இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கார்த்திகையில் முருகனின் கந்த சஷ்டி, சிவனின் தீப திருநாள் என்று ஏராளமான வழிபாடு விசேஷங்கள் இருந்தாலும் மாதத்தின் முதல் நாளே ‘பள்ளிக்கட்டு சபரிமலைக்கு…’ என்ற ஐயப்பன் பாடல் எங்கும் ஒலிப்பதை கேட்கலாம். ஐயப்பன் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் புண்ணிய தலமான சபரிமலைதான். அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் 60 நாட்கள் மாலை போட்டு ஐயப்பனை வழிபடுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் காலங்கள் மாற மாற 60 நாட்கள் என்பது, ஒரு மண்டலம் என்று சொல்லக்கூடிய 48 நாட்களாக மாறிவிட்டது. மணிகண்டனாக விளங்கும் ஐயப்பனுக்கு விரதம் இருக்க கூடிய நாட்கள் எத்தனை? மாலை போடுவதற்கான காரணங்கள் என்ன? மாலை போடுபவர்கள் பின்பற்றக்கூடிய வழிமுறைகள் என்ன? போன்று ஐயப்பன் குறித்து ஒரு சிறு கட்டுரையை இங்கு காணலாம்.

ஐயப்பனை நினைத்து முதன்முதலாக போடும் மாலையையே கடைசி வரை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஐயப்பனுக்கு போடும் முதல் மாலையாக முத்திரை மாலையான துளசி மாலையை அணிவது அத்தகு சிறப்பு. அதேபோல் ஐயப்பனுக்கு ஒரு மாலை போட்டால் மட்டுமே போதுமானது துணை மாலை போட வேண்டும் என்று எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. மாலை போடுதல், இருமுடி கட்டுதல், நெய் அபிஷேகம் ஆகிய மூன்றும் சபரிமலை யாத்திரையில் பின்பற்றக்கூடிய முக்கிய படிகள் என்று ஐயப்பனே கூறியுள்ளார். மாலை போட்டு, விரதம் இருந்து, 18 படிகள் ஏறி நெய் அபிஷேகம் என்று, ஐயப்பனுக்கு மாலை போட்ட நாள் முதல் அபிஷேகம் செய்யும் நாள் வரை ஐயப்பன் நம்முடனேயே பயணிக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மையாகவே இருக்கிறது. அதேபோல் ஐயப்பனுக்கு மாலை போடும் போது உடுத்தும் காவி அல்லது கருப்பு உடை, நாம் ஐயப்பனை எண்ணி பயபக்தியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே தவிர மற்றவர்கள் நம்மை பார்த்து வணங்க வேண்டும் என்பதற்காக அல்ல. உண்மையான விரதம் என்பது உண்ணாமல் இருப்பது அல்ல. 24 மணிநேரமும் இறைவன் ஐயப்பனை மட்டுமே எண்ணி மனதார பிரார்த்திப்பதே.

ஐயப்பனின் பிறப்பும் சபரிமலையின் வரலாறும்

மகிஷாசூரனை வதம் செய்த ஆதி பராசக்தி மீது கோபம் கொண்டு, மகிஷாவின் தங்கை மகிஷி, படைப்பு கடவுளான பிரம்மாவை நோக்கி கடுமையான தவங்களை மேற்கொண்டு பல வரங்களைப் பெற்று தேவர்களையும், முனிவர்களையும், ரிஷிகளையும் துன்புறுத்தி வந்த நிலையில் திருமாலும், சிவபெருமானும் மகிஷாவை அழிக்க எண்ணினர். அப்போது விஷ்ணு பகவான் மோகினி ரூபம் எடுத்தார். மூன்று கண்கள் கொண்ட சிவன், மோகினியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்த குழந்தைதான் ஐயப்பன்.


ஐயப்பனின் பிறப்பு

தெய்வ குணங்களை பெற்ற ஐயப்பனுக்கு மணிமாலை அணிவித்து இருவரும் அவரை காட்டில் விட்டு சென்றனர். இந்த நிலையில், கேரளாவின் மகாராஜாவாக விளங்கிய பந்தள மன்னன் ராஜசேகரனுக்கும், அவரது மனைவிக்கும் பல ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், குழந்தை வேண்டி சிவபெருமானை வழிபட்டு வந்தனர். அப்போது ஒரு நாள் பந்தள மன்னன் காட்டிற்கு சென்றபோது அங்கு ஓர் குழந்தையின் அழுகுரல் கேட்கவே, குழந்தை இருக்கும் திசையை நோக்கி சென்ற அவர், அதனை தூக்கிக்கொண்டு அரண்மனைக்கு சென்றார். குழந்தையை கண்ட மகாராணி இது சிவன் நமக்கு காண்பித்த வழி என்று மகிழ்ச்சி கடலில் மூழ்கினார்.

