இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மார்ச் 8 - சர்வதேச உழைக்கும் மகளிர் தினம். ஆண்டுதோறும் இந்த தினம், பூமி பந்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அன்பின் ஸ்வரூபம் பெண், சக்தியின் மூலம் பெண், குடும்பத்தின் ஆணிவேர் பெண், உலகை தன் அறிவால், ஆற்றலால், அழகால் வலம் வருபவள் பெண் என ஏகப்பட்ட போற்றுதல்கள் மகளிர் தினத்தை ஒட்டி எங்கும் வலம்வரும். அப்படி கொண்டாடப்பட காரணம் என்ன? மகளிர் தினத்துக்கு பின்னால் உள்ள போராட்ட வரலாறு என்ன? மகளிரின் சக்தி என்ன? என்பது குறித்தெல்லாம் இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

ஏன் மகளிர் தினம்?

மகளிர் தினத்தின் நோக்கம் குறித்து ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், உழைக்கும் பெண்களின் உரிமைகளை உறுதிசெய்வதும், அனைத்துப் பணிகளிலும் அனைத்து நிலைகளிலும் பாலினச் சமத்துவத்தை உறுதி செய்வதும்தான்.

மகளிர் தினத்தின் வரலாறு?

வீட்டு வேலைகளுக்கு மட்டுமே பெண்கள் சரிவருவார்கள் என்ற எண்ணம் 18ம் நூற்றாண்டு காலகட்டத்தில் மேலோங்கியது. இந்த நிலை மெல்ல மாற்றமடைந்து, 1850-களில் பல்வேறு பணிகளில் பெண்கள் கால்தடம் பதித்தனர். ஆண்களுக்கு நிகராக பெண்கள் கால்தடம் பதித்தாலும், வேலைக்கான சம்பளத்தில் தொடர்ந்து பாகுபாடு காட்டப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்றியபோதிலும் உரிமையிலும், ஊதியத்திலும் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டது. இதனால் வெகுண்டெழுந்த பெண்கள் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 1910-ல் மாபெரும் உரிமை மாநாட்டை நடத்தினர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்களும் அதில் கலந்து கொண்டு, தங்கள் உரிமைகளுக்காக கைகோர்த்து ஒற்றுமையாக நின்றனர். சர்வதேச சோஷியலிஸ்ட் பெண்கள் மாநாடாக அறியப்பட்ட இதில், பெண்களின் உரிமைகள் குறித்து பேச உலகம் முழுவதும் குறிப்பிட்ட ஒரு நாளை பெண்கள் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று மகளிர் தின கொண்டாட்டத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரா ஜெட்கின், அந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். பெண்கள் பிரச்சினை அனைத்துடனும், வாக்குரிமைக் கோரிக்கையையும் இணைத்து விவாதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த மாநாட்டில் கொண்டாட்டத்திற்கான தேதி இறுதி செய்யப்படவில்லை.


உலக மகளிர் தின கொண்டாட்டத்திற்கு முன்னோட்டமாக அமைந்த பெண் தொழிலாளர்களின் புரட்சி

அப்போதுதான் உலகை திரும்பி பார்க்க வைத்தது, 1917-ல் சோவியத் ரஷ்யாவில் பெண் தொழிலாளர்கள் முன்னெடுத்த புரட்சி. இந்த புரட்சியின் தாக்கத்தால் அப்போதைய ரஷ்ய மன்னர் ஜாரின் ஆட்சியே கவிழ்ந்தது என்பது வரலாறு. பின்னர் 1920-ம் ஆண்டில், ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் பெண்களின் பிரம்மாண்ட போராட்டம் நடந்தது. இதனைத்தொடர்ந்து, ரஷ்ய பெண் தொழிலாளர்களின் புரட்சியை நினைவுகூறும் விதமாக, புரட்சி நடந்த ஃபிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை உலக பெண்கள் தினமாகக் கொண்டாட கோரிக்கை எழுந்தது. மேலும் கிரிகோரியன் காலண்டரின்படி அவர்கள் கோரிக்கை வைத்த கடைசி ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 8-ம் தேதியாக இருந்தது. இதையடுத்து உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கடைபிடிக்கப்பட வேண்டும் என்று பிரகடனம் செய்யப்பட்டது. எனினும் 1975-ம் ஆண்டுதான் மார்ச் 8-ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது.

மகளிர் தின கொண்டாட்டத்தின் நோக்கம் நிறைவேறியதா?

