இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உலகப் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவில் திருநங்கைகளுக்கு மணமுடித்தல், தாலி அறுக்கும் நிகழ்ச்சி, தேரோட்டம் போன்ற பல நிகழ்வுகள் இடம்பெறும். அதன்படி, இந்த விழாவில் கலந்துகொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான திருநங்கைகள், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் குவிந்துள்ளனர். தினம் தினம் ஒரு நிகழ்ச்சி என கூவாகம் கிராமமே களைகட்டியுள்ளது. மகாபாரதப் போரில் அரவான் (கூத்தாண்டவர்) களப்பலி கொடுக்கப்பட்டதை நினைவுக்கூறும் வகையில் நடைபெறும் இந்த திருவிழாவுக்கு மிகப்பெரிய புராண பின்னணி உண்டு.

கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா

இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா கடந்த 9ம் தேதி செவ்வாய்க்கிழமை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து 10ம் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவும், சுவாமி வீதியுலாவும் நடைபெற்றன. இதையடுத்து ஏப்ரல் 12ம் தேதி பீஷ்மர் பிறப்பு விழாவும், 14ம் தேதி பாஞ்சாலி பிறப்பு விழாவும், ஏப்ரல் 17ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பு விழாவும் நடைபெற்றன. இதனையொட்டி ஏப்ரல் 16ம் தேதி, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த தொட்டி, நத்தம், சிவாலயங்குளம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், ஒரே நேரத்தில் தங்கள் இல்லங்களில் கூழ் காய்ச்சி, அதனை குடங்களில் ஊர்வலமாக மேளதாளத்துடன் கூத்தாண்டவர் கோயிலுக்கு கொண்டுவந்து படையலிட்டனர். படையலில் இடப்பட்ட கூழ் அங்குள்ள பெரிய கொப்பரையில் ஊற்றப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

18 நாள் பெருவிழா

ஏப்ரல் 9ம் தேதி ஆரம்பித்த விழாவின் தொடர்ச்சியாக, கடந்த 21ம் தேதி கூத்தாண்டவருக்கு பாலாலயமும், 22ம் தேதி மாலை கம்பம் நிறுத்தலும் நடைபெற்றன. சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 23ம் தேதி) மாலை நடந்தேறி, மறுநாள், அதாவது ஏப்ரல் 24ம் தேதி (விழாவின் 16ம் நாள்) அழுகளம் நடைபெறும். முதல்நாள் இரவு தாலி கட்டிக்கொள்ளும் திருநங்கைகள், தாலி அறுத்து வெள்ளைப்புடவை அணிந்துகொண்டு சொந்த ஊருக்கு செல்வார்கள். அன்றைய தினமே சித்திரை தேரோட்டமும் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெறும். ஏப்ரல் 25ம் தேதி விடையாத்தியும், 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெற்று, 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவுபெறும்.


தங்களை மோகினி அவதாரமாகவும், பூசாரியை அரவானாகவும் நினைத்து திருமணம் செய்துகொள்ளும் திருநங்கைகள்

யார் இந்த அரவான்(கூத்தாண்டவர்) ?

மகாபாரத போரையும், அந்த போரில் உயிர்விட்டவர்களையும் நமக்கு தெரியும். ஆனால் பாண்டவர்களின் வெற்றிக்காக போருக்கு முன்னரே, தன் உயிரை கொடுத்த வீரன்தான் அரவான். இறந்துபோனாலும் குருக்ஷேத்திர போரை முழுமையாக பார்த்தவன் அவனே என்கிறது புராணம்.

