இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்திய காவல்துறையினரால் பல நாட்கள் தேடப்பட்டுவந்த கடத்தல்காரன், உள்நாட்டு பயங்கரவாதி மற்றும் கொள்ளைக்காரனான வீரப்பனை நேரில் சந்தித்து உரையாடி, தகவல்களை ‘நக்கீரன்’ என்னும் பத்திரிகையில் வெளியிட்டவர் மூத்த பத்திரிகையாளரான நக்கீரன் கோபால். 2004இல் சந்தன கடத்தல் வீரப்பன் மறைந்திருந்தாலும், அவரே பேசிய வீடியோ ‘கூஸ் முனுசாமி வீரப்பன்’ என்னும் பெயரில் 2023இல் வெப் தொடர் ஆக்கப்பட்டுள்ளது. இந்த இடைவெளிக்கான காரணம் என்ன? வீரப்பன் பேசிய வீடியோக்கள் வெப் தொடரில் அமைந்தது எப்படி? என்பது குறித்து பேசியுள்ளார் நக்கீரன் கோபால்.

1993 இல் நக்கீரன் பத்திரிகை வீரப்பன் குறித்த தகவல்களை வெளிப்படையாக வெளியீடு செய்தது. அந்த ஆண்டு 22 நபர்களை கண்ணிவெடி வைத்து கொலை செய்தான் வீரப்பன். அதில் 9 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். இதையடுத்து சந்தன கடத்தல் வீரப்பன் தலைக்கு விலை வைக்கப்பட்டது. வீரப்பனை கண்டுபிடிப்பவர்களுக்கு 40 லட்சமும், அவரது சகோதரர் அர்ஜுனன் மற்றும் வீரப்பனின் தளபதியாக விளங்கிய கோவிந்தனை கண்டறிந்தால் 20 லட்சமும் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்தது. இதனிடையே, இவ்வளவு தைரியமாக தன்னை பத்திரிகையில் காட்சிப்படுத்திய நக்கீரனை, வீரப்பனே நேரில் சந்தித்து நேர்காணல் கொடுத்தார். இதுகுறித்து நக்கீரன் கோபால் சொல்லிய தகவல்களை கீழே காண்போம்.


நக்கீரன் கோபால் - ‘கூஸ் முனுசாமி வீரப்பன்’ வெப் தொடர் போஸ்டர்

அப்போது ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக காவல்துறையின் உயர் அதிகாரியாக இருந்த தேவாரம் உள்ளிட்டோர், வீரப்பனின் புகைப்படம் மற்றும் வீடியோ குறித்து அறிந்தால், நிச்சயம் அந்த படச்சுருளை அழித்துவிடுவது மட்டுமல்லாமல், அதை வைத்திருப்பவர்களுக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று தெரியும். எனவே இரவு நேரத்தில் எனது நண்பன் மதனின் உதவி பெற்று அவருடைய ஸ்டுடியோவில் அதனை பத்திரப்படுத்திவிட்டு காவல்துறைக்கு தெரியாமல் என்னுடைய குழு தலைமறைவாகிவிட்டது. இப்படியே 1993 ஆண்டு கடந்தது. 1994-கிலும் ஜெயலலிதா ஆட்சிதான். அப்போது வீரப்பன் 3 நபரை கடத்தினான். அவர்களை மீட்க கலெக்டர் சி.வி சங்கருக்கும், வீரப்பன் கும்பலுக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது அர்ஜுனனுக்கு தொடைவால் நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக கூறி அவருக்கு மயக்க மருந்து செலுத்தி அவரிடமிருந்த ஆயுதங்களை எல்லாம் பறித்து அவரை ஹவுஸ் அரெஸ்ட் செய்து விட்டார்கள்.


தனது படையினருடன் வீரப்பன்

வீரப்பனால் கடத்தப்பட்ட மூவரில் ஒருவர் டி.எஸ்.பி சிதம்பரம். அவர்களை விடுவிக்க, கடத்தல் கும்பலுக்கும், கலெக்டருக்கும் பேச்சுவார்த்தை நடந்தாலும் தந்திரமாக அப்பகுதியை 6000 காவல்துறையினர் சுற்றி வளைத்து விட்டனர். இதை அறிந்த கடத்தப்பட்ட டி.எஸ்.பி., கடத்தல்காரர்களிடம் நம்மை காவல்துறை சுற்றி வளைத்து விட்டது... நிச்சயம் அவர்கள் உங்களை சுட்டுக் கொன்றுவிடுவார்கள். எனவே, நான் சி.வி சங்கரிடம் பேசுகிறேன். நீங்கள் சரணடைந்து விடுங்கள். நான் உங்களுக்கு குறைந்த தண்டனையை பெற்று தருகிறேன் என்று வீரப்பன் கும்பலை சேர்ந்த கடத்தல்காரர்களின் மனநிலையை மாற்றி அம்மூவரையும் கலெக்டரிடம் ஒப்படைத்தார் டி.எஸ்.பி. ஆனால் அடுத்தநாள் வந்த செய்தி தாள்களில், கடத்தப்பட்டவர்களை, கலெக்டர் சி.வி சங்கர் காப்பாற்றியதாகவும், மறுபக்கம் கர்நாடக உயர் அதிகாரி காப்பாற்றியதாகவும் ஆளுக்கொரு பக்கம் பேட்டி அளித்திருந்தனர்.


