இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஆதி காலந்தொட்டு உலகில் பல்லாயிரக்கணக்கான விளையாட்டுகள் விளையாடப்பட்டு வந்தன. காலம் மாறமாற ஒவ்வொன்றாக அழிந்து இப்போது சில விளையாட்டுகளே உள்ளன. அதிலும் நாம் குறிப்பிட்ட ஒருசில விளையாட்டுகளையே அதிகளவில் கொண்டாடித் தீர்க்கிறோம். அதனாலேயே பல விளையாட்டுகள் அழிந்துகொண்டே வருகின்றன. அதில் ஒன்றுதான் டென்னிகாய்ட் (Tennikoit or Tenniquoits) என்கிற ரிங் விளையாட்டு. இரண்டு தசாப்தங்களுக்கு முன்புகூட பரவலாக விளையாடப்பட்டு வந்த இவ்விளையாட்டு தற்போது மெல்ல மெல்ல அழிந்துகொண்டே வருகிறது. 60-70 களில் பிரபலமாக விளையாடப்பட்ட டென்னிகாய்ட்டின் மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வருகிறது. எப்படி டென்னிகாய்ட் என்கிற விளையாட்டு தோன்றியது? ஏன் டென்னிகாய்ட்டின் முக்கியத்துவம் குறைந்து கொண்டேவருகிறது? என்பதை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.


டென்னிகாய்ட் மைதானம்

விளையாட்டின் விதிமுறைகள்:

பொதுவாகவே விளையாட்டு விதிப்படி டென்னிகாய்ட் மைதானமானது 13m*6m அளவில் இருக்கும். இந்த விளையாட்டானது 3 செட்டுகளாக நடைபெறும். ஒவ்வொரு செட்டிலும் 20 புள்ளிகள் வழங்கப்படும். இதில் எந்த நபர் அதிக செட்களை பெறுகின்றாரோ அவரே வெற்றி பெறுவார். ஒவ்வொரு வீரரும் சர்வீஸை தொடர்ச்சியாக 5 முறை வீசுவர். இதுவும் டென்னிஸும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விதிமுறைகளைக் கொண்டதுதான். சிறிய காலியிடமும், ஒரு ரப்பர் வளையமும் இருந்தால் போதும். உடலை கட்டுக்கோப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க இந்த விளையாட்டை விளையாடலாம். பெண்கள் மத்திய இந்த விளையாட்டு மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.


கப்பலில் டென்னிகாய்ட் விளையாடியபோது

டென்னிகாய்ட் தோன்றிய வரலாறு:

1960-களில் ஜெர்மன் நாட்டில் டென்னிகாய்ட் தோன்றியதாக நம்பப்படுகிறது. ஆனால் சரியாக எந்த நாளில் எந்த இடத்தில் தோன்றியது என்பது பற்றியெல்லாம் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆரம்பத்தில் `டெக் டென்னிஸ்’ என்று அழைக்கப்பட்ட டென்னிகாய்ட், பெரும்பாலும் கடற்படை வீரர்களால் கப்பலில் விளையாடப்பட்ட விளையாட்டாகும். டென்னிகாய்ட்டிற்கு பயன்படுத்தப்படும் ரிங்கானது ரப்பரில் செய்யப்பட்டிருப்பதால் கடலில் தவறி விழுந்தால் எடுப்பதற்கும், தரையில் விழும்போது பவுன்ஸ் ஆகி மேலே வருவதற்கும் எளிதாக இருப்பதால், கப்பல் போன்ற சிறிய காலியிடம் உள்ள இடங்களில் விளையாடுவதற்கு எளிதாக இருந்தது. அதனாலேயே கடற்படை வீரர்கள் இந்த விளையாட்டை உலகளவில் பிரபலப்படுத்தினர். குறிப்பாக, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் கண்பார்வையை மேம்படுத்துவதற்கும், மூளைத்திறனை வளர்க்கும் நோக்கிலும் டென்னிகாய்ட் விளையாடப்பட்டது. ஒருசில நாடுகளே டென்னிகாய்ட் விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்க்கப் பாடுபட்டன. அதில் இந்தியாவும் ஒன்று.


