இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இன்றைய வாழ்க்கை சூழலில் நம்மில் பலருக்கும் இளமையாகவும், அதே நேரம் மிக நீண்ட ஆயுளோடும் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதற்கான கொடுப்பினை என்பது மிகவும் சொற்பமான விஷயமாகவே இன்று பார்க்கப்படுகிறது. அதிலும் இன்று 50 வயதை கடந்த பலரும் என்னடா வாழ்க்கை இது? குனிய முடியவில்லை, நிமிர முடியவில்லை, என்னால் எந்தவொரு வேலையையும் செய்ய முடியவில்லை, இந்த கடவுள் ஏன் இன்னும் என்னை உயிரோடு வைத்திருக்கிறார் என்றெல்லாம் மிகவும் வயது ஆகிவிட்டது போல புலம்ப ஆரம்பித்துவிடுவதை கேட்டிருப்போம் அல்லது பார்த்திருப்போம். ஆனால், இவை எல்லாவற்றையும் உடைத்தெறிந்து ஒருவர் 100 வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று நிரூபித்திருக்கிறார் லலிதா குழந்தைவேலு பாட்டி.100 வயது பெண்மணியான இவர் தன்னுடைய நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்ன என்பதனையும், 5 தலைமுறைகளை பார்த்து அவர்களோடு தான் கடந்துவந்த அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார். அது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

5 தலைமுறை குழந்தைகளை பார்த்துவிட்டீர்கள், 100 வயதையும் கடந்துவிடீர்கள்! முதலில் உங்களை பற்றிய சிறு அறிமுகம் கொடுங்களேன்?


நேர்காணலின்போது எடுக்கப்பட்ட லலிதா பாட்டியின் புகைப்படங்கள்

நான் பிறந்தது சென்னை மயிலாப்பூரில். நான் பிறந்த சில மாதங்களிலேயே எனது தந்தையார் மறைந்துவிட்டார். அவரது முகத்தை கூட நான் பார்த்தது இல்லை. என்னை வளர்த்தது எல்லாமே என் அம்மாதான். அவர் படிப்பறிவு இல்லாதவர், இருந்தும் பல சிரமங்களோடு அவர் எங்களை அன்போடு வளர்த்தார். 1942 ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நாங்கள் குடும்பத்தோடு காஞ்சிபுரம் சென்றுவிட்டோம். இப்போது எனக்கு மூன்று பெண்குழந்தைகள் இருக்கிறார்கள். என்னுடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன், இரண்டு அக்காக்கள் ஆவர். என்னுடைய அண்ணன் சென்னை ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் கல்லூரியில் முதல்வராக பணி புரிந்தவர். அவரது அரவணைப்பில் வளர்ந்த நான், சென்னை சாந்தோம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 9 ஆம் வகுப்பு வரை படித்தேன். 1935 ஆம் ஆண்டு ஐந்தாம் சக்கரவர்த்தி இறந்து போனார். பின் ராணி எலிசபெத்தின் வருகை, விடுதலைக்கு பின் அண்ணாவின் எழுச்சி என எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்தி என அனைவரையும் பார்த்துவிட்டேன்.

நான் பல ஆண்டுகள் மதுரையில்தான் இருந்தேன். படிப்பை முடித்த கையோடு மருத்துவர் லட்சுமி என அழைக்கப்படும் திரிபுரசுந்தரி அவர்களிடம் உதவியாளராக பணியில் அமர்ந்தேன். அவர் எங்கு சென்றாலும் என்னை அழைத்து செல்வார். அவரது வழிகாட்டுதலால்தான் நான் செவிலியராக இல்லாத போதும், பிரசவம் பார்ப்பதில் கைதேர்ந்தவளாக மாறினேன். நான் முறைப்படி மருத்துவம் பயிலாவிட்டாலும் என் குடும்பத்தில் பலரும் மருத்துவம் படித்தவர்களாகவே இருந்தார்கள்; இப்போதும் இருக்கிறார்கள். இருப்பினும் பிரசவம் பார்ப்பதில் கைதேர்ந்தவளாக அவர்களே என்னை கூறுவார்கள். ஒருவேளை முறைப்படி படித்து செவிலியராக நான் மாறி இருந்தால் இன்னமும் என் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கும். ஆனால் கணவருடன் ஏற்பட்ட சிறு முரண்பாட்டினால் சூழல் அவ்வாறு அமையவில்லை.


