இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நவராத்திரி என்பது சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் இந்து சமய விரதங்களில் ஒன்று. இந்த நாட்களில் பெண்கள் விரதம் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூக்களால் அம்மனுக்கு மாலை அணிவித்து காலையும், மாலையும் வழிபடுவர். இந்த நாட்களில் வீடுகளில் கொலு வைத்து வழிபடுவது நவராத்திரியின் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. நவராத்திரியை எப்படியெல்லாம் கொண்டாடலாம்? அதிலிருக்கும் சிறப்புகள் என்னென்ன என்பது குறித்தெல்லாம் விளக்குகிறார் ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த்.

எத்தனை வகையான நவராத்திரி இருக்கிறது?

4 வகையான நவராத்திரி இருப்பதாக சொல்வார்கள். ஒவ்வொரு மாதமுமே அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து 9 நாட்களுமே நவராத்திரிதான். எப்படி மாதந்தோறும் சிவராத்திரியும் பிரதோஷமும் வருகிறதோ, அதுபோலதான் நவராத்திரியும். நவம் என்று சொன்னாலே 9 என்று பொருள்படும். 9 என்பது உடலிலிருக்கும் 9 துவாரங்களை குறிக்கும். அதேபோல் புதுமையையும் குறிக்கும். ராத்திரி என்று சொன்னால் நம்மை நாமே மீண்டும் பலப்படுத்தி, வளப்படுத்திக்கொள்வது என்று அர்த்தம். ‘ரா’ என்றால் அக்கினி என்று பொருள்படும். அதனால்தான் அரகரா என்ற வார்த்தையும் பயன்பாட்டில் இருக்கிறது. ‘திரி’ என்றால் நம்மை நாம் வலுப்படுத்திக்கொள்வது. இரவிலே நாம் தூங்கும் தூக்கம்தான் பகலிலே இயங்கக்கூடிய சக்தியை தருகிறது. சித்திரையில் ஒரு நவராத்திரி வரும். அது சூரியன் உச்சமடையக்கூடிய, விழிப்படையக்கூடிய நிலையிலே வருவது. சித்திரை அமாவாசைக்கு அடுத்த 9 நாட்களுக்கு பிறகு வரக்கூடியது ராமன் மற்றும் அனுமனின் ஜனனம். அதாவது உலகத்திலே ஒரு பொருள் ஜனனிக்கிறது என்பதை உணர்த்தும் குறியீடாக இது பார்க்கப்படுகிறது. இங்கு நாம் கொண்டாடும் நவராத்திரியை வட இந்தியாவில் அஸ்வினி நவராத்திரி என்று சொல்வார்கள். இந்த நவராத்திரியில் மகிஷாசுரமர்த்தினம் நடைபெற்றதாகவும், ராவணன் தன் உடலைவிட்டு செல்லக்கூடிய நிலையை உணர்த்துவதாகவும் இருக்கிறது. ஒரு செயலின் துவக்கம் - முடிவுநிலை - மீண்டும் துவக்கம் என்பது துர்க்கையின் செயலாக இருக்கிறது என்பதை உணர்த்தும் குறியீடாக இது பார்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு இடத்தில் பயிர் வளர்ந்து அது மரித்து மீண்டும் அந்த இடத்தில் முளைக்கிறது. அதுபோலத்தான். காலச்சூழலை உணர்த்துபவளாக விளங்கும் துர்க்கை, எதையும் அழிப்பது கிடையாது. இது தவிர பௌஷ நவராத்திரி என ஒன்று உள்ளது. இது இன்னும் சில மாதங்களில் வரும். அதையும் தாண்டி ஒரு ரகசிய நவராத்திரி உண்டு. அதன்பெயர் சாகம்பரி நவராத்திரி. இதை சாதாரணமாக எல்லோரும் வழிபட முடியாது.


ரகசிய நவராத்திரி என்று சொல்லப்படுகிற சாகம்பரி நவராத்திரி வழிபாடு

இந்த ஆண்டு நவராத்திரியின் சிறப்பு என்ன?

