இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ்நாட்டில் மதங்களை கடந்து எத்தனை பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வந்தாலும், இந்த தீபாவளி பண்டிகை மட்டும் அதிக சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது.அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை உடுத்தி வழிபாடு செய்து பின்னர் சரவெடிகளை வெடித்து, உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து பலகாரங்களை பகிர்ந்து உண்டு கோலாகலமாக கொண்டாடப்படும் ஒளி நிறைந்த பண்டிகையான தீபாவளி இந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில் ஒவ்வொரு பண்டிகைகள் கொண்டாடப்படுவதற்கு பின்னாலும் ஏதோவொரு புராணக் கதைகள் புதைந்து இருக்கும் . அதற்கு உதாரணமாக ஒன்பது தேவிகள் ஒன்றாக சேர்ந்து மகிஷன் என்ற அரக்கனை வதம் செய்த நாளான நவராத்திரி பண்டிகையை சொல்லலாம். அதேபோல் ராமநவமியை ராமர் பிறந்த நாளாகவும், கிருஷ்ணர் பிறந்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தியாகவும் கொண்டாடி வருகிறோம் . அதேபோன்றுதான் தீபாவளி பண்டிகைக்கு பின்னாலும் ஒரு வரலாறு மறைந்திருக்கிறது. அப்படி மறைந்து கிடக்கும் தீபாவளியின் வரலாறு என்ன? தீபாவளியின் சிறப்புகள் என்ன? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஆன்மிக சொற்பொழிவாளர் சுவாமிநாதன்.

தீபாவளி வரலாறு

புராணகாலத்தில் தேவர்கள் அசுரர்கள் என இரண்டு பிரிவினர்கள் இருந்தனர். இந்த அசுரர்களை வதம் செய்வதற்காகவே இறைவன் மனிதரூபமாக உருவெடுத்து பூலோகத்திற்கு வந்து அவர்களை சூரசம்ஹாரம் செய்ததாக வரலாறு சொல்கிறது. திருச்செந்தூர் கந்த சஷ்டியில் சூரபத்மனை வதம் செய்ததை வெகு சிறப்பாக நாம் கொண்டாடுகிறோம். அதேபோன்றுதான், அசுரர்களில் ஒருவரான நரகாசுரனை வதம் செய்த நாளையே தீபாவளியாக கொண்டாடுகிறோம். இந்த நரகாசுரனின் அட்டகாசங்கள் அதிகமாக அதிகமாக பூலோகவாசிகளும், தேவலோகவாசிகளும் பகவான் கிருஷ்ணனிடம் முறையிட்டனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பகவான் கிருஷ்ணனுக்கு பிறந்தவன் தான் இந்த நரகாசுரன். அவன் செய்த பல்வேறு அக்கிரமங்களால் கோபமடைந்த கிருஷ்ண பகவான் தனது தந்திரமான சூழ்ச்சியால், அவனது தாயான பூமாதேவியை, தேவி சத்யபாமாவாக அவதாரம் எடுக்கச் செய்து அவர் மூலமாக சூரசம்ஹாரம் செய்தார். இந்த அசுரன் வதம் செய்யப்பட்ட நாளையே நாம் அனைவரும் தீபாவளி பண்டிகையாக கோலாகலமாக கொண்டாடுகிறோம்.


கிருஷ்ண பகவான் நரகாசுரனை வதம் செய்யும் காட்சி

பொதுவாகவே ஒரு இறப்பிற்கு துக்கம் அனுசரிப்பது உண்டு. ஆனால் இந்த அசுரனின் இறப்பு பண்டிகையாக கொண்டாடுபடுவதற்கான காரணம் இந்த அசுரன் இறப்பதற்கு முன்பு அவனது தந்தை கிருஷ்ணரிடமும், தாய் சத்யபாமாவிடமும், “நான் இறக்கப் போகும் இந்த நாளை, அனைவரும் மறந்து விடாது, என்னிடம் இருந்து விடுபட்ட தேவர்களும், மக்களும் ஒவ்வொரு வருடமும் இனிப்புகள் வழங்கி கொண்டாட வேண்டும்” என்று வேண்டி வரத்தைப் பெற்றான். அதுவும் அனைவரும் உற்சாகமாக காலையில் எழுந்து எண்ணெயை தேய்த்து குளித்து மிக பக்தியோடு கொண்டாட வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்து அந்த வரத்தைப் பெற்றான் நரகாசுரன். இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் இந்த தீபாவளி நன்னாளில் அதிகாலை எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை பின்பற்றி வருகிறோம்.

சாஸ்திரத்தின்படி அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லதல்ல. அப்படி குளிக்கவும் கூடாது என்கின்றனர். ஆனால் இந்த அசுரனின் இறப்பை கொண்டாடவே இந்த வழக்க முறையை பின்பற்றுகிறோம். அடுத்ததாக இந்த தீபாவளி நாளன்று நாம் எந்த தண்ணீரில் குளித்தாலும், அந்த தண்ணீரில் கங்கையானவள் அவற்றில் கலந்திருப்பாளாம். ஆகவே இந்த நன்னாளில் காலையில் எழுந்து குளிப்பது புனித நதி என்று அழைக்கப்படும் கங்கை நதியில் குளித்ததற்கு ஈடான புண்ணியம் கிடைக்கும்.