மகிழ்ச்சியில் இருந்த இருவரும் அக்குழந்தையின் கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்று பெயரிட்டனர். சில நாட்களில் மகாராணிக்கு மற்றொரு குழந்தையும் பிறந்தது. குருகுலத்திற்கு சென்று பல வித்தைகளை மணிகண்டன் பயின்றுவந்த நிலையில், பட்டாபிஷேகம் நடத்தி தனது பதவியை புதல்வன் மணிகண்டனுக்கு வழங்கலாம் என்று மன்னன் முடிவு செய்தார். அப்போது மன்னனின் அமைச்சரவையில் இருந்த மந்திரி ஒருவர் மணிகண்டனுக்கு அப்பதவி செல்ல கூடாது என்ற எண்ணம் கொண்டு தனது தந்திர செயல்களால் ராணியின் மனதை மாற்றிவிட்டார். மனம் மாறிய ராணி வயிற்று வலி ஏற்பட்டது போல் நடித்து புலிப்பால் குடித்தால் மட்டுமே இந்த வலி அகலும் என்று கூறவே, தாய் மீது அதிகம் அன்பு கொண்ட மணிகண்டன் பந்தள மன்னன் எவ்வளவு கூறியும் கேட்காமல் காட்டிற்கு சென்று புலிப்பால் கொண்டு வர புறப்பட்டான். அப்படி புறப்படுகையில் மன்னன் ராஜசேகரன் தனது மகன் உண்பதற்காக ஒரு துண்டை விரித்து அதில் மணிகண்டனுக்கு பிடித்த நெய் பலகாரங்களையும், சிவனின் அருள் என்றும் இருக்க வேண்டும் என்பதற்காக மூன்று கண் கொண்ட தேங்காயையும் அதனுள் விஷ்ணுவை குறிக்கும் விதமாக நெய்யையும் ஊற்றி இருமுடி கொடுத்தனுப்பினார். இதைத்தான் இன்று நாம் சபரிமலைக்கு செல்வதற்கு முன்னர் இருமுடியாக கட்டி செல்கிறோம்.

இருமுடி கொண்டு காட்டிற்கு புறப்பட்ட மணிகண்டனை காட்டில் தடுத்து நிறுத்தினால் அரக்கி மகிஷி. மணிகண்டனோ இறுதியில் அந்த மகிஷியை வதம் செய்தார். மணிகண்டனின் கால்கள் மகிஷி மேல் படவே மகிஷி ஒரு அழகான பெண்ணாக மாறினால். சாப விமோசனம் பெற்ற மகிஷி, நீங்களே என்னை மணந்து கொள்ளுங்கள் என்று மணிகண்டனிடம் கோரினார். அதற்கு மணிகண்டனாகிய ஐயப்பன், ‘கன்னி சாமிகள் எந்த வருடம் மாலை போட்டு சபரிமலைக்கு என்னை வணங்க வராமல் இருக்கிறார்களோ, அப்போது நான் உன்னை மணந்து கொள்கிறேன். அதுவரை நீ என் சன்னதிக்கு அருகிலேயே மஞ்சள் மாதாவாக இருந்து பக்தர்களின் குறைகளை நீக்கி அருள் புரி’ என்று மகிஷியின் வேண்டுகோளுக்கு விடையளித்தார். அதுமுதலே அரக்கியாக இருந்து அழகிய பெண்ணாக மாறிய மகிஷி லீலாவதி, மஞ்சள் மாதா, மாளிகை புரத்தம்மன் போன்ற பெயர்களில் ஐயப்பனின் பல தலங்களில் அருள் புரிந்து வருகிறார்.


