இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

முத்து நகரமான தூத்துக்குடியின் பெண் முத்து கீதா ஜீவன். குடும்பத் தலைவியாக இருந்து ஆசிரியை பணிைய மேற்கொண்ட கீதா ஜீவன் அரசியலுக்கு வந்த காரணம், அதில் அவர் சந்தித்த சோதனைகள் மற்றும் சாதனைகள் குறித்து நம்மிடையே மனம் திறந்த பேசினார். அவர் பகிர்ந்து கொண்ட அனுபவங்களை இப்பதிவில் காண்போம்.

ஆசிரியை, அரசியல்வாதி, அமைச்சர் என்ற உங்கள் பயணம் நிகழ்ந்தது எப்படி?

திருமணமான பிறகுதான் நான் ஆசிரியை ஆனேன். 1952 முதல் என் கணவர் வீட்டில் ஒரு பள்ளியை நிர்வகித்து வந்தனர். அந்தப் பள்ளியை கவனித்துக் கொள்வதற்காக என்னை பி.எட்., மற்றும் பட்ட மேற்படிப்பெல்லாம் படிக்குமாறு கணவர்தான் என்னைத் தூண்டினார். நானும் ஆர்வத்துடன் படித்து ஆசிரியை பயிற்சி எல்லாம் முடித்து நாங்கள் நடத்தி வந்த பள்ளிக்கு கரஸ்பான்டண்ட் ஆக இருந்தேன். 1996 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்ததும், எனது தந்தை, ‘படித்த பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும்’ என்று கூறி தேர்தலில் போட்டியிடுமாறு என்னை ஊக்குவித்தார். நான் அரசியலுக்கு வந்தததன் காரணமே அந்த இடஒதுக்கீடுதான். அந்த தேர்தலில் வெற்றி பெற்று 2001 வரை மாவட்ட ஊராட்சித் தலைவராக பதவி வகித்தேன். அதற்கடுத்த ஐந்து வருடங்கள் அதே மாவட்ட ஊராட்சிக் குழுவில் உறுப்பினராக இருந்தேன். 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது கலைஞர் கருணாநிதி எனக்கு சட்டமன்றத் தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்பளித்தார். அதில் வெற்றிபெற்ற நான் கால்நடைத் துறை அமைச்சராக மூன்று ஆண்டுகளும் சமூக நலத் துறை அமைச்சராக 2 ½ வருடங்களும் சேவையாற்றினேன். இப்படி தொடங்கிய எனது அரசியல் பயணம் இன்றுவரை அப்படியே தொடர்ந்து கொண்டு இருக்கிறது.


கீதா ஜீவன்

சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கும் குடும்பத்தலைவி கீதா ஜீவனுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

பொது சேவையில் ஈடுபடும் பெண்கள் குடும்பத்துடன் இருக்கும் நேரங்களை தியாகம் செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது. இதில் குடும்பத்தினர் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். எனது குடும்பத்தைப் பொறுத்தவரை, கணவர், மாமனார், மாமியார், மைத்துனர் என எல்லோருமே எனக்கு ஆதரவாக உள்ளனர். இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயது இருக்கும்போதுதான் நான் அரசியலுக்கு வந்தேன். அப்போது அந்த குழந்தையை பராமரிப்பது, பள்ளிக்கு அழைத்துச் செல்வது, கல்வி மற்றும் இன்னபிற தேவைகளை கவனித்துக் கொள்வது என்று எல்லா வேலையையும் எனது குடும்பத்தினர் அனைவரும் கவனித்துக் கொண்டனர். அரசியலில் நான் சாதித்ததற்கு அவர்களும் ஒரு காரணம்.

பன்முகத் திறனில் இயங்கும் நீங்கள் நேரத்தை எப்படி நிர்வகிக்கிறீர்கள்?