கணவர் குழந்தைவேலுவுடன் லலிதா பாட்டி

மருத்துவத்துறையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளீர்கள். குறிப்பாக பெரிய பெரிய மருத்துவர்களிடம் உதவி பணியாளராக இருந்துள்ள நீங்கள் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருத்துவ பணியாளராக பல உதவிகள் செய்துள்ளீர்கள். அந்த அனுபவம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

நான் எந்த மருத்துவமனையிலும் வேலை செய்யவில்லை, புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்றுதான் மருத்துவ உதவிகள் செய்து வந்தேன். சில நேரங்களில் மிக நெருக்கமான நபர்களாக இருந்தால் மட்டும் மருத்துவமனைக்கே சென்று உதவி புரிவேன். இது தவிர அம்மை நோயினால் பாதிக்கபட்டவர்களுக்கும் அருகிலேயே இருந்து பல உதவிகள் செய்துள்ளேன். பிரசவத்தை பொறுத்தவரை அரசு மருத்துவமனைக்கு தாயை அழைத்து செல்வது துவங்கி குழந்தை பிறக்கும் வரை கூடவே இருந்து பல உதவிகள் புரிந்துள்ளேன். எங்களுடைய காலத்தில் எல்லாம் மின் வசதிகள் கிடையாது அரிக்கேன் விளக்கு பிடித்துத்தான் மகப்பேறு மருத்துவமனைக்கு தாயை கூட்டிக்கொண்டு போவோம். அந்த வெளிச்சத்தில்தான் எல்லா விஷயங்களையும் நான் பார்த்துக்கொண்டேன்.

நீங்கள் மருத்துவப்பணி புரிந்துவந்த நேரத்தில்தான் காலரா என்கிற ஆபத்தான நோய் மிக வேகமாக பரவி பல உயிர்களை பறித்து வந்தது. அந்த நிகழ்வுகளை எல்லாம் எப்படி கடந்து வந்தீர்கள்?

காலரா நோயினால் பாதிக்கப்பட்ட பலருக்கும் நான் மருத்துவ உதவிகள் செய்துள்ளேன். குறிப்பாக என்னுடைய சொந்த நாத்தனாருக்கே இந்த காலரா நோய் வந்தபோது, நான்தான் முன்னின்று பல உதவிகள் செய்து பார்த்துக்கொண்டேன். இது தவிர என்னுடைய 12 வயதிலேயே தொழு நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு கூடவே இருந்து உடலில் இருக்கும் புண்களை எல்லாம் துடைத்து மருத்துவ உதவிகள் புரிந்துள்ள நான், அதனால் எனக்கும் ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்றெல்லாம் யோசித்தது கிடையாது. இப்போதெல்லாம் தொட்டாலே பரவி விடும் என்றெல்லாம் சொல்கிறர்கள். அதை பற்றி எல்லாம் எனக்கு அப்போது தெரியாது. அதே வேளையில் எனக்கு எந்த அலர்ஜியும் ஏற்படவில்லை, எந்த தொந்தரவும் வரவில்லை. இதற்கெல்லாம் ஒரே காரணம் மனதில் இருந்த தைரியம்தான். இதை செய்யவேண்டும் என்றால் எப்பாடுபட்டாவது செய்து முடிப்பேன். இப்போதெல்லாம் மருத்துவமனையில் பணி புரிபவர்கள் காசு கொடுத்தால்தான் இதை செய்வேன், அதை செய்வேன் என்கிறார்கள். எங்கள் காலத்தில் நான் அதையெல்லாம் யோசித்தது கிடையாது. பளுவை கூட யோசிக்காமல் டக் என தூக்குவேன், அவர்களுக்கு தேவையான உதவிகள் எல்லாம் செய்வேன். என் வீட்டில் இருந்தே உணவு சமைத்து எடுத்துச்சென்று பறிமாறுவேன். இந்த மாதிரியான விஷயங்களை இன்றைய தலைமுறையினரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