மகிஷியின் வேண்டுகோளுக்கு விடையளித்த ஐயப்பன்

அரக்கியை வதம் செய்த மணிகண்டன் வெற்றிகரமாக புலிப்பாலுடன், புலியின் மேல் அமர்ந்து, புலி படைகளுடன் கம்பீரமாக அரண்மனைக்கு திரும்பினார். அவரின் பாசத்தையும், வீரத்தையும் கண்டு தவறுகளை உணர்ந்த மந்திரியும், மகாராணியும் மணிகண்டனிடம் மன்னிப்பு கோரினர். மகன் மணிகண்டன் அவர்களை மன்னித்து, தான் பூலோகத்திற்கு வந்த காரியம் நிறைவடைந்தது. இப்போது தேவலோகத்துக்கு செல்கிறேன் என்று கூற, மன்னன் ராஜசேகரன் மனமுடைந்து போனார். பந்தள மன்னன், மணிகண்டனை நோக்கி ‘நீங்கள் எங்களுடன் இருந்ததன் நினைவாக நான் ஒரு கோயில் கட்ட போகிறேன். அது எங்கு அமைய வேண்டும்?’ என கூறுங்கள் என்று வேண்டினார். அப்போது ஐயப்பன் தனது அம்பை எடுத்து எய்தவே, அது சரியாக சபரிமலையில் விழ, ஐயப்பன், 18 படிகள் வைத்து கிழக்கு திசையில் தனக்கு ஒரு சன்னதியும், தனக்கு பக்கத்தில் மாளிகை புறத்தம்மன் சன்னதியையும் அமைக்குமாறு கூறி தேவலோகத்துக்கு சென்றார். அவரின் கட்டளைப்படியே மன்னனும் வெற்றிகரமாக 18 படிகள் வைத்து பிரமாண்டமாக கோயில் கட்டி முடித்தார். அதுவே நாம் இன்று வருடாவருடம் மாலை போட்டு ஐயப்பனை வழிபடும் சபரிமலை கோயிலாகும்.

பந்தள மன்னனின் வளர்ப்பு மகனாக இருந்த ஐயப்பனை, கேரள மக்கள் மட்டுமே வழிபட்டுவந்த நிலையில், டி.எஸ் ராஜமாணிக்கம், அவரின் ‘ஸ்ரீ ஐயப்பன்’ என்ற நாடகத்தின் வாயிலாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார்.

ஐயப்பனுக்கு மாலை போடுவது ஏன்?

ஒருநாள் ஐயப்ப பக்தர் ஒருவரை சனிபகவான் அழிக்க செல்லுகையில் ஹரிஹர சுதனாகிய ஐயப்பன் ‘ஏன் என் பக்தரை இப்படி கொடுமை செய்கிறாய் கொஞ்சம் கருணை காட்ட கூடாதா?’ என்று கேட்டபோது, சனிபகவான், எனக்கு ஏழை, பணக்காரன், கடவுள் பக்தி மிக்கவன் என்று எந்தஒரு பாகுபாடும் காண்பிக்க தெரியாது. ஏழரை சனி வரும் காலத்தில் பாரபட்சமின்றி உயிர்களை பறிப்பதே என் தலையாய வேலை என்றும், அதுவே என் தர்மம் என்றும் பதில் அளித்தார்.


ஐயப்பன் மாலை போடுதல்

மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன், அவர்களின் படைத்தல், காத்தல் அழித்தல் செயல்களை செய்வது போல நானும் என் கடமையை செய்வது தானே தர்மமாக இருக்கும் என்று சனீஸ்வரன் பதில் அளித்தார். பதிலை கேட்டு திருப்தியான ஐயப்பன், சரி அப்போது நீங்கள் என் பக்தர்களுக்கு அளிக்கும் தண்டனைகளை என்னிடம் முறையிடுங்கள், நான் என் பக்தர்களுக்கு ஒரு மண்டல அளவில் அந்த தண்டனையை கடினமான விரத முறைகளால் அனுபவிக்க வைக்கிறேன் என்று கோரினார். அதற்கு சனி பகவான் ஒருவருக்கு ஏழரை சனி ஆரம்பித்துவிட்டால் அவர்களுக்கு உண்ண உணவு, உடுத்த சரியான உடை, தூங்க படுக்கையறை, நல்ல உறவு முறை என்று எதுவுமில்லாமல் அவர்களை அல்லல் படுத்துவேன். இதை எப்படி நீங்கள் ஒரு கால மண்டலத்தில் அனுபவிக்க வைப்பீர்கள் என்று ஐயப்பனை நோக்கி கேள்வி எழுப்பினார். சனீஸ்வரனின் கேள்விக்கு பதிலளித்த ஐயப்பன், கவலைப்படாதே நான் என் பக்தர்களை ஒரு மண்டல கால அளவில் 1 வேளை உணவு, ஆடம்பர படுக்கையின்றி வெறும் தரையில் உறங்குதல், தாம்பத்திய உறவு கொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருத்தல் என்று பல கட்டளைகளை விதித்து ‘சாமியே சரணம் ஐயப்பா…’ என்று உரக்க சொல்லவைத்து, கல்லும் மலையும் தாண்டிதான் என்னை வழிபட வர செய்வேன் என்று பதிலளித்து கருணை காட்டும் படி வரம் கேட்டார் ஐயப்பன். இந்த வேண்டுகோளை ஏற்ற சனிபகவான் அந்நாள் முதல் இந்நாள் வரை ஐயப்ப பக்தர்கள் மேல் தனது கொடூர பார்வையை காண்பிப்பதனை நிறுத்திவிட்டார். இந்த வரலாற்றின் காரணமாகவே நாம் ஐயப்பனுக்கு மாலை போட்டு ஐயப்பன் விதித்த கடினமான விரத முறைகளை பின்பற்றி ஹரிஹர சுதனாகிய ஐயப்பனை வழிபடுகிறோம்.

