எல்லோருடைய வாழ்க்கையிலுமே ஏதோ ஒரு கட்டத்தில் பணத்தேவை மற்றும் பண நெருக்கடியை சந்தித்திருப்போம். அதேசமயம் தேவையற்ற காரணங்களுக்காக கடன் வாங்கி அதனாலும் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகியிருப்போம். பணம், பொருளாதார முன்னேற்றம் போன்றவை ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தேவைதான் என்றாலும் அதற்கான திட்டமிடல் என்பது சரியாக இல்லாவிட்டால் ரிசல்ட் சரியாக இருக்காது. எனவே பணத் தேவைக்காக வங்கிகளை நாடுவோருக்கு அந்த நேரத்தில் வங்கிக்கடன் கிடைக்காவிட்டாலும் அதற்கு மாற்றாக திகழ்கின்ற நிதி நிறுவனங்கள் இதுபோன்ற தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்கின்றன. நிதி நிறுவனங்கள்மூலம் கடன் வாங்குவோர் எப்படி அதை டீல் செய்யவேண்டும் என்பதை விளக்குகிறார் எமரால்டு அசோஸியேட்ஸ் நிறுவனத்தின் அதிபர் கணேஷ் சேகர்.
Direct sales agency அல்லது Third party agency-யிடம் வரும்போது வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். இதற்கு கட்டணம் எவ்வாறு வசூலிக்கிறீர்கள்?
DSA என்பது தேவைகளை அறிந்து நிதி ஒதுக்கீடு செய்ய உதவும் நிறுவனமாகும். இதில் வட்டி விகிதத்தை வங்கிகள்தான் தீர்மானிக்கும். ஒருவருடைய ப்ரொஃபைலை வங்கி நிராகரிக்கும்போது அவர்களுக்கு ஃபைனான்ஸ் மூலம் தேவையான லோன் வழங்கப்படும். இதில் வட்டியானது வங்கியைவிட சற்று அதிகமாக இருக்கும். இதில் பிரச்சினை சரிசெய்து தரப்படுமே தவிர, வட்டிவிகிதம் என்பது வங்கிக்கு வங்கி மற்றும் தொகை பெறப்படும் தேவைக்கேற்ப மாறுபடத்தான் செய்யும். பர்சனல் லோன், ஹோம் லோன், பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற லோன் என ஒவ்வொரு லோனுக்கும் ஒவ்வொரு வட்டி இருக்கும். இதில் குழப்பமடையக்கூடாது என்பதற்காகத்தான் என்ன தேவைக்கு என்ன லோன் என்பது கேட்டறிந்து வழங்கப்படும்.
எத்தனை வகையான லோன்கள் இருக்கின்றன?
தனிநபர், வாகனம், கல்வி, வீடு, அடமான லோன் என நிறைய வகை லோன்கள் இருக்கின்றன. தேவைகளை அறிந்து பூர்த்திசெய்ய வங்கிகளும் தயாராக இருக்கின்றன. ஒரு ஃப்ளாட் வாங்கவேண்டுமென்று நினைத்தால் அதற்காக லோன் வாங்க அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் பெறமுடியும். குறிப்பாக, வருமானத்தை பொருத்துதான் லோன் பெறமுடியும்.
அனைத்து ஆவணங்களையும் சரியாக சமர்ப்பித்தால் எளிதில் கிடைக்கும் வீட்டு லோன்
லோன் வாங்கியபிறகு வங்கி ஆட்களையோ அல்லது லோன் கொடுத்தவர்களையோ பார்த்தால் பொதுமக்கள் ஓடி ஒளிகிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
இங்கு மட்டும் இல்லை. எல்லா இடங்களிலுமே தேவை முடிந்தவுடன், அதை செய்துகொடுத்தவர்களை எதிரியாகத்தான் பார்க்கின்றனர். ஏனென்றால் அந்த லோன் கைக்கு வருவதற்கான செயல்முறையில் சரியாக நடந்துகொள்ளாததால் அதற்கு லோன் கொடுப்பவர்கள் எதிர்வினையாற்றியதுதான் நினைவுக்கு வரும். நெருக்கடிக்கு உள்ளாகுபவர்கள் உடனடி தீர்வை எதிர்பார்ப்பார்களே தவிர, அதற்கான செயல்முறைக்கு நேரம் கொடுக்கமாட்டார்கள். இந்த மனநிலை மக்களுக்கு மாறவேண்டும். ஒரு உணவை சாப்பிடவேண்டும் என்றால்கூட அதனை வேகவைக்க நேரம் கொடுக்கவேண்டும். அதுபோல, லோன் கைக்கு வருவதற்குள், இருக்கும் செயலாக்க முறைகளுக்கு நேரம் கொடுக்கவேண்டும்.
நீங்கள் சந்தித்த மிகப்பெரிய சவால் என்று எதை சொல்வீர்கள்?
