இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினமும் மற்றொரு உயிரை சார்ந்துதான் இயங்குகின்றது. எந்தவொரு உயிராலும், இயற்கையாலும் தனித்து செயல்பட முடியாது. இப்படி மனிதனின் வாழ்க்கை மீதும், இயற்கை மீதும் உள்ள கருத்தும், கொள்கைகளும் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன. குறிப்பாக, மனிதன் இயற்கையுடன் கொண்டிருக்கும் தொடர்பு, நேர்மறை எண்ணங்கள் போன்றவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பேசும் ஒரு கொள்கைதான் ‘தாவோயிசம்’. இதுகுறித்து நம்மிடம் தெளிவாக உரையாடுகிறார் ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த்.

சமீபநாட்களாக தாவோயிசம் பற்றி அதிகம் பேசப்படுகிறது... தாவோயிசம் என்றால் என்ன?

தாவோயிசம் என்றால் பாதை என்று அர்த்தம். சித்தர்களிலேயே வெளிப்படையாக அனைத்தையும் சொன்னவர் போகநாதர் என்று சொல்லக்கூடிய போகர். இதில் ‘நாதர்’ என்று சொன்னால் சித்தர் கூட்டத்திற்கு தலைவர் என்று பொருள்படும். போகர் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்தார் என்றும், இல்லாவிட்டால் அவர் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு சென்றிருக்கலாம் என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. உதாரணத்திற்கு, தமிழில் நீ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தமோ அதேதான் சீனமொழியிலும். இதுபோல நிறைய சீனமொழி வார்த்தைகளும் தமிழ்வார்த்தைகளும் ஒரேமாதிரித்தான் இருக்கும். போகர் சித்தர் எதற்கு பிரபலம் என்று முதலில் பார்க்கவேண்டும். மனிதர்களின் முக்கியமான தேவை என்றால் ஒன்று பொருளாதாரம், மற்றொன்று ஆரோக்கியம். சமீப காலமாக நிறைய மக்கள் பல்வேறு நோய்களால் அவதியுற்று வருகின்றனர். இதுபோன்றோருக்கு பிணி நீக்கும் மருந்துகள் குறித்து அதிகம் பேசியவர்தான் போகர். ஏனென்றால் போகர் இந்தியா வந்தபோது ஏதோ ஒரு காரணத்தால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. அப்போது அவர், தற்போது நாமக்கல் மாவட்டத்திலிருக்கும் ராசிபுரம் என்ற ஊருக்கு செல்கிறார். அங்கு காட்டுக்குள் வேடவ கோலத்திலிருக்கும் முருகனை தரிசிக்கிறார். அவரை பார்த்தவுடன், ‘அப்பா முருகா! எனக்கு உடல்நிலை சரியில்லையே! ஏதேனும் ஒரு நலனை தா!’ என்று கேட்கிறார். முகுந்தன் - ருத்ரன் - கமலாலயன் என்கிற ஆக்கல் - அழித்தல் - காத்தல் என்ற மூன்று தன்மைகளை உடைய முருகன் வழிகாட்டுகிறார். அதன்பேரில் அங்கே சிவகிரி என்ற பகுதியில் வாழ்ந்துவந்த 11 அகத்தியர்களில் ஒருவரான ஆதி அகத்தியரை பார்க்கிறார். வடமொழியில் சொற்கள் ‘அ’ என்பதில் தொடங்கி ‘க’ என்பதில் முடியும். அ என்பது மூலாதாரம். ‘ம்’ என்பது உலகத்தில் ஆக்கம் - அழிவு இரண்டையும் கட்டுப்படுத்தும் நிலை. இத்தகைய அகம் என்ற பொருள்கொண்ட அகத்தீஸரை தரிசிக்கிறார் போகர். அவரிடமும் ‘அகத்தீஸரே! எனக்கு உடல் ஆரோக்கியம் பெருகவேண்டும். அதற்கு ஒரு வழி சொல்லுங்கள்!’ என்று கேட்கிறார். அப்போது அகத்தியர் அவருக்கு பாதையை காட்டுகிறார். ‘பாதை’ என்பதற்கு ‘தாவோ’ என்று அர்த்தம்.