தீபாவளியின் முக்கிய வழிபாடுகள்


குபேரர் மற்றும் மஹாலக்ஷ்மி பூஜைகள்

குபேர பூஜை, மஹாலக்ஷ்மி பூஜை போன்ற வழிபாடுகள் இந்த தீபாவளி நாளில் மிக விசேஷமாக நடத்தப்படும். இந்த தீபாவளி வழிபாடுகள் பொறுத்தவரை தென் இந்தியாவை விட, வட இந்தியாவில் மிக அமோகமாக வழிபடப்படுகிறது. குபேரன், மஹாலக்ஷ்மியைத் தவிர இந்த தீபாவளி நாளில் மிக விசேஷமாக வழிபடப்படும் தெய்வம் காசி அன்னபூரணி ஆவாள். அன்னபூரணி என்றாலே நினைவுக்கு வருவது நமக்கு அனுதினமும் மூன்று வேளையும் அன்னம் தருபவள் என்பதுதான். ‘நீ சாப்பிடுகிற ஒவ்வொரு அரிசியிலும் உனது பெயர் எழுதப்பட்டிருந்தால் மட்டுமே அது உனக்கு கிடைக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப நமக்கு அன்னம் அளிக்கும் அன்னபூரணியை சிறப்பாக வழிபட கூடிய நன்னாளான திருநாள் தான் இந்த தீபாவளி.

தீபாவளியில் காசியில் என்ன சிறப்பு?

காசியில் விஸ்வநாதர் ஆலயம், காலபைரவர் ஆலயம் என பல பிரபலமான ஆலயங்கள் உள்ளன. இதில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருப்பது அன்னபூரணி ஆலயம். இந்த அன்னபூரணி ஆலயத்தில் சிலா விக்கிரகம் கருவறையில் காணப்படுவது மிக சிறப்பான ஒன்றாக இருக்கிறது. அதேபோல் இதே ஆலயத்தில் தங்கத்தினால் ஆன அன்னபூரணி விக்கிரகம் ஒன்றும் இருக்கிறது. இந்த தங்க விக்கிரகமானது தீபாவளிக்கு ஒருநாள் முன்பு தொடங்கி, தீபாவளி அடுத்த நாள் வரை என மூன்று நாட்கள் மட்டுமே வழிபாடு செய்யப்படும்.


காசியில் உள்ள அன்னபூரணி ஆலயம்

இந்த தங்க விக்கிரகங்களில் இருக்கும் தேவியானவள் அணிந்திருக்கும் புடவையும், தேவியின் தலைக்கு மேலிருக்கும் குடையும் தங்கத்தினாலும், தேவி அணிந்திருக்கும் கிரீடம் நவரத்தினங்களாலும் ஆனது. இந்த மூன்று நாட்களில் இந்த அன்னபூரணியை வழிபட இந்தியாவின் பல பகுதியிலிருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் காசிக்கு வந்து குவிகின்றனர். தீபாவளி நாளில் காசியில் குளித்து முடித்து இந்த அன்னபூரணியை வழிபடுவர். இந்த விசேஷ நாளில் இங்கு அன்னமும், இனிப்பும் மலை மலையாகக் இந்த அன்னபூரணி சன்னதி முன்பு குவித்து வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அன்னத்தை தவிர இங்கு அரிசி, பருப்பு என்று பல தானியங்களும், காய்கறிகளும், பழங்களும் மலைமலையாக குவிக்கப்படுகின்றன. இந்த அன்னபூரணியை வழிபட வரும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் போதும் போதும் என்ற அளவிற்கு அன்னம் வழங்கப்படுகிறது. அன்னபூரணியை வழிபடும் இந்த மூன்று நாட்களில் ஒரு நாளாவது அன்னபூரணியின் பிரசாதத்தை சாப்பிட்டால் எக்காலத்திலும் நமக்கு பசிப் பிணி என்ற ஒன்று அண்டவே அண்டாது என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த நாளில் இந்த காசியில் அன்னபூரணி லட்டு தேரில் வைக்கப்பட்டு ஆலயத்தை சுற்றி வலம் வருவது மிகவும் விசேஷமான ஒன்றாகும்.


அன்னபூரணியை வழிபட காசியில் குவிந்த பக்தர்கள்

இந்த தீபாவளி நாளன்று அனைவராலும் காசிக்கு சென்று அன்னபூரணியை வழிபட இயலவில்லை என்றாலும் நம் வீட்டிலேயே தேவி அன்னபூரணியின் படத்தை வைத்து காசி அன்னபூரணியாக எண்ணி மனதார வழிபட்டால் அந்த காசி அன்னபூரணியின் மகிமையும் ஆசியும் கிடைக்கும். வாழ்க்கையில் ஒருமுறையாவது இத்தகைய சிறப்பு வாய்ந்த காசிக்கு சென்று அன்னபூரணியை தீபாவளி நன்னாளில் வழிபட வேண்டும் என்று எண்ணி இனிதாக இந்த தீபாவளியை கொண்டாடுங்கள்.

Updated On 13 Nov 2023 6:29 PM GMT
ராணி

ராணி

Next Story