இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழகத்தில் பண்டைய காலந்தொட்டே இருந்து வருவதுதான் இயல், இசை, நாடகம் என்றழைக்கப்படும் முக்கலைகளின் சங்கமம். இந்தக் கலைகளில் நாடகம், பரதம், கரகாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், பறையிசை எனப்படும் தப்பாட்டம், மரக்கால் கூத்து, பொய்க்கால் குதிரையாட்டம், தோற்பாவை கூத்து போன்ற கலைகள் அடங்கும். இவற்றில் ஒரு சில கலைகள் மட்டுமே தற்போது வழக்கத்தில் இருந்தாலும் காலத்தின் கோலத்தில் இந்த நவீன விஞ்ஞான உலகில் அவைகள் மெல்ல மெல்ல மறைந்து வருவது மறுக்க முடியாத உண்மை. இந்நிலையில் தமிழக கலைகளின் மீது கொண்ட காதலால் ஈர்க்கப்பட்டு கலைகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் சில இளைஞர்கள். பள்ளி, கல்லூரிகளில் படித்துக்கொண்டே மாணவர்கள் இதுபோன்ற பாரம்பரிய கலைகளை வளர்ப்பது பார்ப்போருக்கு ஆச்சர்யத்தையும் கலைகளின் மீதான தாக்கத்தையும் அதிகரித்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழக நாட்டுப்புற கலைஞர்களின் கலைகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அவர்களது கலை தாகத்தையும், ஏக்கத்தையும், வேண்டுகோளையும் குறித்த பதிவு பின்வருமாறு...


தமிழக இசைக் கல்லூரி மாணவிகள்

தமிழ்நாடு இசைக் கல்லூரி மதுரைப்பிரிவு முதல்வர்:

“தமிழக இசைக் கல்லூரி மாணவர்கள், அனைவருமே தற்போது வரை நமது பாரம்பரியக் கலைகளை முழு ஈடுபாட்டோடு கற்று வருகின்றனர். நமது அரசாங்கமும் ஏராளமான உதவித் திட்டங்களை வழங்கியுள்ளது. அதன்மூலம் கிராமிய இசை நிகழ்சிகள் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருவது மாணவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கின்றது. ஆனால் முன்பைவிட தற்போது கலை நிகழ்ச்சிகள் அதிகம் நடத்தப்படுவது மிகுந்த மகிழ்ச்சியையும், மாணவர்களுக்கு சிறந்த ஊக்கத்தையும் அளிக்கின்றது. எனவே அரசு மென்மேலும் இதுபோன்று நமது கலைகளை வளர்ப்பதற்கும், கலை சார்ந்த மாணவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நிறைய உதவிகளை செய்தால் நமது பாரம்பரிய கலைகளை அழியாமல் நம்மால் காக்க இயலும்” என்கிறார் தமிழ்நாடு இசைக்கல்லூரி மதுரைப்பிரிவு முதல்வர்.


அழிந்துவரும் நாட்டுப்புற கலைகள்

கிராமியக் கலைஞர்களின் பின்னணி:

இளங்கலை தமிழ் இலக்கியம் படித்த கிராமியக் கலைஞர்கள் பலருக்கு, கலைகளைப் பற்றி இலக்கிய ரீதியாக தெரிந்துகொண்டபின்பு கிராமியக் கலைகள் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இதனல் கலைகள் அனைத்துமே வாழ்வியலாக மாறி இருப்பதாகக் கூறுகின்றனர். மேலும் பொருளாதரத்தை ஈட்டிக்கொள்ள இந்த கலைகள்தான் அவர்களுக்கு முதன்மையாக இருந்துவருகிறது.

இதுகுறித்து பரதநாட்டிய கலைஞர் ஒருவர் கூறுகையில் “நான் இளங்கலை பரதநாட்டியம் படித்துள்ளேன். இப்போதுள்ள நிறைய பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு கல்வி மட்டும்தான் முக்கியம், கலைகள் முக்கியமில்லை என்ற மனநிலையில்தான் வளர்க்கின்றனர். ஆனால் அந்த கலைகளால்தான் நாம் தற்போது இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். கலைகளுக்கு பிறகு வந்ததுதான் கல்வி. எனவே இந்த கலைகளை அழியாமல் பாதுகாப்பது நமது கடமையாகும்” என்கிறார்.


பொய்க்கால் குதிரை ஆட்டம் மற்றும் கரகாட்டம்

அடுத்ததாக, கிராமியக் கலையில் பத்து ஆண்டுகள் அனுபவம் கொண்ட தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த கிராமியக் கலைஞர் ராமகிருஷ்ணன் கூறுகையில் “நான் மதுரை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கிராமியக் கலை படித்து வருகிறேன். தவிர நான் அறிவியலில் இளங்கலை பட்டமும், ஆசிரியர் பயிற்சி படிப்பையும் முடித்துவிட்டு பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். நான் ஒரு ஆசிரியராக இருந்தாலும்கூட கிராமியக் கலை மீது இருந்த ஆர்வத்தால்தான் ஒரு கிராமியக் கலைஞனாகவும் வாழ்ந்து வருகிறேன். அதாவது கரகம், காவடி போன்றவை அனைத்தும் நமது தமிழ் பாரம்பரிய கலைகளில் ஒரு முக்கியமான ஆட்டங்கள் ஆகும். இதுபோன்ற கிராமிய ஆட்டங்களில் துணை ஆட்டமாக ஆடும் ‘சாமி ஆட்டம்’ என்ற ஆட்டமும் இருக்கிறது.

சாமி ஆட்டங்களை பொறுத்தவரையில் பல்வேறு வேடங்கள் இருக்கின்றன. அதாவது சிவன் - பார்வதி, காளி, கருப்பன சாமி என இன்னும் பல வேடங்கள் அணிவித்து ஆடும் ஆட்டங்கள் இருக்கின்றன. பொதுவாகவே கலை நிகழ்சிகள் என்பது அதிக அளவில் கோயில்களில் நடத்தப்படுவதால், இதுபோன்ற துணை ஆட்டங்கள் நடத்துவது வழக்கமாகும். ஆனால் இவ்வாறு நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு கிராமப்புறங்களில் கிடைக்கும் வரவேற்பு, நகர்புறங்களில் கிடைப்பது இல்லை.


மரக்கால் கூத்து

எனவே வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த அன்றாட வாழ்க்கையில் இன்னும் அதிக அளவில் கோயில்களிலும், நிறுவனங்களிலும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவது எங்களைப்போன்ற கலைஞர்களின் வாழ்க்கையையும், நமது பாரம்பரிய கலைகளையும் மேம்படுத்தும். ஒரு கலையின் அழிவு என்பது ஒரு வரலாற்றின் அழிவாகும். எனவே வருங்கால சந்ததியர் அதனை புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார்.

மேலும் பறை இசை கலைஞர் மகாலிங்கம் கூறுகையில் “நான் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். பறை இசையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவேண்டும் என்பதுதான் எனது நோக்கம். கிராமங்களில் தெரிந்த அளவிற்கு இன்னும் நகரங்களில் பறை இசை குறித்த தெளிவு பெரும்பாலானோருக்கு இல்லை. அதுமட்டுமில்லாமல் இதனை ஒரு சாதிக்கு உண்டான இசை என்று நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை இது அனைவரும் கற்றுகொள்ள வேண்டிய ஒரு இசையாகும்” என்கிறார்.

Updated On 6 Nov 2023 6:37 PM GMT
ராணி

ராணி

Next Story