மாலை போடுபவர்கள் பின்பற்றக்கூடிய விதிமுறைகள்

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடுபவர்கள் குறைந்தபட்சம் 41 நாட்களாவது விரதத்தை கடைபிடிக்க வேண்டும். மேலும் போடும் மாலையானது 108 துளசி மணி கொண்டதாகவோ அல்லது 54 ருத்ராட்ச மணி கொண்டதாகவோ இருக்க வேண்டும். அதில் ஐயப்பனின் டாலர் போட்டு, ஐயப்பன் சன்னதி உள்ள கோயிலுக்கு சென்று குருசாமி கைகளால் அணியலாம் அல்லது ஐயப்பன் பாதத்தில் வைத்து பூஜை செய்து நாமே அணிந்து கொள்ளலாம். இவ்வாறு பயபக்தியோடு மாலை அணிந்த பிறகு கோபம், பகை, சண்டையிடுதல், பழிதீர்த்தல் என்று எந்தஒரு தீய செயல்களிலும் ஈடுபடாமல் பிறருக்கு நன்மை மட்டுமே எண்ண வேண்டும்.


ஐயப்பன் விரத வழிமுறைகள்

மாலை போட்ட நாள் முதல் விரதம் இருக்கும் நாட்கள் வரை காலையும், மாலையும் குளிர் தண்ணீரில் குளித்து சந்தனம், விபூதி, குங்குமம் என்று மங்கள பொருட்களை அணிந்து ஐயப்பனின் திருவுருவப் படத்தை மலர்களால் அலங்கரித்து வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு என்று ஏதேனும் ஒரு பழத்தையோ அல்லது உலர்ந்த திராட்சை, பேரிச்சம்பழம், முந்திரி போன்றவற்றையோ அல்லது வெறும் பாலையோ கூட நைவேத்தியமாக வைத்து ‘சுவாமியே சரணம் ஐயப்பா…’ என்ற ஐயப்பனின் சரணத்தை 108 முறை உளமார கூறி நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சபரிமலைக்கு செல்லும் வரை இந்த வழிமுறையை தினமும் பின்பற்ற வேண்டும்.

அதேபோல் ஒரு நாள் முழுக்க வெறும் பால் மற்றும் பழங்கள் உண்டு விரதமிருப்பதும், ஒரு வேளை மட்டும் உணவு உண்பதும் அல்லது மூன்று வேளையும் உணவு உட்கொள்வதும் நாம் தேர்ந்தெடுப்பதே. ஆனால், நாம் உட்கொள்ளும் உணவானது சைவ உணவாக மட்டுமே இருக்க வேண்டும். முதல் முறை ஐயப்பனுக்கு மாலை போடுபவர்கள் கருப்பு உடையிலும், மற்ற ஆண்டுகள் காவி உடைகளிலும் இருக்கலாம். அலுவலகத்திற்கு செல்வோர் இந்த உடையை அணிய முடியவில்லை என்றாலும் அது தவறில்லை. அதே போல் முடிந்தவரை காலணிகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஆனால் அலுவலகத்தில் அணிந்துதான் வர வேண்டும் என்ற நிபந்தனை இருக்கும் பட்சத்தில், காலணிகளை அணிவது தவறில்லை. காலையில் வழிபட்டது போல மாலையும் ஐயப்பனுக்கு பூ போட்டு நைவேத்தியம் வைத்து நெய் விளக்கேற்றி வழிபட்ட பின்னரே இரவு உணவை உட்கொள்ள வேண்டும். அதேபோல் இந்த விரத காலகட்டத்தில் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். குழந்தை இல்லாதவர்கள் தென்னங்கன்று அல்லது மணியை வாங்கி மனதார பிரார்த்தனை செய்து குழந்தை பிறந்த பின்னர் அதை சபரிமலையில் செலுத்தலாம். நாம் எதை எண்ணி ஐயப்பனுக்கு மாலை அணிகிறோமோ அந்த பிரம்மச்சரிய விரதத்தை தடைபடாது அப்பன் ஐயப்பனை மனமுருக பிரார்த்தித்து வெற்றிகரமாக முடிக்க வேண்டும். குறிப்பாக மாலையை எவ்வித காரணங்களினாலும் கழற்ற கூடாது. அப்படி எதிர்பாராத படியாக ரத்த சொந்தங்களில் துக்கங்கள் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பின்னரே அந்த துக்க நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும். அதேபோல் ஐயப்பனுக்கு மாலை அணிந்தவர்கள் பெண்களின் சடங்கு வைபவத்திற்கோ அல்லது புதிதாக பிறந்த குழந்தை வீடுகளுக்கோ செல்லக்கூடாது.


