இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

துருக்கி, பல கலாச்சாரங்களையும், செழுமையான வரலாற்றையும், மயக்கும் இயற்கை காட்சிகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு அற்புதமான நாடு. அந்நாட்டின் மேற்குப் பகுதியில், டெனிஸ்லி மாகாணத்தில் அமைந்துள்ள பமுக்கலே என்ற பகுதி, இயற்கையின் ஒரு அற்புதம் என்றே கூறலாம். "பருத்தி கோட்டை" என்று பொருள்படும் "பமுக்கலே", அதன் வெள்ளை நிற சுண்ணக்கட்டி படிவுகளால் உருவான படிநிலைக் குளங்களுக்காக உலகப்புகழ் பெற்றது. விஷால்-நயன்தாரா நடித்த சத்யம் படத்தில் இடம்பெறும் என் அன்பே பாடலில் வரும் அழகிய காட்சிகள் பமுக்கலேவில் ஷூட் செய்யப்பட்டுள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இது, ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இப்படிப்பட்ட இப்பகுதியின் சிறப்பு, தனித்துவம், வரலாறு, சுற்றுலா ஈர்ப்புகள் மற்றும் வசதிகள் குறித்து விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.

பமுக்கலேவின் தனித்துவம்


பமுக்கலேவின் அழகிய வெந்நீர் ஊற்று

பமுக்கலேவின் தனித்துவம் அதன் வெந்நீர் ஊற்றுகளிலிருந்து பிறக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பூமியின் ஆழத்திலிருந்து பொங்கி வரும் கால்சியம் கார்பனேட் நிறைந்த வெந்நீர், சரிவுகளில் வழிந்து குளிர்ந்து திடப்பொருளாக மாறுகிறது. இவ்வாறு படிவுறும் கால்சியம், வெண்மையான, பளபளப்பான படிநிலைக் குளங்களாக உருவாகிறது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது, இக்குளங்கள் உறைந்த அருவிகளைப் போலவோ அல்லது பனியால் மூடப்பட்ட பகுதியைப் போலவோ காட்சியளிக்கின்றன.இக்குளங்களில் உள்ள வெந்நீர், கனிமங்களால் செறிவூட்டப்பட்டு மருத்துவ குணங்கள் கொண்டதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே, பண்டைய காலத்திலிருந்தே இங்கு நீராடும் வழக்கம் இருந்துள்ளது. சூரியன் மறையும் நேரத்தில் இக்குளங்கள் தங்க நிறத்தில் ஜொலிக்கும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். இது ஒரு இயற்கையான அதிசயம் என்பதை ஒவ்வொரு பார்வையாளரும் அப்போது உணர்வர்.

பமுக்கலேவின் வரலாறு


பண்டைய கிரேக்க-ரோமன் நகரமான சிதைவுற்ற ஹியராபோலிஸ்

பமுக்கலே, அதன் இயற்கையான எழில் கொஞ்சும் அழகுடன் சேர்த்து, செழுமையான வரலாற்றின் பின்னணியையும் கொண்டு சிறப்புற விளங்குகிறது. வெண்ணிறப் படிநிலைகளுக்கு மேலே, பண்டைய கிரேக்க-ரோமன் நகரமான ஹியராபோலிஸின் சிதைவுகள் அமைந்துள்ளன. கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் பெர்கமோன் மன்னர்களால் நிறுவப்பட்ட இந்த நகரம், நோய் தீர்க்கும் குணம் கொண்ட வெந்நீரூற்றுகளால் ஒரு முக்கிய சுகாதார மையமாக திகழ்ந்தது. இங்கு ஒரு பெரிய ரோமன் அரங்கம், நெக்ரோபோலிஸ் என சொல்லப்படுகிற கல்லறைத் தோட்டம், ரோமன் குளியல் அறைகள், கோயில் சிதைவுகள் மற்றும் பிற பொதுக் கட்டிடங்களின் இடிபாடுகளையும் காணலாம். குறிப்பாக, செயின்ட் பிலிபின் மார்டீரியம் மற்றும் அவரது கல்லறை இங்கு அமைந்திருப்பது, இந்த இடத்தின் மத முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. பூகம்பங்களால் பலமுறை அழிவுற்ற போதிலும், ஹியராபோலிஸ் இன்றும் தன் கம்பீரத்தை இழக்காமல் காட்சியளிக்கிறது. இது பமுக்கலேவின் இயற்கை அழகுக்கு ஒரு வரலாற்றுப் பரிமாணத்தை சேர்க்கிறது. இந்தச் சிதைவுகளை ஆராய்வது, பண்டைய நாகரிகத்தின் செழுமையையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் அறிந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது.

ரசிக்க வேண்டியவை

பமுக்கலேவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஆச்சரியப்படுத்தும் பல அற்புதமான இடங்கள் இங்கு உண்டு. முதலில், அதன் தனித்துவமான அடையாளமான கால்சியம் படிநிலைக் குளங்கள். வெண்மையான இந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள படிநிலைக் குளங்கள், பார்ப்பதற்குப் பனியால் மூடப்பட்ட மலைப்பகுதி போலக் காட்சியளிக்கும். இந்தக் குளங்களின் மென்மையான மேற்பரப்பில் வெறும் கால்களுடன் நடந்து செல்லலாம். கனிமங்கள் நிறைந்த வெந்நீர் கொண்ட சிறிய குட்டைகளில் உங்கள் கால்களை நனைத்து புத்துணர்ச்சி பெறலாம். எனினும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கருதி, சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே குளிப்பதற்கு அனுமதி உண்டு. இயற்கையின் இந்த அரிய படைப்பைக் கண்டு வியப்பதுடன், அதன் மூலிகைக் குளியலின் நன்மைகளையும் அனுபவிக்கலாம்.


