நவராத்திரி திருவிழாவின் நான்காவது நாள் கூஷ்மாண்டா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்து புராணங்களின்படி பிரபஞ்சத்தின் படைப்பாளராக கூஷ்மாண்டா தேவி கருதப்படுகிறார். அந்த வகையில் நவராத்திரியின் நான்காம் நாளில் வழிபடவேண்டிய மாதா கூஷ்மாண்டா தேவி குறித்து இன்று பார்ப்போம்.

கூஷ்மாண்டா தேவிக்கு உரிய பாடல்

அபிராமி அந்தாதி (பாடல் 13)

பூத்தவளே புவனம் பதினான்கையும்! பூத்தவண்ணம்

காத்தவளே! பின் கரந்தவளே! கறைக் கண்டனுக்கு

மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே

மாத்தவளே! உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.

கூஷ்மாண்டா பெயரின் அர்த்தம்

கூஷ்ம என்றால் புன்முறுவல்! உஷ்மா என்றால் வெப்பம் நிறைந்த! அண்டா என்றால் முட்டை! வெப்பம் நிறைந்த பிரபஞ்சத்தில் தன்னுடைய வெறும் புன்முறுவலால் பிரம்மாண்டத்தை உற்பத்தி செய்தவள் என்பதே கூஷ்மாண்டா பெயரின் விளக்கம். பிரபஞ்சம் என்பது நமக்கு பெரிதாக தோன்றினாலும், அன்னை பார்வதிக்கு இது மிகச்சிறிய செயல். ஆதிசக்தியின் ஆதி ரூபம் கூஷ்மாண்டா. சூர்யமண்டலத்தில் உள்ள சக்தி கூஷ்மாண்டாவே! அஷ்டபுஜா தேவி என்றும் கூஷ்மாண்டா அழைக்கப்படுகிறார்.

கூஷ்மாண்டா யார்?

அன்னை கூஷ்மாண்டா தேவி, தனது அன்பான புன்னகையுடன் உலகை உருவாக்குகிறாள். பிரபஞ்சம் இல்லாமல் இருள் நிலவியபோது, அன்னை கூஷ்மாண்டா தனது புன்னகையுடன் ஒரு அண்ட முட்டையை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. பிரபஞ்சம் தெய்வீக ஒளியால் நிரப்பப்பட்ட நேரம் அது. பிரபஞ்சத்தை உருவாக்கிய பிறகு, அன்னை கூஷ்மாண்டா மூன்று உயர்ந்த தெய்வங்களாக, முதல் உயிரினங்களை உருவாக்கினார். தனது இடது கண்ணால் அவர் ஒரு வடிவத்தை உருவாக்கி அதற்கு மகா காளி என்று பெயரிட்டாள். தனது மையக் கண்ணில் இருந்து ஒரு வடிவத்தை உருவாக்கி மகாலட்சுமி என்று பெயரிட்டாள். தனது வலது கண்ணில் இருந்து ஒரு வடிவத்தை உருவாக்கி மகா சரஸ்வதியாக வெளிப்பட்டாள். மூன்று வடிவாகிய அன்னையின் வடிவுடைதன்னில் இருந்து 96 தத்துவங்கள் தோன்றின. 96 பில்லியன் ஒளி வருடங்கள் தாண்டி நிற்கும் நமது பிரபஞ்சமும் வெளிப்பட்டது.

கூஷ்மாண்டா பற்றிய தகவல்கள்

கூஷ்மாண்டா என்பது அன்னை சக்தியின் கர்ப்பிணி வடிவமாகும். அன்னை கூஷ்மாண்டா, அன்பும் இரக்கமும் நிறைந்த படைப்பாற்றல் கொண்ட தாய். தனது கரங்களில் நீர் பானை, வில், அம்பு, தாமரை, அமிர்த கலசம், சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றை ஏந்தி சிங்கம் மீது பவனி வருகிறாள்.

இதயச் சக்கரம் என்று சொல்லப்படுகின்ற அனாஹத சக்கரத்தை கூஷ்மாண்டா தேவி ஆட்சி செய்கிறாள். அவளே பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து அன்பிற்கும் கருணைக்கும் ஆதாரமாக இருக்கிறாள்.

கூஷ்மாண்டா வழிபாட்டு முறை

தனது பக்தர்களுக்கு சக்தியையும் செல்வத்தையும் வாரி வழங்கும் அன்னை கூஷ்மாண்டாவிற்கு சிவப்பு மலர்கள் மிகவும் பிடித்தவை. செம்பருத்தி பூவை வைத்து அவளை வழிபடுவது மிகவும் சிறந்தது. பூசணிக்காயால் செய்யப்பட்ட இனிப்பு வகைகள் மற்றும் தயிர் கலந்த உணவு பொருட்களை அம்மா கூஷ்மாண்டாவிற்கு நைவேத்தியமாக படைக்கலாம்.

- பவானி ஆனந்த், ஆன்மிக ஜோதிடர்

Updated On 25 Sept 2025 10:23 AM IST
ராணி

ராணி

Next Story