நாம் பல வகையான பங்குச்சந்தைகளைப் பற்றியும், கமோடிட்டி சந்தையை பற்றியும், பல்வேறுவிதமான நிதி சேவைகளை பற்றியும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் Forex மார்க்கெட் என்ற ஒரு சந்தை இருக்கின்றது. ஃபாரெக்ஸ் மார்க்கெட் என்றால் என்ன? அது எப்படி இயங்குகின்றது? யார் யாரெல்லாம் இதில் முதலீடு செய்யலாம்? செய்ய முடியாது? இந்த ஃபாரெக்ஸ் மார்க்கெட்டில் எப்படிப்பட்ட வாய்ப்புகள் உள்ளன? இதன் எதிர்காலம் எப்படி? என்பது போன்ற பல்வேறு விதமான நமது கேள்விகளுக்கு, நிதி ஆலோசனை நிபுணரும், ஃபாரெக்ஸ் மார்க்கெட் நிபுணருமான பிரபாகரன் பதிலளித்திருக்கிறார்.
வணக்கம் சார். ஃபாரெக்ஸ் மார்க்கெட் என்றால் என்ன? ஃபாரின் எக்ஸ்சேஞ் என்றால் என்ன? நம்மில் நிறைய பேருக்கு இது குறித்த சந்தேகங்கள் இருக்கு.
இந்தியாவில் பயன்படுத்தப்படுவது இந்திய ரூபாய். இதனைத் தவிர்த்து மற்ற அண்டை நாடுகளின் பணம் நமக்கு ஃபாரின் எக்ஸ்சேஞ்தான். உதாரணத்திற்கு நமது அண்டை நாடுகளான சிங்கப்பூரிலும் கூட அவர்களது டாலர் என்றழைக்கப்படும் அவர்களது பணம் உள்ளது. நம்மைப் பொறுத்தவரையில் அவர்களது பணம் நமக்கு ஃபாரின் எக்ஸ்சேஞ்தான். இந்த ஃபாரின் எக்ஸ்சேஞ் என்பது உலகளாவிய பெரிய மார்க்கெட். இதனை O T C என்றழைக்கின்றனர். ஓவர் தி கவுண்ட்டர் என்றழைக்கப்படும் இந்த பண பரிவர்த்தனையில் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வியாபாரம் நடைபெறுகின்றது. இதனை சற்று கூர்ந்து நோக்கினால் தெரியும், இங்கு வெறும் 3 நாட்களில் நடக்கும் பண பரிவர்த்தனையானது ஒரே ஒரு நாளில் இந்த முழு உலகில் நடைபெறும் பண பரிவர்த்தனைக்கு சமமானது.
FOREX மார்க்கெட்டில் அமெரிக்க டாலர், யூரோ, யென் உள்ளிட்ட கரன்சிகள் அதிகம் வர்த்தகமாகும்
இது உலகின் மிக முக்கியமான நகரங்களான நீயூயார்க், லண்டன், ஜுரிச், டோக்கியோ, பிராங்க்பெர்ட் போன்ற நகரங்களின் வழியாக நடைபெறுகின்றது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் மட்டும் நடந்துவந்தது. தற்போது பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் கூட இந்த பரிவர்த்தனை செய்யப்படுகின்றது. இதில் அமெரிக்க டாலர், அதனைத்தொடர்ந்து யூரோ, ஜப்பானின் யென், பிரட்டனின் கிரேட் பிரிட்டன் பவுண்ட் போன்றவை அதிகமாக பரிவர்த்தனையாகும். இந்த பண பரிவர்த்தனையில் கார்ப்பரேட் நிறுவனங்கள், கமர்ஷியல் வங்கிகள், சென்ட்ரல் வங்கிகள் மற்றும் எக்ஸ்சேஞ் புரோக்கர்கள் என்றழைக்கப்படும் தரகர்கள் போன்றோர் ஈடுபடுவார்கள்.
ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் குறிப்பிட்ட நாட்டின் கரன்சி அதிகமாக இருந்து, அந்நிறுவனம் அதை கொடுத்துவிட்டு வேறு கரன்சி வாங்க விரும்பினால், இந்த சர்வதேச பண பரிமாற்ற சந்தையில் கொடுத்துவிட்டு, அவர்கள் விரும்பும் கரன்சியை வாங்கி கொள்ளலாம். அப்படி வாங்கும் அந்த கரன்சியானது அவர்களது வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளப்படும். இந்த பண பரிமாற்ற சந்தையின் நோக்கமே ஹெட்ஜிங் என்றழைக்கப்படுகின்ற ஒரு நிதி பாதுகாப்பு வழியை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்வதாகும். உதாரணத்திற்கு, இந்தியாவிலிருக்கும் ஒருவர் வெளிநாட்டிலிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு இயந்திரத்தை இறக்குமதி செய்கின்றார் என்றால், அன்றைய நாளில் இருக்கும் டாலரின் மதிப்பை வைத்தே அந்த இயந்திரத்தை வாங்குவார். வாங்கும்போது ஒரு டாலரின் மதிப்பு நமது இந்திய ரூபாய் மதிப்பில் 85 என்று வைத்துக்கெள்வோம். அதற்கேற்ப ரூ. 5 லட்சம் மதிப்புக்கு அவர் டாலரை வழங்குவார். அதேநேரம், இயந்திரம் அவரது கைக்குவர 3 மாதங்கள் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது டாலரின் மதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பில் ஒருவேளை 88-ஆக ஏறி விட்டால், முன்னர் அவர் கொடுத்த ஒவ்வொரு டாலருக்கும் 3 ரூபாய் அதிகம் கொடுக்க வேண்டிவரும். இதனால் அவர் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இதனை தவிர்க்கவே ஹெட்ஜிங் முறை கையாளப்பட்டு வருகின்றது. அதாவது, இயந்திரத்தை பர்ச்சேஸ் செய்யும் தேதியிலிருந்து, அந்த பரிவர்த்தனை 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும். அப்போது நஷ்டம் தவிர்க்கப்படும்.
FOREX பரிவர்த்தனையை எலக்ட்ரானிக் டிரேடிங் தளத்தின் மூலமே செய்ய முடியும்
நீங்கள் கூறும் இந்த வழிமுறையை எலக்ட்ரானிக் டிரேடிங் தளத்தின் மூலம் செய்யலாமா? அல்லது கரன்சி பண பரிவர்த்தனையில் செய்ய இயலுமா?
எலக்ட்ரானிக் டிரேடிங் தளத்தின் வாயிலாக மட்டுமே செய்ய முடியும். நாம் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது உதாரணத்திற்கு துபாய் அல்லது சிங்கப்பூருக்கு செல்லும்போது நம்முடைய இந்திய பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல முடியாது. அப்போது நாம் செல்லும் நாட்டின் கரன்சியை மட்டுமே எடுத்துக்கொண்டு செல்லவேண்டியிருக்கும். ஏனென்றால் நமது இந்திய ரூபாயை அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். காரணம் நமது இந்தியாவின் சட்டப்படி நமது இந்திய பணத்தை இந்தியாவிற்கு வெளியே நாம் வர்த்தகம் (டிரேடிங்) செய்யமுடியாது. நமது பணத்தை வைத்து நாம் வெளிநாடுகளில் வியாபாரம் செய்தல் கூடாது. இதற்கு மிக முக்கிய காரணம், நமது அண்டை எதிரி நாடுகளான பாகிஸ்தான், சீனா போன்றவை, நமது பணத்தை கள்ள நோட்டுகளாக மாற்றி புழக்கத்தில் விட்டு அதன் மூலம் இந்திய பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால்தான் நமது இந்திய பணத்தை வெளிநாடுகளில் வர்த்தகம் செய்வதில்லை. ஒருவேளை நீங்கள் நமது இந்திய பணத்தை யாருக்கும் தெரியாமல் கொண்டு செல்ல முயன்றால், சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையின் போது பிடிபட நேரிடலாம். அதேநேரம், அமெரிக்க டாலர், கிரேட் பிரிட்டன் பவுண்ட், யூரோ ஆகிய மூன்று கரன்சிகளை உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் பயன்படுத்த முடியும்.
ஒரு நபர் வெளிநாட்டிற்கு செல்லும் போது நமது இந்திய பணத்தை எவ்வளவு கொண்டு செல்லமுடியும்? வெளிநாட்டிலிருந்து திரும்பும் ஒருவர் எவ்வளவு வெளிநாட்டு பணத்தை கொண்டு வர முடியும்?
