உங்களது பங்கு வர்த்தகத்தினை நீங்கள் ஆரம்பிக்கும் முன்னர் உங்களுக்கு தேவையானது ஒன்று மட்டுமே . அதாவது பங்கு வர்த்தகத்தின் டிரேடிங் ஒழுங்குகளை நீங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பங்கு என்றால் என்ன? பங்கு சந்தைகள் என்றால் என்ன? அதன் டிரேடிங் மெக்கானிசம் எப்படி வேலை செய்கின்றது? எந்த மாதிரியான பங்குகளை வாங்கினால் லாபம் பெறலாம்? என்பது போன்ற பல்வேறு காரணிகளை நீங்கள் கண்டறிந்து பங்கு வர்த்தகத்தை நன்கு கற்றுக்கொண்டு பின்னர் அதில் ஈடுபடுவது நல்ல பலனை தரும். மேலும் பங்கு வர்த்தகத்தில் நீங்கள் ஈடுபடு முன்னர் பேப்பர் டிரேடிங் என்றழைக்கப்படும் மாதிரி பங்கு வர்த்தக மாதிரி பயிற்சியை மேற்கொள்வது நல்லது.
1. ஷேர் மார்க்கெட்டுக்கும் மியூச்சுவல் பண்ட்டுக்கும் இடையேயான வித்தியாசத்தை முதலில் நன்கு புரிந்துகொண்டு அதன் பின்னர் முதலீடு செய்வது நல்லது. ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வது என்பது, நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ ஒரு பங்கு தரக நிறுவனத்தில் முதலீடு செய்து, அந்த தரகர் மூலம் நேரடியாக தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குசந்தையில் பங்குகளை வாங்குவது அல்லது விற்பது ஆகும். ஆனால் நீங்கள் வாங்கும் முதலீட்டுப் பங்குகள் அனைத்தும் பங்குச்சந்தைகளின் விலை ஏற்ற இறக்க அபாயத்திற்குட்பட்டது என்பதை மறக்கக்கூடாது. அதே சமயம் நீங்கள் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்யும்போதும் கூட அந்த நிறுவனங்கள் நீங்கள் செய்யும் முதலீட்டிற்கேற்ப பங்குகளை போலவே யூனிட்கள் என்றழைக்கப்படும் முதலீட்டு வைப்பு கணக்கினை உங்களது பெயரில் வரவு வைக்கும். அதன்பிறகு நீங்கள் வாங்கிய மொத்த யூனிட்களுக்கேற்ப உங்களது முதலீடானது என் ஐ வி, அதாவது நெட் அசட் வேல்யூ கணக்காக யூனிட்களில் இருக்கும். இந்த நெட் அசட் வேல்யூவும் தினமும் பங்குச்சந்தைகளின் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டு மாறுபட்டுக் கொண்டே இருக்கும்.
மியூச்சுவல் பண்ட்கள் கூட தங்களது பெரும்பாலான நிறுவன முதலீட்டை பங்குசந்தைகளில் உள்ள பெரிய கம்பெனிகளின் பங்குகளில் முதலீடு செய்தே வருமானம் ஈட்டுகின்றன. பங்கு சந்தையைப் போன்று நேரிடையான முதலீட்டிற்கான லாபம் என்பது உடனே கிடைக்காது. அந்த லாபம் நெட் அசட் வேல்யூவாக மாற்றப்பட்டு முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது. எனவே மியூச்சுவல் பண்ட்கள் கூட பங்கு சந்தைகளின் அபாயத்திற்குட்பட்டவையே. முதலீட்டாளர்கள் முதலீட்டு திட்டம் சார்ந்த ஆவணங்களை சரிபார்த்து படித்த பின் முதலீட்டு திட்டங்களில் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நலம் பயக்கும்.