உடல் எடையை குறைப்பதற்கு வெளியில் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். ஒரு நாளைக்கு 15 மி.லி. எண்ணெய்தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். நொறுக்குத்தீனிகளை வாரத்திற்கு ஒரு நாளில் எனக் குறைத்துக் கொள்வது நல்லது. உணவில் காய்கறிகளை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். அசைவம் உண்போர் மீன், முட்டை, கோழிக்கறியும் சைவம் விரும்புவோர் துவரம் பருப்பு, பாசி பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, போன்ற பருப்பு வகைகள் மற்றும் பச்சைப் பட்டாணி, வெள்ளைப் பட்டாணி, காராமணி, மொச்சை, கொண்டைக்கடலை போன்ற 16 வகையான முழு தானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். சாதம் அல்லது சப்பாத்தி போன்றவற்றை கால் பங்காக குறைத்துக் கொண்டு பருப்பு, பயிறுகளை தட்டு நிறைய சாப்பிட வேண்டும்.
குழந்தைகளை பொறுத்தவரை முதல் ஆறு மாதம்தான் எடை அதிகமாகும். ஆறு முதல் பன்னிரண்டு மாதங்கள் வரை குறைய ஆரம்பித்து விடும். ஒரு வயதுக்கு பிறகு எடை குறைவாக இருக்கிறார் என்று ஒரு மருத்துவர் தெரிவித்தால் மட்டுமே ஊட்டச்சத்து நிபுணரை தொடர்பு கொண்டு அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஒரு குழந்தை பொதுவாக இருக்க வேண்டிய குழந்தை எடையைக் காட்டிலும் 4 கிலோ வரை குறைந்திருந்தாலோ அல்லது 2 கிலோ வரை அதிகரித்து இருந்தாலோ கவலைப்படத் தேவையில்லை. குழந்தை ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக இருந்தால் எடை குறித்து பயப்பட வேண்டியதில்லை. ஆனால் ஒரு மருத்துவரின் பரிந்துரையில்தான் எடை குறைவுக்கான ஊட்டச்சத்து முறையை பின்பற்ற வேண்டும். குழந்தைக்கு நன்கு பசிப்பதற்காக காலையில் 2 பாதாம் பருப்பு மற்றும் இரவில் தூங்கும் முன்பு 2 பாதாம் பருப்பு கொடுத்து வரலாம். பொதுவாக இரவு 8 முதல் 9 மணிக்குள்ளாக தூங்க வைத்தால்தான் குழந்தை காலையில் 6 மணிக்கு எழுந்து காலையில் செய்ய வேண்டியதை செய்து சாப்பிட்டு பள்ளிக்கு செல்ல ஏதுவாக இருக்கும். தாமதமாக எழுந்து அவசரமாக பள்ளிக்கு கிளம்பினால் காலை உணவை தவற விட வேண்டியிருக்கும். அதனாலும் எடைக் குறைவு ஏற்படலாம்.
காலையில் எழுந்ததும் பாதாம் சேர்த்து பால் அருந்தலாம். காலை உணவாக இட்லி, தோசை, இடியாப்பம் போன்ற உணவுகளை சட்னி மற்றும் சாம்பாருடன் கொடுக்கலாம். மதிய உணவில் சாதம், காய், புரதம் நிறைந்த பருப்பு அல்லது முட்டை உண்ண செய்ய வேண்டும். மாலை பள்ளி விட்டு வந்ததும் சாதம்தான் பிடிக்கும் என்றால் சாதத்துடன் காய்கள் சேர்த்து கொடுக்கலாம். பலகாரம்தான் (டிஃபன்) சாப்பிடுவார்கள் என்றால் ஏதேனும் பலகாரத்துடன் புரதம் நிறைந்த சுண்டல் போன்றவற்றை சேர்த்துக் கொடுக்க வேண்டும். அடை போன்ற புரதச்சத்து நிறைந்த உணவும் கொடுக்கலாம். இரவில் சாதம், சிறிது காய் மற்றும் புரதம் அடங்கிய உணவை கொடுக்க வேண்டும். தினமும் 2 டம்ளர் அளவு பால் 1 கப் அளவு தயிர் ஆகியவற்றை இரு வேளைகளாக பிரித்துக் கொடுக்க வேண்டும். கொட்டைகள் (நட்ஸ்) செரிமானமாகும் என்றால் அதை தினமும் தனியாகவோ அல்லது பாலில் கலந்துகூட கொடுக்கலாம். இதுபோன்று செய்தால் குழந்தைகள் எடை குறையாமல் வளர்வார்கள்.