இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த வகையில் ஆடி என்று கூறினாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மாவிளக்குப் போடுதல், தீ மிதி திருவிழா, தீச்சட்டி ஏந்துதல், வேப்பிலை ஆடை தரித்தல், கூழ் வார்த்தல் போன்றவைதான். ஆடிப்பூரம், ஆடிப் பௌர்ணமி, ஆடிப்பெருக்கு என்று பல விசேஷ நாட்களும் ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அதில் மிக முக்கியமானது, ஆடி மாதம் பதினெட்டாம் நாள் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு வைபவம்தான். அன்று என்ன விசேஷம்? ஆடிப்பெருக்கு என்றால் என்ன? என்பதைப் பார்ப்போம்.

ஆடிப்பெருக்கு

ஆடி மாதம் 18 ஆம் நாளை ‘ஆடி பதினெட்டு அல்லது ஆடிப்பெருக்கு’ என்றழைக்கிறோம். நமது நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம். ஆடி மாதத்தில் ஆறுகளில் புது வெள்ளம் பொங்கி ஓடும். எனவேதான் தண்ணீர் பெருகி ஓடும் இந்த மாதத்தில் விதை விதைத்தால் தை மாதத்தில் பயிர்களை அறுவடை செய்யலாம் என்பதால், ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று சொல்லி வந்தனர். ஆடி 18 அன்று நீர்நிலைகளுக்கு அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று எல்லா குறைகளும் நீங்க வேண்டும் என்று பொங்கி வரும் ஆற்றினை வழிபட்டு வருவது வழக்கம். அதுமட்டுமின்றி மகாபாரதக் கதையில் வரும் சகுனி மற்றும் சல்லியன் ஆகிய இருவரின் இறந்த நாளாகவும் இந்த ஆடி 18 அனுசரிக்கப்படுகிறது. எழுத்தாளர் கல்கி அவருடைய பொன்னியின் செல்வன் என்ற நூலில் முதல் அத்யாயத்திலேயே இந்த ஆடி 18-ன் பெருமையை எடுத்துரைந்திருக்கிறார்.


ஆடிப்பெருக்கு நாளில் ஆற்றங்கரையில் பூஜை

புதுமணத் தம்பதிகள் தாலி மாற்றுதல்

பொதுவாக புதுமணத் தம்பதிகளை ஆடி மாதத்தில் பிரித்து வைப்பர். ஆனால் ஆடி 18 அன்று புதிதாக மணமான பெண் புத்தாடை உடுத்தி, பழைய தாலியைப் பிரித்து புதுத் தாலி கட்டுவது வழக்கம். ஆடி 18 அன்று பெண்கள் தங்கள் தாலியை மாற்றி புது தாலிக் கயிறு கட்டி அம்மனை வழிபடுவது கொங்கு மாவட்டங்கள் மற்றும் ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்தோடும் மாவட்டங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இப்படிச் செய்வதன் மூலம் கணவன் மனைவி இருவரும் நீண்ட நாட்கள் சந்தோஷமாக வாழ்வார்கள் என்று நம்பப்படுகிறது. இது காலம்காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றி வரும் ஒரு சடங்கு.


புதுமணத் தம்பதிகள் திருமண மாலையை ஆற்றில் விடும் நிகழ்வு

சங்கரநாராயணர் தோற்றம்

இந்து புராணத்தின்படி பார்வதி தேவி சிவபெருமானிடம், திருமாலுடன் இணைந்து தன்னை ஆசிர்வதிக்கும்படி வேண்டினாராம். அவரின் வேண்டுகோளை ஏற்று சிவனும் விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராகத் தோன்றி பார்வதி தேவியை ஆடிப்பெருக்கன்று ஆசிர்வதித்தனர். எனவே இந்த நாளில் வழிபடுபவருக்கு விஷ்ணு மற்றும் சிவனின் பூரண அருள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.


சங்கரநாராயணர் தோற்றம்

செல்வம் பெருகும்

பெருக்கு என்ற சொல்லுக்கு உயர்த்துவது என்று பொருள். ஆடிப்பெருக்கு அன்று லட்சுமி தேவி மகிழ்ச்சியுடன் காட்சியளிப்பாள். அன்று அவளை மனதார வழிபட்டால் செல்வ வளம், திருமணம், மன தைரியம் போன்ற அனைத்து சம்பத்துகளும் பெருகும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் குபேரனை வணங்கினால் நஷ்டம் நீங்கி பண வரவு உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது. ஆடி 18 அன்று காலையில் ஆற்றுக்குச் சென்று மஞ்சளில் விநாயகர் செய்து வெற்றிலையில் வைத்து கற்பூரம் ஏற்றி வணங்கி அதனை ஆற்றில் விட்டுவிட வேண்டும். இப்படிச் செய்வதால் கஷ்டம் நஷ்டம் அனைத்தும் ஆற்றோடு போய் நன்மையும் வளர்ச்சியும் பெருகும் என்பது ஐதீகம்.


ஆடிப்பெருக்கில் ஆற்றில் விளக்கு விடும் சடங்கு


Updated On 8 Aug 2023 4:33 AM GMT
ராணி

ராணி

Next Story