பள்ளிகளில் டென்னிகாய்ட்

2004-ம் ஆண்டு ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தலைமையில் "வேர்ல்ட் டென்னிகாய்ட் ஃபெடரேஷன்" ஆரம்பிக்கப்பட்டது. டென்னிகாய்ட் விளையாட்டை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதுதான் இதன் முக்கிய நோக்கம். இதன் தொடர்ச்சியாக 2006 ஆம் ஆண்டு உலக டென்னிகாய்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றது. சென்னையில் நடைபெற்ற இந்த தொடரில் ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியா மற்றும் பிரேசில் உள்பட ஆறு அணிகள் பங்கேற்றன. இதில் முதல் சாம்பியன் பட்டத்தை ரோமானியா நாட்டைச் சேர்ந்த நாடியா காமென்சி வென்றார். அதன்பின் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் இத்தொடர் இன்றளவும் வெளியில் தெரியாமல் இருப்பது வருத்தத்திற்குரியதாகும்.


உலக சாம்பியன்ஷிப்பில் டென்னிகாய்ட்

ஸ்பான்சர்ஷிப் இல்லாமல் போனது ஏன்?

கடைசியாக 2018-ல் பெலாரஸ் நாட்டில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா உள்பட ஒன்பது அணிகள் பங்கேற்றன. அதில் ஜெர்மனி சார்பில் ஆண்கள், பெண்கள் உள்பட 23 நபர்களும், இந்தியா சார்பில் 25 நபர்களும், கென்யா சார்பில் 4 நபர்களும், ரஷ்யா சார்பில் 2 நபர்களும், தென்னாப்பிரிக்காவிலிருந்து 35 நபர்களும், USA மற்றும் செக் ரிபப்ளிக் நாட்டிலிருந்து தலா ஒரு நபரும் பங்கேற்றனர். தனிநபர் ஆண்கள் போட்டி, தனிநபர் பெண்கள் போட்டி, இரட்டையர் பெண்கள் போட்டி, இரட்டையர் ஆண்கள் போட்டி மற்றும் கலப்பு இரட்டையர் போட்டி உட்பட பல போட்டிகள் நடைபெற்றன. இதில் அதிக பதக்கங்கள் (16) பெற்று ஜெர்மனி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இந்தியா 5 பதக்கங்களை வென்றது. மீண்டும் 2023 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடக்கவிருந்த உலக சாம்பியன்ஷிப் தொடர் ஸ்பான்சர்ஷிப் இல்லாததால் தள்ளிப்போனது.


அதன்பிறகு இன்றுவரை எந்த ஒரு பெரிய டென்னிகாய்ட் தொடரையும் நடத்த முடியவில்லை என்பது வீரர்களுக்கு சோகத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்பான்சர்ஷிப் இல்லாததற்கும், டென்னிகாய்ட் விளையாட ஆரம்பித்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் ஒலிம்பிக்கிலும், காமன்வெல்த் போட்டிகளிலும் பங்கேற்க முடியாததற்கும் காரணம் போதிய அளவு வருமானம் கிடைக்காததுதான். இதனால் வீரர்களும் இந்த விளையாட்டை விளையாட விரும்பவில்லை. அதுவே இந்த விளையாட்டிற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. கோடிகளில் புரளும் பல விளையாட்டுகளுக்கு மத்தியில் டென்னிகாய்ட் என்கிற விளையாட்டுக்கு பணமின்மையால் அழிவின் விளிம்பில் இருப்பது பெரும் வருத்தத்தை தருகிறது. இதுபோன்ற விளையாட்டுக்களை ஊக்குவிப்பது அரசின் கடமை.

Updated On 21 Aug 2023 6:38 PM GMT
ராணி

ராணி

Next Story