கீழ்ப்புற உடலை குறைக்க டயட் முறையை பின்பற்றுவதுடன் ஸ்குவாட்ஸ் பயிற்சியை கட்டாயம் செய்யவேண்டும். இதனால் அடிவயிற்று சதை, உட்புற தொடை மற்றும் பின்புற சதை அனைத்துமே குறையும். ஒரு நாளைக்கு 20 கவுண்ட் 4 செட்ஸ் ஸ்குவாட்ஸ் செய்யவேண்டும். இந்த பயிற்சியை செய்யும்போது ஆரம்பத்தில் வலி அதிகமாக இருக்கும். ஆனால் செய்ய செய்ய வலி படிப்படியாக குறையும். எடையும் குறையும்.
உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க சரியான டயட் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். எடையை குறைக்க நிறையப்பேர் குறுக்குவழிகளை பின்பற்றுவார்கள். குறிப்பாக ஏதேனும் போட்டிகளில் பங்கேற்பதற்காக உடல் எடையையை குறைக்கவேண்டிய தேவை இருப்பவர்கள் அதுபோன்ற கலோரி எரிப்பு வழிமுறைகளை பின்பற்றுவர். அதனால் மெட்டபாலிசம் அதிகரித்து எடை சீக்கிரத்தில் குறையும். ஆனால் முடி கொட்டுதல், தூக்கமின்மை போன்ற பக்கவிளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும். எனவே இதுபோன்ற முறைகளை முடிந்தவரை தவிர்த்துவிட்டு ஆரோக்கியமான முறைகளை பின்பற்றலாம்.
ஒரு நபரின் உயரத்திற்கும் எடைக்கும் ஏற்ப கலோரிகள் தேவைப்படும். ஒருநாளைக்கு சராசரியாக 1200 கலோரி எடுத்துக்கொள்ள வேண்டும். எடையை குறைக்க காலை உணவுக்கு முன்பு 2 க்ளாஸ் தண்ணீர் குடித்துவிட வேண்டும். பின்னர் எப்போதும் சாப்பிடும் அளவில் பாதி எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றாக மென்று சாப்பிட வேண்டும். பசிப்பதுபோல் தோன்றினாலும் சாப்பிடக்கூடாது. இப்படி செய்வதால் 20 நிமிடங்களில் பசி அடங்கிவிடும். அதன்பிறகு 2 மணிநேரம் கழித்து பழங்கள் அல்லது வேகவைத்த் காய்கறிகளை சாப்பிடலாம். எந்தவகையிலும் சர்க்கரை மற்றும் பால் சேர்த்துக்கொள்ள கூடாது.
மதிய உணவிற்கு ஒரு கப் அரிசி சாதத்துடன், கீரை மற்றும் காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ரிவர்ஸ் தி ப்ளேட் முறையை பின்பற்ற வேண்டும். இதனால் உடலினுள் செல்லும் மினரல்கள், வைட்டமின்கள் அதிகரித்து, கார்போஹைட்ரேட் அளவு குறையும். மாலை 4 மணியளவில் ஒரு க்ரீன் டீ, நெல்லிக்காய், ஆப்பிள், கொய்யா அல்லது மாதுளை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். எடையை குறைக்க நினைப்பவர்கள் வாழைப்பழத்தை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
இரவு உணவை 6 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அதற்குமேல் சாப்பிட தோன்றினால் நார்ச்சத்து உள்ள பீன்ஸ், கேரட், ப்ரக்கோலி, பேபி கார்ன் மற்றும் பிற காய்கறிகளைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் எடை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். டயட்டை விட்டுவிட்டால் எடை அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.
டயட் முறைகளுடன் உடற்பயிற்சியும் மேற்கொண்டால் இன்னும் சிறப்பு.