இந்திய ரிசர்வ் வங்கி இதற்காக சில வழிமுறைகளை வகுத்து வைத்துள்ளது. வெளிநாடு செல்லும் ஒருவர் நமது இந்திய பணத்தில் 10 ஆயிரம் கொண்டு செல்லலாம் என்று முன்பு கூறப்பட்டிருந்தது. தற்போது அது 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டிற்கு செல்லும் நபர் ரூ.25,000 மட்டுமே இந்திய பணம் கொண்டுசெல்ல முடியும்
எவ்வளவு வெளிநாட்டு கரன்சியை இந்தியாவிற்கு கொண்டு வரமுடியும்?
இந்த கேள்விக்கு முன்பாக ஒன்றை நான் தெரிவித்து கொள்கின்றேன். முன்பெல்லாம் "ட்ராவெல்லர்ஸ் செக் " என்று சொல்லப்படும் ஒன்றை வெளிநாடு செல்வோர் வைத்திருப்பார்கள். தற்போது இந்த முறை ரத்து செய்யப்பட்டு "ஃபாரெக்ஸ் கார்டு " என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் செல்லும் நாட்டின் கரன்சியை இந்த ஃபாரெக்ஸ் கார்டில் லோட் செய்து கொடுத்துவிடுவார்கள். இதனை நாம் எங்கும் எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். சிங்கப்பூருக்குச் சென்றால் சிங்கப்பூர் டாலராகவும், ஜெர்மனிக்கு சென்றால் யூரோவாகவும் லோட் செய்து கொள்ளமுடியும். இப்படி ஒரே கார்டு முறையில், எல்லா வெளிநாட்டு கரன்சிகளையும் லோட் செய்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் 16 நாடுகளின் கரன்சியை லோட் செய்து கொள்ள முடியும்.
தற்போது கேள்விக்கு வருவோம். வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் இந்தியாவிற்கு கொண்டு வரலாம். ஆனால் 5 ஆயிரம் டாலர்களுக்கு மேல் கொண்டு வரும் நபர், கரன்சி டிக்ளரேஷன் என்ற விண்ணப்ப படிவத்தின் மூலம் அதனை கொண்டுவர வேண்டும்.
அந்நிய செலாவணி பரிவர்த்தனை சட்டத்தை மீறுவோர் மீது FEMA-வின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்
இந்திய பணத்தை அச்சடித்து பாகிஸ்தானும், சீனாவும் கள்ள நோட்டுகளாக புழக்கத்தில் விடுவதாக சொல்லப்படும் நிலையில், ஃபாரின் எக்ஸ்சேஞ் மூலம் பணத்தை வாங்கும்போது அதனை நல்ல பணமா? கள்ள பணமா? என எப்படி கண்டறிவது?
இது அனுபவத்தில் வருவது. அதாவது வங்கிகளில் உள்ள கேஷியர்கள் பணத்தை கையால் எண்ணும்போதே கள்ள நோட்டை கண்டுப்பிடித்து விடுவார்கள். இதனை தவிர்த்து கள்ள நோட்டுக்களை கண்டறிய பல்வேறு பணம் எண்ணும் மெஷின்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த மெஷின்களில் பணத்தை எண்ணும்போதே அந்த பணம் கள்ள நோட்டாக இருந்தால், அந்த மெஷினே குறிப்பிட்ட பணத்தை தனியாக பிரித்து வெளியே எறிந்து காண்பித்துவிடும்.
ஃபாரெக்ஸ் மார்க்கெட்டில் FERA AND FEMA என்ற வார்த்தைகள் உபயோகிக்கப்படுகின்றன அல்லவா... அப்படியென்றால் என்ன?
FERA என்பது ஆங்கிலத்தில் ஃபாரின் எக்ஸ்சேன்ஜ் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் ஆக்ட் என்றழைக்கக் கூடிய, முன்பெல்லாம் பயன்படுத்தப்பட்ட ஒரு கடுமையான சட்டமாகும். இந்த சட்டத்தை மீறுவோர் முன்பெல்லாம் கைது செய்யப்பட்டு வந்தனர். தற்போது அந்த சட்டம் நடைமுறையில் இல்லை. தற்போது FEMA என்ற ஃபாரின் எக்ஸ்சேன்ஜ் மேனேஜ்மென்ட் ஆக்ட் நடைமுறையில் உள்ளது. இந்த சட்டம் சற்று எளிமையாக இருப்பதால், யாரும் கைது செய்யப்படமாட்டார்கள். இந்த சட்டத்தின் படி அந்நிய செலாவணி பரிவர்த்தனையை செய்யவில்லை என்றால் அபராதம் விதிப்பார்கள். இதன் தொடர்ச்சியை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்...