தட்சகனின் வாழ்விடமான காண்டவ வனத்தை, கிருஷ்ணரின் துணையுடன் அர்ஜுனன் எரித்து, தட்சகனையும் அவன் குலத்தினரையும் விரட்டி அடித்து, அங்கு இந்திரப்பிரஸ்தம் எனும் நகரை அமைத்தான். எனவே அர்ஜுனனை பழிவாங்க தட்சகன் எண்ணினான். அந்நேரம், இந்திரப்பிரஸ்தத்தில் அஸ்வமேதை யாகம் செய்ய ஆயிரம் பசுக்கள் வரவழைக்கப்பட்டன. இதனை அறிந்த சகுனியும், துரியோதனனும் தட்சகனை அழைத்து பசுக்களை கவர்ந்து பாண்டவர்களை பழிவாங்க சந்தர்ப்பத்தை உருவாக்கி தந்தனர். தட்சகனும் அவ்வாறே பசுக்களை கவர்ந்து சென்றான். அப்போது பசுக்களை காப்பாற்றுவதற்காக, அர்ஜுனன் தனது காண்டீபத்தை எடுக்க யுதிஷ்டிரனும், திரௌபதியும் இருக்கும் அறைக்கு சென்றான்.

பஞ்ச பாண்டவர்களில் யாரேனும் ஒருவர் திரௌபதியோடு இருக்கும்போது, அந்த அறைக்குள் வேறொருவர் நுழையக்கூடாது என்ற வழக்கம் பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில்தான், யுதிஷ்டிரனும், திரௌபதியும் இருக்கும் அறைக்குள் காண்டீபத்தை எடுக்க அர்ஜுனன் வேகமாக சென்றுவிடுகிறான். இதனால் ஒரு வருட காலம் அர்ஜுனன் வனவாசம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவ்வாறு சென்றபோது, நாகலோகத்தை ஆண்டுவந்த நாகராஜனின் மகளான உலுப்பி, தமிழக பகுதியில் அர்ஜுனனைக் கண்டதும் காதல் வயப்பட்டாள். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையே அரவான்.


பஞ்ச பாண்டவர்களின் வெற்றிக்காக வீரன் அரவானை களபலி கொடுத்துக்கொள்ள வேண்டிய கிருஷ்ணர்

அரவானின் வீரத்தியாகம்!

மகாபாரதப் போரில் அரவான் மட்டும் கிருஷ்ணரால் பலியிடப்படாமல் இருந்திருந்தால், அந்த போரை அவன் 60 விநாடிகளில் முடித்திருப்பான் என்று கூறப்படுகிறது. தனது தவ வலிமையால், சிவன், பார்வதியிடம் அரவான் வரமாக வாங்கி வைத்திருந்த 3 அம்புகளே அதற்கு சாட்சி என்றும், அந்த அம்புகளை அரவான் கிருஷ்ணரிடம் நிரூபித்து காட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது கிருஷ்ணர், “போரில் உனது தந்தையின்(அர்ஜுனனின்) அணி வெற்றி பெற வேண்டுமென்றால், உன் உயிரை களத்தில் பலி கொடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினாராம். அதற்கு அரவான் ஒப்புக்கொள்ளவே, உனது கடைசி ஆசையை கூறுமாறு கிருஷ்ணர் கேட்க, அரவான் 2 வரங்களை கேட்டுள்ளார். முதலாவதாக, மணம் முடிந்து திருமண வாழ்க்கையில் ஒரு நாளேனும் ஈடுபட வேண்டும் என்றும், இரண்டாவதாக, குருக்ஷேத்திரப்போரை தான் முழுவதுமாக காண வேண்டும் என்றும் கோரியுள்ளார். கிருஷ்ணர் இந்த வரங்களை வழங்குவதாக ஒப்புக்கொள்கிறார்.

