இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கோவில் வரலாறு

சென்னையிலிருந்து பெரியபாளையம் செல்லும் வழியில் காரனோடைக்கு வலதுபுறம் 2 கிலோ மீட்டர் தொலைவில் சோத்துபெரும்பேடு கிராமத்தில் அமைந்திருக்கிறது ‘ஆதி பவானி மாரியம்மன் கோவில்’. ஆரம்ப காலத்தில் இக்கிராமத்து மக்கள் அப்பகுதியிலுள்ள ஒரு வேப்பமரத்தை அம்மனாக பாவித்து சூலம் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தனர். சுமார் ஏழு வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் அக்கிராமத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவரின் கனவில் அம்மன் வந்து, தனக்கு உருவம் செய்து வைத்து வழிபாடு செய்யும்படி கூறினாராம். அதையடுத்து அம்மனுக்கு சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.


சக்தி வாய்ந்த அம்மன்

திருமணம் ஆகாதவர்கள், குழந்தை இல்லாதவர்கள் இந்த பவானி அம்மனை நம்பிக்கையோடு வழிபட்டால் நிச்சயம் அவர்கள் நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள் பயனடைந்தவர்கள். இக்கோவில் மிக பிரபலமானதாக இல்லாவிட்டாலும் இங்கிருக்கும் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாகவும் நினைத்ததை நிறைவேற்றும் அம்மனாகவும் திகழ்கிறாள்.

திருவிழா

ஆடி மாதப் பிறப்புக்கு முந்தைய வாரத்தில் இக்கோவிலின் திருவிழா மூன்று நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறுகிறது. சேத்துப்பட்டு சிவலிங்க பூசாரி முதலில் ஆரம்பித்து வைத்த மரபாக இன்றும் அந்த முறையே பின்பற்றப்படுகிறது. திருவிழாவின் முதல் நாள் அதாவது வெள்ளிக்கிழமை காலையில் பந்தக்கால் நடப்படும். மாலையில் அம்மனுக்கு பிரம்மாண்டமாக சந்தனக் காப்பு சார்த்தப்படும். இரவில் அக்னி சட்டி ஊர்வலம் நடைபெறும். இரண்டாவது நாளான சனிக்கிழமை மாலையில் பதிஅலங்காரம், பதிவர்ணிப்பு மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை காலை பூங்கரகம் ஊரைச் சுற்றி வலம் வந்தபின், அம்மனுக்கு ஆடு, கோழி போன்றவற்றை பலி செலுத்தி, கூழ் வார்க்கப்படும். மாலை சுமார் 7 மணியளவில் கைலாய வாத்தியம், ராஜ மேளம், பம்பை என அனைத்து வாத்தியங்கள் முழங்க அம்மன் உற்சவத் திருமேனி வீதியுலா புறப்பாடு நடைபெறும். சுவாமி புறப்பாடு முடிந்த பின்னர் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு கும்பப் படையல் நடைபெறும்.


கத்தி ஊஞ்சல்

கும்பப் படையல் முடிந்தவுடன் காப்பு அவிழ்த்துக் கழற்றப்படும். அத்துடன் திருவிழா நிறைவுற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை விடையாற்றி உற்சவம் நிகழும். பூசாரி சசி குமார் மதுரைவீரன் சுவாமி முடி தரித்து, கத்தி ஊஞ்சல் ஏறி திருச்சாம்பல் வழங்கும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறும்.


அம்மன் மகிமை

இக்கோவிலிலை புதுப்பித்து கட்டும் பணி இன்னும் ஒரு மாதத்தில் துவங்க உள்ளதாக கிராம மக்கள் கூறினர். பவானி அம்மன் கோவில் குறித்து பூசாரி முத்துராஜ் கூறுகையில், “ஆன்மிகம் என்பது தேன், பழம் போன்று சுவைத்து அறியப்பட வேண்டிய விஷயம். பழங்களை நாம் சுவைத்துப் பார்த்தால் மட்டுமே அதன் அருமை நமக்குத் தெரியும். அதேபோல் இறைவனை முழு நம்பிக்கையோடு வணங்கினால் மட்டுமே இனிய நன்மைகள் பல நடைபெறும். நாம் நம்பிக்கையோடு உளமார வணங்கினால் பவானி அம்மன் நமது கர்மவினைகளை பாதியாக குறைத்து விடுவாள்” என்றார் நெகிழ்ச்சியுடன். அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிக்கிழமை போன்ற விசேஷ நாட்களில் இந்த பவானி அம்மனை தரிசித்தால் பல விதமான நன்மைகள் கைகூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Updated On 1 Aug 2023 11:35 AM GMT
ராணி

ராணி

Next Story