1923 ஆம் ஆண்டு பிறந்த நீங்கள் மருத்துவத்துறையில் பயணித்து, பல்வேறு மருத்துவர்களிடம் உதவியாளராக பணிபுரிந்து இன்றுவரை சுறுசுறுப்பாக இயங்கி வருகிறீர்கள். உங்கள் அனுபவத்தில் இன்றைய மருத்துவத்துறை எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது?


மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேரன்கள் என்று ஒட்டுமொத்த குடும்பத்தினருடன் மகிழ்ச்சியோடு லலிதா பாட்டி

அதனை அளவிட வார்த்தைகளே கிடையாது. எங்கள் காலத்தில் ஒரு தந்தி வந்தால் அலறியடித்து ஓடிவந்து என்ன ஆனதோ... ஏது ஆனதோ எனக் கூறி கதறுவோம். இப்போது அப்படியா? ஒரு பட்டனை தட்டினால் போதும் எந்த நாட்டில் இருந்தும் ஒரு நொடியில் பேசி விடலாம். அப்படி இருக்கும்போது மருத்துவத்தை பற்றி சொல்லவா வேண்டும்.

இத்தனை ஆண்டுகளில் நீங்கள் பார்த்து வியந்த தலைவர்கள் பற்றி கூறுங்கள்?

என் அண்ணன் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் கல்லூரியில் முதல்வராக பணி புரிந்த காலத்தில் காமராஜர் எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். அதேபோல் கம்யூனிஸ தலைவர் ஜீவானந்தத்திற்கு எதிராக பல கெடுபிடிகள் இருந்த நேரத்தில் அவர் சில காலம் தலைமறைவு வாழ்க்கை எங்கள் வீட்டிலும் வாழ்ந்துள்ளார். இப்போதும் நினைவிருக்கிறது, அவருக்கு நான் உணவு பரிமாற செல்லும்போது ''முண்டம் இன்னும் கொஞ்சம் சாதம் போடு'' என செல்லமாக திட்டிய தருணங்கள் எல்லாம். மேலும் காங்கிரஸ் தலைவர் கக்கன் வீட்டிற்கு கூட எங்கள் வீட்டில் இருந்தெல்லாம் சாப்பாடு கொடுத்தனுப்பப்பட்டுள்ளது. இது தவிர நடிகர் ஜெமினிகணேசன் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ளேன். அறிஞர் அண்ணாவின் வீட்டில் நடந்த காதுகுத்து விழாவில் கூட நான் கலந்துக் கொண்டிருக்கிறேன். இப்படி பல தலைவர்கள் எங்கள் குடும்பத்தோடு நல்ல உறவில் இருந்துள்ளார்கள்.

அந்த காலத்தில் சினிமா பார்க்கும் பழக்கம் எல்லாம் உங்களுக்கு இருந்ததா? அப்படி நீங்கள் பார்த்து ரசித்தப்படம் பற்றி சொல்லுங்களேன்?

புதிதாக திருமணமாகி தம்பதிகள் வீட்டில் இருக்கும் போது, குடும்பத்தோடு நாங்கள் சினிமாவிற்கு செல்வோம். ஒருமுறை மதுரை சென்ட்ரல் சினிமா திரையரங்கிற்கு கிட்டத்தட்ட 25 பேருக்கு மேல் ஒரே நேரத்தில் சினிமா பார்க்க சென்றோம். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் சிவாஜிகணேசன். பெரும்பாலும் அவருடைய அனைத்து படங்களையுமே நான் பார்த்து விடுவேன். இருப்பினும் ஒருமுறை கூட அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இப்போதெல்லாம் நான் சினிமாவிற்கு செல்வதில்லை. அந்த ஆசை எல்லாம் முடிந்துவிட்டது.