அதன்படி கிருஷ்ணர் மோகினியாக அவதாரம் எடுத்து அரவானை திருமணம் முடித்தார். எனவே தான் சொன்னதுபோல், ஒரு நாள் இல்லற வாழ்விற்குப் பின் பலிக்களம் புகிறான் அரவான். இந்நிகழ்வே கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் மையமாக உள்ளது. இந்தக் கதையின் அடிப்படையில் மோகினியாய் தம்மை உணரும் திருநங்கைகள் ஒன்றுகூடி வரும் நிகழ்வாகவே கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா உள்ளது. திருநங்கைகள் அனைவரும் கூத்தாண்டவரையே தங்கள் குல தெய்வமாக வழிபடுகின்றனர். மேலும், கோயில் பூசாரியை அரவானாக நினைத்துக்கொள்ளும் திருநங்கைகள், அவரது கையினால் தாலி கட்டிக்கொண்டு, புதுமணப்பெண்களை போல தங்களை அலங்கரித்துக் கொண்டு ஆடிப்பாடி மகிழ்வர். அடுத்த நாளே கணவன்(அரவான்) பலியானதை உணர்த்தும் விதமாக தாலி அறுத்து அழுது விதவைக்கோலம் கொள்கின்றனர்.

இரண்டாம் வரம் நிறைவேற, “அரவான் தன்னை பலியிட்டுக்கொண்ட பிறகு, அவன் தலைக்கு மட்டும் உயிர் கொடுக்கப்பட்டு, குருக்ஷேத்திரப்போரை முழுமையாக காண, அருகில் உள்ள ஒரு குன்றின் மீது அவனது தலை வைக்கப்பட்டது.18 நாள் போரையும், அரவானின் கண்கள் முழுவதுமாக பார்த்தன. இந்த நிகழ்வை மையமாகக் கொண்டே திரௌபதி வழிபாடு மரபு தோன்றியது. அதன்படி 18 நாள் திருவிழாவில், மகாபாரதப் போரைச் சித்தரிக்கும் சடங்குகளைப் பார்க்கும் வண்ணம் அரவானின் தலை, கம்பத்தின் மேல் உயர்த்தி வைக்கப்படும்.


தன் தந்தையின் (அர்ஜுனனின்) அணி வெற்றி பெற குருக்ஷேத்திர போருக்கு முன் களபலி கொடுக்கப்பட்ட அரவான்

தமிழ்நாட்டில் 48 இடங்களில் அரவான் வழிபாடு

தமிழ்நாட்டில் 48 இடங்களில் அரவான் வழிபாடு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தோனேசியாவிலும் கூத்தாண்டவர் அறியப்படுகிறார். அங்கு அவரை “இரவன்” என்ற பெயரால் அழைக்கின்றனர். சாவகத் தீவுகளில் உள்ள அரவானுக்கென்று தனிப்பட்ட மரபுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அரவானை பற்றிய செய்திகள் 9-ஆம் நூற்றாண்டில் தமிழில் பெருந்தேவனாரால் இயற்றப்பட்ட பாரத வெண்பாவில் கூறப்பட்டிருக்கிறது. அதில் அரவான் அற்புதங்கள் நிறைந்த ஒரு ஆதித்தமிழன் என்றே அறியப்படுகிறார்.

அரவானை வணங்கினால் குழந்தை பாக்கியம்

அரவானை வணங்குவதன் மூலம் தீராத நோய்கள் தீரும் எனவும், குழந்தையில்லாப் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. உறுமைசோறு (பலிசாதம்) படையலில் படைக்கப்படும் பலகாரங்களையும், உணவையும் வாங்கி சாப்பிட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், நல் வேண்டுதல்கள் அனைத்தையும் அரவான் நிறைவேற்றிக் கொடுப்பதாகவும் மக்கள் திடமாக நம்புகின்றனர்.

மொத்தம் 18 நாள் திருவிழாவான கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா, தர்மர் பட்டாபிஷேகத்துடன் நிறைவடைகிறது. விழா நிறைவடையும்வரை, கூவாகம், பெரியசெவலை, திருவெண்ணெய்நல்லூர் உட்பட பல்வேறு கிராம மக்கள், அந்த 18 நாட்களும் தங்கள் இல்லங்களில் சுப நிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On 29 April 2024 6:23 PM GMT
ராணி

ராணி

Next Story