சபரிமலையின் 18 படிகள்

மது, மாமிசம், புகைபிடித்தல் போன்ற கெட்ட செயல்களில் இருந்து விலகி விட வேண்டும். மாலை அணிந்த சாமிகள் மாலை அணிந்திருக்கும் மற்ற பக்தரின் வீட்டு உணவை உண்ணலாம். ஆனால் மாலை அணியாத மற்ற நபர்களின் வீடுகளில் வெறும் பால் மற்றும் பழத்தை மட்டுமே உட்கொள்ள வேண்டும். அதேபோல் மாலை அணிந்திருக்கும் வீட்டில் பெண்கள் மாதவிடாயானால் 7 நாட்களுக்கு பிறகே அவர்கள் சமைத்த உணவை சாப்பிட வேண்டும். முடி வெட்டுதல், ஷேவ் செய்தல் கூடாது. மெத்தை, தலையணை போன்றவற்றை பயன்படுத்தாமல் வெறும் தரையில் ஜமுக்காளம் விரித்து உறங்கலாம். விரதம் கடைபிடிக்கும் இந்நாட்களில் பேச்சை குறைத்து மௌனத்தை கடைபிடிப்பது சிறந்தது. அப்படி மற்றவர்களிடம் பேசினாலும் பேச்சை தொடங்கும் போதும், முடிக்கும் போதும் ‘சாமி சரணம்’ என்ற சரணத்தை கூறியே பேச வேண்டும். எதிர்பாராத விதமாக மாலை அறுந்து விட்டால் மனதை சஞ்சலப்படுத்திக் கொள்ளாமல் அதைச் செப்பனிட்டு மீண்டும் அணிந்து கொள்ளலாம். மாலை அணிந்திருக்கும் ஐயப்ப பக்தர்கள், வீடுகளில் ஐயப்ப பூஜை நடத்தி ஐயப்பமார்களுக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் வழங்குவது மிக மிக சிறப்பான செயலாகும்.

ஐயப்ப மாலையில் முக்கியமாக கருதும் இருமுடி பூஜையை வீட்டில் அல்லது கோயிலில் அல்லது குருசாமி இடத்தில் நடத்தலாம். இருமுடி பூஜை முடிந்து சபரி மலைக்கு பயணம் மேற்கொள்கையில் யாரிடமும் போய் வருகிறேன் என்று சொல்லக்கூடாது. சபரிமலை பயணத்தில் பம்பை நதியில் நீராடி மலை ஏறுதல் வழக்கம். அப்படி பம்பை நதியில் நீராடும் போது நாம் நம் முன்னோர்களை நினைத்து அவர்களுக்குரிய ஈமக்கடன்களை செய்து நீராட வேண்டும். நீராடி மலை ஏறி 18 படிகள் தாண்டி அப்பன் ஐயப்பனை மனதார பிரார்த்தித்து தரிசித்து வீடு திரும்பியபின் ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டியை தலையில் ஏந்தியபடியே வீட்டு வாசலில் விடலை தேங்காய் உடைத்து வீட்டினுள் நுழைய வேண்டும். அடுத்து ஐயப்பனுக்கு பூஜை செய்து கட்டினை பிரித்து பிரசாதங்களை பகிரலாம். இறுதியாக குருசாமி கூறும் திருமந்திரத்தை கூறி மாலையை கழற்றி சந்தனத்தில் நனைத்து ஐயப்பனின் திருவுருவ படத்திற்கு முன்னால் வைத்து தீபாராதனை காட்டி ஐயப்ப விரதத்தை முடித்து கொள்ளலாம்.