நேரத்தை நிர்வகிப்பது சிரமமான காரியம்தான். அதற்குத்தான் நான் எப்போதும் என்னுடன் ஒரு டைரியை வைத்திருக்கிறேன். எல்லா நிகழ்வுகளுக்கும் கால நேரத்தை ஒதுக்கு முன்கூட்டியே திட்டுமிட்டுக் கொள்வேன். குடும்ப நிகழ்வாக இருந்தாலும்கூட என்னிடம் முன்கூட்டியே தெரிவித்து விடுங்கள் என்று கூறியிருக்கிறேன். குடும்பத்தினருடன் இருப்பதற்கான நேரத்தைக்கூட நான் குறித்து வைத்து நிர்வகித்துக் கொள்கிறேன். பரபரப்பாக இயங்கும் எனக்கு குடும்பத்தினருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருப்பதுதான் என் மனதுக்கு ரிலாக்ஸ்.


பரபரப்பாக இயங்கும் கீதா ஜீவன்

சமூக நலத் துறை அமைச்சராக உங்களை கவர்ந்த திட்டங்கள் என்ன?

மிக முக்கியமான திட்டம் என குறிப்பிடுவதென்றால் முதலமைச்சர் தற்போது கொண்டுவந்த மூவலூர் ராமாமிர்தம் புதுமைப்பெண் திட்டம்தான். அரசுப் பள்ளியில் ஆறு முதல் பன்னிரண்டு வரை படித்த பெண்கள் உயர்கல்வி பயில்வதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அவர்கள் எந்த வகையான உயர்கல்வியை தேர்ந்தெடுத்தாலும், உதாரணமாக தொழில்நுட்பக் கல்லூரியோ, கலைக் கல்லூரியோ, தொழில்முறைப் படிப்புகளோ எதுவாயிருந்தாலும் அதற்காக மாதம் ₹1000 தொகை அவர்களது வங்கிக் கணக்குக்கே நேரடியாக அனுப்பப்படுகிறது. திட்டம் அமல்படுத்தியதற்கு பிந்தைய ஆய்வில் உயர்கல்வியை தொடர முடியாத சுமார் 12,000 மாணவிகள் வரை பயனடைந்திருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. பள்ளிக்கல்வி முடித்ததும் கல்லூரிக்கு போக முடியாமல் வேலைக்கு போகலாம் என்று முடிவெடுத்த பெண்கள், இந்த திட்டத்தால் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்கள் என்பதை அவர்கள் வாயாலேயே கேட்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. முதலமைச்சரின் நிறையத் திட்டங்கள் சமூக நலத் துறையால்தான் செயல்படுத்தப்படுகிறது.


புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

வேலைக்குப் போகும் பெண்களுக்கான விடுதித் திட்டத்தில் தனியார் விடுதிக்கு நிகராக விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 15 விடுதிகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. தனியார் விடுதியில் குழந்தைகளை தங்க வைத்துக் கொள்ள அனுமதி கிடையாது, ஆனால் அரசுத் திட்டத்தில் உருவான மகளிர் விடுதித் திட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகளையும் உடன் தங்க வைத்துக் கொள்ளலாம். திருநெல்வேலியில் திறக்கப்பட்ட விடுதி ஒரு வாரத்திலேயே நிறைந்துவிட்டது. விடுதிகளில் மாதந்தோறும் என்றில்லாமல் நாள்கணக்கில் கூட தங்கும் அறை வழங்கப்படுகிறது. முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் 36 லட்சம் குழந்தைகளுக்கு எடை, உயரம் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கணக்கெடுக்கப்பட்டதில் 90,000 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அறுவைசிகிச்சை, தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதில் சுமார் 3,000 குழந்தைகளுக்கு அறுவைசிகிச்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எங்குமே இல்லாத இந்த திட்டமானது முதலமைச்சரால் ஏற்றமிகு ஏழு திட்டங்களாக அறிவிக்கப்பட்ட திட்டங்களுள் ஒன்று.


ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்வதால் குழந்தைகளுக்கு சரியான காலை உணவு அளிக்க முடியாத நிலையிருந்தது. இதைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் நிறைவேற்றிய திட்டம்தான், மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்.

