இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சமீப காலத்தில் எல்லோராலும் போற்றி வணங்கப்படும் தெய்வமாக வாராஹி அம்மன் விளங்குகிறார். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு காலம் இருக்கும் என்று சொல்வார்கள். உதாரணமாக பரமஹம்சர், விவேகானந்தர் காலகட்டத்தில் காளி வெளிப்பட்டதாகவும், ஆங்கிலேயர்கள் காலகட்டத்தில் மாரியம்மன் வெளிப்பட்டதாகவும், மரத்திலிருந்து பால் வடிந்து மகிமை வெளிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படி இது வாராஹி அம்மனின் யுகம் என்றே சொல்லலாம். இந்த வாராஹி அம்மனின் சிறப்புகள் என்ன? வழிபடக்கூடிய முறைகள் என்ன? அருளும் பலன்கள் என்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

மனித உடலும், காட்டுப்பன்றி முகமும், கூர்மையான பற்களும்கொண்டு கைகளில் சங்கு, சக்கரம், உலக்கை, கலப்பை, அங்குசம், வாள், கேடயம், அரிவாள் என்று 8 ஆயுதங்களை ஏந்தி உக்கிர காட்சியில் விளங்குபவர்தான் வாராஹி அம்மன். சும்பன், நிசும்பன் ஆகிய இரு அரக்கர்களை வதம் செய்வதற்காக தோன்றிய 7 கன்னிப்பெண்களில் 5வது கன்னிப்பெண்ணாக தோன்றியவள். இவள் விஷ்ணுவின் தோற்றத்தில் உருவான சப்தமாதராவாள். இவளது ரதம் காட்டு பன்றியால் இழுத்து செல்லப்படும் கிரி சக்கரமாகும்.

இவள் உக்கிரமாக காணப்பட்டாலும், கோபத்தின் உச்சத்தை தொடுபவளாக இருந்தாலும், தன் பக்தர்களுக்கு அன்பை அள்ளி தரும் அன்பானவளாக இருக்கிறாள். லலிதா திரிபுரா சுந்தரி, லலிதா பரமேஸ்வரி, புவனேஸ்வரி என்று ராஜராஜேஸ்வரி அம்பிகைகளின் படைத்தலைவி ஆவாள். சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடி வந்தவள். அஷ்ட மாத்ரிகா வாராஹி, மஹா வாராஹி, அஸ்வரூட வாராஹி, வன வாராஹி, ராஜா மாதங்கி வாராஹி, தனு வாராஹி, ஸ்வர்ண வாராஹி, பிரத்யங்கிரா வாராஹி என்று வாராஹி அம்மன் எட்டு வடிவங்களை கொண்டுள்ளார்.

ராஜ ராஜ சோழனும் வாராஹி அம்மனும்

மூவேந்தர்களில் ஒருவரான ராஜ ராஜ சோழனின் இஷ்ட தெய்வமாக விளங்கியவள் இந்த வாராஹி. மன்னர் ராஜ ராஜ சோழன் எந்தக் காரியத்தை தொடங்குவதற்கு முன்னரும் வாராஹி அம்மனை வழிபட்ட பின்னர்தான் தொடங்குவாராம். அப்படி அவர் ஆட்சி செய்த காலத்தில், அவர் கைப்பற்றிய பல இடங்களில் வாராஹியை வைத்து பிரதிஷ்டை செய்ததால் ஆங்கிலேயர்களால் அந்த இடங்களை கைப்பற்ற முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடுங்கோபம் கொண்ட ஆங்கிலேயர்கள், வாராஹியை வழிபடுபவர்களை கொலை செய்ய தொடங்கினார்களாம். இதனால் பயம் கொண்ட மக்கள் வாராஹியை ரகசியமாக வழிபடத் தொடங்கினராம்.


