இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கிரிக்கெட் என்பது நாடு முழுவதும் பரவலாக விளையாடப்படும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டை ஆண்களே பெரும்பாலும் விளையாடினாலும், முன்பெல்லாம் ஆட்டங்களின் தொடக்கத்தில் பெண்களை நடனம் ஆட வைப்பதையே அவர்களை சிறப்பிக்கும் விதமாக கருதினர். ஆனால் அந்த நினைப்பை உடைத்து தங்களாலும் பேட்டும் கையுமாக போட்டிபோட முடியும் என சாதித்து காட்டி வருகின்றனர் பெண்கள். ஆண்கள் மட்டுமல்ல; பெண்கள் கிரிக்கெட் விளையாடினாலும் பார்க்க உலகளவில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதற்கு உதாரணம் தான் சமீபத்தில் நடந்துமுடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை. பெண்கள் கிரிக்கெட் எங்கிருந்து தொடங்கியது? இதற்கு அடிதளமிட்டவர்கள் யார்? என்பது குறித்த ஓர் தொகுப்பைப் பார்க்கலாம்.

முதல் பெண்கள் கிரிக்கெட் போட்டி

1970 களின் முற்பகுதியில் ஒரு சில ஆர்வமுள்ள பெண்கள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தனர். விளையாட்டு அதிகாரப்பூர்வமாக ஏற்பாடு செய்யப்படவில்லை என்றாலும், இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கத்தின் (WCAI) நிறுவனரும் செயலாளருமான மகேந்திர குமார் ஷர்மா, 1973 ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டத்தின் கீழ், லக்னோவில் பேகம் ஹமிதாவின் தலைமையில், தனது WCAI-வை பதிவு செய்தார். பல வளரும் பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதே ஆண்டு சர்வதேச மகளிர் கிரிக்கெட் கவுன்சில் (IWCC) உறுப்பினர் தகுதியையும் WCAI பெற்றது.


முதல் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி

1970 மற்றும் 1973-க்கு இடைப்பட்ட காலத்தில், 12 மாதங்களில் 9 மாதங்கள் கிரிக்கெட் விளையாடுவதில் பெண் வீரர்கள் பிஸியாக இருந்ததால், நிறைய கிரிக்கெட் செயல்பாடுகள் இருந்தன. ஏப்ரல் 1973 இல், பம்பாய், மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்ற மாநிலங்களுக்கு இடையேயான முதல் பெண்களுக்கான தேசியப் போட்டி புனேவில் நடைபெற்றது. அதே ஆண்டின் இறுதியில், இரண்டாவது போட்டி வாரணாசியில் நடைபெற்றது. இந்த முறை அணிகளின் எண்ணிக்கை மூன்றில் இருந்து எட்டாக அதிகரித்தது.

பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வேலைவாய்ப்பு

வாரணாசியில் நடந்த இரண்டாவது தேசிய நிகழ்ச்சிக்குப் பிறகு, செயற்குழு மறுசீரமைக்கப்பட்டது. சந்திரா திரிபாதி மற்றும் பிரமிளா பாய் சவான் ஆகியோர் தலைவர்களாக பொறுப்பேற்றனர். இந்த இரண்டு பெண்களும், நிறுவனர் செயலாளர் எம்.கே. ஷர்மாவுடன் இணைந்து, பெண்கள் கிரிக்கெட்டின் ஆரம்ப வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தனர். மூன்றாவது சாம்பியன்ஷிப் கல்கத்தாவில் நடத்தப்பட்டபோது, அணிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. அதன்பின் அனைத்து மாநிலங்களும் ஒன்றன்பின் ஒன்றாக இதில் இணைந்தன. பின்னர், ரயில்வே மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் பெண் கிரிக்கெட் வீரர்களை வேலைக்கு அமர்த்தியது. அவர்கள் தனித்தனி அணிகளாக பங்கேற்றனர். பின்பு மற்ற போட்டிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. 1974 இல் ராணி ஜான்சி ட்ராபி என்ற பெயரில் மண்டலங்களுக்கு இடையேயான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் போட்டி கான்பூரில் நடைபெற்றது.


