இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

வீடு புகுதல், மனை வாங்குதல், திருமணம் செய்தல் என்று, எந்த காரியமானாலும் நல்ல நேரம் பார்த்து செயலை தொடங்குவது வழக்கம். இதில் குறிப்பாக மனை மற்றும் வீடு வாங்கும்போது பலரும் கருத்தில் கொள்வது வாஸ்துதான். ஒவ்வொரு ராசிக்கும், ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஏற்ப வாஸ்த்துவானது மாறுபடும். அப்படி வாஸ்து பார்க்கும் முறைகள் என்ன? படுக்கையறையில் வைக்கக்கூடாத பொருட்கள் என்ன? உடல் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க சிறந்த வாஸ்து எது? தெருக்குத்தில் மனை மற்றும் வீடு வாங்கலாமா? என்று வாஸ்து குறித்த கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்துள்ளார் ALP ஜோதிடர் சம்பத் சுப்ரமணி.

வாஸ்து பார்ப்பதன் வழிமுறைகள் என்ன?

வாஸ்து என்பது மிகப்பெரிய அறிவியல். வாஸ்து என்னும் சொல் ‘வஸ்து’ என்னும் சொல்லில் இருந்து பிறந்தது. வாஸ்து என்பது மனிதனின் தலை, மார்பு, தொடை, கால் பகுதி அமைந்திருக்கும் உடலை குறிக்கிறது என்று முன்னோர்கள் எடுத்துரைத்துள்ளனர். வாஸ்து பார்ப்பதில் பல வழிமுறைகள் உள்ளன. உதாரணமாக வடமேற்கு திசையின் மூலையில் படிக்கட்டு வைத்து வீடு கட்டியிருந்தால் நிச்சயம் அந்த குடும்பத்தில் விவாகரத்து ஏற்பட்டிருக்கும் அல்லது பிற மதம் உடையவர்களை காதல் திருமணம் செய்திருப்பார்கள் அல்லது பெருமளவில் பணம் இழந்திருப்பார்கள். மேலும் அக்குடும்பத்தில் நீதிமன்ற வழக்குகள் இருக்கும். நிச்சயமாக நிம்மதி இருக்காது. அக்குடும்பத்தில் இருப்பவருக்கு சர்க்கரை நோய் இருக்கும். காதல் வயப்பட்டவர்கள் குடியிருப்பார்கள். தற்கொலை எண்ணத்தை தூண்டும். பணத்தை விரயம் செய்யும். மூத்த குழந்தையின் வாழ்க்கை விவாகரத்தில் முடியும். வீட்டில் நன்றாக படிப்பவர்களாக இருந்தாலும் படிக்க முடியாது. அதேபோல தென்கிழக்கு திசையின் மூலையில் லிஃப்ட், வீட்டினுள் தென்கிழக்கு திசையில் படிக்கட்டு அமைத்தாலும் படிப்பு தடைபடும்.


பார்க்கிங் ஏரியா மற்றும் வீட்டின் சமையலறை

நம் உடல் உறுப்புகள் எந்தெந்த பகுதியில் இருக்க வேண்டுமோ அதேபோல்தான் நாம் கட்டும் வீடும் எது எது எந்தெந்த பகுதியில் அமைய வேண்டும் என்பதை கவனித்து கட்ட வேண்டும். அப்படி நாம் கட்டும் வீட்டின் தலைவாசல் சரியான திசையில் அமையாவிட்டால் அவ்வீட்டின் தலைமகன் பொறுப்பற்றவராக இருப்பார். இப்படி நம் வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும், திசை வேறுபட்டால் ஒவ்வொரு தடை ஏற்படும். நம் முன்னோர்கள் வீட்டினுள் வாகனத்தை நிறுத்தமாட்டார்கள். அடுப்பறையில் அடுப்பை தவிர்த்து வேறு எந்த சமையல் பொருளும் வைக்கமாட்டார்கள். இப்படி இருந்ததற்கு அறிவியல் பூர்வமாக பல காரணங்கள் உள்ளன. ஆனால், அந்த அறிவியல் பக்கத்தை அறியாமல், அறிந்தும் அதை நம்பாமல் வீட்டுக்குள் வாகனம், சமையலறையில் ஃப்ரிட்ஜ், ப்யூரிஃபையர் என்று அனைத்தும் தற்போது வீட்டுக்குள் வைக்கப்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களின் வடக்கு சுவர் மற்ற வீட்டினரோடு ஒட்டி இருந்தாலோ அல்லது ஒரு ஜன்னல் கூட இல்லை என்றாலோ அவ்வீட்டில் குடியேறியவுடன் வண்டி, நகை, வேலை இழப்பு ஏற்படுவதுடன், பொருட்களை விற்று சாப்பிடக்கூடிய நிலைமைக்கு பொருளாதாரம் பாதிக்கப்படும்.

வீட்டின் படுக்கையறை திசை மாறி இருந்தால் தம்பதியினருள் சண்டை சச்சரவு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இது உண்மை தானா?

முற்றிலும் உண்மைதான். இங்கு படுக்கையறை என்பது மர்ம ஸ்தானத்தை குறிக்கின்றது. அடுத்த வாரிசை ஏற்படுத்தக்கூடிய தாம்பத்தியம் மேற்கொள்ளும் படுக்கையறையானது எந்த உறவினரும் வராத அறையாக இருக்க வேண்டும். குறிப்பாக அந்த அறைக்கு வாசல் இருக்கக் கூடாது. அதேபோல வாஸ்துவில் நைருதி என்று சொல்லக்கூடிய திசையில் வாசல் இருக்கக் கூடாது. அந்த அறையானது முற்றிலுமாக கணவன் மனைவி சந்திக்கும் அறையாக மட்டும்தான் இருக்க வேண்டும். தென்மேற்கு மூலையில் படுக்கையறை அமைந்திருந்தால் சிறப்பாக இருக்கும்.

