இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இமயமலையின் மையப்பகுதியில், ஒவ்வொரு பருவமழைக்கும் உயிர் பெற்று, கண்கவர் பூக்களால் நிரம்பி வழியும் ஓர் அதிசயம் உள்ளது. அதுதான் மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா (Valley of Flowers National Park). யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாகவும், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த குருத்வாரா ஹேம்குந்த் சாஹிப்புடன் இணைந்த புனித யாத்திரையாகவும் திகழும் இது, இந்தியாவின் மழைக்காலத்தில் மேற்கொள்ளப்படும் மிக அழகான மற்றும் ஆன்மிகப் பயணங்களில் ஒன்றாகும். இந்த வியப்பூட்டும் பள்ளத்தாக்கு குறித்த சில அரிய தகவல்களை இங்கே காணலாம்.

இமயமலையின் பிரம்மாண்ட பின்னணியில்

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,658 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா, நந்தா தேவி தேசிய பூங்காவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பனிபடர்ந்த இமயமலை சிகரங்களின் பிரம்மாண்ட பின்னணியில், ஆயிரக்கணக்கான வண்ணமயமான மலர்கள் விரிந்து கிடக்கும் அழகு, ஓர் ஓவியரின் கைவண்ணத்தை போலக் கண்கவர் காட்சியைப் படைக்கிறது. இயற்கை அன்னை தன் கரங்களால் தீட்டிய சித்திரமோ என வியக்க வைக்கும் அளவுக்கு இந்தப் பள்ளத்தாக்கு, அதன் அரிய மற்றும் தனித்துவமான மலர் வகைகளால் உலகப் புகழ்பெற்றது. யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இது, தாவரவியல் ஆர்வலர்களுக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும், இயற்கை விரும்பிகளுக்கும் ஒரு சொர்க்க பூமியாகும்.


ஓவியங்களைப் போன்ற மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா

இந்தப் பள்ளத்தாக்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மட்டுமே பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும். குறிப்பாக, ஜூலை நடுப்பகுதி முதல் ஆகஸ்ட் இறுதி வரையான காலகட்டம், இதன் முழுமையான மலர்ச் செழிப்பைக் கண்டு ரசிக்க மிகச் சிறந்தது. இக்காலகட்டத்தில், ஹிமாலயன் ப்ளூ பாப்பி, கிரிம்சன் அனிமோன், மார்ஷ் மேரி கோல்ட், கோல்டன் லில்லி, டெல்பீனியம், அஸ்ட்ரா, பிரம்மக் கமலம் போன்ற 500-க்கும் மேற்பட்ட அரிய வகை மலர்கள் பூத்து குலுங்கி, பார்ப்பவர் கண்களுக்கு பெரும் விருந்தளிக்கின்றன. இவற்றில் பல வகை மலர்கள், உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படாதவை என்பது இந்த பள்ளத்தாக்கின் தனிச்சிறப்பு ஆகும். மலர்களின் இந்த அலாதி வனப்பு, ஒவ்வொரு பயணியையும் இயற்கையின் மடியில் தன்னை மறந்து லயிக்கச் செய்கிறது.

ஆச்சரியமான வரலாறு

இந்த மலர்ப் பள்ளத்தாக்கு வெறும் பூக்களின் சோலை மட்டுமல்ல; இது பல தொன்மக் கதைகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ராமாயண காலத்தில், லட்சுமணன் போரில் காயமடைந்த போது, அனுமன் சஞ்சீவி மூலிகையைத் தேடி இந்தப் பகுதிக்கு வந்ததாக நம்பப்படுகிறது. மேலும், இந்தப் பள்ளத்தாக்கில் தேவதைகள் வாழ்ந்ததாகவும், அவர்களின் நடன ஒலிகள் இங்கு ஒலிப்பதாகவும் உள்ளூர் மக்கள் இன்றும் நம்புகின்றனர்.


சஞ்சீவி மலையுடன் அனுமன் மற்றும் லேடி ஜோன் மார்கரெட் லெக்கின் நினைவிடம்

அதேவேளை வரலாற்றுப் பதிவுகளின்படி, 1931 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மலையேற்ற வீரர் ஃபிராங்க் எஸ். ஸ்மித் மற்றும் அவரது குழுவினர் மவுண்ட் காமெட் மலையேற்றத்தின் போது தற்செயலாக இந்தப் பள்ளத்தாக்கை கண்டறிந்தனர். அதன் அபூர்வ அழகில் மயங்கிய ஸ்மித், பின்னர் "வேலி ஆஃப் ஃப்ளவர்ஸ்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகம் உலக அளவில் இந்தப் பள்ளத்தாக்கை பிரபலப்படுத்தியது. அதேபோல் 1939 ஆம் ஆண்டில், புகழ்பெற்ற தாவரவியலாளர் லேடி ஜோன் மார்கரெட் லெக், மலர் ஆராய்ச்சிக்காக இங்கு வந்த போது துரதிர்ஷ்டவசமாக தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது நினைவாக, அவரது குடும்பத்தினர் இங்கு ஒரு சிறிய நினைவுக் கல்லறையை அமைத்தனர். மலர்களின் ரகசியங்களை ஆராயும் ஆர்வம் கொண்ட ஒரு பெண்மணியின் தியாகத்தை நினைவூட்டும் ஒரு அமைதியான அடையாளமாக இந்தக் கல்லறை இன்றும் விளங்குகிறது.