பெண்களின் கோரிக்கைகள் வெளிச்சத்திற்கு வரவே, மேலே சொல்லப்பட்ட ஒரு நூற்றாண்டு கால போராட்டம் தேவைப்பட்டுள்ளது. அதன் விளைவே இன்றைய பெண்களாகிய நாம், சமூகத்தில் ஓரளவுக்காவது அங்கீகரிக்கப்பட்டுள்ளோம். ஆனால் மேலோட்டமாக பேசும் ஆண்கள் சிலர், இன்றைய காலத்தில் பெண்கள்தான் எல்லா துறையிலும் வந்துவிட்டீர்களே, எங்களின் உரிமைகளை பறித்துக்கொண்டீர்களே என்று சொல்வார்கள். பெண்களால் ஆண்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன என்றும் பேசுவார்கள். மேலும், வருடத்தின் எல்லா நாளும் பெண்கள் நாளாகத்தான் இருக்கிறது. இனி ஆண்களுக்குத்தான், தங்களின் உரிமைகளை காப்பாற்றிக்கொள்ள ஆண்கள் தினம் வேண்டும் என்றுகூட பிதற்றுவார்கள். இதனைக் கேட்கும் பெரும்பான்மையான பெண்கள், ஆண்கள் சொல்வது உண்மைதானோ என சற்று பெருமிதம் அடையவும் வாய்ப்புள்ளது. ஆனால் உண்மையை ஆராய்ந்தால், இப்படி பேசிப்பேசிய, சமூகத்தில் பெண்கள் எவ்வித ஏற்றத்தாழ்வும் இன்றி நடத்தப்படுவதாக ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது தெரியவரலாம். ஆனால் மகளிர் தினம் கொண்டாடப்படுவதே தெரியாமல் இன்றும் ஏராளமான பெண்கள் இந்த சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் அடிமையாகத்தான் இருக்கிறோம் என்பது கூட தெரியாமல், இதுதான் வாழ்க்கை முறை என்றும் பெண்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆண்களுக்கு நிகராக சமூகத்தின் அனைத்து நிலை பெண்களும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதே நிதர்சனம். மகளிர் தின கொண்டாட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேற இன்னும் ஏராளமான தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

பெண்களுக்கு சம பதவி, சம ஊதியம் கிடைக்கிறதா?


ஆணாதிக்கம் மற்றும் பெண்களின் போராட்டம் குறித்த படம்

வெகு சில துறைகளில் மட்டுமே ஆண்களுக்கு நிகரான பதவிகளும், ஊதியமும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் பெரும்பான்மையான துறைகளில் பெண்கள் தங்களை நிரூபித்தாலும், ஆண்களுக்கு நிகரான அங்கீகாரமும், பதவியும், ஊதியமும் இன்னும் கிடைத்தப்பாடில்லை. ராணுவத்தின் உயர் பதவிகளுக்கும், சம ஊதியத்திற்கும், நாடாளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீட்டிற்கும் பெண்கள் இன்னும் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஏன் அனைவருக்கும் மிக பரிட்சயமான சினிமா துறையை எடுத்துக்கொண்டாலும், அங்கும் பெண்கள் இரண்டாம் நிலையிலேயே உள்ளனர். கண்ணின் மணியே.. கண்ணின் மணியே.. போராட்டமா... என்றும், இன்பத்தை கருவாக்கினாள் பெண்! உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்! விண்ணவர்க்கும் மன்னவர்க்கும் விலையற்ற செல்வம் பெண் என்றும், சிங்கப்பெண்ணே! சிங்கப்பெண்ணே! என்றும், பாடல்கள் பாடி பெண்களை கொண்டாடும் சினிமாவில், என்னதான் லேடி சூப்பர் ஸ்டார்களாக இருந்தாலும், ஆண் சூப்பர் ஸ்டார்களுக்கு நிகரான சம்பளம் பெண்களுக்கு இல்லை.

பெண்கள் உணர்ந்து கொண்டார்களா?

சமூகத்தில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம்? பெண் சுதந்திரம் என்றால் என்ன? என்பது குறித்தெல்லாம் பெண்கள் முதலில் உணர்ந்துகொண்டார்களா? என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்கள் கால்பதித்து விட்டாலும், நவ நாகரிகம் என்ற பெயரில் தங்களையும் அறியாமல் ஒரு விதத்தில் அடிமை தனத்திற்குள் கட்டுண்டே இருக்கிறார்கள். பெண்கள் வெள்ளையாக இருந்தால்தான் அழகு, ஒல்லியாக இருந்தால்தான் அழகு, கூந்தல் காற்றில் அலைபாய இருந்தால்தான் அழகு, உடலின் அங்கங்கள் குறிப்பிட்ட சைஸ்களில் இருந்தால்தான் அழகு என பன்னாட்டு அழகு பொருள் நிறுவனங்களின் வியாபார உத்திகளை அப்படியே நம்பி, தோற்றத்திற்கு அதிக முக்கியத்தும் கொடுக்கும் நிலைக்கு இன்றைய கால யுவதிகள் தள்ளப்பட்டுள்ளனர். தான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் குறைந்து, பிறரின் பார்வைக்கு நாம் இப்படித்தான் தெரியவேண்டும் என்ற எண்ணம் நவநாகரிக மங்கைகளிடம் மேலோங்கி இருப்பதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். தோற்ற மாயை என்ற கூண்டில் சிக்கிக்கொள்ளாமல், பெண்கள் சிறகடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.


