இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மழைக்காலம் என்றாலே பொதுமக்களுக்கு மட்டுமல்ல அரசாங்கத்திற்கும் தலைவலிதான். ஒவ்வொரு முறை புயல் மற்றும் பருவ மழை பெய்யும்போதும் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி அழிதல், மின்சாரம் துண்டிப்பு, போக்குவரத்து மற்றும் மழைநீர் வடிகால் பணிகளில் சிக்கல்கள் போன்ற பல சவால்களை சந்திக்க நேரிடுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுக்க வருடந்தோறும் இதே பிரச்சினைதான் தொடர்ந்து வருகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை வடகிழக்கு பருவமழை என்றாலே சற்று பதற்றம்தான். ஏனெனில் நிஷா, ஜல், தானே, நீலம், வார்தா, ஓக்கி மற்றும் கஜா போன்ற கடந்த கால புயல்களின் தாக்கங்களும், அதனால் மக்கள் சந்தித்த அவதிகளும் அப்படி. குறிப்பாக 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளத்தை யாராலும் மறக்க முடியாது. இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவாகும். இந்த ஆண்டு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எப்படியிருக்கிறது? பார்க்கலாம்.

2015ஆம் ஆண்டு வெள்ளம்

இன்றுவரை சென்னையில் தொடர்ந்து 2 மணிநேரம் மழை பெய்தாலே மக்கள் நினைவுகூர்வது, 2015ஆம் ஆண்டு வெள்ளத்தைத்தான். ஏற்கனவே அந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த பருவமழையால் சென்னை பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் 30ஆம் தேதி தொடங்கிய மழை, தொடர்ந்து மூன்று நாட்களாக விடாமல் பெய்து தீர்த்தது. இதனால் தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் புதுச்சேரி போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டாலும், மக்கள் நெரிசல் அதிகம் இருக்கக்கூடிய சென்னை முழுக்க வெள்ளக்காடானது. இதனால் குடியிருப்புகள், சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் என அனைத்தும் நீரில் மூழ்கின. மீட்புக்குழுவினர் ஊருக்குள்ளேயே படகுகளை பயன்படுத்தி பொதுமக்களை மீட்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஹெலிகாப்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு உணவுகளும் அத்தியாவசியத் தேவைகளும் வழங்கப்பட்டன. பல ஊர்களிலிருந்தும் மீட்புக்குழுவினர் சென்னை விரைந்தனர். இந்த சம்பவங்கள் அனைத்துமே இன்றும் நம் கண்முன் நிற்கின்றன. அந்த பெருமழையால் சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய பிற மாவட்டங்களும் பேரழிவை சந்தித்தன.


2015ஆம் ஆண்டு சென்னை வெள்ளம்

செம்பரம்பாக்கம் ஏரியை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திறந்துவிட்டதுதான் சென்னை வெள்ளத்திற்கு காரணம் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அதை அப்போதைய அதிமுக அரசு மறுத்தது. ஏரி அதன் முழு கொள்ளளவையும் எட்டிய நிலையில் அதனை திறக்காவிட்டால் உடைந்துவிடும் அபாயமும் இருந்தது. மேலும் நீர்நிலைகளின் இடங்களை பொதுமக்கள் ஆக்கிரமித்ததும் மற்றொரு முக்கிய காரணமாக கூறப்பட்டது. எப்படியாயினும், அந்த பாதிப்பிலிருந்து மீண்டுவர சென்னை மாநகராட்சி இன்றும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மழைநீரில் மூழ்கும் பயிர்கள்

வருடந்தோறும் கனமழையால் சென்னை மட்டுமல்ல; குறிப்பாக டெல்டா விவசாயிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது நாம் அனைவருமே நன்கு அறிந்ததே. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பருவமழை என்பது இதுவரை சற்று குறைவாகத்தான் பதிவாகி இருக்கிறது. இருப்பினும் ஆண்டுதோறும் பாதிக்கப்படும் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் தஞ்சை போன்ற டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டும் சம்பா மற்றும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய செய்திகளை நம்மால் பார்க்கமுடிகிறது. இதனாலேயே ஆண்டுதோறும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மழை வெள்ளத்தால் நீரில் மூழ்கிய பயிர்கள்

இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் குறித்த கணக்கெடுப்பை உடனே துவங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காவிரியிலிருந்து போதிய நீர் கிடைக்காததால் குறுவை கருகி, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீரில் மூழ்கி அழுகி வரும் நெற்பயிர்களை கணக்கிட்டு, ஏக்கருக்கு 35,000 ரூபாய் நிவாரணம் வழங்குமாறும் கோரிக்கை வைத்துள்ளனர் விவசாயிகள்.

மழைக்காலமும் தொற்றுநோய்களும்

அழியும் பயிர்களின் கணக்கீடு மற்றும் காப்பீடு ஒருபுறம் இருக்க மழைக்கால நோய்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சுகாதாரத்துறை சார்பில் ஒருபுறம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதிகரித்துவரும் மழைக்கால நோய்களை கட்டுப்படுத்த, 10 வாரங்களுக்கு 10,000 சிறப்பு முகாம்களை மாநில அரசே நடத்தும் திட்டத்தை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். குறிப்பாக, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்த ஆலோசனைகள் நடத்தப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மழைக்கால நோய்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மேலும், காலரா, மலேரியா, சிக்குன்குனியா மற்றும் வயிற்றுப்போக்கு நோய்கள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் இந்த நோய்களுக்கென்று தனி வார்டுகள் மற்றும் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 6000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

மின்வாரிய துறை சந்திக்கும் சவால்கள்

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொருத்தவரை பிற துறையினருடன் ஒப்பிடுகையில் மின்வாரியத்துக்கு சற்று சவாலானதாகவே உள்ளது. முந்தைய காலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டதில் மின்வாரியமும் ஒன்று. குறிப்பாக, மின் கட்டமைப்புகளில் ஏற்பட்ட சேதாரம் மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. கடுமையான காற்று மற்றும் மழையால் மின் கம்பங்கள் சாய்ந்தன. மேலும் நகர்ப்புறங்களில் மழைநீர் வடிகால் பணிகள், தனியார் தொலைக்காட்சி, தொலைபேசி மற்றும் நெட்வொர்க் கேபிள் பணிகள் மற்றும் கழிவுநீர் வடிகுழாய் பணிகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்படுகின்றன. மேலும் கிராமப்புற பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு இணைய சேவை வழங்க, மின்கம்பங்கள் வழியாக அதிக எடைகொண்ட கேபிள்களை கொண்டுசெல்வதும் எடை தாங்காமல் அவை சாய்வதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.


மழையால் சேதமடைந்த மின் கம்பங்கள் மற்றும் தரைவழி கேபிள்கள்

இப்படி சாய்ந்த கம்பங்களை மாற்றுவதற்கும், தரையில் தோண்டி புதைக்கப்பட்ட கேபிள்களை சரிசெய்வதற்கும் நீண்டகாலம் எடுப்பதற்கு மின்வாரிய ஊழியர் பற்றாக்குறை முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இதுதவிர டிரான்ஸ்ஃபார்மரில் பழுது ஏற்பட்டால் அதன் உதிரி பாகங்களை மின்வாரியத்துக்கு வழங்கும் ஒப்பந்தத்தில் உள்ள நிறுவனங்களும் அவற்றை முறையாக வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் மின்வாரியத் துறை சார்பில் வைக்கப்படுகிறது. இருப்பினும் வடகிழக்கு பருவ மழையையொட்டி கடந்த ஜூலை 19ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை சிறப்பு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மின்வாரியத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பராமரிப்புப் பணிகள் எந்த அளவுக்கு சிறப்பாக நடைபெற்றுள்ளது என்பது பருவ மழைக்கால முடிவில் தெரிய வரும்.

Updated On 27 Nov 2023 6:43 PM GMT
ராணி

ராணி

Next Story