கொரோனா காலத்தில் பாதிக்கப்படாதவர்கள் யாருமே இல்லை. ஒரு குடிசை தொழிலாளியிலிருந்து பெரிய பிசினஸ்மேன் வரை எல்லோருமே பாதிக்கப்பட்டார்கள். கடனை திருப்பி செலுத்த 3 மாதம் கால அவகாசம் கொடுத்திருந்தாலுமே எல்லோராலுமே ஒரு கட்டத்தில் பணத்தை கட்ட முடியவில்லை. அதனால் நாங்களும் பாதிக்கப்பட்டோம். எங்களாலும் திரும்ப லோன் கொடுக்க முடியவில்லை. லோன் வாங்கியவர்களை நேரடியாக தொடர்புகொள்ளவும் முடியவில்லை. நிறைய சங்கடங்களை சந்திக்க வேண்டி இருந்தது.
பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற லோன்களை எப்படி வகைப்படுத்துகிறீர்கள்?
பாதுகாப்பான லோன் என்பது ஒரு லோன் வாங்குவதற்கு உண்டான மதிப்பிற்குரிய பொருளை அடமானமாக கொடுப்பது. உதாரணத்திற்கு கார் லோன் வாங்கினால் அந்த காருக்கான முழு அதிகாரத்தையும் லோன் வாங்குபவரிடமே பத்திரம் எழுதி கொடுப்பதாகும். அதேபோலத்தான் வீட்டு லோனும். மொத்த லோனையும் கட்டி முடித்தபிறகு வீட்டின் ஆவணங்களை உரிமையாளரிடம் கொடுத்துவிடுவோம். அதுவே பாதுகாப்பற்ற லோன் என்பது சம்பளத்தின் அடிப்படையில் கொடுக்கப்படுவது. ஒரு லட்சம் சம்பளம் வாங்கினால் தனிப்பட்ட முன்னேற்றங்களுக்காக லோன் எடுப்பதாகும். இதில் கிரெடிட் கார்டுகளும் அடங்கும். எந்த அடிப்படையும் இல்லாமல் சிபில் ஸ்கோர், வேலை செய்யும் நிறுவனம், சம்பளம், பிசினஸ் என ஒருவருடைய தகுதியை நிர்ணயம் செய்து கொடுப்பதாகும்.
வருமானத்திற்கு அதிகமாக கடன் வாங்கினால் ஏற்படும் சிக்கல்கள்
பாதுகாப்பாக லோன் வாங்கி, அதை முடிக்க என்ன செய்யவேண்டும்?
முறையான திட்டமிடல் அவசியம். உதாரணத்திற்கு லோன் எடுத்து வீடு வாங்கினால், அது கிட்டத்தட்ட 20 வருட கமிட்மெண்ட்டாக இருக்கும். அதாவது 20 வருடங்களுக்கு லோன் கட்டிக்கொண்டே இருக்கவேண்டும். அதற்கு முறையான வருவாய் இருக்கவேண்டும். மாதம் ஒன்றிலிருந்து ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்குபவர் 40 ஆயிரம் வரை லோன் கட்ட தகுதியானவர். அதே வருமானம் அடுத்த 5 வருடங்களுக்கு பிறகும் இருந்தால் தாராளமாக வாங்கலாம்.
கடன் வாங்கிவிட்டு சிக்கித்தவிப்பவர்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன?
நெருக்கடிக்குள்ளானவர்கள் அவசரத்தில் முடிவெடுப்பதைவிட அனுபவத்தில் எடுக்கலாம். ஒருவர் கடன் வாங்கும்போது எவ்வளவு வாங்குகிறார், எத்தனை வருடங்களுக்கு கட்டப்போகிறார் என குடும்பத்தாருக்கு தெரிந்துவாங்கினால் பிரச்சினைகளுக்கு உள்ளாவது குறைவு. ஆனால் அப்போதுள்ள பிரச்சினை தீர்ந்தால் போதும் என நினைத்து லோன் வாங்கினால் கட்டாயம் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். அவசரகாலத்திற்கு லோன் வாங்கிவிட்டாலும் அதை சமாளிக்க 2, 3 மாதங்களுக்குள் தீர்வை தேடவேண்டும். அதிலிருந்து தப்பிக்க பார்த்தால் கட்டாயம் துரத்தும்.
கஸ்டமர் கேட்கும் வங்கிகளில்தான் லோன் வாங்கி தருவீர்களா? அல்லது உங்களுடைய விதிமுறைகளுக்கு ஏற்புடையதாக இருக்கும் பிற வங்கிகளிலும் வாங்கி தருவீர்களா?
கஸ்டமர் தங்களுக்கு அக்கவுண்ட் இருக்கும் பேங்க்கில் லோன் எடுக்க கேட்பார்கள். அதை செய்யமுடியாத சூழ்நிலையில் நாங்கள் சிலவற்றை பரிந்துரைப்போம். அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் அதற்கேற்றப்படி லோன் பெறப்படும்.
வங்கிகளில் லோன் கிடைக்காதவர்களுக்கு உதவும் நிதி நிறுவனங்கள்
லோன் வாங்கித்தருவதாக பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக போலீசில் நிறைய புகார்கள் கொடுக்கப்படுகிறதே. அதை எப்படி பார்க்கிறீர்கள்?