நவராத்திரி நிகழக்கூடிய காலகட்டம் என்பது புரட்டாசி மாதம். சூரியன் கன்னிராசியிலே வீற்றிருக்கிறார். குரு ரிஷபத்தில் இருக்கிறார். அவருடைய 5ஆம் பார்வை சூரியன்மேல் படுகிறது. எப்போது சூரியனும் குருவும் சம்பந்தப்படுகிறார்களோ அதை ஜோதிடத்திலேயே சிவ ராஜ யோகம் என்கின்றனர். நாம் இறைவனைத் தேடுவது ஒரு காலம் என்றால், இறைவன் நம்மை தேடிவந்து அருள் வழங்குவது சிவ ராஜ யோகம். சூரியன் சிவத்தை குறிக்கும். அதற்கு விவஸ்வான் என்று பெயர். எனவே இந்த ஆண்டு யார் நவராத்திரியை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு எளிதாக ஒரு மந்திர சித்தி ஏற்படும். அவர்கள் கேட்கக்கூடிய பலனானது அடுத்த ஆண்டு கட்டாயம் வாழ்க்கையில் வந்தே தீரும் என்பது இந்த ஆண்டு நவராத்திரியின் சிறப்பு என்று சொல்லலாம். ஏனென்றால் குரு மீண்டும் இதேபோல் வருவதற்கு 12 ஆண்டுகள் ஆகும். இந்த ஆண்டு அமாவாசையும் ஒரு கிரகணத்திலே வருகிறது. இந்த கிரகண புண்ணிய காலத்தில் செய்யக்கூடிய தானமும், தர்மமும் மிகுந்த பலன் தரும்.


சாகம்பரி தேவியாக அவதரித்த துர்கை

திதி, தேவதைகள் பற்றி சொல்லுங்கள்...

நவராத்திரிக்கு படி அமைத்து பூஜை செய்ய முடியவில்லை, கும்பம் வைக்ககூடிய வழக்கம் இல்லை அல்லது கூட்டுக்குடும்பத்தில் வசிக்கிறோம் என்பவர்கள் துர்க்கை அல்லது பராசக்தியின் ஒன்பது பெயர்களில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நாள் சொல்லலாம். முதல் நாளில் ஷைலபுத்ரி என்ற பெயரை அவ்வப்போது சொல்லலாம். இந்த ஷைலபுத்ரி இமயமலையில் தோன்றியதாக சொல்லப்படுகிறது. இவளுக்கு சிவப்பு நிறத்தை சொல்கின்றனர். இரண்டாம் நாள் பிரம்மச்சாரினி என்ற பெயரை சொல்லலாம். அதாவது வெண்ணிற ஆடை அணிந்து, கையிலே ஜெபமாலை பிடித்துக்கொண்டு வெட்டவெளியை நோக்கி தவம் செய்கிறாள். பிரபஞ்சத்தை நோக்கிய தேடலில் இருப்பவள் இவள். இவளுக்கு நீல நிறத்தை சொல்வதுண்டு. அடுத்து சந்திரகாண்டா என்று சொல்கின்றனர். இதற்கு சந்திரனை தனது மணியாக கொண்டவள் என்றும், சந்திரன் போன்ற நெற்றியை கொண்டவள் என்றும் சொல்லலாம். ஒரு மனிதனுக்கு மதி என்பது மிகவும் முக்கியம். அதனால்தான் விதியையும் மதியால் வெல்லலாம் என்று சொல்கின்றனர். சந்திரகாண்டா என்ற தேவிக்கு மஞ்சள் நிறம் பிடிக்கும் என்றும் சொல்வதுண்டு. அடுத்ததாக கூஷ்மாண்டா என்ற தேவி வருகிறாள். அவள் பூக்களை மிகவும் விரும்புபவள். வாழ்க்கையில் நறுமணம் வீசவேண்டும் என்று அனைவருமே நினைக்கிறோம். இவளுக்கு பச்சை நிறத்தை சொல்கிறார்கள்.


நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய தேவதைகள்

ஐந்தாவது நாள் வரக்கூடியவள் ஸ்கந்தமாதா. சிங்கத்தின்மீது அமர்ந்திருப்பவள் இவள். ஒருவருக்கு ஜாகத்திலே 12 கட்டத்தையும் உற்பத்தி செய்பவள். யாருக்காவது ஜாகத்தில் அதிக தோஷம் இருந்தால் அவர் அடிக்கடி ஸ்கந்தமாதாவின் பெயரை சொல்லிவந்தாலே அந்த தோஷமே அகன்றுவிடுமாம். இவளுக்கு க்ரே நிறத்தை சொல்கிறார்கள். அடுத்தது காத்யாயனி. இவளுக்கு மெல்லிய வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தை சொல்கின்றனர். அடுத்ததாக வரக்கூடியவள் காளராத்திரி. கழுதையை இவளுடைய வாகனமாக சொல்வார்கள். காப்பாற்றக்கூடியவள், கருணைமிகுந்தவள். வெண்மைத்தன்மை இவளுக்கு பிடிக்கும் என்று சொல்வார்கள். இவளைத் தாண்டினால் வரக்கூடியவள் மகா கௌரி. கௌ என்றால் பசுமாட்டை குறிக்கும். மகா கௌரி என்று சொன்னால் கன்றினை ஈன்ற பசு காப்பதுபோல காக்கக்கூடியவள் இவள். சித்திதாத்ரிக்கு பிடித்த நிறம் ஸ்கை ப்ளூ. வாழ்க்கையில் ஒருநிலையை தாண்டிவிட்டால் எல்லையற்றதை தேடத் தொடங்கிவிடுவோம். அவள்தான் சித்திதாத்ரி. அடுத்து விஜயதசமி. பராசக்தியை நினைக்க நினைக்க வாழ்க்கை இனிமையாக மாறத் தொடங்கிவிடும். வாழ்க்கையில் பட்டுப்போய், வாடிப்போனவர்கள் துலுக்கானத்தம்மன் (துளிர் கானத்து அம்மன்) ரேணுகை பஞ்சகத்தை பாட மிகப்பெரும் செல்வம் வந்துவிடும். இது வள்ளல் பெருமான் பாடிய பாடல்.


நவராத்திரியில் பலன் அருளும் பராசக்தி

நவராத்திரி நேரத்தில் வள்ளல் பெருமானின் பாடலைக் கேட்டாலே பெரிய பலன் கிடைக்கும். அவர் இருந்த காலத்தில் சென்னை அவ்வளவு வளர்ச்சியடையவில்லை. அந்த காலத்தில் அவர் இருந்த இடம் சின்னக்கடை மாரியம்மன் கோவில் இருந்த பகுதி. அதுதான் இப்போது சௌகார்பேட்டையாக இருக்கிறது. அந்த பகுதியில் இன்று நிறைய செல்வந்தர்கள் மற்றும் ஆன்மிக அன்பர்கள் இருக்கின்றனர். சின்னக்கடை மாரியம்மன் என்கிற ரேணுகா பரமேஸ்வரி அங்கு வீற்றிருப்பதால்தான் பிறருக்கு உதவக்கூடிய வசதியானது அங்குள்ளவர்களுக்கு கிடைத்திருக்கிறது. ரேணுகா பரமேஸ்வரிக்கு பாட்டு பாடியபின், வள்ளலார் வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு, சித்தி வளாகம் என்ற இடம் அமைந்தது. இன்றும் துருப்பிடிக்காத இரும்பு அங்கு இருப்பதாக சொல்வார்கள். பராசக்தி எங்கு இருக்கிறாளோ அங்குதான் பிறருக்கு உதவமுடியும். எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் அன்னை நாராயணியை நினைக்கலாம். அன்னை மகாலட்சுமியின் கருணையை பெற தாமரைப்பூவை மனதில் நினைத்துக்கொண்டு அவளுடைய மந்திரத்தைக் கேட்க வாழ்க்கையில் பெரும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மேலும் மந்திரத்தை சொல்லும்போது அருகிலேயே வில்வ இலைகளை வைத்துக்கொண்டால் இதன் பலன் பெருமளவில் பெருகுவதை அனுபவரீதியாக உணரமுடியும். மேலும் வில்வ இலைகளால் மகாலட்சுமியை வழிபடுவதும் ஆகச்சிறந்தது.

Updated On 3 Oct 2024 6:08 AM GMT
ராணி

ராணி

Next Story