புத்தூர் கட்டு போடலாமா? புத்தூர் கட்டு போட்டால் எலும்புகள் கூடிவிடுமா?
இப்போதைய தலைமுறையினர் பலரும் அழகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உடல்நலத்திற்கு கொடுப்பது இல்லை. அப்படியே உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டாலும், நம் உடல் கட்டமைப்புக்கு முக்கிய காரணமாக இருக்கும் எலும்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. இதனால் சிறுவயதிலேயே எலும்பு தேய்மானம் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் எலும்பு தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன? அவற்றை எவ்வாறு தடுக்கலாம்? என்பது குறித்தெல்லாம் பேசியுள்ளார், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் காளிதாஸ்.
தலை முதல் பாதம் வரை நம் உடலின் அடிப்படை வடிவம் எலும்புக்கூடுதான்
எலும்புகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி?
நம் உடலில் எப்போதும் இதயம், சிறுநீரகம், மூளை போன்ற உறுப்புகளுக்கு நிறைய முக்கியத்துவம் அளிப்போம். ஆனால் எலும்பை பற்றி அதிகம் யோசிக்கமாட்டோம். தலை முதல் பாதம் வரை நம் உடலின் அடிப்படை வடிவம் எலும்புக்கூடுதான். நம் உடல் கட்டமைப்புக்கு முக்கியமாக இருக்கும் இந்த எலும்புகளை பாதுகாப்பது மிக அவசியமான ஒன்று.
எலும்புகளை பாதுகாக்கும் வழிமுறைகள்
சரிவிகித உணவை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 8 மணிநேரம் இரவில் தூங்க வேண்டும். மூன்றாவது உடற்பயிற்சி. உடல் பருமன் அதிகரிக்க அதிகரிக்க, எலும்புகளின் தேய்மானம், மூட்டுவலி போன்றவை அதிகரிக்கும். அதனால் ஒரு மனிதன் சராசரியாக ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். முடிந்தால் மன அழுத்தம் இல்லாமல் வாழுங்கள். யோகா, தியானம் செய்து மன அமைதியை கொண்டு வரலாம். எலும்பை ஆரோக்கியத்தோடு வைத்துக்கொள்ள வேண்டுமென நினைத்தால், சிகரெட், ஆல்கஹால் உள்ளிட்ட போதைப்பழக்கங்கள் எதுவும் இருக்கக்கூடாது. அதுபோல ஸ்டீராய்டு போன்ற மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொள்ளக்கூடாது. அது எலும்பை பாதிக்கும்.
எலும்பிலும் வலி, வீக்கங்கள் உண்டாகும்!
எலும்பில் வலி, வீக்கம் இருக்குமா?
வலி
கண்டிப்பாக எலும்புகளில் வலி, வீக்கம் ஏற்படும். கழுத்தெலும்பு, முழங்கால், இடுப்பு, முட்டி என எந்த இடத்தில் தேய்மானம் ஏற்பட்டாலும் வலி ஏற்படும். அதுபோல அடிப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டாலும் வலி ஏற்படும். மேலும் வாதத்தால் சிறு, பெறு மூட்டுகள் பாதிக்கப்பட்டு வலி வரும். எலும்புகள் பலவீனமாக இருந்தாலும் வலிக்கும்.
வீக்கம்
இயற்கையிலேயே சில எலும்புகளில் எக்ஸ்ட்ராகோசிஸ் (அசாதாரணமான எலும்பு வளர்ச்சி) உருவாகும். அல்லது கீழே விழுந்தால் ரத்தக்கட்டு ஏற்பட்டு வீக்கம் வரும். அல்லது வாதம் சம்பந்தப்பட்ட நோய்களிலும் வீக்கம் வரலாம். வலி, வீக்கம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
ப்ளேட் அறுவை சிகிச்சை - உடைந்த அல்லது நகர்ந்த எலும்புகளை சீரமைக்க செய்யப்படும் சிகிச்சை
கையில் ப்ளேட் வைத்தால் முன்புபோல இயல்பாக செயல்பட முடியுமா?