போகர் சித்தரால் உருவாக்கப்பட்டதுதான் தாவோயிசம்

அதாவது, ‘எல்லா நோய்க்கும் ஒரு மருந்துண்டு; ஆனால் எல்லாருக்கும் மருந்து கிடையாது’ என்கிறார் போகர். ஏனென்றால் இறைவன் உலகத்தில் மனிதனை படைத்தபோதே எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வை வைத்துவிட்டார். மனிதனுக்கு சிந்தனை சக்தியையும் கொடுத்திருப்பதால் அந்த தீர்வை தேடி அலைந்து கண்டுபிடிக்கவேண்டியது மனிதனின் பொறுப்பு. அந்த தீர்வை வெளியே தேடுவதா? அல்லது உள்ளே தேடுவதா? என்பதுதான் மனிதனின் கேள்வி. தாவோயிசம் கருத்துப்படி, தீர்வை வெளியே தேடிக்கொண்டே இருந்தால் வாழ்நாள் முழுவதும் தேடிக்கொண்டேதான் இருக்கவேண்டும் என்பதுதான். ஏனென்றால் மனிதனின் ஒவ்வொரு அவயமும் ‘நமச்சிவாயம்’ என்று சொல்லக்கூடிய பஞ்சாட்சரத்துடன் தொடர்புடையது. நக்காரம் என்பது மண் தத்துவம், மக்காரம் என்பது நீர் தத்துவம், சிக்காரம் என்பது நெருப்பு தத்துவம், வக்காரம் என்பது வாயு தத்துவம், யக்காரம் என்பது ஆகாயம் என்கிறோம். நமச்சிவாயத்தை போகர் எப்படி கையாளுகிறார் என்பதை பார்க்கலாம். பொதுவாகவே சீனர்கள் இதை ஐந்துவித சக்திகளாக பிரிக்கிறார்கள். உதாரணத்திற்கு நெருப்பிலிருந்து உலோகம் வரும். உலோகத்திலிருந்து நீர் வரும். நீரிலிருந்து மரம் வரும், மரத்தை எரித்தால் அது மண்ணாகப் போகும். இப்படி உலகமே ஒரு சுழற்சியில்தான் இயங்குகிறது. அதேபோல், உலோகத்தைக் கொண்டு மரத்தை வெட்டுகிறோம், நீர் இல்லாவிட்டால் மரம் வளராது. இப்படி உலகத்தில் ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்துதான் இருக்கும்.

இப்படி உடல் உறுப்புகளைப் பற்றி போகர் பேசும்போது, இதயம் என்பது ஆன்மாவின் இருப்பிடம். ஆன்மாவின் இருப்பிடம் என்று சொல்லும்போது மூளைக்கு எப்படி சிந்திக்கும் நியூரான்கள் உள்ளதோ அதுபோல் இதயத்திற்கும் உண்டு. நுரையீரலில் உலோகத்தன்மை உண்டு, மண்ணீரலில் மண்ணின் தன்மை உண்டு, கல்லீரலில் மரத்தின் தன்மை உண்டு, சிறுநீரகத்தில் நீரின் தன்மை உண்டு என்கிறார். இவற்றில் ஒன்று பழுதானாலும் உடல் முழுவதும் சீர்கெட்டுவிடும்.


மன அமைதிக்கு தியானம் செய்தல் வேண்டும்

அதனால்தான் மனிதன் முதலில் தன்னைத்தான் நேசிக்கவேண்டும் என்கிறார் போகர். ஒருவர் நல்லவர், கெட்டவர் என்று தன்னைத்தானே நினைத்துக்கொள்வதை முதலில் நிறுத்தவேண்டும் என்பதே தாவோயிசத்தின் முதன்மை கருத்து. நாம் வாழ்க்கையில் பண்ணக்கூடிய மிகப்பெரிய தவறு சுய மதிப்பீடு என்பதாகும். கடந்தகாலத்தை நினைத்து நாம் வருத்தப்படுகிறோம் அல்லது மகிழ்கிறோம், வருங்காலத்தை நினைத்து நாம் பயப்படுகிறோம், நிகழ்காலத்தில் நாம் யாரும் நிற்பது கிடையாது என்பது தாவோயிசத்தின் கருத்து.

