இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த வீரர்கள் பெயரை பட்டியலிட்டால், அதில் யுவராஜ் சிங்கின் பெயர் நிச்சயம் இடம்பெறும். காரணம், தனது தனித்துவமான பேட்டிங் ஸ்டைல் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் பல மகத்தான வெற்றிக்கு வித்திட்டவர் யுவராஜ் சிங். குறிப்பாக சிக்சர் கிங் என்று 90ஸ் கிட்ஸ்களால் அறியப்படும் யுவராஜ் சிங், இந்திய அணி 2007-ல் டி20 உலகக் கோப்பையையும், 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பையையும் வெல்வதற்கு பிரதான பங்காற்றியவர். அதே சமயம், டெஸ்ட் போட்டிகளில் அவர் பெரிதாக ஜொலிக்கவில்லை. தன்னுடைய டெஸ்ட் கெரியரில் 40 போட்டிகள் ஆடியிருக்கும் யுவராஜ் சிங், 34 என்ற ஆவரேஜுடன் மொத்தமாகவே 1,900 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். இத்தொகுப்பில் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு பற்றியும், தற்போது அவரது பெயர் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுவது பற்றியும் விரிவாக காண்போம்.


டெஸ்ட் தொடரில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் திணறிய யுவராஜ்

யுவராஜ் சிங்கின் ஆரம்ப காலம் :

1981ல் சண்டிகரில் யோகராஜ் சிங்கிற்கு மகனாக பிறந்தவர் யுவராஜ் சிங். இளமையிலேயே டென்னிஸ் மீதும், ஸ்கேட்டிங் மீதும் ஆர்வமாய் இருந்த யுவராஜை கிரிக்கெட் பக்கம் திருப்பிவிட்டதே அவரது அப்பா யோகராஜ் சிங்தான். அதன்பின் பஞ்சாப் மாநில கிரிக்கெட் வாரியத்தில் விளையாடிய யுவராஜ் சிங் 1999-2000 ரஞ்சி கோப்பை போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தினார். அவரது அபாரமான திறமையை கண்ட தேசிய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அவரை தேர்வு செய்தது. 2000ஆம் ஆண்டு நடைபெற்ற U-19 உலகக் கோப்பையை வென்றது முகமது கைப் தலைமையிலான இந்திய அணி. இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ், தொடர் நாயகன் விருதை பெற்றார்.


இங்கிலாந்துக்கு எதிரான நாட்வெஸ்ட் ஒருநாள் தொடரில் யுவராஜ்

திருப்பம் தந்த நாட்வெஸ்ட் தொடர் :

U-19 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு இவரை தேடி வந்தது. அதே ஆண்டே கென்யா அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கினார் யுவராஜ் சிங். இந்த போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த போட்டியில் பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 84 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இவரின் முதல் ஒருநாள் அரைசதம் இதுவே. பின்னர் 2002ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான நாட்வெஸ்ட் ஒரு நாள் தொடர் யுவராஜின் சர்வதேச கேரியரில் திருப்புமுனையாக இருந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் இவரும், முகமது கைஃப்பும் 121 ரன் பார்ட்னர்ஷிப் போட்டு இந்திய அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தேடித்தந்தனர்.


2007 டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற யுவராஜ்

6 பந்துகளில் 6 சிக்ஸர் :

இந்திய அணியில் கவனிக்கத்தக்க வீரராக உருவெடுக்க ஆரம்பித்தார் யுவராஜ் சிங். இவரின் ஃபார்ம் ஏற்ற இறக்கமாகவே இருந்து வந்தது. 2005-07 காலக்கட்டம்தான் யுவராஜ் சிங் இந்திய அணியில் ஒரு நாள் போட்டிகளில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக உருவெடுத்த காலம். இந்த காலக்கட்டத்தில் சிறப்பாக ஆடி பல தொடர் நாயகன் விருதை யுவராஜ் வென்றார். 2007ஆம் ஆண்டு, முதல் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. யாரும் எதிர்பாராத விதமாக மகேந்திர சிங் தோனிக்கு கேப்டன் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இளம் இந்திய அணி இந்த உலகக்கோப்பையில் களமிறங்கியது. இந்த உலகக்கோப்பை போட்டியில்தான் இங்கிலாந்து பந்துவீச்சாளர் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 பால்களிலும் 6 சிக்ஸர்கள் அடித்து மறக்கமுடியாத இன்னிங்ஸை தந்தார் யுவராஜ் சிங். இந்த போட்டியில் 12 பந்துகளில் அரைசதம் அடித்தார் யுவராஜ். சர்வதேச போட்டிகளில் மிக வேகமாக அடிக்கப்பட்ட அரைசதம் என்ற சாதனை இன்றுவரை தொடர்கிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அரையிறுதிப் போட்டியில் 30 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணியின் சிக்சர் கிங்காக யுவராஜ் சிங் வலம் வரத்தொடங்கினார்.