சமூக நலத் துறையில் சேவை இல்லம் என்ற ஒரு திட்டமிருக்கிறது. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் இந்த இல்லத்தில் தங்கிக் கொள்ளலாம். அங்கு அளிக்கப்படும் பயிற்சிகளை மேற்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த சேவை இல்லங்கள் தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் செயல்படுகிறது. கைப்பெண்கள் நல வாரியம் என்பது இந்தியாவில் எங்குமே இல்லாத திட்டம். இந்த திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.


தமிழ்நாடு அரசின் சேவை இல்லம்

அதேபோன்று சமூக நலத் துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை மூலம் பல்வேறு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வரதட்சணை கொடுமை சட்டம், குடும்ப வன்முறை சட்டம், பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு சட்டம் போன்ற பல சட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பெண்களுக்கு 181, குழந்தைகளுக்கு 1098 என்ற உதவி எண்கள் இருபத்து நான்கு மணி நேரமும் இயங்கி வருகிறது. முதல்வரின் தலைமையில் அவருடைய அறிவுறுத்தல்களின்படி இந்த துறையே புத்துணர்வு ஊட்டப்பட்டு செயலாற்றுகிறது.

நீங்கள் அமைச்சராக பொறுப்பேற்ற பின் உங்களை பாதித்த மற்றும் சாதித்த விஷயங்கள் என்ன?

ஊட்டச்சத்து உதவித் திட்டத்தில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட சமயத்தில் தூத்துக்குடியில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. அங்கு ஒரு குழந்தையை பரிசோதித்த மருத்துவர், அந்த குழந்தை மிகவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இருப்பாகத் தெரிவித்தார். ஆனால் அதை புரிந்து கொள்ளக்கூட முடியாத நிலையில்தான் அந்த குழந்தையின் தாய் இருந்தார். ஊட்டச்சத்துக் குறைபாடு குறித்து அந்த பெண்ணுக்கு எதுவுமே தெரியவில்லை. “அப்படியா என் பிள்ளைக்கு ஊட்டச்சத்துக் குறைவா இருக்கா? அவன் நல்லா நடக்கிறான், உட்கார்கிறான்” என்று கேட்டார். அதேபோன்று மற்றொரு குழந்தையை பரிசோதித்தபோது அந்த குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருப்பது தெரிய வந்தது. ஒன்றரை வயது ஆனபோதும் அந்த குழந்தை நடக்கவேயில்லை. எப்போதும் உடல்நலமின்றியே இருந்திருக்கிறது. ஆனால் அந்த குழந்தையின் இதயத்தில் ஓட்டை இருக்கிறது என்பது அந்த தாய்க்கு தெரியாமலே இருந்தது. அதற்காக எந்த ஒரு பரிசோதனையோ, மருத்துவ உதவியையோ அந்த பெண் அதுவரை மேற்கொள்ளாதிருந்தார். இப்படி தாய்மார்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு இல்லாதிருப்பதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். அது எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. நிறைய குழந்தைகளின் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதை எளிதாக நிவர்த்தி செய்யலாம். ஆனால் நிறைய இளம் தாய்மார்கள் இதைப்பற்றி அறியாமல் இருந்தது என்னுள் பாதிப்பை ஏற்படுத்திய விஷயமாக இருந்தது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு தேவையுள்ளோரின் குறைகளை தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம்.

சாதித்த விஷயம் என்று சொன்னால், எல்லாத் திட்டங்களையும் சொல்லலாம். குறிப்பாக, மகளிர் விடுதித் திட்டத்தில் திருநெல்வேலியில் எல்லா அறைகளும் நிரம்பி விட்டது. அறைகள் வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தவர்களிடம், “நீங்கள் அங்கேயே நேரடியாக கேட்கலாமே உடனே கிடைக்குமே” என்றேன். அதற்கு, “எல்லா அறைகளும் பதிவு செய்யப்பட்டு விட்டதாம். அறை எதுவுமே காலியாக இல்லை மேடம், நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள்” என்று அவர்கள் சொன்னபோது, இந்தத் திட்டம் இந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறதே என்பதை நினைத்து சந்தோஷமடைந்தேன். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மீண்டும் படிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது மனநிறைவைத் தருகிறது.

Updated On 28 Aug 2023 6:55 PM GMT
ராணி

ராணி

Next Story