இதனை சீனர்கள் ஒரு கதையாகவே சொல்கின்றனர். புலிப்பாணி சித்தர் என்று சொல்லக்கூடிய கன்பூசியஸ், புத்தர் மற்றும் போகர் மூவரும் கசப்பான ஒரு காபியை குடிக்கின்றனர். பொதுவாகவே சீனர்களின் காபி சற்று கசப்பாகத்தான் இருக்கும் என்பதால் அதை குடித்த புலிப்பாணி, நாட்டிலேயே லஞ்சம், ஊழல் பெருகியிருக்கிறது போல இந்த காபியும் கசந்திருக்கிறது என்று சொன்னாராம். அப்போது புத்தர் வாழ்க்கையே வெறுத்துப்போகிறது, அதனால் இதெல்லாம் மாயை என்றாராம். உடனே கன்பூசியஸ், இந்த கசப்புத்தன்மையை உணரக்கூடிய விழிப்புணர்வைத் தந்த இறைவனுக்கு நன்றி என்றாராம். அதேபோல் காபியில் இருக்கும் கசப்பை மாற்ற சர்க்கரையை சேர்ப்பதுபோல வாழ்க்கையில் ஒரு கசப்பு இருந்தாலும் அதை உணர்ந்து அதற்கு மாற்று தேட முயலவேண்டும் என்கிறது தாவோயிசம். தினமும் காலை எழுந்ததும் கண்ணாடியில் தன்னைத் தானே பார்த்து புன்னகைக்க பழகிக்கொள்ள வேண்டும். புன்னகை என்பது கண்களிலும் தென்பட வேண்டும். பிறரிடம் பாராட்டைத் தேடாமல் கண்களை மூடிக்கொண்டு தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு அவயத்திற்கும் நன்றி சொல்லவேண்டும் என்பதும் தாவோயிசத்தின் கருத்து. உடலில் இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல் ஆகிய 5 உறுப்புகளும் முக்கியமானவை. இவை ஐந்துக்கும் தினமும் நன்றி சொல்லவேண்டும். அப்படி சொல்லும்போது அவை சீர்பட்டு இயங்கத் தொடங்கும். தாவோயிசத்தின்கீழ் போகர் இன்னொரு கருத்தையும் சொல்கிறார். இப்படி நன்றி சொல்லும்போது வாழ்க்கையில் எத்தகைய சூழலையும் சந்திக்கத் தேவையான தன்னம்பிக்கை வளரும் என்கிறார்.


ஆரோக்கியத்தை மேம்படுத்த தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம்

ஒரு மனிதனிடம் என்ன லட்சுமி இல்லையென்றாலும் தைரியலட்சுமி இருந்தால் வாழ்க்கையில் வெற்றிபெறுவான் என்பதுதான் ஜோதிடத்தின் கருத்து. ஜோதிடம் என்றால் சோதித்து திடம் காண்பது, ஜாதகம் என்றால் அதில் நமக்கு என்ன சாதகம் என்பதை பார்த்துக்கொள்வது. ஜோதிடம் என்பது இந்தியாவிற்கு மட்டும் உட்பட்டது கிடையாது. சீனர்கள் அவர்களுடைய முறைப்படி ‘ஐச்சிங்’ என்று சொல்லக்கூடிய பழைய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஜோதிடத்தை பார்ப்பார்கள். நாம் தசாபுத்தி என்று சொல்லக்கூடிய வருடக்கணக்கின் அடிப்படையில் ஜோதிடத்தைப் பார்க்கிறோம். சீனர்கள் ‘strength of day' என்பதன் அடிப்படையில் தினசரி ஜோதிடம் பார்த்தாலும் அதை அணுகும்முறை வேறுபடுகிறது. உதாரணத்திற்கு, ஏழரை சனி வந்துவிட்டால் இங்கிருப்பவர்கள் பயப்படுவார்கள். அச்ச உணர்வு எப்போதும் சிக்கலை அதிகப்படுத்தும். ஆனால், நுரையீரல் தைரியத்தையும், சிறுநீரகம் கருணையையும் தரும் என்பது சீனர்களின் நம்பிக்கை. சீனர்கள் ராகு திசை என்பதை strength of day மாஸ்டரில் பார்த்துவிட்டு, தங்களுக்குள் இருக்கும் கருணையை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்பார்கள். ஏனென்றால் ராகு திசையின்போது பார்க்கும் எல்லாவற்றையும் வாங்கவேண்டும் என்ற ஆசை அதிகரிக்கும். அப்போது கருணை குறைந்துவிடும். ராகு என்றால் தலை மட்டும் இருக்கும், உடல் இருக்காது. அதனால் எல்லாவற்றையும் சாப்பிட தோன்றும், உடல் இல்லாததால் எப்போது நிறுத்தவேண்டும் என்று தெரியாது.

