இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கைகள் இல்லாவிட்டால் என்ன… கால்கள் இருக்கே…

`அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார் ஔவையார். மானிடராய்ப் பிறந்தாலும் கண், காது போன்ற அவயங்கள் அனைத்தும் நன்றாக இருந்தால்தானே நாம் விரும்பும் செயல்களைச் செய்து இவ்வுலகில் சிறப்பாக வாழ முடியும் என்பவர்களுக்கு மத்தியில், உடலில் குறையிருந்தாலும், உழைப்பால் உச்சம் தொட முடியும் என நிரூபித்துக் காட்டிருக்கிறார் பாரா ஆர்ச்சரி வீராங்கனை ஷீத்தல் தேவி.

அப்படி என்ன செய்துவிட்டார் ஷீத்தல்? இரு கைகளும் இல்லாத நிலையில் தனது கால்களையே கைகளாகக் கருதி, காலில் வில்லேந்தி அம்பு எய்து சாதனைப் படைத்து வருபவர்தான் ஷீத்தல். அவரது வாழ்க்கையே தன்னம்பிக்கையால் நிறைந்திருக்கிறது. அந்த சாதனை மங்கை கடந்து வந்த பாதைகளை சற்றே நாம் திரும்பிப் பார்ப்போம்.


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்டத்திலுள்ள லோய் தர் கிராமத்தில் பிறந்தவர் ஷீத்தல். பிறக்கும்போதே போகாமேலியா என்னும் நோயால் பாதிக்கப்பட்ட அவரது கைகள் வளராமல் போயின. இதனால் ஷீத்தலின் பெற்றோர் அடைந்த துயரத்திற்கு அளவில்லை. அந்த வயதிலேயே மற்றவர்களைப் போல் தான் இல்லை என்பதை உணர்ந்து துன்பக்கடலில் மூழ்கினார் ஷீத்தல். அவரது தந்தை விவசாயம் செய்து வந்தார். தாயார் ஆடு மேய்த்து வந்தார். தங்கள் மகள் நன்கு படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று விரும்பிய பெற்றோர், ஷீத்தலை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். சிறு வயதில் ஆர்வமாக பள்ளிக்குச் சென்ற அவர், வளர வளர பள்ளிக்குப் போகத் தயங்கினார். தன் உடலின் குறையே அவர் மனதில் நிறைந்திருந்ததால், மற்றவர்கள் முன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தயங்கினார். ஆனாலும் படிப்பில் படு சுட்டியாக விளங்கினார். அந்த வயதில் அவருக்கு ஒரே ஒரு கனவு மட்டுமே இருந்தது. தனது ஊனத்தை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து ஆசிரியர் ஆக வேண்டும் என்பதே அந்தக் கனவு. ஆனால் எதிர்பாராத இனிய விபத்தாக அவரது வாழ்வில் வில் வித்தை நுழைந்தது.


ஒரு நாள் ராணுவ பயிற்சி தளத்துக்குச் சென்ற ஷீத்தல், தன் காலால் வில் அம்பை எய்த முயற்சி செய்து பார்த்தார். ஆரம்பத்தில் அந்த முயற்சி கைவராமல் போனாலும், பின்னர் காலால் அம்பு விடும் பயிற்சி அவருக்கு வசமானது. பீயிங் யூ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ப்ரீத்தி ராயை சந்திக்கும் வாய்ப்பு ஷீத்தலுக்குக் கிடைத்தது.அது அவரது வாழ்க்கையின் போக்கையே மாற்றியது. ஷீத்தல் தேவியின் திறமையை முதன்முதலில் கண்டறிந்தவர் ப்ரீத்திதான். ஷீத்தலை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி, வில் வித்தையையே தன் தொழிலாகத் தேர்ந்தெடுக்க அவரை உந்தித் தள்ளியவரும் ப்ரீத்திதான். என்னதான் வில் வித்தை மீது ஆர்வம் இருந்தாலும், முறையான பயிற்சியும் அவசியமல்லவா? கத்ராவில் உள்ள வைஷ்ணோ ஆர்ச்சரி அகாடமியைச் சேர்ந்த குல்தீப் பைத்வானிடம் பயிற்சி பெற ஆரம்பித்தார். ஆறு மாதத்திலேயே வில் வித்தையில் சிறப்பான தேர்ச்சி பெற்றார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார்.


அப்போது ஷீத்தல் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததால், அவரது படிப்புக்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்பதற்காக இந்திய ராணுவம் அவரது கல்விச் செலவு முழுவதையும் ஏற்றது. பள்ளிப் படிப்புடன் காலையும், மாலையும் தொடர்ந்து வில் வித்தையில் கடினமாக பயிற்சி செய்ய ஆரம்பித்தார். மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வந்த அவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடவும் வாய்ப்புக் கிடைத்தது.

2023 மே மாதம் செக் ரிபப்ளிக்கிலுள்ள மெசடோ நகரில் நடந்த ஐரோப்பியன் பாரா ஆர்ச்சரி தொடரில் கலந்து கொண்டார். முதல் நாளில் நான்காவது இடத்தில் இருந்த ஷீத்தல், அடுத்து வந்த நாட்களில் தொடர் புள்ளிகள் பெற்று இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார். இதன் மூலம் குறைந்த வயதில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வீராங்கனை என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார். அதிக எதிர்பார்ப்பிற்கு மத்தியில் களமிறங்கிய ஷீத்தல் இறுதிப் போட்டியில் துருக்கியின் குரே ஒஸ்ன்னுரியிடம் 138-140 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார். அதனால் நூலிழையில் தங்கப் பதக்கம் பெறும் வாய்ப்புத் தவறியது. பங்கேற்ற முதல் தொடரிலேயே வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் 16 வயதில் சர்வதேச தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் ஷீத்தலுக்குக் கிடைத்தது. இவரது மகத்தான சாதனையை உலகமே வியந்து பார்த்தது. ஷீத்தல் வில் வித்தை செய்யும் முறை பாரா வில் வித்தையின் ஜாம்பவானான மாட் ஸ்டூட்ஸ்ட்மான் போல் உள்ளது என்று பத்திரிகைகள் புகழ்ந்தன. ஐரோப்பிய பாரா ஆர்ச்சரியில் பதக்கம் வென்றதன் மூலம் உலக பாரா சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது.


உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் உலக வில் வித்தை தர வரிசையில் பதினெட்டாம் இடம்பிடித்தார் ஷீத்தல். கைகள் இல்லாவிட்டால் என்ன… கால்கள் இருக்கே… இன்னும் சாதனை படைப்பேன் என்று தன்னம்பிக்கையுடன் முன்னேறி வரும் ஷீத்தல், இன்றைய இளைஞர்கள் பின்பற்றுவதற்கு நல்லதொரு முன் உதாரணமாகத் திகழ்கிறார்.

Updated On 8 Aug 2023 4:33 AM GMT
ராணி

ராணி

Next Story