ராஜ ராஜ சோழன் மற்றும் வாராஹி அம்மன்

இப்படி வாராஹி அம்மன் ராஜ ராஜ சோழனுக்கு இஷ்ட தெய்வமாக மாறியதற்கான காரணம் பார்க்கையில், மன்னர் ராஜ ராஜ சோழன் சிவனுக்கென்று தனியொரு ஆலயம் அமைக்க மிகவும் விருப்பமாயிருந்தார். ஆனால் அவருக்கு சோழ தேசத்தில் எந்த இடமும் மனதிற்கு திருப்தி தரவில்லை. இப்படி குழப்பத்தில் இருந்த மன்னனின் கனவில் தோன்றிய வாராஹி ‘நாளை நானே உனக்கொரு சிறந்த இடம் காண்பிக்கிறேன்’ என்று கூறினாராம். அதேபோல் மறுநாள் ராஜ ராஜ சோழன் உலா சென்றபோது பன்றி ஒன்று குறிப்பிட்ட இடத்தில் தனது கால்களை வைத்து நிலத்தை கீறியதாம். அதுமுதலே பன்றி ரூபத்தில் தோன்றிய வாராஹியை தனது இஷ்ட தெய்வமாக வணங்க தொடங்கினாராம் ராஜ ராஜ சோழன். வாராஹி மேல் அளவு கடந்த பக்தி கொண்ட ராஜ ராஜ சோழன், தான் கட்டிய தஞ்சாவூர் பெருவுடையார் ஆலயத்தில் வாராஹி அம்மனுக்கென்று தனியாக பெரிய சன்னதியை அமைத்ததோடு, மற்ற கோயில்களிலும் வாராஹிக்கு தனி சன்னதியை அமைத்துள்ளார்.


தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் வாராஹி அம்மனுக்கென்று அமைக்கப்பட்ட பெரிய சன்னதி

வாராஹி அம்மன் கோயில்கள்

விழுப்புரம் அடுத்த சாலாமேடு பகுதியில் அமைந்திருக்கும் அஷ்ட வாராஹி அம்மன் கோயில், தமிழகத்தில் வாராஹிக்கு அமைக்கப்பட்ட முதல் ஆலயம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இதுதவிர சென்னை, திருமுல்லைவாயல், திருவொற்றியூர், காஞ்சிபுரம் என தமிழகத்திலும், ஆந்திரா, கர்நாடகா என்று வெளி மாநிலங்களிலும் மற்றும் நாடு முழுவதும் பல பகுதிகளில் வாராஹிக்கென்று தனி ஆலயங்கள் உள்ளன. ஆனால் காசியில் எழுந்தருளியிருக்கும் வாராஹி அம்மன் கோயிலில் வாராஹி அம்மனை கதவுகளை திறந்து நேரடியாக தரிசிக்க முடியாது. கதவில் உள்ள துவாரங்கள் வழியாகவே வழிபட முடியும்.


அலங்கார தோற்றத்தில் வாராஹி அம்மன்

வாராஹியின் சிறப்புகள்

ஆக்கிரோஷமாக காட்சியளிக்கும் வாராஹி, அநியாயங்கள் செய்பவர்களையும், அதர்மம் செய்பவர்களையும், ஆட்டி வைக்கும் தாயாவாள். போட்டி, பொறாமை, வஞ்சகம், பழி தீர்த்தல் என்று உட்பகையையும், சண்டை போடுதல், திட்டுதல் என்று வெளிப்பகையையும் கொண்டு விளங்கும் எதிரிகளை எதிர்ப்பவள் இந்த வாராஹி அம்மன். எது போனாலும் பெறலாம் ஆனால் தன்மானம் போனால் பெற முடியாது என்று பிரபலமான வாக்கியம் ஒன்றுண்டு. அப்படி அந்த தன்மானம் போகாமல் நம் எதிரிகளிடமிருந்து நம்மை காப்பாற்றி நம் தன்மானத்தை தக்கவைத்து கொள்ள உதவும் தாயாக, தோல்வியின்றி அநேகத்தில் வெற்றியை பரிசாக அளிக்கும் தாயாக, நிறைவான செல்வத்தை நிறைந்து தருபவளாக இருக்கிறாள் வாராஹி. இவள் சாதாரண பிரச்சினைகளுக்கு மட்டும் தீர்வளிக்காமல் எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அதை தீர்த்தெறிந்து தீர்வு அளிக்கும் பெண் தெய்வம். விவசாயத்தை செல்வ செழிப்புடன் வளர்க்க செய்பவள். இந்த வாராஹியை மனதார வழிபடுவதால் செல்வ வளம் பெருகும். வேலை வாய்ப்பு கிடைக்கும். தோஷம் நீங்கும். திருமணம் கைகூடும். நோய் குணமாகும். செய்யும் தொழிலில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். கடன் சுமை நீங்கும். சொந்த வீடு அமையும். வழக்கில் வெற்றி கிடைக்கும். பேச்சு திறன் சிறக்கும். பயம் நீங்கும். பண கஷ்டம் அகலும். மன நோய் நீங்கும். பில்லி, சூனியம், ஏவல் போன்ற பல தீய சக்திகளை எதிர்த்து நிற்கும் எதிரி.


