நவராத்திரியின் எட்டாம் நாளில் அம்பிகையை நாம் மஹா கெளரி என்ற திருநாமத்தால் வழிபடுகின்றோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. அதிலும் இந்த எட்டாம் நாள் மிகவும் விசேஷமானது. இன்றைய தினம் துர்கைக்கு உரிய துர்காஷ்டமி. சாதாரணமாகவே துர்கையை அஷ்டமி திதியில், அதுவும் ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுவது மிகவும் சிறப்பான பலன்களை தரும். நவராத்திரி காலத்தில் இன்னும் விசேஷமானது.

மஹா கெளரிக்கு உரிய பாடல்

அபிராமி அந்தாதி (பாடல் 50)

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச

சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு

வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று

ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே

மஹா கெளரி பெயர் விளக்கம்

மலைக்கு மகளாக பிறந்த மலைமகள் என்பதனால் கெளரி என்று அம்பிகைக்கு பெயர். மேலும், தேவி மிகவும் அழகிய ரூபம் கொண்டு உயர்வானவள் என்பதால் மஹா கெளரி என்று போற்றப்படுகிறாள்.

மஹா கெளரி யார்?

அம்மா மஹா கௌரி, இமயத்தில் உள்ள மானச சரோவரம் எனும் ஏரியில் தியானம் செய்து கௌசிகி என வடிவம் எடுத்து பொறாமை, பேராசை என்னும் குணங்களாகிய சும்ப, நிசும்ப அரக்கர்களை வெல்கிறாள். இமயமலையின் ஆழமான காடுகளில் நீண்ட துறவறம் மேற்கொண்டதால், அன்னை கருமையான நிறத்தை வளர்த்தாள். சிவபெருமான் அவளை கங்கை நீரால் சுத்தப்படுத்தியபோது, ​​அவள் உடல் மீண்டும் அழகு பெற்று வெண்முத்து போல மின்னியது.

தேவி மஹா கெளரியின் தோற்றம்

மஹா கெளரி அன்னை, வெண்ணிற ஆடைகளை அணிந்து, நான்கு கரங்களுடன், காளை மீது பவனி வருகிறாள். அவளது வலது கரங்கள் பயத்தை போக்கும் தோரணையிலும், திரிசூலத்தை தாங்கியும் உள்ளன. இடது கரங்கள், பக்தர்களுக்கு வரம் வழங்கும் தோரணையிலும், சிறிய உடுக்கையை தாங்கியும் உள்ளன.

நிலையான மோட்சத்தை அருளும் மஹா கெளரி!

காளை வாகனத்தில் அமர்ந்துள்ள அம்மா மஹா கௌரிக்கு தேங்காய் மற்றும் அதனால் செய்த பலகாரங்களை படைத்து வணங்குவது சிறப்பு. எனவே அம்பிகைக்கு இன்று மல்லிகை, முல்லை அல்லது வெண் தாமரை மலரை வைத்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, தேங்காய் பலகாரங்களை படைக்கலாம். அன்னை மஹா கௌரி அருள் இருந்தால் ஜாதகம் என்பது சாதகமாக செயல்பட்டு அனைத்தும் சாதகமாக மாறிவிடுமாம். தனது பக்தர்களுக்கு வாழ்வின் அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் தீர்வு தரும் அன்னை, வாழ்வின் அடுத்த நிலையான மோட்சம் என்பதை நாட வைக்கிறாள். அவளுடைய வழிபாட்டின் விளைவாக, கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டு, பக்தர்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தூய்மை அடைகிறார்கள்.

- பவானி ஆனந்த், ஆன்மிக ஜோதிடர்

Updated On 29 Sept 2025 10:14 AM IST
ராணி

ராணி

Next Story