளார். இந்நிலையில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் குல்தீப்பும், அவரது குடும்பத்தினரும் முதல் மாடிக்கு விரைந்துள்ளனர். அங்கு ராதிகா ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இவர்கள், ராதிகாவை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ராதிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதேபோல துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, செக்டர்-56 காவல் நிலைய அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் குற்ற சம்பவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்தப் பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு, குற்றம் நடந்த இடம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. ராதிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே தீபக் யாதவின் சகோதரரும், உயிரிழந்த ராதிகாவின் சித்தப்பாவுமான குல்தீப் யாதவ் அளித்த புகாரின் அடிப்படையிலேயே, செக்டார்-56 காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே தீபக் யாதவ் கைது செய்யப்பட்டார். மேலும் சொந்த மகளின் கொடூர கொலைக்கு அவர் பயன்படுத்திய ரிவால்வரும் கைப்பற்றப்பட்டது.


ராதிகா யாதவின் சித்தப்பா குல்தீப் யாதவின் புகாரின் அடிப்படையில் தீபக் கைது

தீபக் யாதவின் சகோதரர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..,“நாங்கள் தரைதளத்தில் உள்ள எங்கள் வீட்டில் இருந்தோம். காலை 10 மணியளவில், ஒரு பெரிய வெடிச் சத்தம் கேட்டது. என்ன நடந்தது என அதிர்ச்சியுடன் நான் முதல் மாடிக்குச் சென்று பார்த்தேன். ​​என் அண்ணன் மகள் (ராதிகா) சமையலறையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும், ஹாலில் துப்பாக்கி கிடந்ததையும் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனேன். இதனைத் தொடர்ந்து எனது மகனும், நானும் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராதிகாவை அருகில் உள்ள ஆசியா மரிங்கோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ராதிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். என் சகோதரர் 0.32 வகை ரிவால்வரை பயன்படுத்தியுள்ளார். அது அவருடையதுதான் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என குல்தீப் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

எதற்காக இந்த கொலை? போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!

வஜிராபாத் கிராமத்தைச் சேர்ந்த தீபக் யாதவ் ரியல் எஸ்டேட் தொழில், வாடகைக்கு வீடுகளை விடுவது உள்ளிட்ட பணிகளை செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். ராதிகா விளையாட்டு அகாடமியை நடத்தி வந்ததை ஆரம்பத்தில் அவர் ஆதரித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சக கிராம மக்கள் “தனது மகளை நம்பி வாழப் போகிறான், மகள் பணத்தில் பிழைப்பு நடத்தப் போகிறான்” என அவரை கேலி மற்றும் கிண்டல்களுக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் மகளின் நடத்தை குறித்து கேள்விகள் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் தீபக் யாதவ் கடும் மன உளைச்சலுக்கு ஆளானது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தனது மகளிடம் இது தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் தீபக்கிற்கும், அவரது மகள் ராதிகாவுக்கும் அடிக்கடி சண்டை மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுறது. அகாடமியை மூட வேண்டும் என்று அவர் விரும்பியதாகவும், ஆனால் அதற்கு ராதிகா சம்மதிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சம்பவம் நடந்த நேரத்தில், தீபக், ராதிகா மற்றும் அவரது தாயார் மஞ்சு யாதவ் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். மகன் தீரஜ் வெளியில் சென்றுள்ளார். ஜூலை 10-ம் தேதி தனது அம்மாவின் பிறந்தநாள் என்பதால், அவருக்கு ஏதாவது சாப்பிட செய்து தர வேண்டும் என்பதற்காக ராதிகா சமயலறைக்குள் சென்றுள்ளார்.

அப்போது காய்ச்சல் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் மஞ்சு ஓய்வெடுத்துள்ளார். இந்நிலையில் அகாடமியை மூடுவது தொடர்பாக மீண்டும் ராதிகாவிற்கும், அவரது தந்தை தீபக்கிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவருக்குமான வாக்குவாதம் முற்ற, ராதிகாவை பின்னால் இருந்து தீபக் யாதவ் சுட்டுக் கொன்றுள்ளார். சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் போதே தீபக் யாதவ் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக குருகிராம் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுதான் தான் எழுந்ததாகவும், அதுவரை அங்கு நடந்த எதுவும் தனக்கு தெரியாது எனவும் ராதிகா யாதவின் தாய் தெரிவித்துள்ளார். மேலும் தனது கணவருக்கும், மகளுக்கும் இடையே பிரச்சனை இருந்தது தனக்கு தெரியாது எனவும், தனது கணவர் நல்லவர்தான் என்றும், ஆனால் இப்படி நடந்துகொண்டது ஏன் என தெரியவில்லை என்றும் மஞ்சு யாதவ் கூறியுள்ளார்.


ஆரம்பத்தில் மகளின் டென்னிஸ் அகாடமிக்கு தீபக் ஆதாரவாக இருந்ததாக தகவல்

கொலையாளி வாக்குமூலம்

தனது மகள் ராதிகாவை சுட்டுக்கொன்றது தான்தான் என்று தந்தை தீபக், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் வஜிராபாத்தில் உள்ள தனது கிராமத்திற்குச் செல்லும்போதெல்லாம், மகளின் சம்பாத்தியத்தில் வாழ்கிறான் பார் எனக்கூறி அக்கிராம மக்கள் அவரைக் கேலி செய்தததாகவும், இது தனது கண்ணியத்திற்கு ஏற்பட்ட அவமானம் எனவும் வாக்குமூலத்தில் தீபக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அகாடமியை மூடுமாறு தனது மகளிடம் பலமுறை கூறியதாகவும், ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, கோபமடைந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் ராதிகாவை சுட்டுக் கொன்றதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் தீபக் யாதவ் தனது மகளைப் பற்றிப் புகழ்ந்து அடிக்கடி பேசுவார் என்றும், டென்னிஸைத் தொடர எப்போதும் ராதிகாவை ஊக்குவிப்பார் என்றும். இந்தச் செய்தியைக் கேட்டு தாங்கள் அதிர்ச்சியடைந்ததாகவும் அப்பகுதியைச் சார்ந்த சிலர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.

அப்பேட்டியில் “தீபக் அனைவரிடத்திலும் மிகவும் நட்பாக பழகக்கூடியவர். இந்த கொலை பற்றி தங்களுக்கு தெரியவந்ததும் முதலில் அதனை நம்புவது கடினமாக இருந்தது. அகாடமி நன்றாக இயங்கி வந்தது. அகாடமிக்காக ராதிகா நிறைய பணிகளை முன் நின்று செய்தார். சமீபத்தில்தான் அகாடமிக்கான விளம்பர வீடியோவையும் எடுத்திருந்தார்” என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். டென்னிஸ் வீராங்கனை ராதிகாவின் கொலை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On 15 July 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story