பொதுவாகவே குளிர்காலத்தில் மூக்கடைப்பு, சளி பிரச்சினைகள் வருவது இயல்புதான். சளி பிரச்சினையை அலட்சியப்படுத்தினால் அது சைனஸாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளது. மூக்கின் அருகிலுள்ள காற்றறைகளில் நீர் தேங்குவதால் ஏற்படும் பிரச்சினைதான் சைனஸ். இதனால் கண்கள், கன்னத்தை சுற்றியுள்ள எலும்புகளில் வலி, தலைவலி ஏற்பட்டு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். குறிப்பாக, குனியும்போதும் நிமிரும்போதும் தலைவலிக்கும். மூக்கு அடிக்கடி அடைத்துக்கொள்வதால் வாசனையை உணரமுடியாது. ஆரம்ப நிலை என்றால் மருந்து, மாத்திரைகள்மூலம் குணமாக்கிவிடலாம். அதுவே பிரச்சினை பெரிதானால் அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருக்கும்.
பனிக்காலத்தில் எப்போதும் நமது சூழல் காற்றோட்டத்துடன் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். குடிக்கும், குளிக்கும் தண்ணீர் வெதுவெதுப்பாக இருப்பது நல்லது. காரம், புளிப்பு நிறைந்த உணவுகளை குறைத்துக்கொள்ளலாம். குளிர்பானங்கள், நீர்ச்சத்துள்ள காய்கறிகளை தவிர்த்தல், சாலையோர உணவுகளை தவிர்த்தல், ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் உணவுகளை அப்படியே சாப்பிடுவதை தவிர்த்தல் போன்றவை அவசியம்.
ஆஸ்துமா பிரச்சினை இருப்பவர்கள் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் வெளியே செல்வதை தவிர்க்கவேண்டும். ஒட்டடை அடித்தல், சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை செய்யாமலிருத்தல் வேண்டும். தினமும் அரைமணி நேரம் மூச்சு பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை செய்தல் வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மட் அணிந்துசெல்லவேண்டும். பனிக்காலங்களில் வியர்வை குறைவாக இருக்கும். ஆனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டி இருக்கும். அதன்பிறகு கை, கால்களை சுத்தப்படுத்துவது அவசியம். சுகாதரமற்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம். வெளியே செல்லும்போது காதை அடைத்து செல்வது நல்லது.