இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரது அன்றாட வாழ்விலும் முக்கிய பங்காற்றுவது சமூக ஊடகங்களும், வலைத்தளங்களும்தான். ஒரு நாள் முழுவதும் நான் சாப்பாடு இல்லாமல் கூட இருந்துவிடுவேன். ஆனால் என்னால் மொபைல் ஃபோன் பயன்படுத்தாமல் இருக்க முடியாது எனக் கூறுகின்றனர் தற்போதைய தலைமுறையினர். ஒரு நிகழ்வோ அல்லது செயலோ எதுவாயினும் ஒரு பொருள் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் நாம் அதனை எவ்வாறு கையாள்கிறோம் என்பதுதான் முக்கியம். அப்படி ஒன்றுதான் இந்த சமூக ஊடகங்களும். சமூக ஊடகங்களால் பல நல்லதும் நடக்கின்றன. சிலரது வாழ்க்கையும் புரட்டிப்போடப்படுகிறது. இவ்வாறு திடீரென இணையத்தில் வைரலாகும் சில வீடியோக்கள் பல பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் அமைந்துள்ளன. ஆனால் இணையத்தில் ட்ரெண்டான ஒரு ஹேஷ்டேக்கால் சீனாவில் விவாகரத்து வழக்குகளும், ப்ரேக்-அப்களும் அதிகரித்துள்ளன என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், reduncle என்ற ஒற்றை ஹேஷ்டேக் சீனாவை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்துள்ளது. அப்படி என்ன ஹேஷ்டேக் அது? சீனாவின் மைக்ரோ-பிளாக்கிங் தளமான வெய்போவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று reduncle ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனது எப்படி? என்பது குறித்து இங்கு காண்போம்.


சிஸ்டர் ஹாங் வேடத்தில் இருக்கும் ஜியாவோ

பாலியல் ரீதியாக உறவுக்கொள்ள தயார்!

சீனாவின் நான்ஜிங் நகரத்தில் தொடங்குகிறது ‘ரெமோ’ ஜியாவோ கதை. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் தலைநகரான நான்ஜிங் நகரில், சமூக வலைதளங்கள் மற்றும் டேட்டிங் செயலிகளில் சிஸ்டர் ஹாங் என தனது பெயரை குறிப்பிட்டிருந்த நபர் ஒருவர், தனக்கு திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தாலும், விருப்பமுள்ளவர்களுடன் பாலியல் ரீதியாக உறவுக்கொள்ள தயார் எனக் கூறியுள்ளார். அதற்கு தனக்கு பணம் தரவேண்டாம் எனவும், அதற்கு பதில் காய்கறிகள், பழங்கள் அல்லது என்ன கொடுக்க முடியுமோ அதை கொடுக்கலாம் எனவும் கூறியுள்ளார். இதனைப் பார்த்த கல்லூரி மாணவர்கள், தொழில் அதிபர்கள், திருமணமானவர்கள் என பலரும் சிஸ்டர் ஹாங்கிடம் பேசத் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து சிஸ்டர் ஹாங்கை சந்தித்து அவரது வீட்டில் தனிமையிலும் இருந்து வந்துள்ளனர். இதனை அவர்களுக்கே தெரியாமல் சிஸ்டர் ஹாங் ரகசிய கேமராவில் படம் பிடித்து வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இந்த தனிமையில் இருந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், அனைத்து வீடியோக்களிலும் இருந்த சிஸ்டர் ஹாங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுடன் சிஸ்டர் ஹாங் உடலுறவு கொண்டதாக தகவல்

விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்...