சமூகம் மற்றும் பணியிடத்தில் பெண்கள் சமமாக நடத்தப்படுகிறார்களா? சம ஊதியம் வழங்கப்படுகிறதா? என்பதற்கான படம்

ஆரம்ப காலங்களில் கல்லூரியில் அனைவரும் மாணவர்களாக இருந்த நேரத்தில், தனி ஒரு மாணவியாக தமிழகத்தின் மருத்துவ கல்லூரியில் அடியெடுத்து வைத்த முத்துலெட்சுமி ரெட்டி, தேவதாசி ஒழிப்பு முறை, மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு பிரச்சாரம் என்று பெண்களின் வளர்ச்சிக்காக வாழ்க்கை முழுதும் போராடிய மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், தமிழ் பத்திரிகை துறையின் ஆசிரியர் குழுவை அலங்கரித்த முதல் பெண்மணியான கோதை நாயகி அம்மாள் போன்ற ஏராளமான சாதனை பெண்கள், எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி எளிமையான தோற்றத்துடன், தெளிவான சிந்தனையுடன், திடமான மனநிலையுடன், ஆராய்ந்து அறியும் அறிவுடனேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து இடம்பிடித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹெச்.சி.எல் டெக்னாலஜி தலைமைப் பொறுப்பில் இருக்கும் ரோஷினி நாடார், இந்திய ஸ்டீல் ஆணையத்தின் தலைவராக உள்ள சோமா மண்டல், வணிகத்துறையைச் சேர்ந்த கிரண் மஜும்தார் ஷா போன்ற மகளிரும், சமூகம் திணிக்கும் வெளி அழுத்தத்தை உடைத்து, தங்களின் அறிவிற்கு சரியென பட்டதை செய்தே உலகை வியக்கவைத்துள்ளனர். எனவே, துன்பம் தீர்வது பெண்மையினாலடா! பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா! எனப்பாடிய மகாகவி பாரதியின் நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால், செம்மை மாதர் திறம்புவதில்லையாம்; என்ற வரிகளை பெண்கள் எப்போதும் நெஞ்சில் நிறுத்துவோம்.

மகளிர் தினத்தை கொண்டாடிவிட்டால் மட்டும் போதுமா?


வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களின் அவலநிலை

பெண்களின் உரிமைகளை நிலைநாட்ட கடைபிடிக்கப்படும் மகளிர் தினத்தில், உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டினாலும், சமூகத்தின் அனைத்து பிரிவு மகளிரின் கோரிக்கைகளும் ஒரே விதத்தில் அணுகப்படுவதில்லை என்பதே கசப்பான உண்மை. உதாரணத்திற்கு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டி நடைபெறும் போராட்டங்களில்கூட வேறுபாடு பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் எந்த பிரிவை சேர்ந்தவர் என்பதே முதலில் ஆராயப்படுகிறது. அதைவைத்தே, போராட்டத்தில் இறங்கும் மக்கள் கூட்டம் தீர்மானிக்கப்படுகிறது. இந்த நிலை எவ்வளவு வெட்கக்கேடானது. பாதிக்கப்பட்ட பெண் உயர் பிரிவா, தாழ்ந்தவரா என்பதையெல்லாம் பார்க்காமல் எப்போது நாம் போராட்டக்களத்தில் குதிக்கிறோமா அப்போது பெருமைப்பட்டுக்கொள்வோம் நாம் மகளிர் தினத்தை கொண்டாடுவதை.

ஆண்களுக்கு கோரிக்கை

பெண்ணியம் பேசும் பெண்களையும், புரட்சிகர பெண்களையும் சமூகத்தில் கண்டால் பாராட்டி கொண்டாடும் ஆண்களில் சிலர், அப்படிப்பட்ட பெண்கள் தங்கள் வீடுகளில் இருப்பதை விரும்புவது இல்லை. உனக்கெதுக்கு இதெல்லாம் என்று ஒரே வாக்கியத்தில் முடித்துவிடுவார்கள். மேடைகளில் பெண் எழுச்சி குறித்து பேசும் ஆண்கள் சிலரும் கூட, தன்னை சார்ந்த பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை வைத்திருக்கிறார்கள். வெளியில் ஒரு முகம், வீட்டு பெண்களிடம் ஒரு முகம் என்று. மகளிர் தினத்திற்கு, பொதுவெளியில் உள்ள பெண்களுக்கு வாழ்த்து கூறும் ஆண்களே... நீங்கள் சொல்லும் கருத்துகள், வாழ்த்துகள் அனைத்தையும் உங்கள் வீட்டிலிருக்கும் பெண்களிடம் இருந்து ஆரம்பித்துவிட்டாலே, சமூகத்தில் ஆண், பெண் பாகுபாடு நிச்சயம் களையப்பட்டுவிடும் என்பது உறுதி. அனைத்திற்கும் மேல், இன்றைய உலகில் மகளிர் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு, தந்தையாக, கணவனாக, காதலனாக, சகோதரனாக, நண்பனாக, மகனாக உறுதுணையாக நிற்கும் ஹீரோக்கள் அனைவருக்கும் பெண்களின் ராயல் சல்யூட்.

Updated On 11 March 2024 6:15 PM GMT
ராணி

ராணி

Next Story