2011 ஒருநாள் உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற யுவராஜ்

2011 உலகக்கோப்பையின் தொடர் நாயகன் :

2011ஆம் ஆண்டில் ஒரு நாள் உலகக்கோப்பை போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் நடைபெற்றது. சச்சினின் உலகக்கோப்பை கனவை நனவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் தொடரில் களமிறங்கியது இந்திய அணி. இந்த தொடரில்தான் யுவராஜ் சிங்கை அணியின் பிரதான ஆல்ரவுண்டராக பயன்படுத்தினார் கேப்டன் தோனி. 2011 உலகக்கோப்பை தொடரில் 362 ரன்கள், 15 விக்கெட்டுகள் எடுத்து தலைசிறந்த ஆல்ரவுண்டர் என்று பெயர் எடுத்து தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் யுவராஜ் சிங். இதன்மூலம் இந்திய அணி வென்ற U-19 உலகக்கோப்பை, சர்வதேச ஒரு நாள் உலகக்கோப்பை இரண்டிலும் தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற தனித்துவமான பெருமை யுவாராஜிற்கு மட்டுமே உள்ளது.

கேன்சரை வென்ற யுவராஜ் :

2011 உலகக்கோப்பைக்கு பிறகு புற்றுநோய் தாக்கத்தால் தற்காலிகமாக அவர் கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டியதாயிற்று. உடல் நலமாகி திரும்ப வந்த யுவராஜ் சிங்குக்கு 50 ஓவர் கொண்ட பெரிய ஆட்டங்கள் விளையாட சிரமமானதாக இருந்தது. இந்திய கிரிக்கெட் கவுன்சில் யுவராஜை பெருமைப்படுத்தும் விதமாக 2012ல் அர்ஜுனா விருதை அளித்தது. இந்திய அரசாங்கம் இவருக்கு பத்மஸ்ரீ விருதை கொடுத்து பெருமைப்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து யுவராஜ் விலகினாலும் இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என்ற ஒரு பட்டியலை தயாரித்தால் அதில் முதல் 10 பேரில் கண்டிப்பாக யுவராஜ் இருப்பார்.


2007-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நடிகையை டேட்டிங் செய்ததாக பேட்டியளித்த யுவராஜ்

ஆஸ்திரேலிய நடிகையுடன் டேட்டிங்!

கடந்த ஒரு வாரமாக யுவராஜ் சிங்கின் பெயர் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகம் அடிபடுகிறது. 2007-08ல் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின்போது அங்கு ஒரு நடிகையுடன் டேட்டிங்கில் இருந்ததாக யுவராஜ் சிங் மனம் திறந்திருக்கிறார். பாட்காஸ்ட் நிகழ்ச்சியொன்றில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போதான நினைவுகளைப் பகிர்ந்த யுவராஜ் சிங், "அப்போது ஒரு நடிகையுடன் நான் டேட்டிங்கில் இருந்தேன். அவர் அடிலெய்டில் படப்பிடிப்பில் இருந்தார். அவரிடம், நான் இப்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன். ஆட்டத்தில் நான் கவனம் செலுத்த வேண்டும். இந்த சமயத்தில் சந்திக்க வேண்டாம் என்று கூறினேன். இரண்டு டெஸ்ட்டுகளில் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. ஆனால், என்னைப் பின்தொடர்ந்து கான்பெராவுக்கு வந்தார். இங்கு என்ன செய்கிறாய் என்பதுபோலிருந்தது. பிறகு அவரிடம், உன்னுடைய கேரியரில் நீ கவனம் செலுத்த வேண்டும். அதுபோலவே நானும். இப்போது நான் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அதன் அர்த்தம் உனக்குப் புரியும் என்றேன். அதையடுத்து, இருவரும் கான்பெர்ராவிலிருந்து அடிலெய்டுக்கு கிளம்பினோம். அவர்தான் என் சூட்கேஸை பேக் செய்தார். காலையில் பார்த்தால் என்னுடைய ஷூ எங்கே காணோம் என்றிருந்தேன். அப்போது, அதை நான் பேக் செய்துவிட்டேன் என்று அவர் கூற, நான் எப்படிச் செல்வேன் எனக் கேட்டேன். அதற்கு, என்னுடையதைப் போட்டுக்கொள்ளுங்கள் என பிங்க் நிற காலணிகளைக் காண்பித்தார். வேறு வழியின்றி அதையே போட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. பிறகு, சூட்கேஸை முன்னால் நகர்த்திக்கொண்டு பிங்க் நிற காலணிகளை மறைத்துக்கொண்டு நடந்தேன். ஆனாலும், மற்ற வீரர்கள் பார்த்துவிட்டனர். வேறு காலணிகளை வாங்கும்வரை விமானநிலையம் வரையிலும் அந்த பிங்க் நிற காலணியையே அணிய வேண்டியதாயிற்று" என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

Updated On 1 Oct 2024 4:17 AM GMT
ராணி

ராணி

Next Story