ஹியராபோலிஸ் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ள கிளியோபாட்ராஸ் பூல்

இந்த இயற்கை அதிசயத்திற்கு மேலே, வரலாற்றுப் பெருமைமிக்க பண்டைய ஹியராபோலிஸ் நகரம் அமைந்துள்ளது. இங்கு நீங்கள் ரோமன் தியேட்டர், பண்டைய கல்லறைகள் கொண்ட நெக்ரோபோலிஸ், பிரம்மாண்டமான குளியல் வளாகங்கள் மற்றும் அப்பல்லோ கோவில் போன்ற ஏராளமான சிதைவுகளைக் காணலாம். குறிப்பாக, ரோமன் தியேட்டர் அதன் அற்புதமான கட்டிடக்கலைக்கும், சிறந்த ஒலி அமைப்புக்கும் பெயர் பெற்றது. ஹியராபோலிஸ் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ள கிளியோபாட்ராஸ் பூல் ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தரும். இப்படி பழங்காலத் தூண்களின் சிதைவுகளுக்கு நடுவே, வெந்நீர் நிறைந்த இந்தக் குளத்தில் குளிப்பது ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தரும். எகிப்திய ராணி கிளியோபாட்ரா இங்கு குளித்ததாக ஒரு நம்பிக்கை உள்ளது. மேலும், பமுக்கேல தொல்லியல் அருங்காட்சியகத்தில் ஹியராபோலிஸ் நகரத்திலிருந்து மீட்கப்பட்ட கலைப்பொருட்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன, இது இப்பகுதியின் செழுமையான வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி விரிவாக அறிய உதவுகிறது. சாகச விரும்பிகள், பமுக்கலே மற்றும் ஹியராபோலிஸின் கண்கவர் காட்சிகளை வானத்தில் இருந்து ரசிக்க பாரா கிளைடிங் வாய்ப்பையும் இங்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

வசதிகளும் பாதுகாப்பும்

பமுக்கலேவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் முதலாவதாக இங்கு பமுக்கலே மற்றும் ஹியராபோலிஸ் பகுதிக்கு ஒரே நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் வளாகத்திற்குள்ளும், அருகிலுள்ள டெனிஸ்லி நகரத்திலும் பல்வேறு உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் உள்ளன. அவை உள்ளூர் மற்றும் சர்வதேச உணவுகளை வழங்குகின்றன. தங்குமிடத்தைப் பொறுத்தவரை, டெனிஸ்லி நகரத்திலும், பமுக்கலே கிராமத்திற்கு அருகிலும் பல ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் பொது விடுதிகள் இருக்கின்றன. இது சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியான தங்குமிட வாய்ப்புகளை வழங்குகின்றன.


ஹியராபோலிஸ் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் உணவுகளும், இயற்கை அழகும்

மேலும் பமுக்கலே வருவதற்கு போக்குவரத்து வசதிகளும் சிறப்பாக உள்ளன. டெனிஸ்லியில் இருந்து பமுக்கலேவிற்கு டாக்ஸி அல்லது மினிபஸ் மூலம் எளிதாக போகலாம். துருக்கியின் மற்ற முக்கிய நகரங்களிலிருந்தும் டெனிஸ்லிக்கு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் உள்ளன. மேலும், டெனிஸ்லி கர்திக் விமான நிலையம் பமுக்கலேவிற்கு மிக அருகில் அமைந்துள்ளதால், விமானம் மூலம் வருபவர்களுக்கும் வசதியாக இருக்கும். பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, கால்சியம் படிநிலைகளில் நடக்கும் போது பாதுகாப்பிற்காக காலணிகள் அணியாமல் வெறும் கால்களால் நடக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியின் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாப்பதில் சுற்றுலாப் பயணிகளும் தங்கள் பங்கை பெரியளவில் வழங்கி வருகின்றனர்.

வரலாற்று பொக்கிஷம்


இயற்கையின் வரமான ஹியராபோலிஸின் வெண்மையான நிலப்பரப்பு

இப்படி அழகும் வரலாறும் ஒருங்கே அமையப்பெற்ற பமுக்கலே, வெறும் ஒரு சுற்றுலாத்தலமாக மட்டுமல்லாமல், இயற்கை மற்றும் வரலாற்றின் ஒரு அரிய சங்கமமாகவும் விளங்குகிறது. ஒருபுறம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கை செதுக்கிய அற்புதமான வெண்மையான நிலப்பரப்பு. மறுபுறம், ரோமானியப் பேரரசின் செழுமையையும், மனித நாகரிகத்தின் சாதனைகளையும் பறைசாற்றும் ஹியராபோலிஸ் நகரத்தின் சிதைவுகள். இவை இரண்டும் இணைந்து, பார்வையாளர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை இப்பகுதி வழங்குகிறது. குறிப்பாக இங்குள்ள ஒவ்வொரு கல்லும், ஒவ்வொரு நீர்த்துளியும் ஒரு கதையைச் சொல்கின்றன. அதேவேளை பமுக்கலேவின் நீர் அதன் மருத்துவ குணங்களுக்காக பாராட்டப்பட்டாலும், அதன் அழகும், அமைதியும் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஓர் உத்வேக மருந்தாகும்.. இத்தகைய இயற்கையின் வரம் மற்றும் வரலாற்றுப் பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டிய ஒரு அற்புத பகுதி இது என்பதில் சந்தேகமில்லை.

பமுக்கலே கூகுள் வரைபடம்


Updated On 8 July 2025 10:52 AM IST
ராணி

ராணி

Next Story