ஐயப்பனின் மகிமைகள்

சாஸ்தா என்று அழைக்கப்படும் காவல் தெய்வங்களில் ஒருவராக தர்மசாஸ்தாவில் இருந்து தோன்றி ஆனந்த ஐயப்பனாக காட்சி தரக்கூடியவரே ஹரிஹர சுதன். ஆதி மகா சாஸ்தா, தர்ம சாஸ்தா, ஞான சாஸ்தா, கல்யாண வரத சாஸ்தா, சம்மோகன சாஸ்தா, சந்தான பிராப்தி சாஸ்தா, வேத சாஸ்தா மற்றும் வீர சாஸ்தா என்று ஐயப்பன் எட்டு வடிவங்களை கொண்டுள்ளார். முருகனுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பது போல, ஐயப்பனுக்கும் சொரி முத்தையன் கோவில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, எருமேலி, சபரிமலை என்று ஆறுபடை வீடுகள் உள்ளன.


சபரிமலையில் குவியும் பக்தர்கள்

18 படிகளின் மகிமைகள்

ஐயப்பனை வழிபட செல்லும் இந்த 18 படிகளில் விநாயகர், சிவன், பார்வதி, முருகன், பிரம்மா, விஷ்ணு, ரங்கநாதர், காளி, எமன், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய 18 தேவதைகளும் 18 குணங்களும் நிறைந்திருக்கின்றன. கடுத்தசாமி, கருப்பசாமி, கருப்பாயி அம்மாள் ஆகியோர் காவல் தெய்வங்களாக இருந்து இந்த 18 படிகளை காத்து வருகின்றனர். புலன் ஐந்து, பொறி ஐந்து, பிராணன் ஐந்து, மனம் ஒன்று, புத்தி ஒன்று, ஆங்காரம் ஒன்று என 18 படிகள் கடந்தால் மட்டுமே தர்மசாஸ்தாவாகிய மணிகண்டனை வழிபட முடியும். இந்த 18 படிகள் தங்க கவசத்தால் மூடப்பட்டிருக்கும். 10 கிலோ தங்கம், 30 கிலோ வெள்ளி, ஈயம், பித்தளை, செம்பு என பல உலோகங்களால் ஐயப்பனின் கவசம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 18 படிகளில் முதற்படி விஷாத யோகம், இரண்டாம் படி சாங்கிய யோகம், மூன்றாம் படி கர்மயோகம், நான்காம் படி ஞான கர்ம சன்னியாச யோகம், ஐந்தாம் படி சன்னியாச யோகம், ஆறாம் படி தியான யோகம், ஏழாம் படி ஞானம், எட்டாம் படி அட்சர பிரம்ம யோகம், ஒன்பதாம் படி ராஜ வித்யா, ராஜ குஹ்ய யோகம், பத்தாம் படி விபூதி யோகம், பதினோராம் படி விஸ்வரூப தரிசன யோகம், பன்னிரண்டாம் படி பக்தி யோகம், பதிமூன்றாம் படி ஷேத்ரங்ய விபக யோகம், பதினான்காம் படி குணத்ர விபாக யோகம், பதினைந்தாம் படி தெய்வாசுர விபாஹ யோகம், பதினாறாம் படி சம்பத் விபாஹ யோகம், பதினேழாம் படி சிரிதாத்ரய விபாஹ யோகம், பதினெட்டாம் படி மோக்ஷ சன்யாச யோகம் என்று ஒவ்வொரு படியும் ஒவ்வொரு யோகத்தை குறிக்கிறது.

இப்படி ஐயப்பன் வகுத்துள்ள கட்டளைகளை பின்பற்றி 18 படிகளை ஏறி அவரை தரிசிப்பதன் மூலம் நம் துன்பங்கள் எல்லாம் கட்டுப்படுத்தப்பட்டு, நெறியான வாழ்க்கை ஏற்படும் என்று நம்பப்படுகிறது. அதனாலேயே ஆண்டுதோறும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது என்று சொல்லலாம். நம்பிக்கையோடு வழிபடுங்கள் ஐயப்பன் அருளை பெறுங்கள்!

Updated On 11 Dec 2023 6:43 PM GMT
ராணி

ராணி

Next Story