கைக்கென்று ஒரு உடற்கட்டமைப்பு இருக்கும். அப்போது, எலும்பு உடையும்போது நொறுங்கும். நம் கைகளின் மணிக்கட்டில் இரண்டு எலும்புகள் இருக்கும். இந்த இரண்டு எலும்புகளை இணைக்க ரேடியோகார்பல் மூட்டு இருக்கும். அங்கு தசை நார்கள் இருக்கும். இதனால் எலும்பு உடையும்போது எலும்பு மட்டும் உடையாது. தசை மற்றும் எலும்பை ஒன்றிணைக்கும் இந்த தசைநாரும் கிழியும். இதனால் அருகில் இருக்கும் எலும்பும் பலவீனமாகும். அதன் நிலைத்தன்மை குறையும். இந்த அனைத்து எலும்பு பாகங்களையும் நேராக்கி, அதனை அதற்கான உடற்கட்டமைப்பில் வைத்து, மற்ற எலும்புகளுக்கும் பாதிப்பு வராமல் இருக்கத்தான் திருகுகள் (Screws) போட்டு ப்ளேட் அறுவை சிகிச்சை (plate surgery) செய்யப்படுகிறது. இந்த சிகிச்சையில் 95 சதவிகிதம் எந்த பிரச்சனையும் வராது. ஒரு சிலருக்கு தொற்று வரலாம். சிகிச்சைக்கு பிறகு மருத்துவர் 3 மாதங்களுக்கு நடக்கக்கூடாது என சொல்வார். ஆனால் தங்களுக்கு இருக்கும் வேலைகள் காரணமாக சிலர் இரண்டு மாதத்திலேயே நடப்பார்கள் அல்லது கையால் எதாவது வேலை செய்துவிடுவார்கள். அப்போது ப்ளேட் அல்லது திருகு வளைய ஆரம்பிக்கும். சில நேரங்களில் ப்ளேட்டுக்கு கீழ் இருக்கும் எலும்பு பலவீனமானால், ப்ளேட் கீழே இறங்கும். இதுபோன்ற பாதிப்புகள்தான் ஏற்பட வாய்ப்புள்ளது. மற்றபடி இதில் எந்த பாதிப்பும் வராது. எலும்புகள் சீராகி முன்புபோல இயல்பாக செயல்படத்தான் இந்த ப்ளேட் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
பச்சிலை மூலிகைகள் வைத்துக் கட்டினால் எலும்புகள் கூடுமா?
எந்த மருத்துவ முறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தனிமனிதனின் நம்பிக்கை சார்ந்த விஷயம். ஒருவருக்கு அலோபதி பிடித்தால் அதனைச் சார்ந்து செல்வார்கள்; நாட்டு வைத்தியம் பிடித்தால் அதனைச் சார்ந்து செல்வார்கள்; பச்சிலை மருந்தால் எலும்புகள் சேருமா, சேராதா என்பது எனக்கு தெரியாது. அதில் எனக்கு அனுபவமும் இல்லை.
கட்டுப்போடுவது, பச்சிலை மருந்து சாப்பிடுவது எல்லாம் அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை - மருத்துவர் காளிதாஸ்
எலும்புகளில் தேய்மானம் ஏற்பட காரணம் என்ன?
எலும்பு தேய்மானத்தை கீழ்வாதம் எனவும் கூறுவோம். இதனை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று இயற்கையாக ஏற்படக்கூடியது. வயது முதிர்வால் எலும்பு வலுவிழந்து தேய்மானம் ஏற்படலாம். மற்றும் வேலைபளு. கட்டட வேலை (கொத்தனார், சித்தாள்) செய்வோர் அதிகமான எடையை தூக்குவர். நான்கு, ஐந்து மாடிகளுக்கு அந்த எடையுடனேயே நடப்பர். இதனால் எலும்பு தேய்மானம் அதிகமாகும். ஒரு சிலருக்கு இயற்கையாகவே, அதாவது பிறக்கும்போதே எலும்புகள் வலைந்திருக்கும். அவர்களுக்கு தேய்மானம் அதிகரிக்கும். இரண்டாவது காரணம் எலும்பு முறிவு. எலும்புக்கான கட்டமைப்பு மாறும்போது தேய்மானம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் ஸ்டீராய்டு பயன்பாடு, சிகரெட், ஆல்கஹால், போதைப்பழக்கங்களாலும் எலும்பில் தேய்மானம் ஏற்படும். காசநோய் போன்ற நோய்கள் வந்துபோனாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளில் எலும்பு தேய்மானம் வரும்.