படுக்கையறையில் எந்த பொருட்களை வைக்கக்கூடாது?

கண்ணாடிக்கு பிரதிபலிக்கும் தன்மை இருப்பதால் படுக்கையறையில் கண்ணாடி வைக்க கூடாது.

உடல் பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்கான வாஸ்து என்ன?

வடமேற்கு என்று சொல்லகூடிய திசையில் தவறான தெருக்குத்து, அதாவது வடமேற்கு வட தெருக்குத்து இருந்தால் நிச்சயம் சர்க்கரை நோய் ஏற்படும். அறிவியல் ரீதியாக பார்க்கையில் மனம் பாதித்தால்தான் உடல் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படி கடன், காதல் என்று பல விஷயங்கள் முதலில் பாதிப்பது என்னவோ மனதைதான். அப்படி மனது பாதிக்கப்படுவதால்தான் உடல் உறுப்புகளும் பாதிப்படைகின்றன. இப்படி மனம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணம் வடமேற்கு திசையில் லிஃப்ட் அல்லது படிக்கட்டுகள் அமைப்பதுதான். இந்த திசையில் அமைப்பதன் மூலம் மக்கள் மற்றவர்களை நம்பி எளிதில் ஏமாந்து விடுவார்கள். எனவே வடமேற்கு பகுதியை மிகவும் கவனமாக பார்த்து அமைக்க வேண்டும்.


பண நோட்டுகள் மற்றும் கணவன் மனைவிக்கு இடையே விரிசல் ஏற்பட்டது போன்ற காட்சி புகைப்படம்

தென்மேற்கு பகுதி பாதிக்கப்பட்டால் நிச்சயமாக முதுகுத்தண்டில் பாதிப்பு ஏற்படும். கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் ஏற்படும். வீட்டில் நோய் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் வீட்டின் வாசலானது உச்ச வாசலாக இருக்க வேண்டும். கிழக்கு பார்த்த வீடாக இருந்தால் வடக்கிலும், வடக்கு பார்த்த வீடாக இருந்தால் கிழக்கிலும், மேற்கு பார்த்த வீடாக இருந்தால் வடக்கிலும், தெற்கு பார்த்த வீடாக இருந்தால் கிழக்கிலும் உச்சவாசலை அமைக்க வேண்டும். நீச்ச வாசல் நிச்சயம் நோயை ஏற்படுத்தும். மேலும், நோய் ஏற்படாமல் இருக்க தெற்கு பக்கத்தில் நிச்சயம் ஒரு ஜன்னலாவது இருக்க வேண்டும். உதாரணமாக ஃபிளாட்டில் கிழக்கு திசை நோக்கிய வீட்டில் உள்நுழைந்தவுடன் இடதுபுற சுவரானது பக்கத்து வீட்டிற்கு ஒட்டி இருந்தால் அந்த வீட்டில் நிச்சயம் ஒரு நோயாளி குடியிருப்பார். பக்கவாதம், ஸ்ட்ரோக் ஏற்படும். அதுவே தெற்கு பக்கத்தில் ஜன்னல் அல்லது வாசல் இருந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். அதுவே தெற்கு பகுதியில் ஜன்னல் இல்லாமல் நைருதி என்று சொல்லக்கூடிய இடத்தில் வாசல் இருந்தால் அங்கு வசிப்பவர்கள் நிச்சயம் நோயாளியாகத்தான் இருப்பார்கள்.

தெருக்குத்து திசையில் வீடு மற்றும் மனை வாங்குவதற்கு யோசிப்பது ஏன்?

தெருக்குத்து என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால், அந்த தெருக்குத்தை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணத்திற்கு வடகிழக்கு திசையில் நல்ல ஈசான்ய தெருக்குத்து நிறைந்த மனை இருந்தால் அப்போது மனையின் அளவை கருத்தில் கொள்ள வேண்டும். 50க்கு 50, 50க்கு 40 என்ற கணக்கில் மனை இருந்தால் தெருக்குத்தில் வாங்கலாம். அதுவே 20க்கு 30, 30க்கு 60, 30க்கு 30, 25க்கு 55 என்ற கணக்கில் இருந்தால் தெருக்குத்தானது ஆபத்தை அளிக்கும். தெருக்குத்து மற்றும் தெரு பார்வை என்பது முற்றிலும் வேறானது. தெருக்குத்தென்பது தவறான விஷயங்களை ஏற்படுத்தும். தெருக்குத்தானது ஒரு மனை அல்லது வீட்டை குத்தி திரும்பும் போது மனையின் அகலம் நீளமாக இருந்தால் அந்த தெருக்குத்தானது எந்தஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. மாறாக பணத்தை கோடி கோடியாக கொட்டித் தரும். இதுவே 30க்கு 30 மனைக்கு நேராக 30 அடி சாலை இருந்தால் அது ஈசான்ய தெருக்குத்தாக இருந்தாலும், அது பாதிப்பை தரும். தெருப்பார்வை என்பது மனைக்கு அல்லது வீட்டிற்கு நேராக தெரு அமையாமல் பக்கத்தில் அமைந்திருக்கும். நல்ல தெருக்குத்தாக இருந்தால் கோடியில் புரள வைக்கும். தவறான தெருக்குத்தாக இருந்தால் தெருக்கோடிக்கு தள்ளும்.

Updated On 1 Jan 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story