உதாரணத்திற்கு, சீனாவில் டிராகன் வருடத்தில் பிறந்தவர்கள், கருணையை பெருக்கிக்கொள்ள தினமும் ஒரு மரத்திற்கு தண்ணீர் ஊற்றி தனக்குள் கருணையை பெருக்குமாறு அதனிடம் வேண்டிக்கொள்வார்கள். இப்படி செய்யும்போது சிறுநீரகம் பலப்பட்டு கருணை குணம் அதிகரிப்பதாக அவர்கள் நம்புகின்றனர். அதேபோல், சனி திசை வரும்போது மூச்சை கவனிக்க பழகவேண்டும் என்பார்கள். வாதம், பித்தம், கபத்தில் சனியை கபம் என்பார்கள். எனவே அந்த குறிப்பிட்ட வருடம் வரும்போது சுவாச பயிற்சிக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பார்கள். அதை எப்படி தரவேண்டும் என்று பார்த்தால், நமது உடலை தலையிலிருந்து கால்வரை 12 பகுதிகளாக பிரிக்கலாம். அதில் பத்தாம் இடம் கர்மஸ்தானம். அதுதான் கால் மூட்டு. இது சனீஸ்வரருடன் தொடர்புடையது. எனவே மனிதன் சுவாசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தனது கால்களுக்கு பயிற்சி கொடுத்தால் அவனுடைய சனி திசை நன்றாக இருக்கும். மனிதன் முதுமையடைவதன் அறிகுறி முதலில் மூட்டில்தான் தெரியும். அதனால் அந்த சமயத்தில் பார்க்கில் நடக்கவேண்டும்.


சீனர்கள் ஜோதிடம் பார்க்கும் strength of day காலெண்டர்

ஏனென்றால் அது மண்ணின் சக்தி. தரையில் நடக்கும்போது இலக்கை வைக்காமல் உணர்வுடன் மெதுவாக நடக்கவேண்டும். இதைத்தான் தாவோயிசம் உணர்த்துகிறது. எனவே சனிதிசை நடக்கும்போது மூச்சு பயிற்சி மற்றும் நடைபயிற்சி அவசியம். மூச்சுப்பயிற்சியில் அனுலோம் விலோம், பிராணயாமம் என இரண்டு இருக்கிறது. இதன் கருத்து என்னவென்றால் உடல் மூன்றுவிதமாக உணவுகளை உட்கொள்கிறது. நாம் காணும் காட்சியும், காதால் கேட்பவையும் உணவுபோலவே உடலினுள் சென்று நம்முள் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இது முதல்வகை உணவு. இரண்டாம் வகை உணவு என்பது நாம் சாப்பிடக்கூடியது. மூன்றாம் வகை உணவு என்பது நாம் சுவாசிக்கும் காற்று. காற்றையும்கூட அதிகமாக உட்கொண்டால் உடலில் அடைப்பை ஏற்படுத்தி வாதத்தின் தன்மையையும் அதிகரித்து, மரணத்துக்கு அழைத்துச் சென்றுவிடும்.

பிராணயாமம் அல்லது மூச்சுப்பயிற்சியை எவ்வாறு செய்யவேண்டும்?

சீனர்களை பொருத்தவரை முதலில் மூச்சை கவனிக்க பழகவேண்டும். சுவாசம் எங்கே சென்றுவருகிறது என்பதை பார்க்கவேண்டும். அதனால்தான் ‘சரத்தை பார்த்தவன் பரத்தை பார்ப்பான்’ என்று சொல்வார்கள். இதனைத்தான் யாகவா முனிவர், ‘காலை நீ ஆட்டுகிறாய், உன்னை காலன் ஆட்டுகிறான்’ என்று சொல்வார். காலன் எங்கே ஆட்டுகிறான் என்றால் காற்றால் (மூச்சு) ஆற்றுகிறான். எனவே தினமும் நம்முடைய சுவாசத்தை நாம் கவனிக்கத் தொடங்கிவிட்டால் சீனர்கள்போல நாமும் 87 வயது முதல் 90 வயதுவரை நன்றாக உயிர்வாழலாம்.

Updated On 15 July 2024 6:11 PM GMT
ராணி

ராணி

Next Story