இங்கு எப்படி செல்வது?

இந்த மலர்ப் பள்ளத்தாக்கு இடத்திற்கு செல்ல நேரடி சாலை வசதி இல்லை. எனவே, மலையேற்றம் மூலமாகத்தான் இப்பகுதியை அடைய முடியும். பொதுவாக, ரிஷிகேஷ் அல்லது ஹரித்வாரில் இருந்து இந்தப் பயணம் தொடங்குகிறது. முதலில், ரிஷிகேஷ் அல்லது ஹரித்வாரிலிருந்து பேருந்து அல்லது வாடகை வாகனம் மூலம் கோவிந்த் காட் வரை செல்ல வேண்டும். இதுதான் மலையேற்றத்திற்கான ஆரம்பப் புள்ளி. கோவிந்த்காட்டிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு புல்னா கிராமம் வரை சாலை வசதி உள்ளது. புல்னாவில் இருந்து சுமார் 9 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டு கங்காரியா என்ற இடத்தை அடைய வேண்டும். கங்காரியாதான் மலர்ப் பள்ளத்தாக்கு மற்றும் குருத்வாரா ஹேம்குந்த் சாஹிப்புக்கான மைய முகாம். இங்கு தங்குமிட வசதிகள் மற்றும் உணவகங்கள் உள்ளன.


மலர் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியாக புல்னா கிராமம் நோக்கி நடைபயணம்

கங்காரியாவிலிருந்து மலர்ப் பள்ளத்தாக்கிற்கு செல்ல சுமார் 4 கி.மீ. தூரம் மலையேற்றம் செய்ய வேண்டும். இது ஒரு இனிமையான மலையேற்றப் பாதையாகும். இந்தப் பாதை முழுவதும் அழகிய நீரோடைகள், பல்வேறு வகையான மலர்கள் மற்றும் கண்கவர் இயற்கை காட்சிகள் நிறைந்திருக்கும். ஏற்கனவே கூறியது போல மலர்ப் பள்ளத்தாக்கு பொதுவாக ஜூன் முதல் அக்டோபர் வரை மட்டுமே திறந்திருக்கும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் பூக்கள் முழுமையாக பூக்கும் காலம் என்பதால், அப்போது செல்வது சிறந்தது. அப்போது மலையேற்றத்திற்கு தேவையான உடைகள், மழைக்கால உபகரணங்கள் மற்றும் முதலுதவி பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்வது அவசியம். மேலும், மலையேற்றத்திற்கு முன் உடல் ரீதியாக தயாராக இருப்பதும் முக்கியம். இந்த முழுப் பயணமும் சாகசமும் அழகும் நிறைந்த ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும்.

பார்க்க வேண்டிய இடங்கள்

மலர்ப் பள்ளத்தாக்கு சுமார் 8 கி.மீ. நீளமும் 2 கி.மீ. அகலமும் கொண்ட ஒரு அற்புதமான இடமாகும். இங்கு பூக்களின் அழகே பிரதானமான காட்சிகளாக இருந்தாலும், அவற்றை தாண்டிய சில அற்புதமான பகுதிகளும் உள்ளன. அவற்றில் தாவரவியலாளர் ஜோன் மார்கரெட் லெக்கின் அமைதியான நினைவிடம், லட்சுமணர் தியானம் செய்ததாக நம்பப்படும் லட்சுமணரின் தியான ஸ்தலம், பள்ளத்தாக்கு முழுவதும் பரவிக் கிடக்கும் சிறிய நீர்வீழ்ச்சிகள், தெளிந்த நீரோடைகள் மற்றும் ஹேம்குண்ட் சாஹிப் செல்லும் வழியில் அமைந்துள்ள குளிர்ந்த நீரைக் கொண்ட சரோவர் ஏரி ஆகியவை நிச்சயம் பார்க்க வேண்டிய பகுதிகள் ஆகும். இந்த இடங்கள் அனைத்தும் இயற்கை எழிலையும் ஆன்மிக அமைதியையும் ஒருங்கே அள்ளித் தருகின்றன.


சரோவர் ஏரி மற்றும் மலர் பள்ளத்தாக்கு

அதேவேளை இந்த பள்ளத்தாக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக இருப்பதால், சில கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். அவற்றில் முக்கியமானது, இங்கு ஒரு மலர் கூட பறிக்கக் கூடாது. மீறினால் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும். அதேபோல் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் இயற்கையை அதன் இயல்புடன் பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும். அதனையும் மனதில் வைத்தே நாம் இங்கு பயணம் செய்ய வேண்டும். இப்படி இயற்கையின் மெய் சிலிர்க்க வைக்கும் அழகையும் ஆன்மிக அமைதியையும் தரும் இந்த மலர்ப் பள்ளத்தாக்கு வாழ்நாளில் ஒருமுறையாவது காண வேண்டிய அற்புதமான இடமாகும். இயற்கையின் மடியில் தொலைந்து போகவும், ஆன்மிக அமைதியைத் தேடவும் விரும்பினால், இந்த இடத்திற்கு சென்று வாருங்கள்; இது உங்கள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக அமையும்.

பூக்களின் பள்ளத்தாக்கு - கூகுள் மேப்


Updated On 5 Aug 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story