வெவ்வேறு போஸ்களில் வீரப்பன்

இது பொய் என்று அறிந்த நான், எனது தம்பியை கடத்தப்பட்ட அந்த டி.எஸ்.பி-யிடம் சென்று நடந்தது என்ன என்று வினவ சொன்னேன். கடுங்கோபத்தில் இருந்த அந்த டி.எஸ்.பி., அங்கு நடந்த உண்மை சம்பவங்களை கூறவே அதை நாங்கள், ‘நாங்களாகத்தான் தப்பித்தோம், காவல்துறை எங்களை காப்பாற்றவில்லை’ என நக்கீரன் பத்திரிகையின் முதல் பக்கத்தில் டி.எஸ்.பி. சிதம்பரத்தின் புகைப்படம் வைத்து நடந்த சம்பவங்களை எழுதினோம். டி.எஸ்.பி., நக்கீரனுக்கு அளித்த அந்த பேட்டியினால் தண்டனையாக அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இப்படி 1994 ஓடிய நிலையில், 1995 இல் வீரப்பனின் தம்பி அர்ஜுனன் சயனைடால் கொல்லப்படுகிறான். இதை அறிந்த வீரப்பன், எப்படி என் தம்பியின் கையில் சயனைடு வந்தது என்று கடுங்கோபம் அடைந்து மீண்டும் 3 நபரை கடத்தினான். 1995-லும் ஜெயலலிதா ஆட்சி இருக்கவே தம்பியை இழந்து கடுங்கோபம் கொண்டு, அரசிடம், தன்னைப் பார்க்க வருபவர்கள் சிவப்பு புல்லட்டில் வர வேண்டும்.. சிவப்பு சட்டை அணிந்திருக்க வேண்டும்.. கழுத்தில் வெள்ளை மாலை போட்டிருக்க வேண்டும்.. வண்டியில் வெள்ளை கொடி இருக்க வேண்டும்.. தலையில் சிவப்பு தொப்பி இருக்க வேண்டும் என பல நிபந்தனைகளை முன்வைக்கிறான். காவல்துறையோ இவன் வகுத்த நிபந்தனைகளின்படி ஒருவரை காட்டிற்குள் அனுப்பியது. ஆனால் அவர் பாதியிலேயே வந்துவிட, இதனை அறிந்த வீரப்பன், கடத்தப்பட்டவர்களின் கைகளில் 5000 பணம் வழங்கி மூவரையும் விட்டு விடுகிறான். ஆனால், கர்நாடக ஆட்களும், சங்கரும், தாங்கள் அவர்களை காப்பாற்றியதாக பேட்டி அளித்தனர். ஆனால் அங்கிருந்த நான், நடந்த உண்மைகள் என்ன என்பதை அறிவேன். கடத்தப்பட்டவர்களிடம் உண்மை சம்பவங்களை கேட்டறிந்து பத்திரிகையில் வெளியிட்டேன்.


வீரப்பனுடனான நக்கீரன் கோபாலின் புகைப்படங்கள்

1996இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போதுதான் அந்த கேசட் எல்லாம் வெளிவந்தது. 1997இல் 9 பேர் கடத்தப்பட்ட நிலையில், தூது பயணம் நடந்தது. 1998 திமுக ஆட்சி காலத்தில் என்மேல் 2 வழக்குகள் போடப்பட்டன. 2000இல் வழக்கு எனக்கு சாதகமாக அமைந்தது. 2001 தேர்தல் அறிக்கையில், ஜெயலலிதா, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுப்போம்’ என அறிவித்தார். 2001இல் அவர் ஆட்சியை பிடித்ததும், நான், என் தம்பி என அதில் ஈடுபட்ட மொத்த குழுவும் தலைமறைவாகிவிட்டோம். என் மேல் மட்டும் 4 கடத்தல் வழக்குகள், 3 கொலை வழக்குகள், 1 பொடா வழக்கு மற்றும் 1 ஆயுத வழக்கு போடப்பட்டது. இதேபோல என் குழுவை சேர்ந்த 6 நபர்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டன. இதில் நானும், என் குழுவினரும், சிறை தண்டனை அனுபவித்தோம். இதிலிருந்து நாங்கள் விடுபடவே 2012 ஆனது. பின்னர் போடப்பட்ட வழக்குகளில் இருந்தும் வெளிவர பல ஆண்டுகள் ஆகின. இப்படி காலங்கள் ஓட, எனது மகள் 2018இல் வீரப்பன் குறித்து கதை அமைக்கிறேன் என்று என்னிடம் இருந்த வீடியோக்களை கேட்டார். நான் முதலில் சற்று யோசித்தேன். பின்னர் கவனமாக செய் என்று கூறி, களத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை வழங்கினேன். நடுவில் கொரோனா காலம் வந்ததையடுத்து, தற்போது வெப் தொடர் வெளியாகியுள்ளது.

Updated On 8 Jan 2024 6:41 PM GMT
ராணி

ராணி

Next Story