யாருடைய பாடல்களை அதிகமாக நீங்கள் விரும்பி கேட்பீர்கள்?

எம்.எஸ். சுப்புலக்ஷ்மி எங்களுடைய வீட்டிற்கே வந்துள்ளார். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இருந்தும் நான் விரும்பி கேட்டது எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்த பாடல்களைத்தான்.


லலிதா பாட்டி சமையல் செய்த அழகிய தருணங்கள்

இன்றைக்கும் மெரீனாவின் முக்கிய அடையாளமாக இருப்பது உழைப்பாளர் சிலைதான். அந்த சிலை வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய உங்கள் அண்ணனை பற்றி சொல்லுங்கள்?

என் அண்ணன் என்னை அன்போடு பார்த்து, இத்தகைய விஷயங்களை எல்லாம் செய்து சாதனை புரிந்த நிகழ்வு மகிழ்ச்சியை தந்தாலும், இன்று அவர் என்னோடு இல்லையே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. அவர் எழுதிய புத்தகங்களை இன்றும் நான் வைத்திருக்கிறேன். அதில் ஒரு புத்தகத்தில் என் தங்கை நன்றாக சமைப்பார் என்றுகூட அவர் எழுதி இருக்கிறார்.

உங்களுடைய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?

நான் தினமும் காலை 4 மணிக்கே எழுந்து விடுவேன். பிறகு சத்து மாவு கஞ்சியை என் கைப்படவே தயார் செய்து என் பிள்ளைகளுக்கும், பேரக்குழந்தைகளுக்கும் கொடுப்பேன். சமையலை பொறுத்தவரை இன்றும் நான் செய்துக் கொடுப்பதைத்தான் அவர்கள் உண்கிறார்கள். யாரையும் சமயலறைக்குள் நான் அனுமதிக்க மாட்டேன். பிறகு காலை உணவை முடித்துவிட்டு சரியாக 10 மணிக்கு படுக்க சென்று விடுவேன். மதியம் 2 மணிக்கு எழுந்து நான் பெரும்பாலும் மிக சிறிய அளவில் தயிர் சாதம் தயார் செய்து அதில் சர்க்கரை போட்டு உண்பதையே பழக்கமாக கொண்டிருக்கிறேன். எனக்கு சக்கரை வியாதி கிடையாது, ஆனால் BP பிரச்சினை மட்டும் இருக்கிறது. அந்த காலத்தில் இருந்தே உணவுக்கு என்று பெரிய கட்டுப்பாடுகள் எல்லாம் நான் பின்பற்றியது கிடையாது. கிடைத்த உணவுகள் அனைத்தையும் நான் விரும்பி சாப்பிடுவேன். கடந்த 10 ஆண்டுகளாகத்தான் உணவு சாப்பிடும் அளவு குறைந்து, குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன்.

உங்களுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு ஏதேனும் உள்ளதா?

மறக்கமுடியாத நிகழ்வு என கூறமுடியாது... ஆனால் வலி நிறைந்த சம்பவங்கள் பல இருக்கின்றன. குறிப்பாக என் உறவினர்களின் மரணம். கடந்த ஆண்டு கூட எனக்கு நெருக்கமான 5 சொந்தங்கள் மறைந்து போய்விட்டார்கள். ஏன் சமீபத்தில் கூட என் மீது அன்புக்கட்டிய நபர் ஒருவர் இறந்துவிட்டார். அவருக்கு ஒரு நோயும் கிடையாது. மரணம் வந்துவிட்டது. நினைக்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது

Updated On 6 May 2024 6:17 PM GMT
ராணி

ராணி

Next Story