ஒருசிலர் செய்கிற தவறால் எல்லாருமே பொதுவாக பாதிக்கப்படுகிறார்கள். பணம் என்றாலே மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். ஒருவருக்கு பணம் கொடுக்கும் முன்பு அவரால் திருப்பி செலுத்தமுடியுமா என்பதை முதலில் பார்க்கவேண்டும். ஆசைகளின் அடிப்படையில் போகாமல் தேவையின் அடிப்படையில் போகவேண்டும். ஆசையை தூண்டிவிட்டு பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் பணத்தை பற்றி மட்டும்தான் யோசிப்பார்கள். எனவே ஒருவரிடம் போகும்போது பணம் கேட்டால் அந்த நபரை தவிர்ப்பது நல்லது.
உங்களைப் போன்றே கடன் நிறுவனம் தொடங்க நினைப்பவர்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன?
பொறுமை அவசியம். பணம், பொருளாதாரம் என எதுவுமே இல்லையென்றாலும் சேவை தரமானதாக இருக்கவேண்டும். ஒருவர் தேவைக்காக ஒரு நிறுவனத்தை நம்பி வரும்போது அந்த தேவை மட்டும்தான் மனதில் இருக்குமே தவிர, அந்த நிறுவனத்தை பற்றி அவ்வளவாக யோசிக்கமாட்டார்கள். எனவே பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கோடு இதில் வந்தால் சரியாக இருக்காது. நிறைய நெருக்கடிகள், அவமானங்கள், மன அழுத்தங்கள் இதில் இருக்கின்றன.
என்ன மாதிரியான தொழில் செய்பவர்களுக்கும் லோன் வாங்கிக்கொடுப்பீர்களா?
தொழில் அடிப்படையில் செய்யப்படும். ஆனால் தங்கம், பத்திர பணமாற்றம் போன்ற பணத்தின் அடிப்படையில் செய்யப்படும் தொழில்களுக்கு கடன்வாங்க உதவ முடியாது. நிதி நிறுவனங்கள் நடத்துபவர்களே திரும்ப பணம் கேட்பார்கள். அவர்களை தவிர்த்து மற்ற எல்லாருக்குமே செய்யலாம். பணத்தின் அடிப்படையில் இயங்குகிற யாருக்கும் உதவமுடியாது. நகை சம்பந்தப்பட்ட கடன்களும் வழங்கப்படாது. ஏனென்றால் நகையை பாதுகாத்து வைக்கவேண்டும்.
சொந்த பிசினஸ் தொடங்க விரும்பும் இளைஞர்கள் திட்டமிட்டு லோன் வாங்க வழிமுறைகள்
ஏற்கனவே வங்கியில் கடன் வாங்கியிருக்கும் ஒருவர் நிதி நிறுவனத்தை அணுகி கூடுதல் கடன் கேட்டால் வாங்கிக்கொடுப்பீர்களா?
நிச்சயமாக செய்யலாம். 5 வருடத்திற்கு முன்பு ஒரு சொத்தை வைத்து கடன் வாங்கியிருப்பார். அதை வைத்து பிசினஸ் செய்து வருமானமும் தகுதியும் உயர்ந்து இருந்தால் அவர், டாப் அப் லோன் பெற தகுதியானவராக மாறிவிடுவார். அவர் முதலில் வாங்கிய லோனை எப்படி சரியாக கட்டியிருக்கிறார்? என்பது பார்க்கப்படும். அதுபோக அவரிடமுள்ள சொத்துகளும் பார்க்கப்படும்.
கொஞ்சம் சம்பளம் அதிகமாக வாங்கினாலே கிரெடிட் கார்டு வாங்குகின்றனர். கடன் வாங்கி தொழில் செய்கின்றனர். இதுபோன்று கடன் வாங்குவது ஆரோக்கியமானதா?
ஆரோக்கியமானதாகத்தான் பார்க்கவேண்டும். கல்லூரி முடித்த இளைஞன் ஒருவன் தனது தேவைக்காக பைக் வாங்குகிறான். அதை லோனில் வாங்கும்போது கட்டிமுடிக்கவே குறைந்தது 36 மாதங்கள் அந்த கடனுடன் டீல் செய்யவேண்டும். அதற்கு நடுவே ஃபோன் போன்ற மற்ற பொருட்களையும் வாங்கவேண்டி இருக்கும். திருமணத்திற்கு முன்பே இத்தனை லோன்களை சந்தித்த அந்த நபருக்கு லோன் என்று சொன்னாலே எதிரி போன்று இருக்கும். 27, 28 வயதில் பொருளாதாரத்தை உயர்த்தவேண்டும் என்ற எண்ணத்தை மறந்து, ஏற்கனவே இருக்கும் கமிட்மெண்ட்களை முடிப்பதற்காக ஓடவேண்டி இருக்கும். எனவே தேவையறிந்து செயல்பட்டால் 28 வயதில் பிசினஸ் செய்ய நினைத்தால்கூட வங்கி அந்த நபருக்கு உதவியாக இருக்கும்.