சிஸ்டர் ஹாங்கை கைது செய்த போலீசார் அவர் ஒரு ஆண் என்பதை கண்டறிந்தனர். 38 வயதான ஜியாவோ என்ற இயற்பெயர் கொண்ட இவர், பெண்ணை போல உடை உடுத்தி, பேங்க்ஸ் கட் செய்த விக் அணிந்து, மேக்-அப் எல்லாம் போட்டு பக்காவாக பெண் போல தன்னைக்காட்டி கொண்டு, சமூக வலைதளங்களில் ஆண்களுடன் பழகி வந்துள்ளார். ஜியாவோ ஒரு பெண் என நம்பி, கல்லூரி மாணவர்கள் தொழில் வல்லுநர்கள், வெளிநாட்டினர் என 1600க்கும் அதிகமானோர் இவரது வீட்டிற்கு சென்று இவருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவர்களுக்கு தெரியாமல் ரகசிய கேமரா மூலம் படம்பிடித்து வைத்துள்ளார் ஜியாவோ. இவ்வாறு கிட்டத்தட்ட 1600 பேரை இவர் சந்தித்து வீடியோ பதிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வீடியோக்களை ஆபாச வெப்சைட்டுகளுக்கு விற்று அதன்மூலம் பணம் சம்பாதித்து வந்துள்ளார். ஒரு வீடியோவிற்கு இந்திய மதிப்புப்படி, ரூ.1,814 பணமும் பெற்று வந்துள்ளார். அந்த வீடியோக்கள் இணையத்தில் லீக் செய்யப்பட்டதை தொடர்ந்து, அதனைப் பார்த்த பலரும் அதில் தங்கள் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து வைப்சைட்டில் இருந்த இந்த வீடியோக்களை வெய்போ (இந்தியாவில் எக்ஸ் போல சீனாவில் வெய்போ) சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதனைப் பார்த்த பெண்கள் பலரும் வீடியோவில் இருப்பது தங்கள் கணவர், காதலர் என்று அறிந்து விவாகரத்து கோரியும், பிரேக் அப்பும் செய்து வந்துள்ளனர். ஜியாவோ ஆண் என தெரியவந்ததை தொடர்ந்துதான் reduncle என்ற ஹேஷ்டேக்கை இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வந்துள்ளனர்.


ஜியாவோவை சந்தித்த ஆண்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

இணையத்தில் எழுந்த விவாதம்...

இந்நிலையில் சிஸ்டர் ஹாங், தன்னை பெண் என உருவகப்படுத்தி வீட்டிற்கு வரவழைத்திருந்தாலும், உடலுறவு கொள்ளும் போது அவர் ஒரு ஆண் என எப்படி தெரியாமல் இருந்திருக்கும் என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அவர் ஆண் என தெரிந்தபின்னும், பலரும் மீண்டும் வந்து சிஸ்டர் ஹாங்கை பார்த்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சீனாவில் ஆபாச படங்கள் பார்ப்பதும், அதை பகிர்வதும் குற்றம் என கூறப்படும் நிலையில், இந்த விவகாரத்தால் தனியுரிமை கடுமையாக மீறப்படுவதைக் காரணம் காட்டி, அந்த வீடியோக்களை பகிர்வதை நிறுத்துமாறு காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை ஜியாவோ விற்றதாகவும், அவருக்கு 60 வயது என தகவல்கள் பரவிய நிலையில், ஜியாவோவுக்கு 38 வயதுதான் என்றும், ஆயிரம் ஆண்களுடன் உடலுறவு கொள்ளவில்லை என்றும், மிகைப்படுத்துவதற்காக அந்த எண்ணிக்கையை பலரும் பரப்பி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஜியாவோவை சந்தித்த ஆண்களில் 237 பேரை மட்டும் இதுவரை நான்ஜிங் காவல்துறை அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விசாரணை நிலுவையில் உள்ளதால் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களையும் காவல்துறை இன்னும் வெளியிடவில்லை.

சுகாதார சீர்கேடு

இந்த சம்பவத்தை தொடர்ந்து நான்ஜிங் நகரத்தில் சுகாதார சீர்கேடு தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து நகர் முழுவதும் நான்ஜிங் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) இலவச சுகாதார பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. இதில் பலருக்கும் பாலியல் தொற்றுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜியாவோவால் பாதிக்கப்பட்டவர்கள் நான்ஜிங்கின் CDC மூலம் STD பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 3 HIV வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதனை சிஸ்டர் ஹாங் வழக்கோடு காவல்துறை தொடர்புபடுத்தவில்லை. தொடர்ந்து அந்த நகர் முழுவதும் இலவச சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.



ஒரு வீடியோவை ரூ.1,814-க்கு விற்ற ஜியாவோ

பெண்கள் ஆதரவு...

சிஸ்டர் ஹாங்கின் இந்த செய்தி சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வைரலாக பேசப்பட்டு வரும் நிலையில், ஜியாவோ தொடர்பான மீம்ஸ்கள் அதிகம் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மறுபக்கம் அவர் செய்தது தவறுதான் என்றாலும், ஆண்களின் இச்சையை வைத்துதான் அவர் பணம் சம்பாதித்ததாகவும், அவர் திருந்த வேண்டுமென்றால், தன்னை நம்பி இருக்கும் பெண்களுக்கு துரோகம் இழைக்காமல் ஆண்களும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் பெண்கள் ஜியாவோவிற்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

சிலர் தங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களை கலாய்ப்பதற்காக விளையாட்டாக ஃபேக் ஐடி ஓபன் செய்து, பெண் அல்லது ஆண் என பேசுவார்கள். ஆனால் சீனாவில் ஃபேக் ஐடியை வைத்தே இப்படி ஒரு பெரிய சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On 12 Aug 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story