வாராஹி அம்மனுக்கு பூஜை செய்யும் காட்சி

வாராஹியை வழிபடும் முறை

பொதுவாகவே வாராஹியை வீட்டில் வைத்து வழிபடலாமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆனால் நல்லெண்ணம் கொண்டு நீதிக்கு புறம்பாக செயல்படாமல் உண்மையாக செயல்படும் அனைவருக்குமே வாராஹி அன்பானவள்தான். அதனால் வாராஹியை யார் வேண்டுமானாலும் வழிபடலாம். இந்த வாராஹியை சூரியன் உதிப்பதற்கு முன்பாக காலை 4 முதல் 6 மணிக்குள் அல்லது மாலை 6 மணிக்கு மேல் மண் விளக்கோ, பஞ்சலோக விளக்கோ, அல்லது வெள்ளி விளக்கோ ஏற்றி வழிபடலாம். வாராஹிக்கென்று தனியாக ஒரு விளக்கை எடுத்துவைத்து, நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, மல்லிகை பூ வைத்து, இத்தீபத்தில் எழுந்தருளி அருள் புரியுங்கள் என்று மனதார வணங்க வேண்டும். வாராஹியின் மூல மந்திரமான ‘ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி…’ என்ற திருமந்திரத்தை 108 அல்லது 1008 முறை போற்றி பாடி அந்த விளக்கை நோக்கி கூறி நம் பிரார்த்தனைகளை அவளிடம் ஒப்படைத்து மனதார பிரார்த்திக்க வேண்டும். இதுதவிர வாராஹி அம்மனுக்குள்ள காயத்ரி மந்திரம் மற்றும் மஹா மந்திரத்தை கூறியும் வழிபடலாம். காட்டு பன்றியின் ரூபத்தை கொண்டுள்ளதால் வாராஹிக்கு கிழங்கானது மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக சர்க்கரைவள்ளி கிழங்கை வாராஹிக்கு நைவேத்தியமாக படைப்பது சிறப்பானது. இதுதவிர கருப்பு உளுந்து வடை, ஆமை வடை, பயறு வகையில் ஒன்றான சுண்டல், வெண்ணை கூடிய தயிர் சாதம், கரும்பு, அன்னாசி பழம், மாதுளை பழம் போன்றவற்றையும் நைவேத்தியமாக படைக்கலாம். வாராஹிக்கு நீல நிற சங்கு பூ, செம்பருத்தி பூ, செவ்வரளி மலர் போன்றவை உகந்த மலர்களாக உள்ளன. மேலும் வாராஹி அம்மனுக்கு பஞ்சமி, பௌர்ணமி, அஷ்டமி, தசமி ஆகிய நாட்கள் மிகுந்த விசேஷ நாட்களாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக தேய்பிறை பஞ்சமி வாராஹிக்கு மிகுந்த விசேஷ நாளாகும்.


வாராஹி அம்மனுக்கு செய்யப்படும் வழிபாட்டு முறைகள்

வாராஹி அம்மனை 5 பஞ்சமி அல்லது 5 ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் முடியில் நெய் விளக்கேற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும். இது தவிர வாழை இலை போட்டு அதில் பச்சரிசி வைத்து தேங்காயை இரண்டாக உடைத்து, அதில் இலுப்பெண்ணெய் ஊற்றி சிவப்பு திரி போட்டு விளக்கேற்றினால் கஷ்டங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. இப்படி பல சிறப்புகளை பெற்றுள்ள வாராஹி, தன்னை வணங்கும் உள்ளங்களை கைவிடாது தாங்குபவளாக இருக்கிறாள். குறிப்பாக பெண்களுக்கு ஒரு தாயாக, பெண்களின் குமுறல்களையும் கஷ்டங்களையும் செவிகொடுத்து கேட்டு ஆறுதல் சொல்லி அரவணைத்து, கவலைகளை தூக்கி வீசி தைரியமாக செயல்படுவதற்கு பெரும் துணையாக இருக்கிறாள். வாராஹியை இறுகப்பற்றுங்கள், மனஇறுக்கத்தை அகற்றுங்கள்!

Updated On 6 Dec 2023 7:36 AM GMT
ராணி

ராணி

Next Story