ஏர் இந்தியா மற்றும் இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு

அதே ஆண்டு ராஜ்கோட்டில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியும் நடைபெற்றது. சப்-ஜூனியர் (யு-15) மற்றும் ஜூனியர் (யு-19) போட்டிகளும் நடத்தப்பட்டன. ஒவ்வொரு மண்டலத்தின் வெற்றியாளர்கள் இந்திரா பிரியதர்ஷினி கோப்பையிலும், தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிராக ராவ் கோப்பைக்காக விளையாடினர்.

உலகப்போட்டியான உள்நாட்டு விளையாட்டு

ஐந்தாண்டுகள் தொடர் முயற்சியால் உள்நாட்டு கிரிக்கெட்டானது வெற்றி நிலையை எட்டியது. அதன்பிறகு 1975 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா U-25 அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, முதல் இருதரப்பு மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டது. புனே, டெல்லி, கல்கத்தா ஆகிய மூன்று அணிகள் விளையாடின. சுவாரஸ்யமாக, மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கும் உஜ்வாலா நிகம், சுதா ஷா மற்றும் ஸ்ரீரூபா போஸ் ஆகிய மூன்று கேப்டன்கள் இருந்தனர். ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகு, இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விளையாடியது.


முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியுடன் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி

தொடர்ந்து, மூத்த இந்திய பெண்கள் அணி, அக்டோபர் 31, 1976 அன்று வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக முதல் சர்வதேசப் போட்டியை பெங்களூருவில் விளையாடியது. ஆறு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது. தொடர்ந்து, இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றிபெற்று தொடரானது சமநிலையில் முடிந்தது.

அந்த நாட்களில், பெண்களுக்கான டெஸ்ட் போட்டி என்பது மூன்று நாள் போட்டியாக நடத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1978 உலகக் கோப்பையின்போதுதான் பெண்கள் ஒருநாள் போட்டி என்பதே அறிமுகமானது. இந்தியா நடத்திய மெகா தொடரில் மொத்தம் நான்கு அணிகள் பங்கேற்றன. அதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அடக்கம். துரதிர்ஷ்டவசமாக, இந்தியா மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து ஏமாற்றமளித்தது. டயானா எடுல்ஜி தலைமையிலான அணி தனது முதல் ஒருநாள் போட்டியை 1978 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக கல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடியது.


2005 - 2017 இல் கவனம் ஈர்த்த இந்திய அணி

அதே ஆண்டில், WCAI 1978 இல் சர்வதேச மகளிர் கிரிக்கெட் கவுன்சிலின் (IWCC) அரசாங்க அங்கீகாரத்தைப் பெற்றது. இதன்பிறகு இந்திய அணி சில சறுக்கல்களை சந்தித்தது. இருந்தாலும் ஒருசில வீராங்கனைகளின் எழுச்சி உலகையே திரும்பிப்பார்க்க வைத்தது. சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்தார் முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை சாந்தா. 1986ல் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் சந்தியா அகர்வால் 190 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

1978 உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாதது முதல், 2005 மற்றும் 2017 இல் இறுதிப் போட்டி வரை, 1970 களில் மிகக் குறைவான பார்வையாளர்களை ஈர்த்தது முதல் தற்போது கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது வரை, இந்திய பெண்கள் கிரிக்கெட்டானது சந்தேகத்திற்கு இடமின்றி நீண்ட தூரம் வந்துள்ளது. அதுமட்டுமின்றி தற்போது பெண்களுக்கென தனி ஐபில் போட்டியே கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவே மிகப்பெரிய சாதனை தான். இப்பொழுது அனைவரின் எதிர்பார்ப்பும் 2024 பெண்களுக்கான டி20 உலககோப்பையைத்தான் உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. இந்திய அணி தனது முதல் உலகக்கோப்பையை வெல்லுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Updated On 14 Aug 2023 6:47 PM GMT
ராணி

ராணி

Next Story